உள்ளும் புறமும் விளிம்பும்- காளிபிரசாத்

 

விஷ்ணுபுரம் விருது,2022

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

வேலை விஷயமாக ஸெகந்திராபாத்தில் தங்கியிருந்த நாட்களில் வரைகலைக் கலைஞர் ஒருவர் கவனத்தைக் கவர்ந்தார். சுவரில் மற்றும் பலகைகளில் எழுதுபவர். அங்கிருந்த காலியிடத்தில் லாரி ஒர்க்‌ஷாப்  ஒன்றிருந்தது. அந்த வரைகலைஞர் லாரிக்கு பின்னால் stop  என்றும் sound horn என்றும் எழுதுவதை நின்று பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதற்கு காரணம் அவர் அந்த எழுத்துக்களை  எழுத மாட்டார். கறுப்பு நிறம் பூசியிருக்கும் மட்கார்டில், வெள்ளை நிறத்தில்  நான்கு கோடுகளும் இரண்டு புள்ளிகளும் மட்டும்தான். ஆனால் பின்னால் உள்ள நிறத்தின் வழியாக கரிய எழுத்துக்கள் எழுந்து வந்து கண்ணை நிறைத்துவிடும்.   கதையில்லாக் கதைகளை வாசிக்கையில் அதைத்தான் நினைத்துக் கொள்வேன். ஒட்டுமொத்தமாக அது சொல்லவருவது என்ன என்பது பார்ப்பவருக்கு திரண்டு வரவேண்டும். ஆனால் அவற்றை எழுத்தாளர் எழுதுவது இல்லை.  அவர் செய்வது எல்லாம்  வேறு ஒன்றை தீட்டுவது தான்.  அவர் தீட்டுவது ஒன்று; இடைவெளியில் இருப்பது ஒன்று. இரண்டும் பிணைந்து தான் நாவலாக திரண்டு வருகிறது.

தனது கட்டுரைகளில் “தயிர்சாத சென்ஸிபிலிட்டி” என்கிற பதத்தை சாரு தொடர்ந்து பயன்படுத்தி வருவார். இதை ஒரு சோதனைக்கருவியாக அவர் சொல்லும் அனைத்திலும் இட்டுப் பார்க்கலாம். ராஸலீலாவில் வரும் தபாலாபீஸ் சம்பவங்கள் போல எக்ஸைலில் வரும் நுண்ணுணர்வு கொண்ட குடும்பஸ்தன் உதயா எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவன் எதிர்கொள்ளும் தயிர்சாத சென்ஸிபிலிட்டிக்கான எதிர்வினைகளின் ஊடாகத்தான் எழுந்து வரவே செய்கின்றன. அவ்வகையில் புதிய எக்ஸைல் நாவலின் துவக்கத்திலும் இறுதியிலும் வரும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் தொடர்ச்சியாக ஒரு  ‘தயிர்சாத சென்ஸிபிலிட்டி’ கோடு இழுக்கலாம். அதில் இந்நாவலின் பெரும்பான்மையான உப பாத்திரங்களைச் சேர்த்து விடலாம்.

ஒரு மாநகர குடும்பஸ்தன், பெருமழைக் காலத்தில் எங்கிருந்தோ வீட்டுக்கருகில் வந்த நாய்க்குட்டியையோ பூனைக்குட்டியையோ கண்டால் பதற்றமாகிறான். அதை தன் வீட்டை விட்டு அப்புறப்படுத்தத் தன்னால் ஆனவற்றைச் செய்து பார்க்கிறான். அதை வீட்டிற்குள் சேர்க்க தடுப்பது எது? அவனது குடும்பமாக இருக்கலாம் அல்லது அவனது அபார்ட்மெண்டின் விதிமுறைகளாக  இருக்கலாம். பொது வாழ்க்கைக்கான அமைப்பில் இருந்து ஊறிய மனம் அதை தடுக்கிறது. அது அவ்வளவு நாட்களாக  அவனும் உள்ளே இருந்து வருகிற சித்தாந்தமும் வார்ப்பும் தானே. சற்று யோசிக்கத் தெரிந்த மனிதன் அங்கு திகைத்துப் போகிறான். வாழும் உரிமையை சக உயிருக்கு அளிக்கக்கூட தடுப்பது எது என தர்க்கமனம் ஆலோசிக்கிறது. இந்த சிக்கலை தமிழின் அத்தனை எழுத்தாளர்களும் தங்களது புனைவில் அல்லது அபுனைவில் வெளிப்படுத்தித்தான் இருக்கிறார்கள். நாம் இந்த வருட விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சம்பந்தப் பட்ட இருவரை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இவ்விரண்டிலும் ஒரு சராசரிக்கு மீறிய தன்மை இருக்கிறது.

ஒருவர், எழுத்தாளர் ஜெயமோகன், தனது  வீட்டில் கூடு கட்டிய பறவைகள் பற்றி எழுதிய மூன்று பதிவுகள் உள்ளன. அதில் தாயும் தந்தையும் கூடுகட்டுவது ஒரு பதிவு. குஞ்சு பொரிப்பது அடுத்த பதிவு. அவை பறந்து செல்வது மூன்றாவது பதிவு. அதன் இறுதிப் பகுதி இவ்வாறு முடிகிறது.

’அவ்வளவுதான், மிகச்சிறிய அழகிய ஒரு பிறவிநாடகம் முடிவுற்றது. இனி அவை வானுக்குரியவை. வானம் அவற்றை ஏந்திக்கொள்ளட்டும்.’

அது கிட்டத்தட்ட ஓரு தந்தை மனநிலை.

மற்றவர் சாருநிவேதிதா. உதயாவின்  வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் ஒரு பூனை தவறுதலாக விழுகிறது. அதைக் காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார்கள். அப்படியே அந்த அத்தியாயம் வளர்ந்து தாவித்தாவிப் போகிறது. அதற்கடுத்து உதயாவின் மனம், இத்தகைய உயிர்களை காப்பது எப்படி என்று ஆலோசிக்கிறது. உதயாவிற்கு அதனாலேயே அவைகுறித்தே தொடர்ச்சியாக தகவல்கள் கண்ணில் படுகின்றன. அத்தகைய பிராணிகள் குறித்து அச்சமுற்று அலைக்கழிந்தபடியே  இருக்கிறான். தன்னை நம்பி இருக்கும் உயிர்கள் என்று அதன்மீது உருவாகும் பற்று. அவற்றிற்கு சிறந்ததைத்தானே தான் அளிக்கவேண்டும் என்று உருவாகும் பதற்றம். அதனால் தனது சக்திக்கும் மீறி அவற்றிற்கு சிறந்த உணவை அளிக்க துவங்குகிறான். அங்கிருந்து அது மேன்மேலும் விரிந்து கொண்டே போவதைக் காணலாம். தெருநாயைக் கண்டு பதட்டமடைவதால், தான் இமயமலைப் பயணம் போகும் போது அதை யார் கவனிப்பார்கள் என அதற்கு ஒரு ஏற்பாடு செய்து வைப்பது. ஏதோ ஒரு ஊரில் வீடு காலி செய்து போனவர்கள் தங்கள் வளர்ப்பு நாயை பார்சலில் சென்னை ரயில்நிலையத்திற்கு அனுப்பிய செய்தியை  வாசித்து நிலைகுலைவது என தனது பதட்டத்தை பெருக்கிக் கொண்டே போவதைக் காணலாம். இதை ஒரு தாயின் மனநிலையாக சொல்லலாம்.

அந்த மனநிலையோடு துவங்கும் இந்நாவல் முரண்களில் இயங்குகிறது. முதல் காரணி அவனிடம் வெளிப்படும் அன்பு. அதாவது வரைமுறைக்கு உட்படாத அன்பு. பொதுச்சமூக கணக்குப் படி அவற்றை ‘முறையானது’ அல்லது ‘முறைமீறியது’ என்று வகைப்படுத்தினாலும் அதற்குள் அடைபடாமல் மீறிச் செல்கிறது அது. இரண்டாவது ஒவ்வாமை. சராசரிகளிடமிருந்து விலகி நிற்கும் ஒவ்வாமை. அந்த சிக்கலை ஒரேமாதிரியாக எதிர்கொள்பவர்களாக உதயாவும் அஞ்சலியும் இருக்கிறார்கள். நாவலில் இன்னும் இருவரும் கூட அதை எதிர்கொள்கிறார்கள். ஒருவர் பெருந்தேவி மற்றவன் கொக்கரக்கோ. பெருந்தேவி அதனுடன் போராடுபவள். கொக்கரக்கோ அதனுடன் விளையாடுபவன்.

சமூக அமைப்பில் இருந்து மனதளவில் வெளியே இருப்பவர்கள் அல்லது விளிம்பில் நிற்பவர்கள் உதயாவும் அஞ்சலியும். சாரு துவக்கம் முதலே தன்னை முன்வைப்பதே அத்தகைய ஒருவராகத்தான். அவரது முந்தைய நாவல்களில் அவை மிகவும் காத்திரமாக வெளிப்படும். முந்தைய படைப்புகளில்  அடர்த்தியாக வெளிப்பட்டவை இங்கு அடர்த்தி குறைந்து போயிருக்கிறது. அவ்வாறு சொல்வதை விடவும்  தனது  முந்தைய  அழகியலையும் கலைத்துப் போடுகின்றது எனக் கூறலாம்.  ஸீரோடிகிரியில் ஒரு பக்கம் முழுக்க ஜெபமாக வரும் ஆரிய அல்குல் இங்கு ஒரு பக்கம் முழுவதும் அதன் சமகால வார்த்தையாக வருவதைப் போல நிகழ்கிறது. அதற்கு இது நிகழும் களம் ஒரு காரணம். அஞ்சலி மீதான குடும்பத்தாரின் வம்பு, உதயா எதிர்கொள்ளும் சமூக வலைதள வம்பு என இந்நாவலின் களம் முந்தைய நாவல்களின் காலத்தைவிடவும் அண்மையானது. அதாவது  வம்புகளின் நுகர்வு  கலாசாரம் அதிகமாகக் கொண்ட சமூகவலைதள உலகிற்கான நாவல் இது. எழுதப்பட்ட காலத்தை விட இந்தப் பத்தாண்டுகளில் இன்னும் அருகில் உள்ளது.  மறுபுறம் உதயா தன்னை எக்ஸைல் / மார்ஜினல் மேன் என்று அடையாளப் படுத்திக் கொள்வதன் முழு வெளிப்பாடும் இங்கு நிகழ்கிறது.

உதயாவின் எரிச்சல் என்பது அவனது நுண்ணுணர்வு சார்ந்து வெளியாகிறது. சகதெருவாசிகளின் சாமர்த்தியத்தைக் காண்பதால் உருவாகிறது.  உதயா ஒரு எழுத்தாளர் என்பதாலேயே அவரை உய்விக்க அவரிடம்  சம்ந்தமில்லாமல் தனக்கு தெரியாத ஒன்றை பேசும் பொதுஜன மனநிலையால், தனக்கு ஏதும் தெரியாது என நம்பும் குடும்பத்தினர் எதர்வினையால் என அந்த எரிச்சல் படர்ந்து கொண்டே போகிறது.

உதயாவின் சித்தாந்தம், அமைப்பின் மீதான எதிர்ப்பாக தன்னை பதிவு செய்துகொள்கிறது. சாருவின் நாவல்களின் பொதுவான அம்சம்தான் இது. குடும்பம் என்ற அமைப்பானலும் சரி அரசு, அலுவலகம், சமூகம் என எல்லா அமைப்பிற்கும் எதிர்க்குரலாகிறது. அந்த வரிசையில் இலக்கியமும் ஒரு அமைப்பாகிறது என்று அதையும் எதிர்க்கிறது. சாருவின் சிதறிய கதை சொல்லல் முறையிலிருந்து பொது சிறுகதை வரைவில் உட்படும் சுவாரஸியமான சிறுகதைகளை உருவாக்கிவிட இயலும். எக்ஸைல் நாவலில் ஒரு கொலைகாரனை உதயா சந்திக்கும் இடம் ஒரு குறுநாவலுக்கான களம்தான். ஆனால் அவரது கலக மனம் இயல்பாகவே அதை நிராகரிக்கிறது. முந்தைய கதை சொல்லலின் கட்டமைப்பையும் உள்ளடக்கத்தையும் கலைக்கிறது. வரம்பு மீறிய வார்த்தைகளை உபயோகிக்கிறது. உள்ளடக்கமும் மீறலை விதந்தோதி உன்னதப் படுத்துகிறது. இத்தகைய எழுத்துக்கள் வாசகருக்கு முதலில் அதிர்ச்சியை அளித்தாலும் பிறகு சில கேள்விகளை எழுப்பும். வாசகருக்குள் ஒரு  கலகத்தை உருவாக்க வேண்டும்.  அந்த அடிப்படையில் சாருவின் முந்தைய நாவல்களின் தொடர்ச்சியாக வைக்கும் கலக உணர்வு இங்கு சீண்டல் என்னும் அளவில் நிற்கிறது. அதைத் தவிர்த்து தனி நபர்கள் அல்லது சாமியார்கள் வழியாக உதயா அடைந்த ஏமாற்றத்திற்கான விளக்கம் என்று நகர்கிறது.

அதில் கவனிக்க வேண்டிய இரு காரணிகள் உள்ளன. ஒன்று நாவலுக்கு வெளியிலிருந்து  கவனிக்கத் தக்கது.  இலக்கியம் என்று வரும் போது வேறு ஒன்றாகவும் சமூக வலைதள சீண்டல் வேறு வகை என்றும் சொல்லப்படுவதை இது  உரசிப் பார்க்கிறது. பொதுவாகவே இலக்கியம் என்பது உன்னதம்; சமூக வலைதள பதிவு ஒரு விளையாட்டு சீண்டல் என்கிற இரட்டை நிலைப்பாடும் அதன் வழி இலக்கியத்தின் மீது  அதீத உன்னதப் படுத்தலும் எங்கும் பொதுவான நிகழ்வதுதான். சாருவின் எழுத்து அதை மீறுவதாலேயே அதிகம் விமர்சிக்கப்படும். ஆனால் அதிலும் ஒரு முரணாக, இன்று இலக்கியத்தில் சாருவை எதிர்த்து பதிவிடும் சிலருடைய சமூக வலைதளப் பதிவுகள் சாரு நாவல்களில் உள்ள சீண்டல் தன்மையையே தானும் கொண்டிருக்கின்றன என்பதையும் காணலாம். அந்தளவு அவரது பாணி ஊடுருவியிருக்கிறது என்பதையும் மறுக்கவியலாது.

நாவலின் உள்ளடக்கத்தில் கவனிக்க வேண்டிய ஒன்றும் உள்ளது.  உதயா தன்னை முன்னிறுத்திக் கொள்வது போல் அவன் அமைப்பிற்கு முற்றிலும் எதிராக இருப்பவனோ அமைப்பை விட்டு துண்டித்துக் கொண்டு வெளியேறுபவனோ அல்ல. உதயா அமைப்பை எதிர்த்து நின்றாலும் குடும்பம், அலுவலகம், அதற்கும் வெளியே வாசகர் வட்டம் போன்று தனக்கான அமைப்புகளுக்குள் தான் இருக்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். அவன் பெரும்பான்மையை எதிர்த்து கலகம் செய்யும் ஒரு எதிர்த்தரப்பு. அது எப்பொழுதும் எதிர்த்தரப்பாக இருப்பதனால்தான் எந்த அரசியல் சூழலுக்குள்ளும் சிக்காமல் விமர்சிக்க முடிகிறது. அன்றைய சமகால அரசியலை பன்னீர்செல்வத்தின் ஆவியை  வைத்தும் விமர்சிக்க முடிகிறது. நம் சமூகத்தில் காந்தி ஒரு தரப்பு என்றால் பெரியார் மற்றொரு தரப்பு. அனைவரையும் அனுசரித்த,  அதேநேரம் மிகவும் கடுமையான ஒழுங்கு காந்திய அமைப்பினுடையது என்றால் அதற்கு  எதிரான இடத்தில் நாம் அனைத்தையும் கலைத்துப் போடும்  பெரியாரிய சிந்தனையை சொல்ல முடியும். இரண்டிற்குமான குறிக்கோளில் பெரிய வேறுபாடு இருக்கவியலாது ஆனால் அதன் அணுகுமுறையில் வேறுபாடுகளைத் தவிர வேறு எதுவும் காணவியலாது. அதை இன்றைய இலக்கியத்தில் பொருத்திப் பார்த்தால் கூட ஒரு அமைப்பாக இலக்கியத்தில் இயங்கும் தீவிரமும் அதற்கேற்ற ஒழுங்கும் கொண்டவராக ஜெயமோகனைக் கொண்டால் அவருக்கு எதிர்த்தரப்பாக  சாருநிவேதிதாவை வைக்க முடியும். இணையவழியில்  கடந்த பதினைந்து வருடங்களாக கவனித்தால் கூட தனது நாவல்களின், கட்டுரைகளின் வழியாக தொடர்ச்சியாக  ஜெ. வின் சிந்தனைப் போக்கிற்கு எதிர்வினையாற்றி வந்தவர் சாரு. எதிர் அமைப்பாக நின்று  அதற்கான மறுப்பை தொடர்ந்து முன்வைத்தபடி இருப்பார்.

உள்ளடக்கத்தில் வரம்பு மீறும் எழுத்துக்கள் தமிழுக்கு புதியவை அல்ல. தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் கலாசார அதிர்ச்சி அளித்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர் மீதான தனிப்பட்ட எதிர்வினைகளையும் அவர் சந்தித்திருக்கிறார். அவருக்கு சற்று இளையவரானாலும் அவருக்கு சமகாலத்தவர் என்று சொல்லத்தக்க மற்றவர் தஞ்சை பிரகாஷ். தி.ஜா எழுத்துக்கள் காமத்தை புரிந்து கொள்ளப் பார்த்தால் தஞ்சை பிரகாஷ் எழுத்துக்கள் காமத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் தஞ்சை பிராகாஷ் பெயரை பலரும் முன்னோடிகள் வரிசையில் சொல்வதில்லை. தி.ஜாவின் நாவலை வைத்து விவாதிக்கும் / நிராகரிக்கும் பலரும் தஞ்சை பிரகாஷ் பெயரைக் கூட உச்சரிப்பதில்லை. அவருக்கு வாய்த்தது ஒருவித புறக்கணிப்பு என்று சொல்லலாம். ஒரு சமூக ஒழுங்கில் இருக்கும் மனம் அத்தகைய எழுத்துக்களை சபையில் வைத்து விவாதிக்க தயங்குகிறது. அதன் கேள்விகள் தனி ஒருவனின் அந்தரங்கத்துள் ஊடுருவது. பொதுவில் உரையாட கூச்சப்படும் அந்தரங்கத்திற்குள்ளும் செல்வது. சாரு நிவேதிதா துவக்கம் முதலே பொதுமரபிற்கு எதிராகத்தான் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அவர்  மீதும் புறக்கணிப்பு நிகழ்ந்தபடி இருக்கும். ஆனாலும் பிடிவாதமாக அதையும் பதிவு செய்த படி இருக்கிறார்.

நாவலில்,  தன்னை  கலகக்காரனாக முன்வைக்கும் உதயா தனது தரப்புக்காக முழுவதும் வாதிடுவது. அதற்கான அங்கீகாரத்தை எதிர்ப்பார்ப்பது. தமிழில் பிற எழுத்தாளர்கள் அடையும் அங்கீகாரத்தை தனது எழுத்துக்கள் அல்லது தான் பெறவில்லை என்கிற ஏக்கம் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது உதயாவின் மனவோட்டத்தை அண்மையாக்குபவை. அந்த இடத்தில் ஒரு போலித்தன்மை வருவதையே பொதுவாக இத்தகைய எதிர்த் தரப்புகளில் காணவியலும். எதையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கும் உதயா தனக்கான அங்கீகாரம் சார்ந்த தனது இத்தகைய புறக்கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைப்பது உதயாவை இன்னமும் நெருக்கமாக்கிவிடுகிறது.

எக்ஸைல் நாவலில் வரும் உதிரிக்கதைகள் ஒன்றையொன்று ஈடு செய்பவையாக உள்ளன. பெருந்தேவியும் உதயாவும் இருக்கும் வீட்டின் முன் இரு மரங்கள் இருக்கின்றன. காரோட்டிகள் அங்கு  வாகனத்தை நிறுத்துவது அதன் மறைவில் குடி உள்ளிட்ட போதை வஸ்துக்கள் உபயோகிப்பது கழிப்பறைபோல அசுத்தம் செய்து வைப்பது என அந்த இடத்தை நாசம் செய்வதைத் தாளாமல் அதை வெட்டி எறிகின்றான் உதயா. பொதுச்சமூகத்தின் அலட்சிய போக்கினை கண்டிக்க இயலாமை மரத்தை வெட்டுவதில் வந்து முடிகிறது. இஅங்கு நுண்ணுணர்வு கொண்ட எளிய மனிதனான உதயா சராசரியோடு மோதுகிறவன் கிடையாது. அவனுக்கு அவர்களோடு பொருந்த இயலாது. அவனால் மரங்களை வெட்டியெறியத்தான் முடியும்.

நாவலின் பிற்பகுதியில், உதயாவின் காதலியான அஞ்சலியின் வீட்டு வாசலில் இருந்த மரத்தை தனது கார் நிறுத்த இடையூறாக இருப்பதால் அவளது  எதிர் வீட்டுக்காரர் வெட்டி விடுகிறார். இப்பொழுது அஞ்சலிக்கு அந்த மரத்தை வெட்டியதால் மனம் குலைகிறது. அது, அதில் வாழ்ந்த பறவைகள் மற்றும் மரத்துடனான அவளது அந்தரங்க தோழமை துண்டிக்கப்பட்டதால் வந்த உணர்வு. முன்பு உதயா மரங்களை வெட்டுவதற்கு காரணமும் இங்கே எதிர் வீட்டு ஆள் மரத்தை வெட்டுவதற்கு காரணமும் வேறு. இரண்டாவதை சராசரி மனநிலை என்று சொன்னால், முதலாவதை அதற்கு எதிரான ஒரு கலகம் எனச் சொல்லலாம்.  அந்த வேறுபாட்டை தானாக எடுத்துக் கொள்ள வேண்டியது அதில் வாசகரின் பங்கு. ஆனால் இரண்டிலும் மரம் வெட்டப்படுகிறது இது சூழலியலுக்கு ஒரு கேடுதானே என்று ஒரு கேள்வியை பொதுவாக எழுப்பினால் நாவல்மரத்திற்கு மட்டுமல்ல நாவலுக்கும் வெளியேதான் வாசகர் நிற்கிறார்.

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவல் குருவாயூரின் கேசவனிடமிருந்து துவங்கும். அங்கிருந்து இந்நாவல் எழுதப்பட்ட காலத்தில் நிகழ்ந்த  செய்திகள் இதில் வருகின்றன. அவற்றில் சாமானியர்களை  பலிவாங்கிய அதிகாரத்தின் கரங்கள் குறித்த செய்திகள் சில. முற்றிலும் உணர்ச்சியற்றுப் போன சமூகத்தின் கதைகள் சில. அவற்றைப் பற்றி அந்த நேரம் பொங்கிவிட்டு அதைப் பற்றி தனது கருத்தை சொல்வது கூட ஏதாவது வில்லங்கத்தை உருவாக்குமோ எனக் கருதி விலகி ஓடும் பொது மனத்தின் மீதான விமர்சனங்கள் சில.  அவை தவிர  உதயா அஞ்சலி ஆகியோரின் தனிப்பட்ட அனுபவங்களின் ஊடாகவும் சொல்லப்படும் கதைகள் சில.  இதோடு கூட இவ்வாறு சிதறிக் கிடக்கும் உதிரிக் கதைகளின் வழியாக நாவல் நிகழ்கிறது. அதனை முழுமையாக்குவது வாசகனின் உணர்வும், அதில் இணையும் போதுதான். அவன் தன்னை அங்கு பொருத்திக்கொள்ள வேண்டியதும் இந்தச் சிதறல்களை இணைப்பதும் முக்கியம். பள்ளி நாட்களில் சினிமா பார்த்துவிட்டு வரும் நண்பன் மதிய உணவு நேரத்தில் அதன் கதையை சொல்லத் துவங்குவான். செந்தூரப் பூவே கதையை ஆரம்பிப்பவன் நிரோஷா வரும் போது அவருக்கான அறிமுகத்தை தரவேண்டி எம் ஆர் ராதாவுக்கு தாவி அவரின் சாகஸத்தை சொல்ல வேண்டி எம்.ஜி.ஆரை சுட்ட கதைக்கு போய் அங்கிருந்து மாட்டுக்காரவேலனுக்கு வந்து  ஊரில் மாடுமேய்த்து வந்தவன் தனது வேலிக்குள் மாட்டை அவிழ்த்து விட்டதால் அதை அடித்த கதையை சொல்லிக் கொண்டிருப்பான். கூட இருந்த இன்னொரு நண்பனுக்கு தனது மாட்டை அடித்தவன் யார் என அப்போது தெரியவர ஒரு கைகலப்பு அங்கு நிகழ்ந்தது. இதற்கு காரணம் நிரோஷாதான் என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் விசாரணையை அங்கிருந்துதானே துவங்கியாக வேண்டி யிருக்கிறது…

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

முந்தைய கட்டுரைஉழல்தல் ஒரு பேரின்பம் 
அடுத்த கட்டுரைராஜம் கிருஷ்ணன்