பனிநிலங்களில்- 7

ரோவநேமியில் இருந்து மீண்டும் ஹெல்சிங்கி. அங்கிருந்து ஸ்டாக்ஹோம் திரும்பும்போது ஓர் உல்லாசக்கப்பலில் பயணம் செய்யலாமென திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையில் எங்களுடன் சில தமிழ்நண்பர்களும் வருவதாக இருந்தது. கப்பலிலேயே ஒரு இலக்கிய கூட்டம். ஆனால் எங்கள் விசா பிரச்சினையால் இரண்டு முறை டிக்கெட் மாற்றிப்போடப்பட்டமையால் அது இயலவில்லை.

காலையில் கிளம்பி கைகால்கள் விரைக்க காரில் ஹெல்சிங்கி விமானநிலையம் சென்றபோது வெளியே வெண்ணிற ஒளியே விதவிதமாகக் குழைந்து உருவான வானையும் காட்டையும் சாலையையும் ஆறுகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். ஃபின்லாந்து சட்டென்று ஒரு கனவு போல நிகழ்ந்து, நிகழ்ந்ததா என்றே தெரியாதபடி நினைவாக மாறிக்கொண்டிருந்தது.

ஹெல்சிங்கியில் கப்பல் ஏறுமிடத்திற்கே ஒரு தமிழர் குழு வந்திருந்தது. எங்களுக்குப்  பொழுதில்லை, மிகச்சில சொற்கள் உரையாடவே முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் இருபதுபேருக்குமேல் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. குளிர் கடுமையாக இருந்தது. ஃபின்லாந்து தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு மலர்ச்செண்டு அளித்தனர். சிலர் பரிசுகள் அளித்தனர். கப்பலை ஒட்டிய கஃபேயில் அமர்ந்து ஒரு டீ சாப்பிட்டோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

அந்தக் கப்பல் சில்ஜா செரெனேட் (MS Silja Serenade) என்ற பெயர் கொண்ட உல்லாச ஊர்தி. எஃபோவா என்ற ஃபின்லாந்து கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானது. அக்கப்பலில் 2,852 பயணிகள் ஏறலாம். பொதுவான படுக்கைகளும், தனியறைகளும் உள்ளன.  986 தனியறைகள். மொத்தம் 2,841 படுக்கைகள். 11 அடுக்குகள் கொண்டது கப்பல். முதலில் அதை கப்பல் என நம்பவே கொஞ்சம் கற்பனை வேண்டும். கடலருகே நின்ற ஒரு மாளிகை என்றே தோன்றிக்கொண்டிருந்தது.

கப்பலின் 11 அடுக்குகளில் வெளிப்புறச் சாளரம் கொண்ட அறைகளும் உட்புறச்சாளரம் கொண்ட அறைகளும் நீள்வட்ட வடிவில் அமைந்துள்ளன. அறைச்சுற்றுக்கு நடுவே, உட்புறச்சாளரம் கொண்ட அறைகளில் இருந்து கீழே பார்க்கும்படியாக ஒரு நீள்வட்ட மால் என்னும் அகக்கடைவீதி. சாதாரணமாக ஒரு சிறுநகரத்தில் உள்ள அளவுக்கு பெரியது. அங்கே வண்ண விளக்குகள், விளம்பரங்கள்.

சொற்கம் என்பது போர்ஹெஸுக்கு ஒரு நூலகம் என்று சொல்லியிருந்தேன். சராசரி ஐரோப்பியனுக்கும் அமெரிக்கனுக்கும் அது ஒரு கடைவீதிதான் என நினைக்கிறேன். இந்த இயற்கையின் இன்னொரு தோற்றம் அது. இயற்கையில் இருந்து எடுத்து , மனிதருசிக்கு உகந்தபடி மறு ஆக்கம் செய்யப்பட்ட பொருட்களால் ஆனது. மனிதன் கலாச்சாரம் என ஒன்றை தொடங்கியபோதே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறான். அதன் உச்சமே இன்றைய நவீனக் கடைவீதி.

கடைவீதியில் எந்நேரமும் நெரிசல். வரிசையாக கடைகள். வழக்கமாக எல்லா உயர்நிலை கடைவீதிகளிலுமுள்ளவை போன்று ஆடம்பரப் பொருட்கள், வசதிப்பொருட்கள் விற்பவை. ஆனால் மூன்றிலொன்று உணவகங்களும் மதுக்கடைகளும்தான். பொருட்களுக்கு வரி கிடையாதென்பதனால் அள்ளிக்குவிக்கிறார்கள்.

இங்கே முதன்மையாக வாங்கப்படுவன மதுவகைகள்தான். மதுக்கடைகளில் இரண்டு லட்ச (இந்திய) ரூபாய் மதிப்புள்ள மதுப்புட்டிகளைக்கூட காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால், மதுவருந்தாதவருக்கு இந்தக் கப்பல் நாய் சந்தைக்குப் போனதுபோலத்தான். வேடிக்கை பார்த்து விட்டு வரலாம்.

குழந்தைகளுக்கான பொம்மைகள் நிறைந்து கிடந்தன கடைகளில். குழந்தைகளை அத்தகைய கடைகள் வழியாக பயிற்றுவித்து எடுக்கிறார்கள். நான் சின்னப்பையனாக இருந்தபோது எங்கள் வீட்டில் விளையாடுவதற்கு ஆண்குழந்தைகளுக்குப் பொம்மை என ஏதுமில்லை. பெண்குழந்தைகளுக்கு வாவுபலி பொருட்காட்சியில் வாங்கிய மரப்பொம்மைகள். அதில் அம்மி, ஆட்டுக்கல், அடுப்பு, சட்டி, பானை எல்லாம் இருக்கும். அரிதாக யானை, குதிரை.

இன்று இந்தியாவில் குழந்தைகள் உள்ள எந்த இல்லத்திற்குச் சென்றாலும் பொம்மைகள் இறைந்து கிடக்கின்றன. குழந்தைகள் பெரும்பாலான பொம்மைகளில் ஆர்வம் காட்டுவதுமில்லை. அவை மிகையான பொம்மைகளால் சலிப்புற்றிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகளுக்கு பலமடங்கு பொம்மைகள் இருக்கின்றன.

அறுபதுகளில் பிளாஸ்டிக் வந்த பின்னரே இந்த பொம்மைப்புரட்சி உருவானது என நினைக்கிறேன். இன்று பொம்மை என்பது ஒரு மாபெரும் நுகர்வுப்பரப்பு. குழந்தைகளுக்கான பொம்மைகள், காணொளிவிளையாட்டுக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்தால் உலகளாவ அது எத்தனைகோடி பெறுமானமுள்ள தொழில்!

டால்ஸ்டாய் அன்னா கரீனினாவில் பெண்களின் ஆடம்பர – அழகுத் தோற்றத்திற்காக எத்தனை செல்வமும் உழைப்பும் வீணாகச் செலவிடப்படுகிறது என வருந்துகிறார். இன்று கன்னியரின் ஆடம்பரத்தை குழந்தைகளின் ஆடம்பரம் வென்றுவிட்டிருக்கிறது

ஆனால் குழந்தைகள் அவற்றை கோரவில்லை. அவற்றை நாம் இந்தப் பொம்மைகள் வழியாக நுகர்வோராகப் பழக்குகிறோம். கிடைத்தவற்றில் அதிருப்தியும் கிடைக்காதவற்றில் ஏக்கமும் கொண்டவர்களாக ஆக்குகிறோம்.

பொம்மைகளின் உலகைப் பார்க்கப் பார்க்க ஓர் எண்ணம் உருவாகியது. இந்தக் கடைவீதி இயற்கையின் ஒரு ‘சமைத்துப் பரிமாறப்பட்ட வடிவம்’ என்றால் இந்த பொம்மைக்கடை இந்தக் கடைவீதியின் ’மேலும் சமைத்துப் பரிமாறப்பட்ட’ வடிவம். உணவைத் தின்று குட்டியின் வாயில் கக்கும் ஓநாய்கள் நாம்.

விதவிதமான முகங்கள். கப்பலில் ஒரு மெல்லிய தள்ளாட்டம் இருந்தமையால் நாங்களுட்பட எல்லாருமே ஆடிக்கொண்டுதான் இருந்தோம். இந்த கேளிக்கைநிலையங்களில் வருபவர்கள் பலவகை. இதேவேலையாக உலகம் சுற்றுபவர்கள். நீண்டகாலத் திட்டத்துடன் பணம் சேர்த்து வருபவர்கள். சாமானியப் பயணிகளும் பலர் உண்டு. எல்லா முகங்களிலும் ஒருவகை எக்களிப்பு. வெறித்த விழிகள், பித்துச் சிரிப்புகள்.

பொதுவாக காஸினோக்களில்தான் இந்தவகை வெறிப்பும் சிரிப்பும் இருக்கும். மக்களுக்கு நாளை என ஒன்று இல்லை என்று ஆகிவிட்டதைப் போல. கொண்டாடு, நுகர், இனி இது இல்லை என அவை ஆணையிடுகின்றன. கார்லைல் அதை மாம்மன் வழிபாடு என்கிறார். பொருள் வழிபாடு, செல்வ வழிபாடு, நுகர்வு வழிபாடு. அதுவே முதலாளித்துவத்தின் அடிப்படை.

நான்கு கருப்பின இளைஞர்கள் பளிச்சிடும் உடைகளுடன் மெல்லிய நடன அசைவுகளுடன் ஜாஸ் இசை பாடினார்கள். அலெக்ஸின் இயல்புக்குள் இருந்து இசையும் நடனமும் வெளிவர அவன் அவர்கள் முன் நின்று ஆடினான். குழந்தைகளை கவரும் முதற்கலை நடனம்தான். கலைகளில் அதுவே கள்ளமற்றது என்று சொல்லப்படுவதுண்டு. அவர்கள் விட்ட இடைவெளியில் ஒருவர் பியானோ வாசித்தார்.

பன்னிரண்டாவது மாடி திறந்த மைதானம். மேலே விண்மீன்களற்ற வானம். கடுங்குளிருடன் காற்று வீசிக்கொண்டிருந்தது. கனத்த ஆடைகளுடன் கம்பிப் பிடி வரிசை அருகே நின்று கீழே கடலின் கரிய அலைகள் கொந்தளிப்பதைப் பார்த்தோம். கரையோரமாகவே கப்பல் சென்றது. மின்விளக்குச் செறிவுகள் மெல்லச் சுழன்று விலகிச்சென்றுகொண்டிருந்தன.

எங்களுக்கு அளிக்கப்பட்டது ஒரு சிறு அறை. அதில் நால்வர் தங்கலாம். கழிப்பறை, குளியலறை இணைக்கப்பட்டது. முதல்வகுப்பு ரயில்பெட்டி அளவுக்கு. ஆனால் அந்த சிறுபகுதிக்குள் அழகான ,சொகுசான உணர்வை உருவாக்கியிருந்தனர். உடனே படுத்து தூங்கிவிடவேண்டும் என்று தோன்றுமளவுக்கு.

அந்தக் கப்பலின் உட்பரப்பை கப்பல் என நம்புவது கடினம். சட்டென்று ஒரு ஸ்டார் விடுதியின் உள்ளே இருப்பதாகத் தோன்றும். 2009ல் ஆஸ்திரேலியப் பயணத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்றேன். (கரையில் நிறுத்தப்பட்டிருந்தது) இரண்டாம் உலகப்போர்க் காலத்தைச் சேர்ந்தது. அதில் எங்குமே எவருமே நிமிர்ந்து நிற்க முடியாது. முதுகை நிமிர்த்தவேண்டுமென்றால் படுத்துக்கொள்ளவேண்டும். பத்து நிமிடத்தில் எனக்கு திணறல் ஏற்பட்டு வெளியே ஓடிவந்துவிட்டேன்.

ஒரு மாபெரும் திமிங்கலத்தின் உட்பகுதி என்று கற்பனை செய்துகொண்டேன். நீர்மேல் மிதக்கும் ஒரு நகர்த்துண்டு. ஒரு கடைவீதியை இங்கே அமைத்து எதை அனுபவிக்கிறார்கள். நீர்மேல் இருக்கிறோம் என்னும் எண்ணத்திற்கு அப்பால் இதில் என்ன சேர்ந்துள்ளது?

இப்படித் தோன்றியது, இது ஒரு சிறப்பனுபவம். இது எந்த நிலத்துடனும் இணைந்திருக்கவில்லை. இது தேசங்களில் இருந்து விடுதலை அடைந்திருக்கிறது. இது நிலைகொள்ளவில்லை, ஒழுகிச்சென்றுகொண்டிருக்கிறது. அதுதான் இதிலுள்ள விந்தையனுபவம்.

அருண்மொழி,சைதன்யா, ரவி, கிளாரா ஆகியோர் ஆறாவது நிலையில் நடந்த இரவுநடனத்தைப் பார்க்கச் சென்றனர். நான் அறையில் அமர்ந்து சாளரம் வழியாக கீழே நடந்துகொண்டிருந்த களியாட்டங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எந்த முதலாளித்துவநாட்டிலும் கேளிக்கையிடங்களில் சீனர்கள் அதிகமாகத் தென்படுகிறார்கள். இந்தியர்கள் மிக அரிது. இந்தியர்களால் தங்களை மறந்து கொண்டாடவும் இயலாது.

காலையில் ஏழுமணிக்கே எழுந்துகொண்டோம். இருள் விலகத் தொடங்கியிருந்தது. உடைகளை அணிந்துகொண்டு ஒரு நடமாடும் கூடாரமாக மேல்தட்டுக்குச் சென்றோம். அரையிருளில் சூழத்தெரிந்த காட்சி ஒரு கனவுபோலிருந்தது. பால்டிக் கடல் உலகக்கடல்களில் மிக இளையது என்கிறார்கள். சில ஆயிரம் தீவுகள் இங்குள்ளன. ஒரு ஏக்கர் அளவுள்ள தீவுகூட. ஒரு மரம்கூட இல்லாததை தீவு என்று சொல்லக்கூடாது, கடல்மேடு. தீவுகளை அள்ளி வானிலிருந்து தெளித்ததுபோலிருந்தது.

பச்சைத்தீவுகளில் எல்லாம் இல்லங்கள். விருந்தினர் மாளிகைகள் அவை. சிலவற்றிலேயே ஒளி இருந்தது. பெரும்பாலானவை வருகையாளர்களுக்காகக் காத்திருந்தன. சில தீவுகளில் நாலைந்து மரங்கள், ஒரு படகுத்துறை, ஒரே ஒரு கட்டிடம். அங்கே வாழ்வதைப்போல திகைக்கைவைக்கும் தனிமை வேறொன்றில்லை. இல்லங்கள் கடல்மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இல்லை. அங்கே நிலாவில் கடலோதம் ஏற்படாதா என்று தெரியவில்லை.

காலையுணவை அங்கே தன்னுபசரிப்பு முறையில் உண்டோம். நான் எந்த வெளிநாட்டுப் பயணத்திலும் ஆரஞ்சு பழச்சாற்றை உடல்நிறையுமளவுக்கு குடிப்பேன். பயணங்களில் உடல்நிலைச் சிக்கல் வராமலிருப்பது அதனால்தான். 2000 த்தில், முதல் வெளிநாட்டுப் பயணமாக கனடா சென்றபோது அ.முத்துலிங்கம் சொன்னது. “இனியொரு வெளிநாட்டுப் பயணம் இருக்குமா தெரியவில்லை சார்” என நான் எழுதினேன். “நீங்க இப்பதான் ஆரம்பிச்சிருக்கீங்க. போய்ட்டேதான் இருப்பீங்க” என்று அவர் அன்று சொன்னார். கலைஞனின் சொல்.

காலை 11 மணிக்கு ஸ்டாக்ஹோம் சென்று சேர்ந்தோம். அதுவரை கடலையே பார்த்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு தீவிலும் வாழ்ந்து வாழ்ந்து சென்றோம். அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் ஆளுக்கொரு தீவு வாங்கலாமென்றால் எதையெதை என பேசிக்கொண்டோம். ஒன்றை விட இன்னொன்று மேல் என்று தோன்றிக்கொண்டிருந்தது. ஆகவே வாங்கும் முடிவை ஒத்திப்போட்டோம்.

கடலோரமாகவே நிலம் வந்துகொண்டிருந்தது. பீரங்கித் தாக்குதலுக்கு நிலைகொள்ளும் அளவு பெரிய மதில்களுடன் ஒரு கோட்டை. அதில் வீரர்கள் பதுங்கியமரும் குழிகள். சாலையோரத்து தேவாலயங்கள். பதினொரு மணிக்குத்தான் மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது.

வாசாவின் கப்பலை இந்தக் கப்பலின் முன் வைத்துப் பார்த்தால் அது ஒரு நகர் முன் ஒரு கட்டிடம் எனத் தோன்றும். ஆனால் அங்கிருந்து கப்பல்கலை இங்கே வந்து சேர்ந்திருக்கிறது. அந்தக் கப்பலைப் பார்க்கும்போதும் சரி இதில் நுழையும்போதும் சரி, டைட்டானிக் நினைவு வராமல் தடுக்க முடியவில்லை. ஜாக் கீழே ஏதோ அடுக்கில் குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறான் என தோன்றியது.

உண்மையிலேயே 12 ஆம் அடுக்கில் உயர்குடிகளுக்கான கேளிக்கைநிலை இருந்தது. அங்கே வெந்நீர் நிறைந்த நீச்சல்குளங்களைக் கண்டோம்.உப்புநீருக்குமேல் ஒரு நன்னீர் குளம், அதில் நீராடுதல். கடலுக்குமேல் மிதக்கும் குளம். அந்த விந்தைதான் அவர்களை மகிழ்விக்கிறது.

ஸடாக்ஹோம் சென்று நேரடியாக ரவியின் ஓட்டலுக்குள் நுழைந்தோம். ‘ஹோம் கமிங்’ என்று தோன்றியதும் சிரிப்பு வந்தது. அது இன்னும் ஒருநாள் இருக்கப்போகும் ஊர். ஆனால் சைபீரியவட்டத்தில் இருந்து பார்த்தால் அது சொந்த ஊர்தானே?

சைதன்யாவின் தோழி அன்பு ராணி ஸ்டாக்ஹோம் KTH பல்கலையில் இயற்பியல் ஆய்வுமாணவியாகச் சேர்ந்திருந்தாள். அவள் ஸ்டாக்ஹோம் வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. நடந்தே உணவகத்திற்கு வந்தாள். அவளுடன் சைதன்யாவும் அஜிதனும் செல்ல நான் ரவியின் இல்லத்திற்கு வந்தேன்.

அறையில் அமர்ந்திருக்கையில் ஒரு நாளில் எத்தனை நிலங்கள் என்னும் திகைப்பு அடைந்தது. கண்ணுக்கு செரிமானக் கோளாறு ஏதாவது உருவாகுமா என்ன என்று வியந்துகொண்டேன்.

(மேலும்)

முந்தைய கட்டுரைவெங்கட் சாமிநாதன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி மனோகர் தேவதாஸ்