மொழி நடையைக் கொண்டும், அதன் பேசு பொருளைக் கொண்டும் மிக எளிதாக வாசித்து முடித்துவிடக்கூடியவை சாரு நிவேதிதாவின் நாவல்கள்.
எக்ஸிஸ்டன்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்: சாருவின் படைப்புகளில் காமம் மையப் பேசுபொருளாக உள்ளது. காமம் இலக்கியத்தில் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சத்தின் இயக்குவிசையே அதுவாகத்தான் உள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் அதுவல்லாத ஒன்றை கை கொண்டிருக்கவே முடியாது என்று தோன்றுமளவு சாருவின் நாவலில் வரும் பெண்களும் ஆண்களும் இருக்கிறார்கள். சூர்யா சந்திக்கும் பெண்களைத்தாண்டி அவன் நண்பர்கள் வாழ்விலுள்ள பெண்கள், அவன் புனைவுகளிலுள்ள பெண்கள் என யாவரிடமும் காமமே பிரதானமாகத் தெரிகிறது அல்லது அதை மட்டுமே சூர்யா கண்டடைகிறான். நீரஜா தொடங்கி இந்தப் பட்டியல் நீள்கிறது. சூர்யாவுக்கு நீரஜாவிடம் முதலில் பிடிப்பது அவள் பாம்பேயிலிருந்து வந்தாலும் கையுள்ள ரவிக்கை அணிந்திருக்கிறாள் என்பது தான். சிகிரெட் கேட்டபின் தான் நீரஜாவை சூர்யாவால் அணுக்கமாக்கிக் கொள்ள முடிகிறது. மனிதர்களின் பாவனைகள், நல்லதன்மையாக காட்டிக் கொள்வதன் மேலான விலக்கத்தையும் சொல்கிறான். காமத்தை பற்றி பேசும்போது மட்டுமே சூர்யா தன்னை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது என்கிறான்.
“ஆடைகளற்று நிர்வாணமாயிருக்கும் போது மட்டும் இயல்பாக இருப்பது போலவும், வெளியே ஆடைகளுக்குள் உலவும்போது வேடம்கட்டி உணர்ந்தான் சூர்யா” என்ற வரிகளில் அதைக் காண முடிகிறது. ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் அந்தரங்கமான இடத்தில் வெளிப்படும் ஒருவனை எல்லோராலும் காண முடிவதில்லை. ஒரு ஆளுமையையே கூட குலைத்துப் போடும் வாய்ப்புள்ள இடம் அது. அதன் அப்பட்டத்தை காண்பிப்பதன் வழி அந்த புனிதத்தை கட்டுடைக்கிறது. பெண்களுடனான பெரும்பாலான உரையாடல்கள் காமத்திற்கு இட்டுச் செல்லும் ஃபோர்ப்ளேயாகவே இருக்கின்றன. சூர்யா காட்டும் பெரும்பான்மையான பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து “உனக்கு மனிதர்களைப் பார்த்து பயம் இல்லையா?” என்று கேட்பவனாகவே சூர்யா இருக்கிறான். அப்படி இருக்கும் தன்னுடைய தோழிகளை விபச்சாரிகளாக பிறர் கருதுவது குறித்தும் ஆத்திரப்படுகிறான். ”ஒரு மனிதனுக்குத் தேவையான செக்ஸ் கிடைக்கவில்லையானால் நிம்மதியாகத் தூங்க முடியாது” என்கிறான்.
ஆழமான ஓர் உறவை எந்த வாசகியுடனோ, தன் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எந்த மொழிபெயர்ப்பாளருடனோ, வேலையில், வழியில் காணும் எந்தப் பெண்ணுடனும் சூர்யா கைகொள்ளவில்லை. இத்தனை காமங்கள் என்பது ஒரு மேலோட்டமான காதலைத்தானே உணர்த்துகிறது என்ற சந்தேகம் வரும்போதெல்லாம் கிரணுக்கும் சூர்யாவுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. “வாழ்வின் பேருண்மைகளை உணர்த்திய பெண்ணே உனக்கு வந்தனம்” என்று யோனியில் முத்தமிட்ட சூர்யாவை கிரண் அணைத்துக் கொண்டு மருகவில்லை. ”நீ புரிந்து கொண்டாயா என்பது குறித்து எனக்கு சந்தேகமாக இருக்கிறது – விளக்கமாகச் சொல் – நீ ஒவ்வொன்றையும் அதன் மேற்பரப்பில் மட்டுமே பார்க்கிறாய்… அல்லது அதன் அடியோட்டங்களைப் பார்த்தாலும் பார்க்காதது போல பாசாங்கு செய்கிறாய்… முதலில் சொன்னது சரியாயிருந்தால் நீ ஒரு சராசரி எனவும் இரண்டாவது உண்மையாக இருந்தால் நீ ஒரு ஹிப்பாக்ரிட் என்று அர்த்தமாகும்” என்கிறாள். தன்னிடம் கோபித்துக் கொண்டு போனவன் பத்து நாட்கள் கழித்து திரும்பி வரும்போது மீண்டும் வேறு ஒருவனுடன் நிர்வாணமாக அவள் இருப்பதைக் காணும் சூர்யா கொள்ளும் சலிப்பின் நீட்சியே அடுத்தடுத்துவரும் பெண்களுடனான உறவுகளில் காணமுடிகிறது. நீரஜா தொடங்கி எக்ஸிஸ்டன்சியலிஸத்தில் வரும் பல பெண்களும் ஒரு ஃப்ளாஷ் போல தான் கடந்து செல்கிறார்கள்.
சுயம் மேலுள்ள காதலே பிரதானமாகத் தெரியும் எழுத்துகள் இவை. உடலும், மனமும் என ஒட்டுமொத்த மானுடத்தின் அழுக்கு வாய்ந்த, அருவருப்பான, ஒழுக்கவரையறைகளில் அகப்படாத, சராசரியான, கைவிடப்பட்டவர்களின் மேலான காதலும் கூட தன்னை அவர்களில் ஒருவராகக் காண்பதால் விளைந்தது தான். தொடர்ந்து பிறரை, பிறருடைய வாழ்வை புறம்பேசிக் கொண்டே இருக்கும் ஒருவன் தன் வாழ்நாள் தோறும் தீர்க்கமாக நம்பும் ஒன்று “புனிதமின்மை”. புனைவு நெடுக இத்தகைய கிசுகிசுக்கள் அந்த சிந்தனைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. கோவிந்தராஜலு நாயுடுவின் எட்டு குழந்தைகளும், எப்படியெல்லாம் காமத்தால், காதலால் பிறழ்ந்தார்கள் என்ற நீண்ட பட்டியல் நாவலில் வருகிறது. அதன்பின் ராமசாமி, பாப்பாத்தி குடும்பம் அதன் பிறழ்வுகள் என நீள்கிறது. காமமே அனைத்திலும் முதன்மையாகிவிடும் ஒரு சலிப்பை இது தருகிறது என்றாலும் பெரும்பான்மைச் சமூகத்தையும் அதற்குள் அடக்கிவிடுமளவு உண்மையாகவும் உள்ளது.
இந்த நாவலில் வரும் எக்ஸிஸ்டன்சியலிஸம்-கம்யூனிஸம்; எக்ஸிஸ்டன்சியலிஸம்-சராசரி விவாதங்கள் சூர்யாவின் சிந்தனைகளை பதிவு செய்கின்றன. கீழிருக்கும் அருவருப்புகளை உள்ளபடியே சொல்வதும், மேலிருக்கும் பகட்டின் அபத்தத்தை, மத்தியத்தர புத்தியை, பகடிசெய்வதும், டில்லி குமாஸ்தாக்களின் வாழ்வு பற்றிய சித்திரமும், எழுத்தாளனும் குமாஸ்தாவுமானவனின் கலை நுகர்வுக்கான உலகியல் தடைகளும், சமகால அரசியல், பொருளாதார, சமூக அமைப்பின் மீதான தன் பார்வையையும் புனைவுத்துணுக்குகள் வழியாக அறிய முடிகிறது. “நம்முடைய ஆளுமை நம் செயல்பாடுகளால் மட்டுமேதான் நிர்ணயிக்கப்பட வேண்டுமே ஒழிய புறத்தோற்றங்களால் அல்ல. அது மனோவியல் சார்ந்த விஷயம்” என தேவையற்ற பகட்டைப் பற்றிச் சொல்கிறார்.
மத்தியத்தர வாழ்க்கை வாழும் மனிதர்களை, அதன் மதிப்பீடுகளின் மீதான எள்ளல் இருக்கிறது. “என் குழந்தை முதல் மதிப்பெண் வாங்கி விட்டது என்று சொல்லும் பெற்றோர்களையெல்லாம் அம்மணமாகக் குப்புறப்படுக்கப்போட்டு சுத்தாமட்டையில் பிரம்பால் விளார வேண்டும்” என்கிறார். அலெக்ஸாவின் வழியாக பெற்றோர்களால் கொடுமைக்குள்ளாகும் பதின்பருவத்தை “அவள் செத்திருக்காவிட்டால் அவளுடைய பெற்றோர் அவளைப் பேசியே கொன்றிருப்பார்கள்” என்கிறார்.
குருவி என்பதை இனிமையாகவே சித்தரிக்கும் இலக்கியத்திற்கு மத்தியில் “பறவைகளைப் போல கொலைகார ஜென்மங்கள் இந்த பூமியில் வேறு எதுவுமில்லை” என்று சொன்னபோது ஆச்சர்யமாகவில்லை. ஒரு குருவியின் முட்டையை இன்னொரு குருவி கீழே தள்ளி உடைப்பதும், குஞ்சுக் குருவியை மேலிருந்து கீழே தள்ளி கொலை செய்வதையும் பார்த்த பிறகு இந்தச் சிந்தனையும் உண்மை என்றே தோன்றுகிறது.
அதிகாரத்திற்கு எதிரான ஒரு மனநிலை அல்லது அதை பூஜ்ஜியமாக்குவது, ஒழுக்கவியலை கேள்வி கேட்பவரின் மேலுள்ள வெறுப்பு, அறிவுஜீவி, தத்துவம் என்பதன் மேலுள்ள விலக்கம் ஆகியவை சாருவின் எழுத்துக்களில் காண முடிகிறது. “ஆண்டாண்டு காலமாக நம் மீது திணிக்கப்பட்டு வந்திருக்கும் மதிப்பீடுகளையே இவர்கள் வைக்கிறார்கள்” என்பதை அவர் எல்லாவற்றின் மீதும் வைக்கப்படும் விமர்சனமாகவே அணுகலாம். உலகத்தின் இனிமையான யாவற்றின் அடியாழத்தில் ஓடும் உள்ளார்ந்த வன்முறைகளை, இச்சைகளைச் சொல்கிறது இந்நாவல்.
*
ஜீரோ டிகிரி: ஜீரோ என்பதே ஒரு யோனியின் குறியீடு போல அமைந்து அதன் பேசு பொருளை உணர்த்தியது. “ஒரு” என்ற வார்த்தையே பயன்படுத்தவில்லை என்ற முன் அட்டைப் பிரகடனத்தை நாவல் ஏந்தியிருந்தது. கதை சொல்லல் என்பதே “ஒரு” என்று ஆரம்பிப்பது தான் என்ற பழைய மதிப்பீட்டிற்கு எதிரான மனநிலையாக இதைக் கொள்ளலாம். ”புத்தி, ஞானம், தெளிவான அறிவு, சகிப்புத்தன்மை, ஸத்யம், உணர்வுகளையும் மனத்தையும் கட்டுப்படுத்தல், சுகம், துக்கம், பரிணாமம், அழிவு, பயம், பயமின்மை, அஹிம்ஸை, சமத்துவம், திருப்தி, துறவு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி, உயிர்களின் இப்படியான குணங்களும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன” என்ற பகவத் கீதையின் வரிகளை ஏந்தி நாவல் தொடங்குகிறது. வாழ்வின் சாரத்தை, அதன் உணர்வுகளை, அழகை, கோரத்தை 360டிகிரி அலசி ஆராய்ந்து சென்றடையும் நிலையை எதுவுமே செய்யாமல் ஜீரோ டிகிரியில் அதன் எதிர்ப்பக்கம் நின்று கூட காண முடியும். ஜீரோ டிகிரியிலிருந்து மனித வாழ்வைப் பார்ப்பதென்பது 360 டிகிரிக்கு எதிர் திசையிலிருந்து பார்ப்பது என்ற பிரக்ஞையுடன் தான் இந்த நாவலை அணுக வேண்டியிருந்தது. நாவலின் நேர்கோடற்ற தன்மை, பிறழ்வுத்தன்மை, பேசுபொருள் ஆகியவை சமன்குலைவை அளிக்கிறது.
”நல்ல நாவல் என்பது என்ன?” என்பதற்கான மதிப்பீடுகளை புறந்தள்ளும் வடிவமின்மையையே கூறாக நாவல் கொண்டுள்ளது. எந்த விதமான குறியீடுகளோ தத்துவங்களோ நுண்மைகளோ மண்டை பிளக்குமளவு விவாதம் செய்யும் கருத்துக்களோ அற்ற நாவல். எளிய வாசிப்பைக் கோருவது. “நிர்வாண நிஜத்துடன்” என்ற வார்த்தையே ஒரு தேடல் விளக்காகக் கொண்டு ஜீரோ டிகிரி நாவலுக்குள் நுழையலாம். முப்பத்தி ஐந்து அத்தியாயங்கள், ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள். ”எழுத்து என்பது கனவில் ஷஷூப்தியிலிருந்து தோன்றி வருவது மட்டுமல்லவே. அது கக்கூஸிலும், டவுன்பஸ்ஸில் ஜர்தா பீடா போட்ட போலீஸ்காரன் வாயிலிருந்தும் வருவதென்பது” என்ற வரிகளின் வழியே அதன் பிறப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். அங்கிருந்து தோன்றிய எழுத்துக்களின் குவியலாகவே முப்பது அத்தியாயங்கள் இருந்தன.
தேய்ந்த துண்டுச் செய்திகளிலிருந்து ஆரம்பித்து, வரலாற்று கதையென ஒரு அத்தியாயம், “ஆம்/இல்லை” கேள்வி பதில் விளையாட்டுக்கள், எஸ்ரா பவுண்ட், போர்ஹேஸ், கொர்த்தஸார் என பெயர்களின் பட்டியல், முனியாண்டி என்ற எழுத்தாளனின் அறிமுகம், அவனுடைய எழுத்திற்கான செத்த மூளையின் விமர்சனம், உறவுகள், காமம், காம விளையாட்டுக்கள், திடீரென எழுத்தை பற்றிய கவிதைத்தன்மையுடன் கூடிய உரை நடை, முனியாண்டி ஏன் ஒரு எக்ஸிஸ்டண்ஷியலிஸ்ட் ஆக மாறினான் என்ற குறிப்போடு அவனைப் பற்றிய செய்தி, ஆர்ய அல்குல் என 108 முறை எழுதி வைத்திருப்பது, அருவருப்பான புணர்ச்சி தண்டனைகள், நமிஸிஷிருவின் ஒன்றுமில்லாத கடிதம், ஆப்பிரிக்கா நாடுகளில் நடக்கும் கொடுமைகள் பற்றிய செய்தித் துணுக்கு, கிய்யோ, ரிய்யோ, குறியைக் கொண்டு பஸ்களில் இடிக்கும் ஆண்களைச் சொல்லும் வாசகி கடிதங்கள், பெரூவின் நவீன வரலாறு புத்தகம் பற்றிய அறிமுகம், மேற்கத்திய இசை பற்றிய அறிமுகம், முனியாண்டியைப் பற்றிய கிசுகிசுக்கள், அவையும் பாதியிலேயே காணமல் போனதாக குறிப்பு, ”லால் சலாம்” என்ற தலைப்பில் அரசியல்-இலக்கிய பகடி, தன்பால் சேர்க்கை, தினசரி பற்றிய சுருக்கக் குறிப்புரை, சைக்கோத்தனமான காதல் காமம், வேசி வீடுகள், பெசண்ட் நகர் பீச், கொலை, சைக்கோத்தனம், செக்ஸ் ஜோக்ஸ், போன் செக்ஸ், செயல்முறை விளக்கங்கள், எழுத்தாளனிடம் தட்டையான அவன் ஆக்கங்கள் பற்றிய நேர்காணல் என இருபது அத்தியாயங்கள் கடந்த பிறகு எழுதுபவனுக்கே வாசகர் “கதை எங்கே” என்று கேட்டுவிட வாய்ப்புண்டு என்ற பிரக்ஞை எழுந்தாற்போல அடுத்த அத்தியாயத்தில் அதன் இயலாமை பற்றி, போதாமை பற்றிய விளக்கங்கள், சிருஷ்டி சூன்யம் பற்றி, ஒரு விமர்சன எதிர்வினைக்கான கடிதம். மூன்று அத்தியாயங்களில் நான்கு வரி கிறுக்கல்கள். நாவல் எழுதுவதற்கான குறிப்புகள் பற்றி, ஆர்த்தி, அம்மா, நளினி-சூர்யா எனப்பல அத்தியாயத்திற்குப் பிறகு அவந்திகாவின் கடிதம் வந்தது. அவை சூர்யாவின் அகத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது. சூர்யாவை வாசகர்கள் அணுக்கமாக்கிக் கொள்ளும் பகுதியாக அமைந்தவை அவை. “பாதியாக்கப்பட்ட பாதிகள் தங்கள் பாதிகளைத் தேடி அலைந்து முழுமை கொள்கின்றன” என்றே உறவுகளைச் சித்தரிக்கிறார். புதிர் விளையாட்டு போல கலைத்து அடுக்கி என பொருள் கொள்ள முற்பட்டு தோற்றுப்போகும் வாசுகிகளிடம் அவர் “வேறு வேலையிருந்தால் பார் வாசுகி” என்கிறார்.
எழுதுவதன் மேலும், எழுத்தாளன் மேலும் கட்டப்படும் அத்தனை புனிதங்களையும் கலைத்துப் போடுகிறார். நாவல் என்பதற்கான வரையறைகளை கோட்பாடுகளை தன் எழுத்துக்களின் வழியாக சாரு பகடி செய்வதையே காண முடிகிறது. நாவல் என்று சொல்லப்பட்ட இந்த நாவலில் ஒருமையோ, சீரான எண்ணவோட்டமோ, சிந்தனையோ, நுட்பமோ, மொழி நடையோ இல்லை. பல இடங்களில் சம்மந்தமேயில்லாத ஆங்கில வரிகள், சில சம்மந்தமுள்ள ஆங்கில வரிகள், விளையாட்டுகள், படங்கள், கேள்வி பதில்கள் என பலவகைப்பட்ட வடிவங்கள் உள்ளன. இவைகளையெல்லாம் கோர்க்க முடியுமானால் அது “வடிவமின்மை”; “சாரமின்மை”; “பிறழ்வு” ஆகிய வார்த்தைகளால் மட்டுமே முடியும். அது உண்மையில் ஜீரோ டிகிரியிலிருந்து பார்க்கும் பார்வைக் கோணம் தான்.
*
ராஸலீலா: ராஸலீலா உணர்வெழுச்சிகள், உணர்வுப் பொங்கல்களுக்கு முன்னர் நின்று பரிகசிக்கும் தொனியுடையவை. வாழ்வில், புனைவில் இதுகாறும் நெகிழ்ந்த தருணங்கள், மனிதர்களை சற்றே பரிகசித்து சிரிக்கக்கூடியவை. நிதர்சனத்தில் உணர்வுகளுக்கு எந்தவித மதிப்புமளிக்காமல் காயப்படுத்திவிட்டுச் செல்லும் மனிதர்களை, தருணங்களை உணர்ந்து கொள்ளவும் இவை உதவுகின்றன.
”காமம்- ஜனனம்-காமம்-மரணம்” என பெருமாள் சொல்வது உள்ளீடற்ற பிறப்பின் தத்துவம். ஆனால் அது அப்பட்டமான உண்மையும் கூட. இங்கு காமத்தை உடலின் மேலான காமம், உணவின், செல்வத்தின், புகழின் மீதான காமம் என்றே கொள்ளலாம். ஆனால் பெருமாளின் தத்துவார்த்தப்படி இங்கு உடல் வேட்கையே பிரதானமாக உள்ளது. காதல் என்பதை ஆண்-பெண் சரீரக் கவர்ச்சி என்பதைத் தவிர அதை புனிதப்படுத்திக் கொள்ள ஏதுமில்லை என்ற சிந்தனையே பெருமாளின் எழுத்துக்களில் பிரதானமாக இருக்கிறது. விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பிருந்தாவைக் காப்பாற்றிய மாணிக்கத்திடம் நீண்ட நாள் கழித்து தொலைபேசியில் பேசும் போது “தேவடியாள் வீட்டுக்கு போனால் கூட நற்காரியங்கள் செய்ய முடியும்” என்ற சிந்தனையை மட்டுமே அவன் அடைகிறான்.
”ஒரு ஆணுக்கு பெண்ணுடனான உறவைத் தீர்மானிப்பது அந்த அரை இன்ச் அளவுள்ள சதைத்துணுக்கு மட்டுமே. இப்படி பச்சையாகச் சொன்னால் யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அது தான் உண்மை” என்கிறான். “எல்லா அழகான பெண்களையும் ஒரு முறையாவது சுகித்துவிட வேண்டும்” என்று எண்ணும் சுந்தரேசன், எல்லா வகையிலும் காமத்திற்கு இட்டுச் செல்லும் பேச்சுக்களையே பேசும் ஆண்-பெண் கதைமாந்தர்கள் என பாலியல் உறவுகள் நிரம்பித்ததும்பும் புனைவுகளாக ராஸலீலா உள்ளது. முழுமையாக அதற்குள் திளைத்துவிடாமல் அந்த வாழ்க்கையை வாழும் மாந்தர்களின் சில தருணங்களை பிளாஷ்களாக காண்பித்துச் செல்கிறார்.
“I should have met you long time back my rainbow” போன்ற காதல் வரிகள், செக்ஸ்டிங் சேட்கள், தொலைபேசி உரையாடல்கள் உணர்வுப் பிரவாகங்களின் மீது நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது. காதல் என்ற ஒன்றே இல்லை என்று தோன்றுமளவு ஒரு நம்பிக்கையின்மையை அது அளிக்கிறது. காதலித்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு விடுதலையை அளிக்கிறது. ஏமாற்றியவர்களுக்கு குற்றவுணர்விலிருந்து விடுதலையை தருகிறது. எல்லாம் சதை துடிப்புடன் இருக்கும் வரை ஆடப்படும் விளையாட்டு என நிர்வாணமாக நிற்கிறது.
இச்சையால் தான் பிறக்கிறோம். இச்சையையே கை கொண்டு நிறைவின்றி இறந்து மறைகிறோம். எத்தனை வேடங்களைப் புனைந்து கொண்டாலும் இச்சையெனும் மாபெரும் கள்ளமிருகத்தை நம்மால் அடியாழத்திலிருந்து விரட்ட முடிவதேயில்லை. ஒவ்வொரு தருணத்திலும் கூரான தன் உணர்கொம்புகளைக் கொண்டு அவை திறக்கும் சிறுவாசலின் விளிம்புக்காக காத்திருக்கின்றன அம்மிருகங்கள்.
ஆண்-பெண் உறவைத்தாண்டி பிற உறவுகளில் பெரும்பாலும் வெளிப்படுவது மனித மனத்தின் கீழ்மைகள். அலுவலகம், நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசுகிகள், வாசகர்கள், உறவுகள் என எங்கும் எதிலும் தென்படும் அழுக்கு, துரோகம், காமம், சுயநலம் ஆகியவையே பிரதானமாக உள்ளன. நாவலின் பேசுபொருளாகத் தான் வாசித்தவைகளை, சிந்தனைகளை, கோட்பாடுகளை, மனிதர்களை, அந்த காலத்தை, இலக்கியச்சூழலை தன் பார்வையில் ஒரு கதைசொல்லி போல பெருமாள் சொல்லிக் கொண்டே வருகிறான். உணர்வுகளேதுமில்லாமல் உடலை, இன்பத்தை பிரதானமாகக் கொண்டு, எந்தவித வாழ்க்கையின் தத்துவார்த்தச் சிக்கலுக்கும் ஆளாகாமல் அவன் இருப்பதாலேயே சுற்றியிருக்கும் அனைவரையும் அவ்வாறு மதிப்பிடுகிறான் அல்லது அவனைச் சுற்றி அவ்வாறான மனிதர்களை மட்டுமே காண்கிறான்.
காதல், காமம், அன்பு, பாசம் என உறவுகளுக்குள் நிகழும் பாசப்பிணைப்புகளை, அதில் எழும் உறவுச்சிக்கலை பல வித தத்துவார்த்த கேள்விகளுக்குள்ளாக்கலாம். குற்றவுணர்வுகளை, உறவின் உச்ச தருணத்தில் ஏற்படும், விரிசல்களை, துரோகங்களை ஆராயலாம். ஆனால் இவற்றுடன் கண்ணாயிரம் பெருமாளின் பரிகாசத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் வெளியே நின்று பரிகசிக்கும் ஒரு குரலை அருகிலேயே வைத்துக் கொள்ளும்போது தான் வாழ்வின் பார்வை முழுமையடைகிறது.
எல்லா தவறுகளையும் செய்துவிட்டு குற்றவுணர்ச்சியில்லாமல் ஒரு மனிதனால் எப்படி இருக்கமுடியும் என்ற கேள்விக்கு அவர்கள் யாரும் இத்தனை சிக்கலாக யோசிப்பதில்லை அல்லது யோசிப்பதேயில்லை என்றே ராஸலீலாவின் புனைவுத்துணுக்குகள் உணர்த்துகின்றன. அவர்களுக்கு சரி என்றோ தவறென்றோ ஏதுமில்லை. உள்ளீடற்ற ஒரு மனம் மட்டுமே உள்ளது. உணர்வு ரீதியான விஷயங்களை அசிரத்தையாக அணுகுவது உணர்த்தும் உண்மை இவை.
உண்மையில் இந்த அப்பட்டங்களை உணர்ந்து கொண்டால் நினைவுப் பெட்டகங்கள் தேவையில்லை, கரைந்து அழத்தேவையில்லை, உறவுக்காக தற்கொலை செய்யத்தேவையில்லை, வாழ்க்கையில் எந்த குற்றவுணர்ச்சியும் அடைய வேண்டியதில்லை. அன்றைய கணத்தில் வாழ்வதற்கு, மகிழ்ந்து களிகூர்வதற்கு இந்தப்புரிதல் போதுமானது. இங்கு மென் தொடுகைகள், சிறு அணைப்புகள் தரும் ஆறுதல்கள் அர்த்தமிழந்து தலைகவிழ்கின்றன. யாவற்றையும் யாவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தூண்டும் ஒரு பார்வையை அளிக்கிறது. அறமும், நேர்த்தியும், ஒழுக்க வரையறைகளும் தரும் அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கிறது. எல்லோருடைய முகத்திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த கள்ள மிருகத்தை ஒரு கணம் நினைவூட்டுகிறது.
பெருமாள் மாதிரியான ஆட்களுக்கு நிறைவென்பது என்ன? உண்மையில் பெரும்பான்மை மனிதர்கள் அதை நோக்கிச் செல்வதில்லை. அவர்களுக்கு அந்தக் கேள்வியுமில்லை. மனிதர்கள் மேல் எந்தக் கருணையும் இல்லாமல், அனைத்துப் புனிதப்படுத்தல்களையும் கலைந்து விட்டு அப்பட்டமாக உணர்வுகளை அணுகுவதும், படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பயன்படுத்திக் கொள்வதற்காகவே என்ற சிந்தனையோடே அனைத்தையும் கொண்டாட்ட மனநிலையோடு அணுகுவதும் எவ்வகையிலும் மானுடத்தின் மேலான கனிவை அளிப்பதில்லை தான். ஆனால் காதலுக்காக, இந்த சமூகம் ஏற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்காக, ஒழுக்க வரையறைகளுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும், பிறழ்ந்து போகும் மனிதர்களுக்கான விடுதலையை இது அளிக்கிறது. ஆழத்தின் மீதும் நுண்மையின் மீதும் நம்பிக்கையற்றவன் ஏமாற்றும் தரப்பில் இருந்தாலும் அதை உணர்வதில்லை, குற்றவுணர்வு கொள்வதில்லை. காதல் என்றில்லை எதையுமே பொருட்படுத்தாத எக்கச்சக்கமான மோசமான மனிதர்களுடனும், பிரச்சனைகளுடனும், போகங்களுடனும், கொண்டாட்டங்களுடனும் வாழ்வை எதிர்கொள்ளும் ஒருவன் இவற்றை அதனில் ஒரு பகுதியாகவே கடந்து செல்கிறான். அவன் சிந்திப்பதேயில்லை. அங்கு அதற்கான தேவையுமில்லை. அந்த பெரும்பான்மை மானுடத்தின் காட்சித்துணுக்களாகவே இப்புனைவுகள் உள்ளன. இவை அளிப்பது எல்லா வகையான குற்றவுணர்விலிருந்து விடுதலையையும் அது தரும் கொண்டாட்டத்தையுமே. அங்ஙனம் விடுதலையடைந்தவர்களால் கொண்டாடப்படும் எழுத்து சாருவுடையது.