சாருநிவேதிதா:  எழுத்தும் வாழ்வும் கார்ல் மார்க்ஸ் கணபதி

சாருநிவேதிதாவைப் பற்றி எழுதுவதும் அவரது எழுத்தைப் பற்றி எழுதுவதும் வேறு வேறல்ல. Transgressive எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர் அவர். அதிலிருந்தே தொடங்குகிறது அவர் மீதான சமூக விலக்கம். எந்த ஒரு எழுத்தாளனும் தனது பால்யத்தை வேறு வேறு விதமாக எழுதிப் பார்ப்பதில் இச்சை கொள்கிறான். ஆனால் ஒரு transgressive எழுத்தாளன் தனது பால்யத்தை அதன் மரபார்ந்த முறையில் எழுதமுடியாது. ஏனென்றால் பால்யத்தின் மீதான ரொமாண்டிஸத்தை, தான் இதுகாறும் வந்தடைந்திருக்கும் வாழ்வின் வெளிச்சத்தில் வைத்து அவன் பார்க்கவேண்டியிருக்கிறது. மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது. கண்களை கூசச் செய்யும் அதன் வெண்மையில் தெரிவதெல்லாம் அப்பட்டமாக இருக்கின்றன. முழு நிர்வாணமாக அவை ஒளிர்கின்றன. அதை எதிர்கொள்வது வாசிப்பவனுக்கும் அத்தனை எளிதானது அல்ல.

ஏனெனில், அவனது கையில் இருக்கும் பிரதி, அந்த வாசிப்பின் வழியாக படிப்பவனின் அந்தரங்கத்தை நோக்கி, அதன் தத்தளிப்புகளை நோக்கி, அங்கிருந்து குமிழியிட்டுக்கொண்டே இருக்கும் வன்முறையின் ஊற்றை நோக்கி அவனது பிரக்ஞையைத் திருப்புகிறது. அப்படி ஒரு வாசிப்புச் செயல்பாட்டை அது கட்டாயமாக்குகிறது. இந்த அழுத்தம்தான் ஒரு transgressive எழுத்தாளன் செய்கிற கலகம். அதுநாள் வரை வாசிப்பு என்று இருந்ததை, பிரதியின் மீதான புனிதத்தை, அதன் மீது ஏடாகப் படிந்திருந்த கலாச்சார வரையறைகளை, அதன் கட்டுப்பாடுகளை அவன் கலைத்துப் போட்டுவிடுகிறான். கலகம் எனும் சொல்கூட எதார்த்தத்தில் தனது அர்த்தத்தை இங்கு மறுவரையறை செய்துகொள்கிறது.

எந்த இலக்கியப் பிரதியும் தன்னளவில் ஒரு கலக அடிப்படையைக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதை ஒரு ஒழுங்கில், நேர்க்கோட்டில் செய்ய முற்படுகிறபோது அது எதைக் கலைக்க முற்படுகிறதோ அதற்கு இணையாக இன்னொரு வன்முறை அலகை மறு உற்பத்தி செய்துவிடுகிறது. இந்த மறு உற்பத்தியை பிரஞ்ஞைப் பூர்வமாக இல்லாதாக்க முயலும் ஒரு எழுத்தாளன், அதுநாள் வரை எழுத்துச் செயல்பாடு வரித்துக்கொண்டிருந்த சொகுசுகளை இழக்க வேண்டியிருக்கிறது. (எந்த ஒன்றையும் ஒரு வித ரொமாண்டிஸத்துடன் அணுகுகிற, அதன் மீது மீளா காமத்தை உருவாக்கி நிறுத்துகிற, இதற்கு முன்பு அது நன்றாக இருந்தது என்று கற்பனையில் திளைக்க வைக்கிற, மாய ஊற்று ஒன்றை உருவகித்து அதன் வழியாக பெருகும் கானல் இன்பத்தைக் கனவு காணச்செய்கிற, இவற்றின் வழியாக வாசகனை பிரதிக்குள் எளிதாக மூழ்கடிக்கமுடிகிற…)  இந்த சொகுசானது பிரதி வழங்கும் இன்பத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. அதனால் எழுதுபவன் அந்த சொகுசைக் கைவிடுகிறபோது அது படிப்பவனிடமும் பிரதியை நோக்கிய மாறுபட்ட எதிர்கொள்ளலைக் கோருகிறது.

ஆக, வாசகன் தனது சாய்விருக்கையிலிருந்து எழ வேண்டியிருக்கிறது. அவற்றின் ஆச்சர்யங்கள் அல்லாது அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவரை நடந்தவற்றிலிருந்து விலகி நடக்கவேண்டியிருக்கிறது. இறுதியாக புதிய சுவை ஒன்றிற்குள் அவன் நுழைய வேண்டியிருக்கிறது. இந்த நுழைதல் என்பது இங்கு செங்குத்தாக குதிப்பதாக இருக்கிறது. ஆமாம். ஒரு non lenear – trangressive பிரதியில்  pleasure of text செயல்படும் தன்மையே வேறு. அது படிப்பவனின் ஆன்மாவை ரத்தம் கசியச் செய்கிறது. அது பெருகச் செய்யும் மானுட அன்பின் சாரமே வேறு. அது அப்பட்டமானது. அங்கு முகத்தில் மோதும் அதன் கவுச்சி வாடை பிரதியால் உருவாக்கப்படுவது அல்ல. மாறாக அங்கு இருக்கும் ஒன்றை, அதுவரை அவ்வாறு காணப்படாத ஒன்றை காணச் செய்வதன் மூலம் கலாபூர்வமாக அது நிகழ்ந்தேறுகிறது. எந்த பூடகமும், அழகியல் பூச்சுமில்லாமல் கலை தன்னை நிகழ்த்திக்கொள்ள அனுமதித்து ஒரு transgressive எழுத்தாளன் தன்னைத் திறந்துவைக்கிறான். இந்த செயல் படைப்பாளி தன்னை வைத்து ஆடும் வெறும் பகடையாட்டம் மாத்திரம் அல்ல. தன்னை இழப்பதன் வழியாக, பிரபஞ்ச உருமாற்றத்தின் கூறாக தன்னை நிலைக்கச் செய்யும் தற்கொலை முயற்சி. இறுகிப் போயிருக்கும் முடிச்சுகளை நெகிழ்த்தி காற்றில் பரவவிடும் செயல். நமது சூழலில் சாருநிவேதிதா அதைச் செய்துகொண்டே இருக்கிறார் என்பதுதான் ஒரு பகுதி வாசகர்களால் அவர் கொண்டாடப்படுவதற்கான அடிப்படை.

தமிழிலக்கியப் பரப்பில் சாருநிவேதிதாவின் இடம் அதுதான். இலக்கியத்தை விளையாட்டைப்போல உன்மத்தமாக்கியது. இங்கு விளையாட்டு என்பதை அசட்டையான சோம்பேறிகளின் செயலாகப் புரிந்துகொள்ளலாகாது. நம்மையே பணயம் வைத்து ஆடுவது என்கிற தீவிரத்துடன் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். எழுதுபவனும் படிப்பவனும் ஒன்றாகக் கலக்கும் புள்ளிகளை உருவாக்குவது non linear எழுத்துமுறையில் ஒரு சவால். ஒரு தேர்ந்த பியானோ கலைஞனின் விரல்களைப் போல, நெஞ்சைத் திறந்து இதயத்தின் ஒரு நரம்பை வெட்டி சரி செய்யும் மருத்துவனைப் போன அதுவொரு நேர்த்தியைக் கோருகிறது. ஆனால் அந்த நேர்த்தி அழுத்தத்தின் மூலம், வன்முறையின் மூலம், கட்டாயத்தின் மூலம் கொணரப்படுவதல்ல. கொண்டாட்டத்தின் வழியே அத்தகைய காரியத்தை செய்யமுயல்வது. சாருவின் எழுத்து செய்வது அதைத்தான். நாம் சுகிக்கும் வெளியைப் போல மறுக்கும் வெளியையும் அது திறந்துவைத்துவிட்டே போகிறது. அதனாலேயே எந்த வரையறைக்குள்ளும் அடைபடாமல், திட்டமான இருப்பாகத் தகையாமல் பிரதியின் மீதான உரையாடல்கள் நம்மீது மிதந்த வண்ணம் அலைந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எக்காலத்திலும் அவர் குறித்த, அவரது பிரதிகள் குறித்த உரையாடல்கள் நம் சூழலில் இருந்துகொண்டே இருக்கும்.

அவர் கைகொள்ளும் இந்த இலக்கிய வழிமுறை ‘எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’ என்கிற அவரது முதல் நாவலிலேயே தொடங்கிவிடுகிறது. 1989-இல் முதல் பதிப்பைக் கண்டிருக்கிறது அந்த நாவல். இன்றிலிருந்து சரியாக முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். சாரு தனது முப்பதுகளின் இறுதியில் இருக்கும்போது எழுதப்பட்ட நாவல். Non linear குறித்தும் transgressive தன்மை குறித்தும் நான் மேலே கூறியிருப்பவை அந்த நாவலில் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை சில உதாரணங்களின் வழியாகப் பார்க்கலாம். அது வெறும் லௌகீக வாழ்வின் சிக்கல்கள் மட்டுமாக இல்லை, நாம் கலாச்சாரம் என்று குறிப்பிடப்படும் ஒன்றின் மீதான அப்பட்டமான எதிர்வினையாக அமைகிறது. மட்டுமல்லாது அதன் உள்ளுறையாக இருக்கும் வாழ்வின் அபத்தத்தை வெளிக்கொணர்கிறது.

இந்த நாவலை மீண்டும் படித்தபோது நான் அசோகமித்திரனை, ப. சிங்காரத்தை, தி. ஜானகிராமனை அடிக்கடி நினைத்துக்கொண்டேன். இதன் பொருள், நேரடியான அர்த்தத்தில் அவர்களை இவருடன் பொருத்திப் பார்க்கிறேன் என்பதல்ல. சாருநிவேதிதா ‘அபத்தம்’ என்பதை இலக்கியத்தில் எவ்வாறு கையாள்கிறார் என்பதைப் புரிந்து கொள்கையில் நான் கொள்ளும் பிரமிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். மேலும் ‘கையறு நிலை’ எனும் சூழல் நான் மேலே சொன்ன மூன்று பேர்களது படைப்பிலும் எவ்வாறு வெளிப்படுகிறது, அதைச் சாருநிவேதிதா எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வது ஒரு தலைமுறையின் வாழ்வியல் இடைவெளியைப்  புரிந்துகொள்வது மாத்திரம் அல்லாது ஒரு பின் நவீனத்துவ படைப்பாளி ‘சிதறுண்ட தனி மனிதர்களின் அகவெளியை’ எவ்வாறு படைப்பாக்குகிறான் என்கிற அளவிலும் அர்த்தப்பூர்வமானது.

நாவலின் ஒரு இடத்தில், இரண்டு தங்கைகளைக் கொண்ட சூர்யா குமாஸ்தா வேலை கிடைத்து டெல்லிக்குப் போகிறான். வாங்கும் சொற்ப சம்பளத்தில்  புலன்களை அடக்கிக்கொண்டு அதில் மிச்சம் பிடித்து வீட்டிற்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறான். தங்கைக்கு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு தங்கத்தில் காப்பு செய்து போடவேண்டும், அதற்கு பணம் வேண்டும், அனுப்பிவைக்க முடியுமா, என்று அவனது அப்பா கடிதம் எழுகிறார். இந்த இடத்தில், இதை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆகியோர் சேர்ந்து கொஞ்சம் படைப்பாளி அவதாரம் எடுக்கலாம். அதோடு, இதை நான் மேலே சொல்லியிருக்கும் மூன்று எழுத்தாளர்களும் எவ்வாறு தங்களது படைப்பில் இதை எதிர்கொண்டிருப்பார்கள் என்றும் கற்பனை செய்யலாம். மேலும் நமது தமிழ் இலக்கிய உலகம் இந்த ‘கதைச் சூழலை’ எவ்வாறு கையாண்டு வருகிறது என்றும் யோசிக்கலாம். இதை ஒரு விளையாட்டு போல செய்துபார்க்கலாம் என்றே நான் பரிந்துரைக்கிறேன் சரியா? இதை நாவலில் சாருநிவேதிதா எப்படிக் கையாள்கிறார் என்று பாருங்கள்.

சூர்யா சொல்கிறான்; “இங்கு காலமெல்லாம் கையடித்துச் சாவதே ஆண்களுக்கு வாய்த்தது. இதில் தங்கத்தில் காப்பு, என்று நினைத்துக்கொண்டு அப்பாவுக்கு பதில் எழுதாமல் விட்டுவிட்டேன்.” இதுதான் ஒரு சிதறுண்ட மனதின் பிரதிபலிப்பு. சரி, இங்கு சிதறுதல் என்பது என்ன? ஏதோ ஒன்றை உதறுவது. தனது தோளில் இருக்கும் ஒன்றை விசிறியடிப்பது. அந்த ஏதோ ஒன்று எது என்று தொடர்ந்து போனால், நமது கலாச்சாரம் என்ற பெயரில் நாம் எவ்வாறு ஒரு வன்முறை வளையத்திற்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பது புரியும். “தங்கைக்கு இதைச் செய்யமுடியவில்லையே,” என்று பச்சாதாபத்தில் உருகுவது அல்ல இது. இதுநாள் வரை புனிதக்கடமையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றை எட்டி உதைப்பதன் வழியாக அதுவொரு விடுதலையைக் கோருகிறது. அதன் வழியாக மற்றொரு தரப்பின் விடுதலையை சாத்தியப்படுத்துகிறது. ஏனெனில் நாம் பொறுப்பு என்று சொல்லும் ஒன்றின் பின்னால், ஆதிக்கம் எனும் நிபந்தனை இருக்கிறது. எனது தங்கையின், அக்காவின் கல்யாணத்துக்காக நான் உழைக்கிறேன் என்கிற தியாகத்தின் பின்னால், நான் கைகாட்டும் ஒருவனைத்தான் அவள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் எனும்   நிபந்தனை இருக்கிறது.

எந்த கலாசாரத்தின் பொருட்டு இந்த நுகத்தடியை ஒரு ஆண் சுமக்க நேர்கிறதோ அதே நுகத்தடிதான் காலம் காலமாக பெண்ணை அதிலிருந்து விடுதலை செய்துவிடாமல் இருத்தி வைக்கிறது. ஆக, இங்கு பண்பாடு என்பதும் கலாச்சாரம் என்பது அதன் நேரடியான அர்த்தத்தில் எதற்குப் பங்களிக்கிறது? அடிமைத்தனத்துக்கா அல்லது மானுட விடுதலைக்கா? இங்கு எழுதப்பட வேண்டிய, எழுதப்பட்ட  பிரதிகளின் முன் உள்ள சவால்கள் என்ன? இவையெல்லாம் இந்த நாவலின் வழியாக நான் உருவாக்கி விடைதேட முயன்றவை. ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘ஆண்பால் பெண்பால் அன்பால்’ தொடரின் ஒரு கட்டுரைக்கான உந்துதலை நான் இதிலிருந்து பெற்றேன். இதுதான் ஒரு எழுத்தாளன் சமூகத்துக்கு ஆற்றும் பங்கு என நான் கருதுகிறேன்.

மேலும், அந்த நாவலில் முதல் முறை ஒரு காதலனுடன் ஓடிப்போய் திரும்ப அழைத்து வரப்படுகிறாள் சூர்யாவின் இரண்டாவது தங்கை. சூர்யாவிடம், “அவளுக்கு எப்போது திருமணம் செய்துவைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் தெருவினர். அந்த அளவுக்கு விடலைத்தனமான காதல் பித்தை வெளிப்படுத்துபவளாக அவள் இருக்கிறாள். (தமிழில் எழுதப்பட்ட பெண் பாத்திரங்களில் குறிப்பிடத்தகுந்தவள். எந்த முக்கியத்துவமும் இல்லாதவள். அதனாலேயே அவள் முக்கியமானவள்!) அவளைக் கொண்டுபோய் இன்னொரு உறவினரின் வீட்டில் தங்கவைக்கிறார்கள். அவள் அந்த வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்தும் ஓடிப்போகிறாள். உண்மையில் பணம் இல்லாததால் மட்டுமே அவளுக்கு சரியான காலத்தில் திருமணம் செய்து வைக்கமுடியவில்லை அவளது தகப்பனால். எந்த தகப்பனால்? முதல் மகளின் குழந்தைக்கு தங்கத்தில் காப்பு போடமுடியாமல் தவிக்கும் அந்தத் தகப்பனால். இதுதான் அப்பட்டமான இந்திய வாழ்வியலின் அபத்தம். இதே போன்ற அபத்தங்களை தனது ஒவ்வொரு பிரதியிலும் சொல்ல முயலும் எழுத்தாளன், மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், தூய்மைவாதத்தின் பெயரால் திரளும் வன்முறையின் புழுதியை அதே மூர்க்கத்துடன் எதிர்கொள்ள முயலும் ஒரு trangressive எழுத்தாளன் எங்ஙனம் தளுக்காக எழுத முடியும்? எப்படி அவனால் ஒரு பகட்டான மொழியைக் கையாள முடியும்? எதற்காக அவன் போலியாக இருக்கவேண்டும்? அவனுக்கு என்ன சொகுசு இருக்கிறது?

இந்த அபத்தத்தை அவன் அப்பட்டமாக எழுதுகிறான். இதுவரை நிறுவப்பட்ட பிரதிகளை படித்துப் பழகியவர்களுக்கு ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, மர்ம உறுப்பு என்கிற வார்த்தைகள் தேவையாக இருக்கின்றன. ஆனால் அவன் புண்டை, சுன்னி என்றே எழுத விரும்புகிறான். ஏனெனில் தனக்கான பாலுறுப்புகளைக் கண்டடைவதே இந்த தேசத்தின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. அதைக் கையாள்வதும் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் இங்கு மதம் என்று அறியப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களுக்குள்ளான சமாதான உரையாடல்களை ஏற்றெடுப்பதுதான் இங்கு அரசுகளின் முக்கியப் பொறுப்பாக இருக்கிறது. எவ்வளவு மறைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு லாவகமாக அதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துபவையே அறம் போற்றும் பிரதிகளாக நிறுவப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக ஒரு அதிகாரப் படிநிலையையும் அவை சாத்தியப்படுத்தியிருக்கின்றன. ஆனால், இவற்றை அப்பட்டமான மொழியில் எழுத முற்படுகிறபோது, இப்படியான சூழல் ஏன் இங்கு இருக்கிறது என்பதை பரிசீலனை செய்யாமல் எழுத்தாளனை நிந்திப்பது சமூகத்தின் எதிர்வினையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இங்கு இருக்கும் படைப்பாளிகளும் இந்த மவுடீக சமூகத்தை விட பல படிகள் கீழிறங்கிப்போகிறார்கள். தமது அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை புனித முகமூடியுடன் பொருத்திக்கொண்டு இத்தகைய எழுத்தை விமர்சிக்கிறார்கள். அப்படியான நேரங்களில் மிகுந்த அன்புடன் நான் சாருநிவேதிதாவை தழுவிக்கொள்ளவே விழைகிறேன்.

மேலும், ஒரு கருத்துநிலைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டால் அதிலிருந்து இம்மியும் பிசகாமல் மரிக்கும் வரை அதிலேயே ஊன்றி நிற்கவேண்டும் என்கிற பதட்டம் நமது எழுத்தாளர்களை அழுத்துகிறது. இது ஏன் என்று எனக்குப் புரியவே இல்லை. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் எழுத்தாளன் அதன் கூறுகளால் பாதிப்புகளை அடைபவனாக இருக்கிறான். இங்கு பாதிப்பு என்பதை நான் லௌகீகத் தளத்தில் வைத்து சொல்லவில்லை. ‘எழுத்தாளனின் சுய இருப்பு’ என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். ஆக, குறிப்பிட்ட ஒரு கருத்துநிலையுடன் தன்னை பிணைத்துக்கொண்டுவிடுகிற ஒரு எழுத்தாளன் எங்ஙனம் பேருண்மையை நோக்கி நகர்பவனாக, பிரபஞ்சத்தின் ஆன்மாவை பிரதிநிதுத்துவப்படுத்துபவனாக இருக்க முடியும். அது ஒரு தளையாக அவனது சிறகுகளை அழுத்தாதா என்கிற கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருக்கிறது.

தான் எழுதிய ஒன்றை தனது காலத்தில் மறுத்து முன்னேறாத, எதையும் பிரகடனமாக அறிவிக்கும் திராணியற்ற ஒருவன் இதுவரை நிறுவப்பட்ட ஒன்றின் மீது கேள்வி எழுப்புபவனாக எவ்வாறு இருக்கமுடியும்? எல்லைகளற்ற தேடல்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும் ஒருவன் ஏதாவது ஒன்றுக்கு எங்ஙனம் தன்னை ஒப்புக்கொடுத்துவிட இயலும்? எனது நாடு, எனது இசை, எனது மொழி, எனது கலாச்சாரம், எனது தனித்துவம் என்று பேசப்படுவதன் அபத்தத்தை தூக்கிச் சுமக்கும் ஒருவன் அவன் எழுத்தில் மின்னிக்கொண்டிருக்கும் வன்முறையின் துகள்களை எங்ஙனம் அப்புறப்படுத்த இயலும்? இந்த கேள்விகளுக்கு  பதில்களைத் தேடும்போதுதான் சாருநிவேதிதாவின் அபுனைவு உலகத்திற்குள் நாம் பிரவேசிக்க முடியும்.  அதன் பிரம்மாண்டங்களை ரசிக்க முடியும்.

தனிமனித சுதந்திரத்தை முன் நிபந்தனையாகக் கொண்ட, மானுட விடுதலையை நோக்கி அடியெடுத்து வைக்கிற எத்தகைய குரலையும் தனதாக வரித்துக்கொள்வதில் அவர் காட்டும் மூர்க்கமே அவரது பொதுவான அரசியல் பார்வையாகத் திரள்கிறது. அதுதான் அவரது கலை ரசனையாக விரிவடைகிறது. அவரால் கொண்டாடப்படுகிற இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் எல்லாரிடத்திலும் நான் காணும் பொதுப்பண்பு அவர்கள் இந்த பிரபஞ்சத்தை நோக்கி வெறியுடன் கூச்சலிடுகிறார்கள். இரண்டு கைகளையும் அகலவிரித்துக்கொண்டு ஆடுகிறார்கள். அவர்கள் சுழலும் வேகத்தில் தங்களது தளைகளை அறுத்தெறிகிறார்கள். அந்த குரல் எல்லா குரல்களையும் போல மென்மையானதாக இல்லை. அது குழைவதில்லை. ஆனால் கெஞ்சுகிறது. அதே சமயம் அதில் ஒரு மிடுக்கு இருக்கிறது. அந்த கெஞ்சலின் தொனியில் பணிவில்லை. அது எத்தகைய அடிமைத்தனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அது விடுதலையைக் கோருகிறது. அதை மட்டுமே பிரகடனப்படுத்துகிறது

அந்த கேவலின் தொனி மூலம் அது சொல்வது, “நான் இறைஞ்சுவது எந்த விடுதலைக்காகவும் அல்ல; நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்பதை உரத்துச்சொல்வது மட்டுமே,” என்பதுதான். அதை உணர்ந்துகொள்ளும்போது நாம் உணர்வது கலையின் ஸ்தூல இருப்பை அல்ல, இறகைப் போல மிருதுவாகும் நமது இருப்பையே. இந்த எதார்த்தத்தையே அவர் தனது எல்லா படைப்புகளின் வழியாக நம்முன் வைக்கிறார். அவரது கலையின் ஆன்மீக தரிசனம் இந்த புள்ளியில் இருந்தே துவங்குகிறது. புனைவில் மட்டுமே சாத்தியமாகும் ஒன்றை அபுனைவிலும் சாத்தியப்படுத்துவதில் சாருநிவேதிதா நிகரற்றவர் என்றே நான் நினைக்கிறேன். எந்திரன் படத்துக்கு அவர் எழுதிய விமர்சனம், கலை குறித்த அவரது பிரகடனம். அவரைப்பற்றி நான் மேலே வந்தடைந்திருக்கும் கருத்து நிலைகள் துலக்கமடைய அந்தக் கட்டுரைக்கு முக்கியமான பங்கிருக்கிறது. மேலும் மனித வாழ்வு குறித்த அவரது புறப்பார்வையை நாம் அறிந்துகொள்ள ‘அங்காடித் தெரு’ திரைப்படத்திற்கு அவர் எழுதிய விமர்சனத்தைப் படித்தால் மட்டும் போதும். கலையின் வெளிச்சம் என்பது எங்ஙனம் வாழ்வின் வெளிச்சமாக மாறுகிறது என்பதை எளிய வார்த்தைகளில் சொல்லிச் செல்லும் கட்டுரை அது.

இந்த இடத்தில் ‘எளிய வார்த்தைகள்’ என்கிற பதத்தை பயன்படுத்துகிறபோது சாருநிவேதிதா தமிழ் உரைநடைக்கு செய்துகொண்டிருக்கும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கவேண்டியிருக்கிறது. தமிழை அதன் அழகு மிளிர மிளிர நவீன இலக்கியத்துக்குப் பயன்படுத்தும் படைப்பாளிகளில் அவர் முக்கியமான ஆளுமை. ஒரு வாக்கியத்தை அமைப்பதில் கவனிக்கவேண்டிய அம்சங்கள் குறித்து புதிதாக எழுத வருபவன் கற்றுக்கொள்ள அவரிடம் அவ்வளவு உண்டு. நான் பயன்படுத்தும் மொழியின் நேரடித்தன்மைக்கு சாருவின் மொழி ஒரு காரணம். தொடர்ந்து சாருநிவேதிதாவை வாசிப்பவனாக அவரது  ஆதிக்கத்தை அனுமதிக்கும்போது அது நிகழ்த்தும் ரசவாசம் ஆச்சர்யமானது.  தமிழின் ஒரு வாசகனோ, எழுத்தாளனோ எதன் பொருட்டும் சாருநிவேதிதாவின் வின் மொழியை கவனிக்காமல் கடக்கலாகாது.

அவருடனான தனிப்பட்ட உரையாடல்களிலும் கூட கற்றுக்கொள்ள சிலாகிக்க, நிறைய விஷயங்கள் உண்டுதான். முக்கியமாக அவரது பகடி. கொஞ்சம்கூட சிரிக்காமல் அதைச் சொல்லும் பாங்கு அட்டகாசம். அவரது நாவலில் சில ஃபிரஞ்ச் வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டதற்காக, “நீ என் தாய்மொழியான தமிழை அவமதித்துவிட்டாய்,” என்று கூறி ஒரு எழுத்தாளர் அவரது கன்னத்தில் அறைந்ததைக்கூட யாருக்கோ நடந்தது போல மிக எளிமையான குரலில் எந்த கோபமும் இல்லாமல் அவரால் சொல்லமுடியும். “அவரா உங்களை அறைந்தார், அவர் ரொம்ப சாதுவாச்சே!” என்று நாங்கள் அதிர்ச்சியடைந்த போது, “ஏன் சாது அறையமாட்டானா என்ன? நான்கூட சாதுதான்,” என்றார். சாருநிவேதிதா மற்றும் எனது நண்பர்கள் இருவருடன் மகாபலிபுரத்தை ஒட்டிய ஒரு தங்கும் விடுதிக்குப் போயிருந்தோம். எந்தத் திட்டங்களும் இல்லாமல் விட்டேத்தியாக இலக்கியம் குறித்து பேசிக்கொண்டிருக்கலாம் என்பதுதான் நோக்கம். அங்கிருந்த நீச்சல் குளத்தையொட்டிய திண்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாதியில், எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லாத இன்னொரு வாசக நண்பரும் வந்து இணைந்துகொண்டார்.

நான் சாருவிடம் ‘ஸீரோ டிகிரி’ எனக்கு ஏன் அத்தனை பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த நண்பர் அப்போது எழுந்து நின்று, “யோவ், நீ காமரூபக் கதைகள் படிச்சிருக்கியா?” என்று கேட்டார். நான் அதுவரை அதைப் படித்திருக்கவில்லை. “இல்லை, இன்னும் படிக்கவில்லை,” என்று சொன்னேன். “அதைப் படிச்சிட்டு வந்து அப்புறமா பேசுய்யா,” என்றார். சாரு உடனே, “நீ உக்காரு தங்கம். அதுக்கு ஏன் கோவப்படுற?”  என்று அவரிடம் சொல்லிவிட்டு என்னுடனான உரையாடலைத் தொடர்ந்தார். நாம் மீண்டும் ஸீரோ டிகிரி பற்றி அவரிடம் சொல்லத்தொடங்கினேன். சாருநிவேதிதா நிறையவும் நெகிழ்ந்துபோயிருந்தார். “இனி என்னுடைய எழுத்துக்களை யாரும் சரியாகப் படிப்பதில்லை என்று புலம்பமாட்டேன்,” என்று சொல்லியபடி எனது கன்னத்தில் முத்தமிட்டார்.

கணேசகுமாரனின் ‘மிஷன் காம்பவுண்ட்’ நூல் வெளியீட்டு விழாவில் சாருநிவேதிதாதான் நூலை வெளியிட்டுப் பேசினார். நானும் போயிருந்தேன். கவிஞர் ராஜசுந்தரராஜனைப் பார்த்து பேசவேண்டும் என்று எனக்கும் சரவணனுக்கும் திட்டமிருந்தது. விழா முடியும் வரைக் காத்திருந்து அவரிடம், “அண்ணே, கொஞ்ச நேரம் எங்கயாவது உக்காந்து பேசுவோமா?” என்று கேட்டோம். “போகலாமே, எங்க போகலாம்?” என்றார். தமிழ் இலக்கியவாதிகளுக்கே உரித்தான முறையில் பிரபா ஒயின்ஸுக்கு போய் குடித்துக்கொண்டே பேசத்தொடங்கினோம். அப்போது கவிஞர் சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது. “சாரு பேசியதை ஊன்றி கவனித்தீர்களா? புதிதாக எழுத வருபவர்களுக்கு அதில் எவ்வளவு செய்தி இருந்தது பார்த்தீர்களா?”

ஆமாம், என்று நானும் சரவணனும் தலையாட்டினோம்!

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் எஃபக்ட்- கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.கோவிந்தன்