மதங்க கர்ப்பத்தில் பிறந்தோரின் வாக்குமூலம்- சௌந்தர்

                             

(சாருவின் நான்தான் ஒளரங்கசீப் – நாவலை முன்வைத்து)

ஏழு வயது குழந்தையுடன் அதுவும் பையனுடன் அமர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுகளில், பெரியவர்களுக்கு வரும் மிகப்பெரிய சிக்கல், மற்றும் பதட்டம் என்பது அவனுடைய ஒழுங்கின்மையும் ,கலைத்துப்போடும் தன்மையும் தான். அது விளையாட்டின் மொத்த சுவாரஸ்யத்தையும் கெடுத்து விடுவதுடன், எல்லாவற்றையும் சரியாக ‘அடுக்கி’ வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியவருக்கு, இந்த ‘உடைப்பு’ எனும் செயல் எரிச்சலை தருகிறது.

சதுரமும், செவ்வகமுமாக, இருக்கும் பிளாஸ்டிக் வில்லைகளை அடுக்கி மிக அழகான வீடு அல்லது கோட்டையை அவர் கட்டுவார், அதை அவ்வளவு ஆர்வத்துடன் உடைத்து போட்டு, அவன் சிரிப்பான். அல்லது கடற்கரையில் கட்டப்பட்ட மணல் வீட்டை, ஐம்பது அடி தூரத்திலிருந்து ஓடி வந்து குதித்து, மீண்டும் மணலாக்குவன், அதில் முகம் மலர்பவன் அவன்.

இந்த உடைப்பும் ஒழுக்கமின்மையும் ஒருபுறம் என்றால் அதற்கு இணையாகவே, எதிலும் அமைய முடியாத திருப்தியின்மையும், தொடர்ந்து எதையாவது நுகரத்துடிக்கும் இச்சையும், தான் ‘கட்டமைக்கப்பட்ட‘ பெரியவர்களை தொல்லை செய்கிறது.

சாருவின் புனைவுலகு இந்த சிறுவனின் நிலையிலிருந்து எழுதப்படும் ஒன்று, பெரியோருக்கு பதட்டத்தை உருவாக்குவது அதன் இயல்பு.

முகநூல் போன்ற ஊடகங்களில் உண்மையில் சந்தோசமாக இருப்பவர்கள் இரண்டே பிரிவினர்தான், முதலாமவர் பூனை படங்கள், பூக்கள், குழந்தையின் சிரிப்பு, வானவில் போன்ற படங்களை தினமும் பதிவிட்டு விட்டு வேலையை பார்க்க சென்று விடுபவர்கள். அடுத்தவர், எந்த கருத்திலும் மாட்டிக்கொள்ளாமல், ஒரு லைக் போட்டுவிட்டு உண்மையை தேடிக் கண்டுபிடித்து படிக்கக் கிளம்பி விடுபவர். மீதமுள்ளோர் ஒரு தரப்பை பிடித்துக்கொண்டு தொங்கும் பாவப்பட்ட பிரா(யா)ணிகள்.

சாருவை படிப்பதற்கோ, புரிந்து கொள்வதற்கோ எந்த தரப்புமற்ற ஒரு மந்தகாச நிலை தேவையாகிறது. ஒரு லைக் போட்டுவிட்டு போய்விடலாம், அல்லது அவருடன் சேர்ந்து, புனிதப்படுத்துதலை எள்ளி நகையாடிவிட்டு அதிலிருந்து ஆறாவது பக்கத்தில் “ஆன்மீக வாழ்வே ஒரு மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த பட்ச நிலை” என ஒரு துறவியை போல ஆயிரம் வார்த்தைகளில் வர்ணிக்கலாம். இதையெல்லாம் செய்ய முடிந்தால் சாரு உங்களுக்கு உகந்தவர்.

ஜீரோ டிகிரி படித்துவிட்டு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன், அவ்வளவாக உவப்பாக இல்லை ஆனால், ஒருசில அத்யாயங்கள் பிடித்திருந்தது.என ‘நன்றி’ என பதில் அனுப்பி இருந்தார்.

சரி ஒரு நாவலாக படிக்கலாம் என எண்ணியபோது கிடைத்தது தான் ‘நான் தான் ஒளரங்கசீப்’ எழுத்தாளரும், ஆவி வடிவில் ஒளரங்கசீப்பும் உரையாடும் கற்பனையாக நீளும் நாவல் இது. முதல் இரண்டு அத்யாயத்திற்குள் ஒளரங்க சீப்பின் கதாபாத்திரம் தன்னைப் பற்றி சொல்லி விடுகிறது.

அதில் ”நாற்பத்தொன்பது ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்த ஆலம் கீர் ( உலக நாயகன்) ஆகிய நான் அப்பழுக்கில்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், மலர் மஞ்சத்தை துறந்தேன், ஆடம்பரங்களை துறந்தேன், உலகின் மிகப்பெரிய செல்வந்தனாகிய நான், வெறும் தரையில் படுத்தும், என் தொப்பியை நானே தைத்துக்கொண்டும், அல் -குரானை கைகளால் எழுதி விற்று சம்பாதித்து அதில் வாழ்ந்து கொண்டிருந்தேன்,” – என்று அறிமுகம் செய்தவுடனேயே சரி மேற்கொண்டு என்ன தான் சொல்றாரு பார்ப்போம் என நம்மை நாவல் உள்ளே இழுத்து விடுகிறது.

கதை பல்வேறு வரலாற்று ஆய்வு நூல்களையும், தரவுகளையும், சுயசரிதைகளையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. ஆகவே நம்பவும் நம்பாமல் இருக்கவும் வாசகர்கள் அலைக்கழிவது நிச்சயம்.

நாவல் நெடுகிலும் வஞ்சம், வஞ்சம், வஞ்சம் என மொகலாயர்கள் ஆண்ட முன்னூறு வருடமும் ஒவ்வொருவரும் டஜன் கணக்கில் பெற்றுக்கொள்கிறார்கள். அதில் நான்கு அல்லது ஐந்து பேர் மிஞ்ச, அவர்களுக்குள் அதிகார போட்டி, ஆக தந்தையை தனயன் கொல்வது, தம்பியை அண்ணன் விஷம் வைத்து கொல்வது, அண்ணனை தம்பி எதிரிக்கு காட்டிக்கொடுத்து கொல்ல துணை புரிவது என. சாதாரணமாக ஒவ்வொருவரும் ஆவியாக வந்து வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

கிழக்கிந்திய கம்பெனியை உள்ளே விட்டதன் மூலம் தங்களுடைய வீழ்ச்சியை பேசும் அத்தியாயங்களும் ஒளரங்கசீப் வாக்குமூலமாக அமைகிறது. இவை அனைத்திற்கும் நூல்கள் மேற்கோள் காட்டப்படுகிறது.

சாரு இதற்காக எப்படியும் இருபது முப்பது புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறார், அவர் படித்தது அதை விட மேலும் பல மடங்குகள் இருக்கலாம், அது தீவிரத்தன்மை தான் இப்படி ஒரு நாவலுக்கு உதவியிருக்கும்.

எனினும் நாவல் ஆங்காங்கே கைதவறி உடைந்த பீங்கான் குவளை போல சிதறிக்கிடக்கிறது. அது தான் மேலே சொன்ன ஏழு வயது சிறுவனின் கைவண்ணம்.

உதாரணமாக கொக்கரக்கோ எனும் நண்பர் உள்ளே வருகிறார். வெறும் வேடிக்கை பார்க்க வருகிறார். எந்த பங்களிப்பும் இல்லை எனினும் சாருவுக்கு அவரில்லாமல் எழுத ‘கை நடுங்கும்’ என்பது போல கொக்கரக்கோ நாவலில் பிற்பகுதியில் திரிகிறார். ஆனாலும் நாம் எதுவும் சொல்ல முடியாது, ஏனெனில் ஏழு வயசு பையனுக்கு என்னத்த சொல்லி புரியவைக்க? என்கிற நிலை தான் மிஞ்சும். ஆகவே கடந்து போக வேண்டியது தான்.

இப்படி திடீரென ஒளரங்கசீப், கொக்கரக்கோ, சாரு மூவரும் சீலே நாட்டுக்கு சென்று விடுகிறார்கள். இப்போது சாரு எழுதிக்கொண்டிருக்கும் ‘அவ்ட்சைடர்’ எனும் கட்டுரை தொகுப்பின் ஒரு பகுதி அது. இப்படியான உடைசல்களை தாண்டி இந்த நாவல் நம்மில் நிற்பதற்கு வலுவான காரணமாக சிலவற்றை சொல்லலாம்.

நாவல் முழுவதும் வந்து செல்லும் சூபி மரபின் ஞானியர் நிரை, அவர்களின் ஆன்மீக பலம் மற்றும் சாதனைகளை அதன் மூல வடிவிலிருந்து சிறிதும் மாற்றாமல், நமக்கு தந்திருப்பது.

அடுத்ததாக மொகலாயர்கள் அப்போதைய ராஜபுத்திர மற்றும் மராட்டிய மன்னர்களுடனான போரும் சமாதானமும் அதன் பின்னாலிருந்த அரசியலும் என ஒரு முக்கியமான பார்வை. அதில் முதன்மையானது பாபர், அக்பர், சிவாஜி, ஷாஜஹான், என நாம் நிறுவி வைத்திருக்கும் வரலாற்று நாயகர்களை அவர்களின் அரசியல் மற்றும் இருளான, நொய்மையான பக்கங்களை வரலாற்று தரவுகளுடன் கொடுத்திருப்பது.

இந்த வரலாற்று தரவுகளை பொய் என நாம் மறுத்தால், ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் தரவுகளின் உண்மை தன்மையையும் சோதிக்க வேண்டி வரலாம்.

அடுத்ததாக நாவல் முழுவதும் நிகழும் புராண மேற்கோள்கள். ஒளரங்கசீப் வாக்குமூலத்தில் பாதி மகாபாரத கதைகளின் மேற்கோள்களாலும், மீதி அல் குரானின் மேற்கோள்களாலும் மேன்மைகளாலும் நிறைந்து நிற்கிறது. ஒளரங்கசீப் தனக்கு தேவையானவாறு புராண கதாபாத்திரங்களை வளைத்துக்கொள்கிறார். என்று வைத்துக்கொண்டாலும், அதுவும் நாவலுக்கு நன்மையே செய்திருக்கிறது.

புராண எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர்களின் தரப்பை சொல்ல, பெரும்பாலும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. இங்கொன்றும் அன்கொன்றுமாக சிலவற்றை சொல்லலாம், அல்லது எதிர்மறை பாத்திரங்களை யுக புருஷர்களாக மாற்றி புனையப்பட்ட படைப்புகள் சிலவற்றை சொல்லலாம், ஆனால் ஒளரங்கசீப் போன்ற ஒரு வரலாற்று எதிர்மறை கதாபாத்திரத்திற்கு இப்படியும் ஒரு தரப்பு இருந்திருக்கும் என்கிற ஊகம் மற்றும் அதை ஒட்டிய நாவல் என்கிற வரிசையில் இதை மிக முக்கியமான படைப்பாக கொள்ளலாம்.

ஒருவகையில் வெண்முரசு இதை மிக கச்சிதமாக கையாண்டிருக்கும் அதில் வரும் சகுனியோ, துரியோதனனோ, நம்மால் மறுக்கவே முடியாத தங்கள் அறத்தை முன் வைப்பார்கள். எதிர்மறை கதாபாத்திரம் என்கிற எண்ணம் நீங்கி அவனுக்கான நியாயத்தை அவன் சொல்லட்டும் அதுவும் இங்கே முக்கியம் என்கிற இடத்திற்கு வந்து சேர்வோம். அப்படித்தான் சாரு ஒளரங்கசீப்பை முன் வைக்கிறார்.

நமக்கு புராணத்திலிருந்து கிடைக்கும் ஒரு கருத்தாக்கம் ‘மதங்க கர்ப்பத்தில் பிறக்கும் அனைவரும் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தும் வல்லமை பெற்றோர்’ என்பது. உதாரணமாக இராவணன், கார்த்தவீரியன், துரியோதனன் இவர்கள் மூவரும் மதங்க கர்ப்பத்தில் பிறக்கிறார்கள், தங்களுக்கான சத்திரிய தகுதியை நிரூபித்து நல்லாட்சி என தான் கருதியதை கொடுத்து, பரிபாலனம் செய்தும், முறையே காம, குரோத, மோகத்தால் மிகப்பெரிய அழிவு சக்தியாக மாறியவர்கள். அப்படியான ஒருவராகத்தான் ஒளரங்கசீப்பின் வாக்கு மூலம் அமைகிறது.

ஒளரங்கசீபின் ஆவி அகோரியின் உடலிலிருந்து பேசுவதெல்லாம் தன் ஆட்சிமுறை, மக்களுக்கு செய்த நன்மைகள், தனது மார்க்கத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு பயணித்தது, எங்கும் பயமறியாது வீரம், ஒழுக்கமே உருவான வாழ்க்கை, எளிமையான அன்றாட தேவைகள், என நீண்ட நேர்மறை பட்டியலை கொடுத்துவிட்டு, தான் செய்த கொலைகள், பாதக செயல்கள், மாற்று மதத்தினரை கொன்று குவித்தல், கொள்ளைகள், மற்றும் எண்பது மூன்று வயதிலும் போர்முனையில் நின்று அனைத்தையும் இழந்து சரிந்து கொண்டிருந்த அந்திம காலம் என மொத்த வாழ்க்கையையும் வாக்குமூலமாக சொல்கிறார். அதில் அக்பரும், பாபரும், சிவாஜியும், அசோகரும் கூட தங்களை நன்றாக விளம்பரம் செய்து கொண்டு வரலாற்று நாயகர்களாக நின்று விட்டனர். நானோ மார்க்கத்தை தவிர வேறு ஒன்றுக்கும், என்னை ஒப்புக்கொடுக்க வில்லை என்பதால் என் கல்லறை கூட எங்கே இருக்கிறது என்கிற தகவலை கூட சொல்லவில்லை. நான் தொப்பி தைத்து சேமித்த முன்னூறு ரூபாயும் என் வேலைக்காரனிடம் உள்ளது அதில் மசூதியில் இருக்கும் ஏழைகளுக்கு இனிப்பு வாங்கி கொடுக்கவும்.

துரியோதனனும், கார்த்த வீரியனும், இராவணனும் இப்படியான வாக்குமூலத்தை தான் தந்திருப்பார்கள். ஏனெனில் சாமானியர்களை விட ஆறுமாதம் அதிகமாகவே இருளறையை கண்டவர்கள் என்பதால், தாமசம் எனும் இருள் மேலும் மேலுமென பெருகுவதற்கு இணையாகவே அழித்துக்கொண்டே செல்லும் ஆற்றலும் கொண்டது.

ஒளரங்கசீப்பின் வாக்குமூலமும் அதையே சொல்கிறது. சூஃபி ஞானியரும், இந்திய யோகியாரும் நாவல் முழுவதும் ஆனந்த நடனத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க, வஞ்சம் மிக்க அரசர்களோ ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொண்டும், விஷம் வைத்து கொன்றுகொண்டும், நிலம்… நிலம்… நிலம் என அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு வரலாற்று நாவலை கற்பனையும் தரவுகளையும் சரிவிகிதத்தில் கொடுத்து, முடிந்தால் புரிந்துகொள் என சவாலுடன் முடிக்கிறார். சாரு.

இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது பெறும் சாரு அவர்களுக்கு அன்பும் நன்றியும். வாழ்த்துக்களும்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

முந்தைய கட்டுரைசியமந்தகம் கடிதங்கள்.
அடுத்த கட்டுரைவெங்கட் சாமிநாதன்