இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் வாழும் சூழலைப் பற்றியும், எழுத்துச் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத என் தினசரிகளைக் குறித்தும், சமூக வலைத்தளத்தில் ஒரு பிலாக்கணம் வைத்திருந்தேன். பெரிதாக ஒன்றுமில்லை, தமிழில் எழுதுவோர் அனைவருக்கும் ஏற்படும் நள்ளிரவு உளச் சோர்வுகள்தாம். அதையும் எழுதித்தான் தீர்க்க வேண்டும் என்பதால் எழுதி வைத்துவிட்டு உறங்கப்போனேன். அடுத்த நாள் காலை அலைபேசியை உயிர்ப்பித்ததும், சாருவிடமிருந்து வந்திருந்த குரல்வழிச் செய்தி ஒன்று திரையில் மினுங்கிக் கொண்டிருந்தது. உறங்கி எழுந்த அதிகாலையில் அவரது வசீகரமான குரலில் எழுத்தின் வழியான விடுதலை என்கிற பார்வையைக் கேட்டபோது என் சகல சோர்வுகளும் காணாமல் போயின. ஒரு துறையின் முன்னோடி அல்லது வழிகாட்டி எனும் சொல்லாகத் திகழ்பவர்களின் இயல்பு இதுதானென்று நினைக்கிறேன். தமிழ்ச்சூழலைப் பொறுத்தமட்டில் எழுத்திற்காக முழுமையாகத் தம்மையும் தம் வாழ்வையும் ஒப்புக் கொடுப்பது என்பது கிட்டத்தட்டத் தற்கொலைக்குச் சமம். சாரு அதைத் துணிவாக ஏற்றுக் கொண்டவர். எழுத்து வழியாக மட்டுமே சகலத்தையும் உருவாக்கிக் கொள்வதும், எழுதுவதன் மூலமாக மட்டுமே விடுதலையையும் களிப்பையும் அடையும் வெகு சில எழுத்தாளர்களில் சாரு முதன்மையானவர். சாருவின் எழுத்து மட்டுமல்ல அவரது வாழ்வும், இயல்பும், இருப்பும், கொண்டாடப்பட வேண்டியது.
”நான் நரகத்திலிருந்துதான் எழுதுகிறேன். அங்கிருந்து தப்பிக்க எனக்கு எழுத்தை விட்டால் வேறொரு வழியும் கிடையாது. ஒருவேளை வாழ்வு சொர்க்கமாக இருந்திருந்தால் அதை நான் கொண்டாடிக் கொண்டிருந்திருப்பேன் எழுதி இருக்க மாட்டேன்” எனச் சொல்லும் சாரு என்னளவில் ஒரு முழுமையான ’ஹெடோனிஸ்ட்’ இதை அவருடைய முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டேன். வருடம் சரியாக நினைவில் இல்லை. 2008 அல்லது 2009 ஆக இருக்கலாம். விடுமுறையில் என் சொந்த ஊரான திருவண்ணாமலையில் இருந்தேன். அப்போதெல்லாம் பெரும்பாலும் பவா வின் வீடுதான் புகலிடம். நாள் முழுக்க ஆட்கள் வருவதும் போவதுமாக எப்போதும் அந்த வீடு மனிதர்களால் நிறைந்திருக்கும். இலக்கியமும், சினிமாவும், பேச்சும், மறுபேச்சும், நிரம்பிக் கிடந்த நாட்கள் அவை.
ஒரு நாள் பவா, சாரு திருவண்ணாமலைக்கு எஸ்.கே.பி கருணாவின் அழைப்பின் பேரில் வருவதாகவும் அவரை இன்றிரவு சந்திக்கலாமென்றும் சொன்னார். எனக்கொரு சிறிய பதற்றம் தொற்றிக் கொண்டது. அப்போதெல்லாம் என்னுடைய வலைத்தளத்தில் மிகுந்த ஆக்ரோஷமாக எழுதிக் கொண்டிருந்தேன். இணைய வெளி தரும் அசட்டுத் துணிச்சலால், கலக பிம்பம், மீறல், மிகையதார்த்தம், கறார் விமர்சனம் என்றெல்லாம் சலம்பிக் கொண்டு திரிந்ந்தேன். உலகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் எழுத்தாளர்கள்தாம் என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கையும் இருந்ததால் தினசரி காலை எழுந்தவுடன் சாரு மற்றும் ஜெ வின் வலைத்தளத்தை சிரத்தையாகத் திறந்து, அன்று அவர்கள் எழுதியிருப்பதை வாசித்துவிட்டு இருவரையும் விமர்சிப்பதை வாடிக்கையாகவும் வைத்திருந்தேன். என்னைச் சந்திப்பதை சாரு விரும்புவாரா என்கிற சந்தேகமும் இருந்தது. பவா அந்த எண்ணத்தை மாற்றினார். தமிழ் இலக்கியச் சூழலில் நடந்த இலக்கிய விமர்சனங்கள், சண்டைகள், இதுவரை நிகழ்ந்த அடிதடிகள் குறித்தெல்லாம் விலாவரியாகப் பேசி இதுவே ஆரோக்கியமான சூழல் என்கிற பார்வையையும் தந்தார்.
சாருவின் ’ஜீரோ டிகிரி’யை பத்தொன்பது வயதில் வாசித்தேன். பட்டயப் படிப்பிற்கு பிறகு ஓசூரில் அண்ணனுடன் வசித்திருந்தேன். புத்தகம் வாசிப்பதை முழுநேர வேலையாக வைத்திருந்த காலகட்டம் அது. தேடித்தேடி வாசிக்கும் நண்பர்களும் உடனிருந்தனர். அந்நாட்களில் தீவிரமாக நவீன இலக்கியத்தை வாசித்தும் விவாதித்தும் கொண்டிருந்தோம். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், வங்க மொழிபெயர்ப்பு நாவல்கள் எனப் பேச்சுப் போய்க்கொண்டிருக்கும். வஸந்த விஹார் காஃபி, பைக் பயணங்கள், மெல்லிய நடுங்கும் குளிரில் ஓசூரின் மலைக்கோயில் உச்சியிலோ அல்லது படிக்கட்டுகளிலோ அமர்ந்தபடி விவாதிப்போம். பெரும்பாலும் எல்லா மாலைகளிலும் சந்தித்துக் கொள்வோம். இலக்கியம் முன்னிரவுகளாக இருந்த நாட்கள் அவை. அப்படி ஒரு நாளில்தான் நண்பரொருவர் ஜீரோ டிகிரியைத் தந்தார். ஒரே இரவில் வாசித்து முடித்துவிட்டேன். இப்படி ஒரு நாவலை, மையமே இல்லாத படைப்பை அதற்கு முன்பு வாசித்ததில்லை. நாவல் எனக்குப் பிடித்திருந்ததா இல்லையா எனக் குழப்பமாக இருந்தது. அதை விட இப்படியெல்லாம் எழுத முடியுமா என்கிற ஆச்சரியமும் எரிச்சலும் கலந்த உணர்வும் ஒட்டிக் கொண்டுவிட, நூலைக் கொடுத்த நண்பரைத் தேடி ஓடினேன். அவரும் கிட்டத்தட்ட என் மனநிலையில் தான் இருந்தார். இருவரும் பேசிப் பேசி ஓய்ந்தோம்.
அதற்குப் பிறகு சாருவை நான் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு துபாய் வந்துசேர்ந்த பிறகு இணையதளத்தின் வழியாகத்தான் வாசித்தேன். இல்லை அவரது வலைத்தளத்திலே பழியாகக் கிடந்தேன் என்பதுதான் சரியாக இருக்கும். சாரு பரிந்துரைக்கும் சினிமாப் படங்கள், இசைத் தொகுப்புகள், நூல்கள் என ஒன்றையும் விடமாட்டேன். அந்நிய வாழ்வில் நேரமிகுதியும், இணையத் தொடர்புகளும் இருந்ததால் எல்லாவற்றையும் சுலபமாகத் தேடிப் பிடிக்க முடிந்தது. அவருடைய ரசனையும், தேர்வுகளும், விருப்பங்களும் என்னுடைய இயல்புக்கு சரியாகப் பொருந்தின. அதுவரை என்னிடம் குறைவாக இருந்த நுண்ணுணர்வும், தன் சார்ந்த அக்கறையையும் சாருவின் எழுத்து எனக்கு மீட்டுத் தந்தது. மூன்று மாதத்தில் அவர் வலைத்தளத்தில் எழுதியிருந்த அத்தனைக் கட்டுரைகளையும், கடிதங்களையும், குறிப்புகளையும் வாசித்து விட்டிருந்தேன். அவருடைய புதுப் பதிவுக்காக ஒவ்வொரு நாளும் கைநடுங்கக் காத்திருந்தேன். அச்சிலும் ராஸலீலா முதல் வரம்பு மீறிய பிரதிகள் வரை எல்லாவற்றையும் தருவித்து வாசித்துக் கொண்டிருந்தேன்.
இந்தத் தொடர் வாசிப்பு தந்த துணிச்சலும் விமர்சனங்களுக்கான பின்னணியாக இருந்தது. அவரை முழுமையாக வாசித்து அறிந்திருந்ததால் கருத்துத் தளத்தில் சாருவுடன் முரண்படும் புள்ளிகளும் உருவாகின. பிறகு ஓரிரு மாதங்களில் அவரே அந்தப் புள்ளிகளையும் அதன் வழி உருவான கோலங்களையும் அழிப்பார். மனதளவில் அவருடன் காதல்-மோதல் உறவுதான் இருந்தது. ஆனால் ஒரு முறை கூடப் பேச முயலவில்லை. என் கூச்ச சுபாவத்தால் மின்னஞ்சல் கூட அனுப்பத் தயங்கினேன்.
இந்தப் பின்புலத்தோடு சாருவை சந்தித்தேன். அவரிடம் எந்தத் தயக்கமும் இல்லை. வெகு இயல்பாகப் பழகினார். ஒருவரை முதன்முறையாகச் சந்திக்கும்போது எழும் தயக்கங்கள் எனக்கு ஏராளம் உண்டு. அதிலேயும் தமிழின் முக்கியமான எழுத்தாளரைச் சந்திக்கையில் அவரை எப்படி அழைப்பதென்றொரு தயக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். சாரு அதற்கு இடங்கொடுக்கவே இல்லை. பார்த்த உடனேயே ’சாரு’ என்றொரு அழைப்பு தாமாகவே நாவில் வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. பிறருக்கும் அப்படித்தான் இருக்க முடியும். அவரது வசீகரமான உடல்மொழியும், இணக்கமும், இதற்கான பாதையை அமைத்துத் தரும்.
ஒரு நல்ல தங்கும் விடுதியில் சாரு, கருணா, மற்றும் பவாவோடு எங்களின் உரையாடல் துவங்கிற்று. நானும் சாருவும் மட்டும் விடியும் வரை பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் சிற்றிலக்கியச் சூழல், உலக இலக்கியம், சினிமா, அரபு மற்றும் இலத்தீன் அமரிக்க இசை என மிக விரிவாகவும் ஆழமாகவும் சாரு பேசப் பேச அதில் நான் முழுவதுமாகத் தொலைந்திருந்தேன். எழுத்தையும், வாசிப்பையும், சினிமாவையும் நேசிக்கும் ஒருவனுக்கு சகலத்திலும் தேர்ந்த ஒரு முன்னோடியின் பேச்சைக் கேட்பதில் இருக்கும் களிப்பு அலாதியானது. அதிலேயும் தமிழ் எழுத்துச் சூழலுக்கு வெளியே வசிக்கும் எனக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக அந்த இரவு இருந்ததில் வியப்பில்லை. அதற்குப் பிறகு சாருவின் இயல்பு பற்றியதான என் முன்முடிவுகளில் பெரிய மாற்றம் வந்தது. அவரின் எழுத்தைப் போலவே அவரும் மனதிற்கு நெருக்கமானார். அந்த வருடம் இந்த நாட்டிற்குத் திரும்பும்போது அச்சிலிருந்த அல்லது கைக்குக் கிடைத்த சாருவின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி வந்திருந்தேன்.
அதற்கடுத்த சந்திப்பும் களிப்பானது. இன்னொரு வருடத்தின் விடுமுறைச் சமயத்தில் நானும் பவாவும், மிஷ்கினின் நந்தலாலா படத்தின் முன்னோட்டக் காட்சியைக் காண ஒரு நாள் முன்னதாகவே அவரது அலுவலகம் சென்றிருந்தோம். அன்றைய இரவுக் கொண்டாட்டத்தின் இலக்கிய சபை மிகவும் பெரியதாக இருந்தது. பிரபஞ்சனிலிருந்து ஷாஜி வரை எழுத்தாளர்கள் நிறைந்த சபை. பேச்சும், பாட்டும் உற்சாகமும் ஓரிரு மணி நேரங்களில் வடிந்துவிட நானும் சாருவும் மிஷ்கினும் மட்டும் விடியும் வரை பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சந்திப்பில் சாருவை இன்னும் பிடித்துப் போனது. சாருவின் பேச்சு, கண்ணாடி முன் நின்று கொண்டிருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை எனக்குத் தந்தது. அப்படி இருந்தும் ஏனோ சாருவுக்கும் எனக்குமான நட்பு தொடரவில்லை. அதற்கு முழுமுதற் காரணமும் நான்தான். இந்த நாட்டிற்கு வந்ததும் நான் வேறொரு மனிதனாகி விடுகிறேன். வேலை, குடும்பம் மற்றும் எழுத்து என நாட்கள் பரபரப்பாகி விடுவதால் தொலைவில் இருக்கும் பிடித்தமானவர்களுடனான தொடர்பும் பேச்சும் அப்படியே நின்றுவிடுகிறது. எனக்கே எனக்கான உலகில் மூழ்கிப் போய்விடுகிறேன். தவிர அடிப்படையில் நான் முழுச் சோம்பேறி என்பதால் மனிதர்களுடனான நட்பையும், உறவையும் பேணும் திறமைகள் எனக்கு ஆரம்பத்திலிருந்தே இல்லை.
சாருவை அதற்குப் பிறகு இந்தியாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அல்லது நான் உருவாக்கவில்லை. கடிதம் மற்றும் அலைபேசித் தொடர்பும் இல்லை. ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு சாருவை ஷார்ஜாவில் வைத்து மூன்றாம் முறையாக சந்தித்தேன். அவருக்கு என்னுடனான இரண்டு சந்திப்புகளும் நினைவில் இல்லை. ஆனால் இந்த நாட்டிற்கு வரும்போது என்னுடைய ’ஓரிதழ்ப்பூ’ நாவலை வாசித்துவிட்டிருந்தார். ஓர் எழுத்தாளனை வாசிக்காமல் சந்திப்பது நியாயமாக இருக்காது என நினைத்தேன் என அன்று அவர் சொன்னதை எனக்கானதாக எடுத்துக் கொண்டேன். அதைக் காப்பாற்றியும் வருகிறேன். சமீபமாக ஒரே ஒரு கதை எழுதி இருக்கும் ஓர் எழுத்தாளர் சந்திக்க அழைத்தபோது அவரின் கதையைத் தேடிப் படித்துவிட்டு பிறகுதான் சந்தித்தேன். இந்த ஒழுங்கை சாருவிடமிருந்துதான் பெற்றேன்.
இங்கிருக்கும் நண்பர்கள் சகிதம் சாருவுடனான மூன்றாம் சந்திப்பு, வாழ்வில் என்றும் நினைவிலிருக்கும் சந்திப்பாக அமைந்தது. ஓர் இரவு முழுக்க சாரு ஓரிதழ்ப்பூ நாவலைப் பற்றிப் பேசினார். மிகவும் தனிமையான, தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத, மிகுந்த கூச்சமும் உள்ளடங்கியும் போகக் கூடிய என் இயல்புக்கு சாருவின் பேச்சை ஏற்றுக் கொள்ளத் தெரியவில்லை. அது முழுவதுமாக தன்னைக் கரைந்தும் நெகிழ்த்தியும் கொண்டது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு நாங்கள் நெருக்கமாகிவிட்டோம். அடிக்கடி பேசிக் கொண்டோம். நானும் கொஞ்சம் சுறுசுறுப்பானேன். முடங்கிக் கிடந்த என் சோம்பேறித்தனத்தை சாரு பேசிப்பேசி துரத்தியடித்தார். அங்கும் இங்குமாய் கிடந்த என் எழுத்துச் சிதறல்களை கோர்த்து, அடுக்கி, சீர் செய்து தொடர்ந்து ஆறு நூல்களை அடுத்தடுத்து வெளியிட்டேன். புது வாசகப்பரப்பிற்கும் என் எழுத்து சென்றடைந்தது.
அதற்கடுத்த வருடத்தின் இறுதி 2018 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக அமைந்தது. லெபனான் பயணம் சென்றிருந்த சாரு அதைப் பாதியில் முடித்துக் கொண்டு துபாய் திரும்பினார். எங்களுடன் பத்து நாட்கள் வரை இங்கு தங்கினார். எப்போதும் நினைவில் தங்கும் நாட்களாக அவை அமைந்தன. கிஸைஸ் டமாஸ்கஸ் வீதியிலிருக்கும் ஹில்டன் நட்சத்திர விடுதியைப் பார்க்கும்போதெல்லாம் சாருவின் நினைவும் உடன் எழும். வாழ்வின் மிகக் கொண்டாட்டமான நாட்களாக அவை இருந்தன. சாருவின் பேச்சு, செயல், இயல்பு எல்லாவற்றிலும் நளினமும், சமகாலமும் இணைந்திருக்கும். அவர் அருகில் இருக்கும்போது நான் என்னை மிகவும் பழைய நபராக உணர்வேன். அந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல என்பது என்னைவிடவும் வயது குறைந்த நண்பர்களோடு பேசும்போது தெரிய வந்தது. சாருவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகள் ஏராளம். என்னுடைய இயல்பு வாழ்வில் பல மாற்றங்கள் வந்து சேர்ந்தன. அவை என் வாழ்வை இன்னும் சுதந்திரமாக வாழ உதவியாகவும் இருக்கின்றன.
சாருவின் புனைவுகளில் இருக்கும் மிக அடிப்படையான விஷயம் அதன் சுவாரசியம். சாருவின் புனைவுலகை மறுப்பவர்களும் கூட அவர் கதைகளை வாசிப்பதை நிறுத்துவதில்லை. காரணம் அவரின் மொழி மிகச் சரளமானதும் நேர்த்தியானதுமாகும். சுவாரசியமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை என்ற கருத்தை தீவிர நவீனத்துவ வாசகர்கள் நம்புகின்றனர். எதையும் நேரடியாக எழுதக்கூடாது என்கிற சாய்வுகளும் சில எழுத்தாளர்களுக்கும் உண்டு. எனவே அவர்கள் தங்களின் புனைவுகளை பூடகமாகவும், சிக்கலான மொழிக் கட்டுப்பாடோடும் எழுதினர். சாரு இந்த கட்டுப்பாட்டை மீறினார் மற்றும் வேண்டுமென்றே உடைத்தார். தமிழில் எழுதும் பலருக்கும் நல்ல உரைநடை இன்னும் கைவராததே இடியாப்பச் சிக்கலாக மொழி இருப்பதற்கு காரணம் என்கிற அவரின் பார்வையும் முக்கியமானது.
தத்துவார்த்தப் பார்வைகள், அகச் சிக்கல், உள்ளொளி, தரிசனம் போன்ற சொற்களுக்குள் உழன்ற தீவிர இலக்கியத்தை தன்னுடைய முதலும் முடிவுமில்லா தன்னிச்சைப் புனைவுகளின் வழியாக உடைத்தார். கதைகளாக்கப்படாத இன்னொரு உலகத்தையும், எவரும் எழுதத் தயங்கும் வாழ்வையும் அதற்கே உரிய தனித்துவ வெளிப்பாட்டு மொழியோடு சாரு காட்சிப்படுத்தினார். விளிம்பு நிலை வாழ்வும், கைவிடப்பட்டோரின் உலகமும் அவரது புனைவுலகின் பேசுபொருளாகின. இக்கதைகளின் வழியாக பொது அறம் அல்லது பெரும்பான்மை அறம் என்பதின் மீது கேள்விகளை எழுப்பினார். சமூகத்தின் பொது ஒழுக்கம், அதன் அளவுகோல்கள் மீதான மறுவிசாரணையாகவும் அவரது புனைவுகள் அமைந்தன. சாருவின் கதையுலகம் சாமானியர்களை தேவையற்ற குற்றவுணர்விலிருந்து மீட்கவும் தவறவில்லை.
ஒரு நேரடி உதாரணத்தை சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இருபதுகளின் மத்தியிலிருக்கும் ஓர் இளைஞர் குழாமை சந்தித்தேன். அவர்களுடனான உரையாடலில் அவர்களின் பயங்களையும், குற்ற உணர்வுகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அனைவரிடமும் சாருவின் நூல்களைக் கொடுத்து வாசிக்கும்படி சொன்னேன். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அவர்களை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிந்தது. பொது ஒழுக்கத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் மனித மனம் தேவையற்ற பயங்களில் சிக்குண்டு கிடக்கிறது. இந்த பயம் பல்வேறு அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் மூலதனமாக இருக்கிறது. ஓர் எழுத்தாளனால் மட்டும்தான் இவற்றை சரிசெய்ய முடியும். சமூகத்தை பீடித்திருக்கும் இறுகிய கட்டுமாணங்களை உடைக்கவும் மனிதனை அவன் சொந்தச் சிறையிலிருந்து விடுவிக்கவும் இலக்கியம் மகத்தான கருவியாக இருக்கிறது. சாரு அதில் ஓர் அலகாக இருக்கிறார்,சாருவுக்கு இளம் வாசகப் பரப்பு அதிகமாக இருப்பதற்கு இந்தத் தன்மையே காரணம். புத்தகக் கண்காட்சிகளில் சாருவை சுற்றி எப்போதும் இளைஞர் பட்டாளம் இருப்பதையும் காணமுடியும்.
சாருவின் கட்டுரைகளை, அ-புனைவுகளை ரசிக்காதோர் கிட்டத்தட்ட தமிழ் வாசகப்பரப்பில் ஒருவருமில்லை. கூர்மையும், பகடியும், நுண்ணுணர்வும் அவர் எழுதும் எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக இழைந்தோடும். இசை, திரைப்படங்கள், இலக்கியம், வாழ்வியல், பயணங்கள், மனித இருப்பு என அவர் எதைத் தொட்டு எழுதினாலும் உடன் வரும் கட்டுக்கோப்பான மொழியும், சுவாரசியமும் இன்று எழுதுவோர் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது. தன்னுடைய கட்டுரைகளின் வழியாக ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் கலை, இலக்கியம், திரைப்படம், அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளம் போன்றவை குறித்தான அறிதல் தமிழ் வாசகர்களுக்கு சாருவின் வழியாகத்தான் சாத்தியமானது. இந்த தேசங்களின் நிலக்காட்சிகள், வரலாறு, தொன்மம் ஆகியவற்றிலிருந்து மொழி உச்சரிப்பு வரை சகலத்தையும் கூர்மையாக கவனித்து அதை மிகச் சரியாக நமக்குக் கடத்தியவர் சாரு. மேலும் அந்தந்த பிரதேசங்களில் கோலோச்சிய மற்றும் வாழ்ந்து வரும் ஆளுமைகளின் படைப்புகள், அவற்றின் உயரங்கள் குறித்தான விரிவான பார்வையையும் இன்று வரை தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறியத் தருவதில் சாருவே முன்னோடி.
சாருவின் ’நிலவு தேயாத தேசம்’ இதுவரை வெளிவந்த பயண நூல்களில் முதன்மையானது என்பேன். காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடு இஸ்தாம்புல் நகரத்திற்குப் பயணமாகச் சென்று வந்தேன். அப்போது நிலவு தேயாத தேசத்தை வாசித்திருக்கவில்லை. நூல் கையிலேயே இருந்தும் இந்தப் புராதண நகரத்தை நம்முடைய சொந்தக் கண்களால் பார்ப்போம் என நினைத்துக் கொண்டு சுற்றி வந்தோம். முடிந்தவரை பார்த்துவிட்டோம் என்கிற களிப்புடன் ஊர் வந்த பிறகு, நிலவு தேயாத தேசத்தை வாசித்தேன். வியப்போடு சோர்வும் எஞ்சியது. இஸ்தாம்புல்லை சரியாகப் பார்க்கவேயில்லை என்கிற உண்மையை சாருவின் பார்வைகள் முன் வைத்தன. இனி இன்னொரு முறை போனால்தான் பயணம் முழுமையடையும். எழுத்தாளனின் தனித்துவம் என்பது இதுதான். சாரு ஒரு நகரத்தைப் பார்ப்பதைப்போல பிறரால் பார்க்க முடியாது. அவரின் பார்வையோடு சேர்த்துப் பார்க்கும்போது சகலமும் துலக்கமாகும்.
எழுத்தின் எல்லா சாத்தியங்களையும் நிகழ்த்திப் பார்த்தவர் சாரு. மொழிபெயர்ப்பும் விதிவிலக்கில்லை. அதிலேயும் தன் தனித்துவமான இடத்தை எடுத்துக் கொண்டார். சாருவின் மொழிபெயர்ப்பில் வெளியான ’ஊரின் மிக அழகான பெண்’ எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு. இதில் இடம்பெற்ற கதைகள் அனைத்துமே அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக அவ்குஸ்தோ ரோவா பாஸ்தாஸ் எழுதிய ’கைதி’ கதையும் ஆஸ்கார் லூயிஸின் ’வாழ்க்கை’ என்ற நாவலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட’ என் அம்மா ஒரு விபச்சாரி’ எனத் தலைப்பிடப்பட்ட அத்தியாயமும் எப்போதும் மறக்கமுடியாதவை. தமிழில் மொழிபெயர்ப்பு குறித்து யார் பேசினாலும் சாருவின் ஊரின் அழகான பெண் நூலைத்தான் அளவுகோலாக வைக்க வேண்டும் என்று சொல்வேன். ஒரு மொழிபெயர்ப்பில் கதைகளின் ஆன்மாவையும் மொழிச் சரளத்தையும் கொண்டு வர வேண்டுமெனில் அந்தந்த தேசங்களின் மீதான காதலும், கலை மீதான வேட்கையும் இருந்தால் ஒழிய சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அதற்கு சாருவும் இந்த நூலுமே சான்று.
தமிழ் இலக்கியச் சூழலுக்கு சாருவின் பங்களிப்பு மகத்தானது. அவர் திரளான வாசகப் பரப்பை பெற்றிருந்தாலும், இந்தியாவுக்கு வெளியிலேயும் கவனம் பெற்றிருந்தாலும் தமிழில் அவரது படைப்பை ஒட்டிய விமர்சன கவனமும், அவர் பங்களிப்பின் முக்கியத்துவமும் இன்னும் அதிகமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன் மற்றும் விரும்புகிறேன். இதை நிவர்த்தி செய்யும் விதமாக விஷ்ணுபுரம் விழாக் குழுவினர் சாருவுக்கு இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதை அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. விருதோடு மட்டும் இல்லாமல் விஷ்ணுபுரம் குழுவினரின் கட்டுக்கோப்பான அர்ப்பணிப்பின் பலனாக சாருவின் படைப்புகள் இன்னொரு வாசகத் தளத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் நம்புகிறேன்.
விஷ்ணுபுரம் விழாக் குழுவினருக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர்