மலேசியா வாரம்-1

பூஜாங் பள்ளத்தாக்கு

வீ.நடராஜன்

சோழன் வென்ற கடாரம்

ஸ்வீடனில் இருந்து திரும்பி நாலைந்து மணிநேரம்தான் நண்பர் சென்னை ஷண்முகம் வீட்டில் இருந்தோம். அன்று மாலையே கிளம்பி விமானநிலையம் சென்றோம். நள்ளிரவில் மலேசியாவுக்கு கிளம்பினோம். நான் பகலில் தூங்கவே இல்லை. பயணக்குறிப்புகளை எழுதினேன். மின்னஞ்சல்களை அனுப்பினேன். ஆகவே  விமானம் கிளம்பியதுமே தூங்கிவிட்டேன்.

காலையில் கொலாலம்பூர். அங்கே உள்ளூர் விமானத்திற்கு மாற்றம். நுழைவு அனுமதி பரிசீலனை. பொதுவாக ஐரோப்பாவில் இத்தகைய இடங்களில் இருப்பவர்களின் மென்மையான இனிய நடத்தையை பார்த்தவர்களுக்கு இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் மலேசியாவிலுமெல்லாம் இருக்கும் அதிகாரிகளின் முறைப்பு, சைகையாலேயே ஆணையிடும் அவமதிப்பான தோரணை ஆகியவை ஒருவகை திகைப்பையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும்.

பிரம்மவித்யாரண்யம் முகப்பில்

வெள்ளையர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வெள்ளையர்களிடமும் அதே நடத்தைதான் என்பதை கவனித்துள்ளேன். கீழைநாட்டினரே இப்படித்தான் என்னும் முன்முடிவு அவர்களுக்கு இருப்பதனால் கடந்துசெல்கிறார்கள் போல.

பினாங்கு விமானநிலையத்தில் பேரா.குமாரசாமியும் சுவாமி பிரம்மானந்தரும் எங்களை எதிர்நோக்கி நின்றிருந்தனர். அவர்களின் காரில் கூலிம் ஆசிரமம் சென்றோம். ஜார்ஜ் டவுன் லிட் ஃபெஸ்ட் பினாங்கு நகர் நடுவே ஜார்ஜ் டவுன் என்னும் பழைய பிரிட்டிஷ் பகுதியில் நிகழவிருந்தது. அங்கே பிரஸ்டீஜ் என்னும் விடுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாக கூலிம் ஆசிரமத்திற்கே செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.

புண்ணியவானும் சுவாமியும் அரசியல் பரபரப்பில்…

பழைய கூலிம் பிரம்மவித்யாரண்யம் பிரம்மானந்தரின் சொந்த இடத்தில் நகருக்குள் உள்ளது. முதலில் அங்கே சென்றோம். எழுத்தாளர் கோ.புண்ணியவான் அங்கே வந்தார். அவருடைய கையறு நாவல் தஞ்சை தமிழ்ப்பல்கலையின் விருது பெற்றுள்ளது. விருதுபெற தஞ்சாவூருக்கு இரண்டு நாட்களில் கிளம்புவதாகச் சொன்னார். அவரும் சுவாமியும் மலேசிய அரசியல் பற்றி பதற்றமாகப் பேசிக்கொண்டனர்.

மதியக் குமாரசாமியின் இல்லத்திற்குச் சென்று சாப்பிட்டோம். எங்களுக்காகச் சமைக்கப்பட்ட அபாரமான அசைவ உணவு. குறிப்பாக நெத்திலிப் பொரியல். மலேசியாவில் பொதுவாக பிரம்மவித்யாரண்யம் தவிர எங்கும் சைவம் என்னும் பேச்சே இல்லை. அதன்பின் மலைக்குமேல் இருந்த பிரம்ம வித்யாரண்யம் சென்றோம்.

கூலிம் பிரம்மவித்யாரண்யம் எனக்கு மிக அணுக்கமான ஓர் இடமாக ஆகிவிட்டிருக்கிறது. பலமுறை பல உரைகளை அங்கே ஆற்றியிருக்கிறேன்.  பிரம்மாண்டமான மையக்கட்டிடம் அதையொட்டிய வெவ்வேறு தங்குமிடங்கள். பச்சை பொலியும் சூழல். பூச்செடிகள். பினாங்கில் பல மாதங்களாக மழை பொழிந்தபடியே இருக்கிறது என்றார்கள்.

நாங்கள் சென்றபோது மலேசிய அரசியலில் நிலையின்மை நீடித்து கொண்டிருந்தது. மகாதீர் முகம்மது தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டிருந்தார். அன்வர் இப்ராகீம் மிகுதியான இடங்களைப் பெற்றாலும் போதிய பெரும்பான்மை இல்லை. மொகிதீன் யாசீன் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதக் கூட்டணி எவரும் எதிர்பாராதபடி இளம் வாக்காளர்களிடையே ஏராளமாக ஓட்டு பெற்று வலுவான நிலைமையில் இருந்தது.

எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலை. மலேசியா நான்கு சுல்தான்களால் ஆளப்படும் நாடு. நம்மூர் ஜனாதிபதிகளின் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. நால்வரில் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு பேரரசர் ஆக இருப்பார். அவர்தான் ஆட்சியாளர்களை தெரிவுசெய்யவேண்டும். பல பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அன்வர் பேரரசரால் தேர்வுசெய்யப்பட்டார். பெரும்பான்மை ஆதரவும் அமைந்தது.

அங்குள்ள எல்லா தமிழர்களும் சீனர்களும் அன்வர் வரவேண்டும் என விரும்பினர். எங்கும் பதற்றமாகப் பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் சென்ற இரண்டாம்நாள் அன்வர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிறுபான்மையினர் நிறைவடைந்ததைக் காணமுடிந்தது. மலேசியாவில் மலேசிய இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான பாஸ் செல்வாக்கு பெற்று வருவது அனைத்து ஜனநாயக சக்திகளிடமும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மலேசியாவில் மதவாதமும் இனவாதமும் ஒன்றிணைந்துள்ளன. அன்வர் அதை தடுக்கும் ஜனநாயக சக்தியாக பார்க்கப்படுகிறார்.

வந்த முதல் நாள் ஓய்வெடுத்துக் கொண்டோம். மறுநாள் காலையில் கிளம்பி கெடா மாநிலத்தில் இருக்கும் புஜாங் பள்ளத்தாக்குக்குச் சென்றோம். ஏற்கனவே நான் ஒருமுறை சென்றிருக்கிறேன். அருண்மொழிக்குத்தான் முதல் வருகை. இம்முறை மழை கொட்டிக்கொண்டிருந்தது. பூஜாங் ஆறு பெருக்கெடுத்து அருவிகளின் வரிசையாக கொட்டி முழங்கிச் சென்றுகொண்டிருந்தது.

பூஜோங் பள்ளத்தாக்குதான் மலாயாவில் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படைகளை நிறுவும் தொல்சான்றுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் டாக்டர் நடராஜன் விரிவான ஆய்வுநூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். தமிழிலும் அந்நூல் ரெ.கார்த்திகேசுவால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. (சோழன் வென்ற கடாரம்)  வெவ்வேறு பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் அந்த இடத்தைப் பற்றி ஆய்வுசெய்துள்ளனர்.

பூஜோங் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் அடித்தளங்கள் சிவன் கோயில்கள் கொற்றவை (துர்க்கை) மற்றும் புத்தர் கோயில்களுக்குரியவை. சிவலிங்கங்களின் ஆவுடைகள் பல காணக்கிடைக்கின்றன. சண்டி என இந்த அடித்தளங்கள் அழைக்கப்படுகின்றன. சண்டி என்பது கொற்றவையின் பெயர்களில் ஒன்று.

கெடா மாநிலத்தின் தலைநகரான Alor Setar என்னும் ஊரில் அமைந்துள்ள அரிசி அருங்காட்சியகம் ( Muzium Padi) பார்க்கச் சென்றோம். கெடா மாநிலம்தான் மலேசியாவின் அரிசிப்பண்ணை. மலாய் மக்களே பெரும்பாலும் வேளாண்மை செய்கிறார்கள். மிக விரிந்த வயல்கள். நெல்லுக்குரிய நீரும் வெயிலும் குன்றாமல் உள்ளன.

குகை

வேளாண்மக்கள் வசதியாகவே இருக்கிறார்கள் என அவர்களின் இல்லங்கள் காட்டின. அவர்களுக்கு ஏராளமான சலுகைகள். வேளாண்மை பெரும்பாலும் டிராக்டர்கள், சிறு கருவிகள் உட்பட மனித உழைப்பு குறைவாகவே நிகழ்கிறது.

படி மியூசியம்  ஓர் அருங்காட்சியகம் என்றுதான் எண்ணியிருந்தேன். அங்குள்ள முக்கியமான விந்தை மூன்றாம் மாடியிலுள்ள சுவரோவியம். உண்மையில் சுற்றிலும் மாபெரும் திறந்தவெளி தெரிவதாகவே கண்கள் மயங்கும். அது ஓவியம் என்று நம்ப மூளைக்கு நாம் ஆணையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

திரைப்படங்களுக்கான செட் அமைப்பதில் கடைப்பிடிக்கப்படும் அதே வழிமுறைதான். நம் கண்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைத்தான் முப்பரிமாணத்தை காணமுடியும். இரு கண்களுக்கிடையே உள்ள இடைவெளியால் இரு கண்களும் அளிக்கும் காட்சிகள் சற்று வேறுபடுகின்றன. அவற்றை மூளை ஒன்றாக இணைக்கையும் முப்பரிமாணம் உருவாகிறது. தொலைதூரக் காட்சியில் இரு கண்களுக்கிடையேயான காட்சிகளில் பெரிய வேறுபாடு இருப்பதில்லை.

இங்கே முப்பரிணாமமாக செல்லும் மரங்களும் செடிகளும் ஓவியத்தில் இணைகின்றன. சுற்றிலும் விரிந்த ஓவியம் உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து பார்த்தால் கிடைக்கும் அதே நிலக்காட்சிதான். அதில் மலேசியாவின் வயல்சார்ந்த வாழ்க்கையின் சித்திரம் உள்ளது.

செல்வம்

அருங்காட்சியகத்தில் மலேசியாவில் முன்பு பயன்படுத்தப்பட்ட் வேளாண்கருவிகளும் இயந்திரங்களும் உள்ளன. மாவிடிக்கும் இயந்திரம் ஒன்று விந்தையானது. நெம்புகோல் முறைப்படி கனமான ஓர் உலக்கை எழுந்து எழுந்து உரலில் விழும். மறு எல்லையில் அதை காலால் மிதித்து ஒருவர் இயக்குவார். பெரும்பாலான கருவிகள் இந்தியாவில் நாம் அறியாதவை.

உண்மையில் நீண்ட வேளாண்மரபு நமக்கிருந்தாலும் நாம் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவே இல்லை. முழுமையாகவே மனித ஆற்றலால்தான் வேளாண்மை செய்து வந்தோம். ஏன் நாம் கருவிகளை உருவாக்கிக்கொள்ளவில்லை? மஞ்சள் இனத்தவர் பொதுவாக கருவிகளை உருவாக்கவும் கையாளவும் திறன் கொண்டவர்கள். இக்கருவிகள் பெரும்பாலும் தாய்லாந்தில் இருந்து வந்தவை. தாய்லாந்து அங்கிருந்து மிக அண்மையில்தான்.

பேரா அங்கப்பன் குடும்பம்

அருங்காட்சியகம் அருகிலேயே சுவாமி பிரம்மானந்தரின் மாணவரான பேரா.செல்வம் குடியிருக்கிறார். அவருடைய இல்லத்துக்குச் சென்றோம். மாலையுணவுக்கு அருகே உள்ள அங்கப்பன் என்னும் பேராசிரியரின் இல்லத்திற்குச் சென்றோம். இரவு செல்வத்தின் இல்லத்திலேயே தங்கினோம். ஆன்மிக ஈடுபாடு உள்ள செல்வம் அங்கே தத்துவ வகுப்புகள் நடத்தி வருகிறார்.

மறுநாள் மலேசியாவின் சிறிய அரசான  பேராக் மாநிலத்தில் உள்ள கோபெங் நகருக்கு அருகே அமைந்துள்ள குவா டெம்புருங் என்னும் குகையைப் பார்க்கச் சென்றோம். குகையின் மலேய உச்சரிப்புதான் குவா. மலையாறு ஒன்றால் துளைக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் மலையில் உருவானது இந்த குகை. (தமிழில் குகை என்றால் மலைக்குமேல் உள்ளது. மண்ணுக்கு அடியிலுள்ளது பிலம். இது பிலம்தான்)

பேரா குமாரசாமி குடும்பம், ஜி.எஸ்.எஸ்.வி நவீன் மற்றும் கிருபாவுடன்

எளிதாக உள்ளே செல்லும்படியாக மரப்பலகையாலான உறுதியான பாதைகள் அமைத்திருந்தார்கள். பாதைக்கு கீழே காட்டாறு புதிய மழையால் சீறிச்சுழன்று சென்றது. குகைக்குள் செவிநிறைக்கும் அதன் ஓலம். குறைவான ஒளி. ஸ்டால்கமைட் எனப்படும் சுண்ணாம்புப் பாறைக் கூம்புகள் பன்றியின் முலைகள் போல தொங்கிக் கிடந்தன. குளிர்ந்த நீர்ச்சொட்டுகள் மேலே உதிர்ந்தன.

அங்கே மேலிருந்து சுண்ணநீர் சொட்டிச் சொட்டி உறைந்து உருவான சுண்ணப்பாறையாலான படிக்கட்டு போன்ற அமைப்பு இருந்தது. நம்மூரில் என்றால் மேலே சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கும். குகேஸ்வரன் என்பது சிவனுக்கான பெயர். கன்னட வீரசைவ வசனப்பாடல்களில் குகேஸ்வரனை நோக்கியே பலபாடல்கள் எழுதப்பட்டுள்ளன. மனக்குகையில் உறைபவன். இருளிலெழுந்த இருள்துளி. பல குகைகளில் கண்ட கரிய சிவலிங்கங்கள் நினைவிலெழுந்தன. குறிப்பாக கஷ்மீரில் ஒரு குகையில் சிவலிங்கங்கள் சிதைந்த நிலையில் கிடந்தன.

குகை வாயிலில்

மறுபக்கம் சுண்ணப்பாறையாலான மலை செங்குத்தாக எழுந்து சூழ்ந்த காடு. மரங்கள் அசுரத்தனமான வளர்ச்சியுடன் இருந்தன. தலைக்குமேலே இலைப்பரப்பின் வலைக்கூரை. கொடிகளே மரங்களின் அளவுக்கு தடிமனாக இருந்தன. அக்கொடியை மலாய், சீன மக்கள் மருந்தாகவும் மாந்திரீகத்திற்கும் பயன்படுத்துவதாக குமாரசாமி சொன்னார்.

மாலை மீண்டும் குருகுலம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து நேராக பினாங்கு நகரில் ஜார்ஜ் டவுன் பகுதியிலமைந்த பிரஸ்டீஜ் ஓட்டலுக்கு. பிரஸ்டீஜ் ஓர் உயர்தர ஐந்துநட்சத்திர விடுதி. நவீனக் கட்டிடம், ஆனால் பழைய பிரிட்டிஷ் கட்டிடங்களின் அதே பாணியில் முகப்பு கட்டப்பட்டுள்ளது. அதன் தூண்கள் செறிந்த வராந்தா அந்த தெருவில் பாதி நீளத்திற்கு இருந்தது. அந்த விடுதி ஜார்ஜ் டவுன் இலக்கியவிழாவின் புரவலர்களில் ஒன்று.

அறை வசதியானது. நான் கணிப்பொறியை எடுத்து வைத்து மின்னஞ்சல்களைப் பார்த்தபோது ஸ்வீடன் புகைப்படங்கள் எழுந்து வந்தன. மிகச்சில நாட்களுக்கு முன்புதான் பனியின் ஒளி பரவிய ஆர்ட்டிக் பகுதியில் இருந்தேன் என்பதை என்னாலேயே நம்பமுடியாமலிருந்தது.

மாலையில் அ.பாண்டியன், கோ.புண்ணியவான் ஆகியோருடன் ஜிடிஎல்எஃப் நடத்திய  விருந்துக்குச் சென்றேன். அங்கே சிங்கப்பூர் கவிஞர் எழுத்தாளர் கனக லதா மற்றும் சிங்கப்பூர் கலையிலக்கிய கழக ஆலோசகர் அருண் மகிழ்நன் வந்திருந்தார்கள். நான் வழக்கம்போல பழங்கள் சாப்பிட்டேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாலின் மற்றும் சீன பதிப்பாளர் ஒருவர் , வங்க நாடகாசிரியர் ருஸ்தம் பரூச்சா என பலரைச் சந்தித்தேன்.

சீன மொழியில் பெயர்களை எழுதுவது பற்றிய பேச்சு வந்தது. சீனமொழியில் ஒலிக்கு எழுத்துக்கள் இல்லை, பொருளைக் குறிக்கும் சித்திரங்களே எழுத்துக்கள். ஆகவே சொற்களை முதலில் பொருள் துண்டுகளாக பிரிக்கவேண்டும். அவற்றுக்கு சித்திர எழுத்துக்களை உருவாக்கவேண்டும். அவை பொருள் வழியாகவே வாசிக்கப்படும். ஒலியாக அல்ல.

உதாரணமாக என் பெயர் ஜெயமோகன். அதை வெற்றி, விருப்பம் என பிரிக்கவேண்டும். அதற்குச் சமானமான சீன பொருள்கள் தேடி அவற்றுக்குரிய எழுத்துக்களால் எழுதி எனக்கு காட்டினார். விந்தையாக இருந்தது. ஆனால் உற்சாகமும் வந்தது. நல்லதனமாகத்தான் எழுதியிருந்தார்.

(மேலும்)

முந்தைய கட்டுரைமமங் தய், அருணாச்சல் கதைகள்
அடுத்த கட்டுரைரத்தசாட்சி இன்று முதல்