பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி- சுனில் கிருஷ்ணன்

சாரு நிவேதிதாவின் ‘நேநோ’ தொகுப்பை முன்வைத்து

1

சாருவின் படைப்புலகைப் பற்றி கட்டுரை எழுதுவது சற்று சவாலான விஷயம்தான். முதலாவது துண்டுபடலே இயல்பான வடிவம் என உள்ள நிலையில் கதைகளை தொகுத்துக்கொள்வது எப்படி? சாராம்சப்படுத்தி தொகுத்து ஒரு மையத்தை உருவாக்குவதென்பதே அவரது படைப்புகளுக்கு எதிரானது. இரண்டாவதாக, சிதறலான எழுத்தில் தெறிக்கும் மின்னல் வெட்டுக்களை பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை எனும் வாசக கருத்துக்கு அப்பால் சென்று  வேறு எதை எழுதுவது? இறுதியாக சாருவின் கதைகளை வகுத்துக்கொள்ள பிரதியை தீர வாசித்தால் மட்டும் போதாது, அதற்கு வெளியே  வாசித்தாக வேண்டும் எனும் எண்ணம் எனக்குண்டு. (அதற்கான குறிப்புகளை பிரதியின் வழியே அடையலாம். உதாரணமாக எரிக் ஃபிராம்மின் Anatomy of Human destructiveness எனும் நூலை அவர் கதை வழியே தொடர்ந்தேன்)

சாரு நாவலாசிரியராகவும், புனைவற்ற எழுத்து வகைகளுக்காகவும் அதிகம் அறியப்படுகிறார். ‘பழுப்பு நிற பக்கங்கள்’ தொகுப்பில் எம்.வி.வியின் காதுகளை முன்வைத்து பின்நவீனத்துவத்தை அறிமுகப்படுத்திய கட்டுரை மிக முக்கியமானது. அதேபோல் எனக்கு தஞ்சை பிரகாஷ் மீது பெரிய அளவில் ஈர்ப்பில்லாமல் இருந்தது. அவரது கட்டுரை எனது நிலைப்பாடை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கியது. ந.சிதம்பர சுப்பிரமணியம் எனும் எழுத்தாளரின் ஆக்கங்கள் அச்சிலேயே இல்லாத சூழலில் அவை மீண்டும் பதிப்பிக்கப்பட்டு நவீன இலக்கிய வட்டத்திற்குள் விவாதிக்கப்படவும் பழுப்பு நிற பக்கங்கள் முதன்மை பங்காற்றியுள்ளது. அவரது ஜீரோ டிகிரி, எக்சிஸ்டென்ஷிலியசம் போன்ற புகழ்பெற்ற நாவல்களுக்கு மாற்றாக அவ்வளவாக விவாதிக்கப்படாத அவரது சிறுகதை தொகுப்பிலிருந்து அவரது படைப்புலகை அணுக முடியுமா என நோக்கும் முயற்சியே இக்கட்டுரை. மேலும் இதை சாக்காகக் கொண்டு நான் இதுவரை வாசித்திராத அவரது சிறுகதைகளை வாசிக்கலாம் என்பதும் ஒரு காரணம். ‘நேநோ’ எனும் சிறுகதை தொகுப்பு மொத்தம் 30 கதைகளை கொண்டது. அவற்றிலிருந்து சாருவை பொதுவாக இயக்கும் கேள்விகள் என சிலவற்றை கண்டடைய முடியுமா என பார்க்கலாம்.

இக்கதைகளை யதார்த்த கதைகள், சிதறிய வடிவம் கொண்ட கதைகள் என  இரண்டாக வகுக்கலாம். யதார்த்த தளத்தில் நகரும் கதைகளிலேயே கூட எழுத்தாளர் தன்னுணர்வுகொண்டு குறுக்கிடும் ‘கண்மணிக்கு ஒரு கடிதம்’ ‘மயக்கம்’ போன்ற கதைகளும் உண்டு. சாருவுடன் நாம் தொடர்பு படுத்தும் சிதறல் வடிவம் கொண்ட கதைகள் என இத்தொகுப்பில் ஏழெட்டு கதைகளை மட்டுமே சொல்ல முடியும்.

சாருவின் யதார்த்த கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளென முள், ஷங்கர்லால் இசைவிழா, உள்முகம் ஆகிய கதைகளைச் சொல்வேன்.  ‘அவ்வா’ நேர்கோடற்ற முறையில் தாவித்தாவி செல்லும் மிக முக்கியமான கதை. வடிவச் சிதறல் கொண்ட கதைகளில் ‘கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது’, ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’, ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்’ ஆகிய கதைகள் என்னை வெகுவாக ஈர்த்தன. தமிழ் சிறுகதை வரலாற்றில் இக்கதைகள் அவரது தனித்துவமான பங்களிப்பு என நம்புகிறேன்.

2

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் சிறுகதையான ‘முள்’ வடிவ முரண்கள் ஏதுமற்ற, சிறுகதை இலக்கணத்திற்குள் கச்சிதமாக பொருத்திக்கொள்ளும் கதை. சாருவின் சில கதைகளை வண்ணநிலவனின் கதையுலகிற்கு நெருக்கமானதாக உணர்ந்தேன். ‘முள்’ அதில் ஒன்று. ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ மற்றும் ‘ஷங்கர்லால் இசைவிழா’ ஆகிய கதைகளில் வரும் பாப்பா, ‘வெளியிலிருந்து வந்தவன்’ கதையில் வரும் ஜென்னி ஆகியோர் வண்ணநிலவன் கதையுலகிற்கு நெருக்கமானவர்கள் என குறிப்பிட்டுச்சொல்லலாம்.

‘முள்’ கதையில் அத்தை வந்த அன்று கதை சொல்லியான ராஜாவுக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிவிடுகிறது. அவன் மீது அன்பு பொழியும், அவனைவிட பத்து வயது மூத்த அத்தை. உலகியலில் மட்டும் ஈடுபடும் மாமாவிற்கு இணையாக கனவுலகில் சஞ்சரிக்கும் அத்தை. ‘திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்…’ எனும் அளவிற்கு அவரின் மீது அவனுக்கு பிரியம். ஆனால் அந்த உறவை என்னவென்று வரையறை செய்வது? ராஜா தனக்குள்ளாகவே கேட்டுக்கொள்கிறான். பாலியல் ஈர்ப்பா, பக்தியா, அன்பா. ‘உங்கள் கை பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி இருந்த மாதிரி இல்லன்னாலும் உங்க மனசு அப்படியேதான் இருக்கு..’ என மனதிற்குள் எண்ணுகிறான். முள்ளை எடுக்க முயற்சித்தபடியேதான் இருக்கிறான். ஆனால் அது வெளிவரவில்லை. பதினைந்து நாட்களாக தொண்டையிலேயே இருப்பது முள்ளாக இருக்காது அது உன் பிரமையாக இருக்கக்கூடும் என சந்தேகம் கிளப்புகிறான் அவனது நண்பன். ரயிலில் புறப்பட தயாராக இருக்கும் அத்தையை அணைத்து கொள்ள வேண்டும் அவள் கைகளில் முத்தம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்குள் ஏற்படும் உந்துதல்களை அடக்கிக்கொள்கிறான். தொண்டையில் சிக்கிய முள் வெளிப்பார்வைக்கு தெரியாது. உள்ளே நிமிண்டி தன் இருப்பை நினைவுபடுத்தியபடியே இருக்கும். ஒருபோதும் ராஜாவால் அவனது பிரியத்தை வெளிப்படுத்த முடியாது. காமமும் அற்ற உடைமையும் கொள்ள முடியாத உறவு.

‘முள்’ கதையுடன் ஒட்டி வாசிக்க வேண்டிய கதை ‘பிள்ளைப்பூச்சி’ அது ‘முள்ளின்’ மற்றொரு சாத்தியத்தை, தொடர்ச்சியை பேசும் கதையாக வாசிக்க இயலும். ‘முள்ளில்’ அத்தையின் கையில் முத்தமிடவே தயங்குபவன் இங்கே சித்தியை அணைத்து முத்தமிடுகிறான். ‘இதுபோதும் ராஜா’ என காதோரம் முனங்குகிறாள். எல்லோருக்கும் நல்லவராக இருக்கும் சித்தப்பா சித்தியிடம் மட்டும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார். காயங்களுடன் மருத்துவமனையில் சித்தியை காண வரும் ராஜா அவளை தன்னுடனேயே வந்திருக்கும்படி கோருகிறான். அவளோ நான் மிகவும் புண்ணியம் செய்தவள் என சொல்லி அவனை ஆழமாக நோக்குகிறாள். மருத்துவமனையில் கிடக்கும் சித்தி மீண்டுவர காத்திருக்கிறான். இங்கும் அவனால் தனது அன்பை உரிமையுடன் வெளிப்படுத்த முடியாது. ‘love has no taboo’ எனும் ஒரு வரி ‘முள்’ கதையில் வருகிறது.  ‘சைக்கிள்’ கதையில் ரூபவதிக்கும் சண்முகத்திற்குமான உறவு உட்பட திருமணத்திற்கு வெளியேயான உறவை பேசும் பல கதைகளை இந்த வரியைக்கொண்டு புரிந்துகொள்ளலாம்.

கைகூடாத காதல் என்பது சாருவின் பல கதைகளில் தொடர்ந்து பேசப்படுகிறது ‘கண்மணிக்கு ஒரு கடிதம்’ ஊரைவிட்டு விலகி வந்து கலைப்பித்தில் மூழ்கி திளைத்து, அதன் விளைவாக, ஊரில் அவன் வருகைக்காக காத்திருந்த காதலிக்கு அளித்த உறுதியை மறந்துபோகிறான். காதலிக்கு தனது உணர்வை சொல்லி எழுதும் கடிதத்தையே கதையாக ஆக்கியுள்ளார். ‘என் முதல் ஆங்கில கடிதம்’ போலவே ஒரு வெளிநாட்டு காதலி இக்கதையிலும் வருகிறாள். வழமையான கதையில் சாருவின் தனித்துவம் தென்படும் புள்ளி என ஒன்றைச்சொல்லலாம் எனில் இந்த விவரிப்பை சுட்டலாம். காதலியுடன் வெகுநேரம் பேசிவிட்டு பேருந்து ஏறுபவன் அவசரத்தில் சிறுநீர் கழிக்க மறந்து அவதிக்குள்ளாவதை கடிதத்தில் நினைவு கூர்கிறான்‌ கதைசொல்லி.  ஒரு காதல் கதையில் இதை வேறு எவரும் எழுதுவார்களா  என தெரியவில்லை. ஆனால் சாருவின் கதைகளின் முக்கியமான தன்மையொன்றை நமக்கு இது அடையாளம் காட்டுகிறது. உன்னதத்துடன் அன்றாடத்தின் இக்கட்டுகளும், கீழ்மைகளும் இணை வைக்கப்படுகிறது. இதேபோல் கதைசொல்லி ஊடே வரும் இன்னொரு காதல் கதை ‘மயக்கம்.’ சாதாரணமான காதல் கதையாக வளர்ந்து இறுதியில் கதைசொல்லியின் தன்னுணர்வு குறுக்கிட்டு கதையை முடிவுக்கு கொண்டு வருகிறது. சுரேஷ்குமார் இந்திரஜித் படைப்புலகில் இத்தகைய நம்பகமற்ற, தன்னுணர்வுகொண்ட கதைசொல்லி பல கதைகளில் தோன்றுவார். இது பின் அமைப்பியல் கூருகளில் ஒன்றென எண்ணுகிறேன். காதலர்கள் மணமுடித்தபின் விவாகரத்து செய்து கொண்டதாக கதைசொல்லி காணும் கனவுடன் கதை முற்றுபெறும். பிரிவில் உயிர்த்திருக்கும் காதலை ஒரு பக்கம் சில கதைகள் பேசுகின்றன என்றால் திருமணத்தில் முடிந்த காதல் சலிப்பிலும் வெறுப்பிலும் முட்டி நிறமிழக்கிறது. ஏறத்தாழ இதேபோல் திருமணத்தில் முடியும் காதல் அதன் வசீகரத்தை இழந்து அன்றாடத்திற்குள் முடங்கிப்போன கதையை சொல்லும் மற்றொரு கதை ‘காஞ்சனா.’ இதிலும் கதைசொல்லி இடைபுகுந்து கதையின் முடிவை அசல் வாழ்வின் நிகழ்வு என சொல்லி முடித்து வைக்கிறார். காஞ்சனாவின் சகோதரிகளின் துயர் மிகுந்த திருமண வாழ்க்கைக் கதைகள் சொல்லப்படுகின்றன. அத்தனை எச்சரிக்கை சமிக்ஞைகளையும் மீறி காஞ்சனா திருமண வாழ்வை தேர்கிறாள்.  அன்பையும் சிநேகத்தையும் பற்றி நினைக்க நேரமில்லாத அன்றாட தேவைகளுக்காக வரிசையில் நிற்கும் முகமற்ற டில்லிவாசியாக ஆகிப்போகிறார்கள்.

‘காற்றில் கலந்த வார்த்தைகள்’ கடிதம் வழியாக பெண்ணின் வாழ்க்கை கதை சொல்லப்படுகிறது. இதே வடிவிலான முந்தைய கதைகளில் இருந்து  கூறுமுறையில் வேறுபடுகிறது. ஒரு கடிதம் அல்ல மாறாக குறுகிய காலத்தில் அடுத்தடுத்து எழுதப்பட்ட கடிதத் தொடர். பெருமாள் என்ன பதில் எழுதினார் என்பது வாசகர் ஊகத்திற்கு விடப்படுகிறது. சட்டென கதைசொல்லியின் குரல் இது கதை எனும் தன்னுணர்வுடன் குறுக்கிட்டு கதையை முடித்து வைக்கிறது.

இதே வரிசையில் வைக்கத்தக்க மற்றொரு கதை ‘இணை கோடுகள்’ லத்திகா எனும் மலையாளப்பெண், ரவி என காதலி தன் மகனுக்கு காதலனின் பெயரை வைப்பதென ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் இந்த கதையிலிருந்து உந்துதல் பெற்றிருக்கலாம். சூழலால் பிரிந்து சென்ற காதலர்கள் பத்தாண்டுகளுக்கு பின்னர் தற்செயலாக சந்தித்துக்கொள்கிறார்கள்.  ‘என் முதல் ஆங்கிலக் கடிதம்’ வெளிநாட்டு காதலியை பாத்திரமாக கொண்ட கதை. பிரிவே பேசுபொருள்.

3

மேலே விவாதிக்கப்பட்ட கதைகளில் ‘முள்’ ‘பிள்ளைப்பூச்சி’ தவிர பிற கதைகள் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. சாருவை எனக்கு அணுக்கமாக்கிய இன்னொரு வகையான யதார்த்த  கதைகள் நவீனத்துவ மனநிலையில் எழுதப்பட்டவை என அவற்றைச் சொல்லலாம்.

அவருடைய கதைகளில் ஒன்றின் தலைப்பு ‘கண்ணிநுண் சிறுதாம்பு’. ஒரே சமயம் மிக அண்மையிலும் மிகுந்த தொலைவிலுமாக தோற்றமளிக்கக்கூடியது. ஒரு சிறிய உறுத்தலாக என்றென்றும் நீடித்திருக்கக்கூடியது. கடித வழியில் எழுதப்பட்ட கதை. ஆனால் இன்னவருக்கு என்றில்லாமல் பொதுவான அழைப்பைத் தாங்கி வரும் கடிதம். நண்பர்கள் யாருமற்று கழிக்க நேர்ந்த ஒரு மாலைப்பொழுதைப் பற்றிய கதை. ஏறத்தாழ இதே மனநிலையை பிரதிபலிக்கும் இன்னோரு கதை  ‘பிரஸ்ஸில் இருக்கிறது’.

‘பிரஸ்ஸில் இருக்கிறது’ எண்பதுகளின் அறிவுச்சூழலையும் கலைஞனின் வறுமையையும் நெருக்கடிகளையும் பேசுகிறது. கதைசொல்லியின் வாழ்க்கை துணையான பாப்பா மிகவும் அணுசரணையானவர்.   நகரத்தில் வாழும் மத்திய வர்க்கத்தின் நெருக்கடிகளை நுணுக்கமாக சித்தரிக்கிறது. அடிக்குறிப்புகள், கடிதங்கள் என கலவையான வடிவத்தில் நகர்கிறது.

‘ஷங்கர்லால் இசைவிழா’ எனக்கு இந்த தொகுதியில் பிடித்த கதைகளில் ஒன்று. பாகிஸ்தானிய இந்துஸ்தானி இசை கலைஞர்களை கேட்பதற்காக இசைவிழாவிற்கு முன்னமே வந்து அமர்கிறான் கதைசொல்லி. கழிவறையை தேடுவது, அலுவலக சிக்கல், வெளியே கழட்டிவிட்டு வந்திருக்கும் ஷூவை எவரேனும் மாட்டிக்கொண்டு போய்விடுவார்களோ எனும் கவலை, மேடையில் வந்திருக்கும் சிறப்பு விருந்தினரின் நடத்தை என ஒவ்வொன்றாக அவனை அலைக்கழிக்கிறது. ஸலாமத் அலிகானின் இசையை கேட்காமலேயே கிளம்பிச் செல்கிறான்.

இக்கதைகளின் ஊடாக சாரு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்.  நடுத்தரவர்க்கத்துக்கு கலையும், ரசனையும், ஆசுவாசமும் உகந்தது இல்லையா?  ‘ஆனால் அத்தனை பெரிய சமுத்திரத்தைப் பார்க்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. அதில் என்னத்த ரசிக்கிறது?’ (பிரஸ்ஸில் இருக்கிறது) என கடலை காணும் போது எண்ணுகிறான். ஒரு பக்கம் வீட்டுக்கு பணம் அனுப்பியாக வேண்டிய நிர்பந்தம். இலக்கிய இதழை கொண்டுவர தன்னால ஆனதை செய்ய வேண்டும் எனும் உந்துதல். அவனுக்கு ஆசுவாசமே இல்லை‌.  ‘எக்சிஸ்டென்ஷிலியசமும் ஃபேன்ஸி பனியனும்’ நாவலின் முதல் அத்தியாயத்திலேயே இந்த முரண் சுட்டிக்காட்டப்படுகிறது. ‘நாம் நம்முடைய பழக்க வழக்கங்களில் லலிதமாக இருக்கக்கற்றுக்கொள்ள வேண்டும்… பழக்க வழக்கங்களில் லலிதமாயிருத்தல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நிலை தேவையாயிருக்கிறது.’ ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ கதையில் மேற்கத்திய சாஸ்திரிய இசை நிகழ்ச்சிக்கு சென்று நாற்றத்தோடும் சப்தத்தோடும் ரவி குசு விடுகிறான். ‘ஷங்கர்லால் இசை விழாவில்’ ஐந்தாண்டுகள் நாயாக வாழ்ந்து சமரசம் செய்துகொன்டு பின்னர் நிம்மதியாக கலைஞனாக வாழ்ந்திருக்கலாம் என எண்ணுகிறான். மேட்டுக்குடியினர் சூழ இருக்கும் இடத்தில் அவர்களை விட ரசனையில் எவ்விதத்திலும் குறைவில்லாத ஒருவனால் ஏன் கலையை ரசிக்க முடியவில்லை? அன்றாட வாழ்க்கை பாடுகளுக்கு எதிராக முட்டிமோதிக்கொண்டு இருப்பவர் கலையை நுகரவே கூடாதா? நசிந்து சாகத்தான் வேண்டுமா?

இல்லை, அப்படி நசிந்து சாகவேண்டியது இல்லை என சொல்லும் கதை ‘நடிகை சுஷ்மாவுடன் ஒரு பேட்டி.’  நேர்காணலுக்கு பிந்தைய உரையாடலின் வடிவத்தைக் கொண்டிருக்கிறது. தன்னிலையில் கதைசொல்லி எழுதினாலும் பிறருடைய கதைகளை அவர்களுடைய குரலிலேயே கதைக்குள் மற்றொரு தன்னிலை வழியாக சொல்கிறார். சீரழிக்கப்பட்ட குழந்தைப் பருவம், உடல் சந்தை, சினிமா என தன் வாழ்க்கைப் பயணத்தை சொல்கிறாள். நசிந்து சாவதற்கான எல்லா காரணங்களும் உள்ள வாழ்வு. சுஷ்மா அறிமுகமாகும்போதே அவள் சார்த்தரின் வாசகி என்றொரு குறிப்பும் கதைக்குள் வருகிறது. சார்த்தர் மனிதன் சுதந்திரமாக வாழ சபிக்கப்பட்டவன் என சொல்கிறார். தன்னியல்பாக வாழ்க்கைக்கு சாரம் என்றோ நோக்கம் என்றோ ஏதுமில்லை என்பதே இருத்தலியலின் மையம். மனிதனே வாழ்க்கைக்கான அர்த்தச் செறிவை உருவாக்கிக்கொள்கிறான். ஒவ்வொரு கணமும் அவனுக்கு முன் தேர்வுகளின் பாதைகள் ஒளிர்கின்றன. எத்தகைய புற சூழலிலும் தன் தேர்வுகளுக்கு, வாழ்க்கைக்கும் தானே பொறுப்பாகிறான்.  ரவி சூழலால் அழுத்தப்படுபவன். ஆனால் அவனைவிட பலமடங்கு அழுத்தத்தை எதிர்கொண்ட சுஷ்மா தன் வாழ்வை தானே தீர்மானித்தவளாக வருகிறாள். “பாருங்கள்… நான் என் வாழ்க்கையை இழக்க விரும்பவில்லை. எனக்கு இரண்டே இரண்டு சாய்ஸ்தான் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் கடல் அளவு இடைவெளி. ஒன்று பிஎம்டபிள்யூ காரில் பயணம் செய்வது. மற்றொன்று காலில் சாக்கைக் கட்டிக்கொண்டு உருக்கும் வெயிலில் தார்சாலையில் ரோடு போடுவது. ஒரு வாய் கஞ்சிக்கு கூட வழியில்லாத கோடானுகோடி மக்கள் ஒரு பக்கம். ஷாம்பெய்ன் பருகும் நான் ஒரு பக்கம்.” சாலையை போடும் தொழிலாளி அல்லது சாலையில் ஊர்ந்து செல்லும் காரில் அமர்ந்திருக்கும் பயனாளி இவற்றில் எதை தேர்வது? சுஷ்மா தனது தேர்வில் தெளிவாகவே உள்ளார். “உடம்பின் வலியைக் குறைக்கக்கூடிய எந்த வாழ்க்கை முறையாக இருந்தாலும் அது சரியானதுதான் இல்லையா சாரு?” எனும் கேள்வியுடன் கதை நிறைவடைகிறது. ஒன்று மக்களோடு மக்களாக நின்று, போராளியாக சாகவேண்டும் அல்லது மேலேறி வசதியாக அவர்களிடமிருந்து அந்நியப்பட்டு வாழவேண்டும் என்பதை சுஷ்மா உணர்ந்திருக்கிறாள். இரண்டுக்கும் இடையே சிக்கிக்கொள்பவர்களின் நிலையே துயரகரமானது.

இதன் தொடர்ச்சியாக ‘பாக்தாத் பேரழகி (அல்லது) ஈட்டி மிளகாய்பொடி செய்வது எப்படி?’ ‘சிக்கனம்’ ‘பின்தொடரும் நிழல்’ ‘கையருகே ஆகாயம்’ போன்ற கதைகளை வைத்து நோக்கலாம். சாருவை கொண்டாட்டவாதியாக காட்டும் கதைகள். மேட்டுக்குடியினரின் பாவனைகள், அவர்களின் அற்பத்தனங்களை கேலி செய்பவை. ஐந்து நட்சத்திர ஹோட்டல் செல்லமாக டீக்கடை என்று அழைக்கப்படுகின்றது. ‘கையருகே ஆகாயத்தின்’ ராமசாமி குளிர்கால ஃபிரான்சிற்கு அதற்குரிய ஆடைகளை கொண்டுவராமல் விமானத்தில் அளித்த போர்வையை பைக்குள் வைத்துக்கொண்டு வருகிறார். கையருகே ஆகாயம் இருந்தும் நாம் நம்மை குறுக்கிக்கொள்வதன் வேடிக்கையை சொல்கிறார். ‘பின்தொடரும் நிழல்’ கதையும் ஒருவித கட்டுப்பெட்டித்தனத்திற்கு எதிரான கதைதான். ‘சிக்கனம்’ பெரிய மனிதர்களின் விடலைத்தனத்தை சொல்வதாக வாசிக்க முடியும்.

‘வெளியிலிருந்து வந்தவன்’ கதையில் லலிதமான பழக்க வழக்கங்கள் இல்லாத சுந்தரம், மூன்றாம் மனிதனாக இருக்கிறான். நிறை போதையில் வீட்டிற்கு வருகிறான். அவனுடைய செயல் அநாகரீகமானது என்று கதைசொல்லி எண்ணவில்லை, மாறாக மனைவி ஜென்னி தன்னைப்பற்றியும் நண்பனைப் பற்றியும் என்ன எண்ணுவாளோ என்பதுதான் அவன் அச்சம். ஜென்னி பரிவுடனேயே நடந்துகொள்கிறாள்.

இக்கதைகளை வாசிக்கும் போது இவற்றில் ‘ஷங்கர்லால்’ கதையிலோ ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ கதையிலோ உள்ள இறுக்கம் இல்லை. அவற்றிலிருந்து விடுபட்ட திளைப்பின் மனநிலையை நாம் உணர முடிகிறது. விடுதலையுணர்வு என்பது ஒரு மனநிலை, ஒரு தேர்வு, பொருளியல் நிலை மட்டும் அதை தீர்மானிப்பதில்லை என்பதே இக்கதைகளின் ஊடாக நான் கண்டடைந்தது.

4

வாழ்வை மறுத்தல்- வாழ்வை கொண்டாடுதல் எனும் விவாதத்தையொட்டி நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு கதைகள் என ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்’ மற்றும் ‘உன்னத சங்கீதம்’ ஆகியவற்றை குறிப்பிடலாம். ‘நட்சத்திரங்களிடமிருந்து…’ இந்த தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்றென மதிப்பிடுவேன். தமிழ் சிறுகதை வரலாற்றில் அதற்கு இடமுண்டு என்றும் நம்புகிறேன். சிறந்த நூறுகதைகள் பட்டியலில் ‘முள்’ பலருடைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ‘முள்’ நல்ல கதைதான் எனினும் அந்த கதை சாருவின் படைப்புலகை பிரதிபலிக்கவில்லை. எனது பட்டியலில் இக்கதையே இருக்கும். கலீலியோவின் கதையுடன் தொடங்குகிறது. அவரது கண்டுபிடிப்புக்காக அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை விவரிக்கிறது. அடுத்து The book of Fuzoos (ஆண்  பதிப்பு) எனும் பழங்குடி மானுடவியல் நூலைப் பற்றி பேசுகிறது. தனது கண்டடைதலுக்காக தண்டனைக்கு உள்ளான கலிலியோ உட்பட பலருடைய அறிவியல் சாதனைக்கு நிகராக மானுடவியல் துறையில் சாதனை படைத்த நூல் என இந்நூல் இணை வைக்கப்படுகிறது. ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்’ கலிலியோவின் நூலை குறிப்பது, பிணந்தின்னிகள் ஃபுஸூக்களை குறிப்பது. நேநோ கதையிலும் குழந்தைகளை உண்ணுதல் என்பது சொல்லப்படுகிறது. இக்கதையில் ஒரு இனக்குழு எதிரிகளை உண்பவர்களாக உள்ளார்கள். ஃபுஸூக்கள் பிரேதங்களோடு வாழ்பவர்கள். அத்துடன் கலவிக்கொள்பவர்கள். உயிருடன் இருப்பவர்களை விட பிரேதங்களையே அதிகம் நேசிக்கிறார்கள். கழுத்தை நெரித்து கொன்றபிறகு பிணத்தை அப்புறப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். உயிர் பற்றிய அறிதலே இல்லை. இதற்கடுத்த குறிப்பு இவர்கள் அனைவருமே ஓவியர்கள் என்பது. விரிவாக அவர்களுடைய ஓவியங்கள் விவரிக்கப்படுகின்றன. ஈக்களை கொன்று அடுக்கி வைக்கும் சர்ச்சில் பற்றிய சித்தரிப்பு சொல்லப்படுகிறது. மூட்டை பூச்சிகளை நசுக்குவது பாலியல் இன்பத்தை அளிப்பதாக உள்ளதாக கதைசொல்லி சொல்கிறான். அழிவிலிருந்து கிளைக்கும் உயிராற்றல் என்பதை இக்கதை பேசுகிறது. மரபில் சேற்றில் கிளைத்த செந்தாமரை மிக சக்தி வாய்ந்த உருவகம். உன்னதங்களுக்காக உரமாகும் அழுகல். அழிவின் மீது, உயிரற்றவையின் மீது நமக்கிருக்கும் ஈடுபாடு குறித்து இக்கதை எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. நெக்ரோபீலியாவின் விளக்கமும், வரையறையும் நிறைய விவாதங்களை எனக்குள் ஏற்படுத்தியது. உன்னதத்தின் தவிர்க்கமுடியாத மறுபக்கம் வன்முறை, ஒளியின் இன்றியமையாத இணை இருள் எனும் நிதர்சனத்தை கூறுகிறது. அதுவே நட்சத்திரங்களிடமிருந்து செய்தி சொல்பவர்களையும் பிணந்தின்னிகளையும் இணையாக, ஒருவரை இன்னொருவரின் மறுபக்கமாக காட்டுகிறது. நெக்ரோபீலியாவிற்கும் அத்வைதத்திற்குமான உறவை கதை லேசாக தொட்டுக்காட்டுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அரவிந்தர் “As you ascent so you descent” என குறிப்பிடுகிறார். உன்னதத்தை நோக்கி நாமெடுத்தும் ஒரு அடிக்கு ஈடாக பாதாளத்திற்குள் ஓரடி இறங்கவும் செய்கிறோம் என்பது அவரது கோட்பாடு. சாருவின் ‘உன்னத சங்கீதம்; கதையையும் இந்த பின்புலத்தில் நோக்க முடியும்.

அழிவின் மீதான, உயிரற்றவையின் மீதான, கடந்தகாலத்தின் மீதான மனித குலத்தின் நாட்டத்தினை ‘நட்சத்திரங்களிடமிருந்து…’ பேசுகிறது என்றால் ‘உன்னத சங்கீதம்’ முதல் வரியிலேயே Notes on skeeing and Zen Buddhism என தொடங்குகிறது. மேற்கில் பவுத்தம் செல்வாக்கடைந்தது ஏன் என யோசிக்கும்போது இருத்தலியலில் இருந்து ஒரு சிறிய தாவலில் பவுத்தத்தை எட்டிவிட முடியும் என எனக்கு ஒரு எண்ணம். இரண்டுமே தன் வாழ்க்கைக்கும் செயலுக்கும் பொறுப்பேற்கச்சொல்லுகிறது.  ஜென் நிகழ்காலத்தை மட்டும் நம்புவது, அதை மட்டுமே கருத்தில் கொள்வது. கடந்தகாலம் என ஒன்று இல்லாததால் குற்ற உணர்வு என்பதும் இல்லாதது. அடுத்த குறிப்பு கஸன்ஸாகிசை பற்றியது. ‘ஜோர்பா’ வாழ்வை கொண்டாடுபவன். கடவுள் இருக்கிறாரா எனும் கேள்விக்கு குயில்கள் பாடுகின்றன என்பது பதிலாக வருகிறது. கடவுளின் இருப்பிற்கு சாட்சியம் அழகும் எழிலும் உன்னதமும் தான். அல்லது உன்னதமிருக்கும்போது கடவுள் இருக்கிறாரா எனும் கேள்விக்கே பொருளில்லை. வேறு இடங்களில் கடவுள் எப்படி எதிர்கொள்ளப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுளற்ற உலகில் வாழ்வதால் கதாப்பாத்திரங்களை உருவாக்க முடியவில்லை என்று சொல்கிறது. (ஜீரோ டிகிரி). ‘கடவுள் பெயரை உச்சரிப்பதில்லை. கடவுள் இல்லை என்று தெரிந்துபோனதால் பயமாயிருக்கிறது.’ (பிரஸ்ஸில் இருக்கிறது). இவை இருத்தலியலின் நிலைப்பாடுகளும் கூட. ஆனால் இத்தகைய தீர்மானம் ‘உன்னத சங்கீதத்தில்’ இல்லை.

குயில் சங்கீதம் ஆன்ம விடுதலைக்கான அழைப்பாக அந்த பிக்குவிற்கு தோன்றுகிறது. அதே குயிலோசை டாக்டர் ஜோன்ஸுக்கு கலவியின் போகச் சிலிர்ப்பை உணர்த்துகிறது. சோபினும், வாக்னரும் அளிக்கும் உன்னத சங்கீதம் கதைசொல்லிக்கு பாலியல் உணர்வெழுச்சியை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ தாந்த்ரீக உபாசனை போல கதை நிறைவடைகிறது.  தாந்த்ரீகம் சங்கர அத்வைதம் போல உடலை மறுக்கவில்லை.

‘ஜீரோ டிகிரியில்’ பூஜ்ஜியத்தை அனைத்தையும் ஈனும் யோனியாகவும், அனைத்தும் சென்றடங்கும் சுழியமுமாக உருவகப்படுத்தியுள்ளார்.  ‘நட்சத்திரங்களிடமிருந்து…’ கதையில் ஈழச்சி மனித இனத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு குறித்து சொல்லும் பதிலை இங்கே நினைவுகூறலாம் “பூஜ்யமும் கடவுளும். இரண்டுமே இல்லாதது. இல்லாத ஒன்றை கண்டு பிடிப்பதுதான் கண்டுபிடிப்புகளின் சிகரம் என்று சொல்ல முடியும்.”

5

சார்த்தரின் ‘இருத்தலியல்’ சாருவின் கதைகளுக்குரிய மெய்யியல் பின்புலத்தை அளிப்பதாகும். ‘என் முதல் ஆங்கில கடிதம்’ கதையில்  பார்பராவிற்கும் கதைசொல்லிக்கும் இடையேயான உரையாடல் மிக முக்கியமானது. மானுடவியல் ஆய்வாளராக வரும் பார்பராவின் பார்வையிலிருந்து இந்திய சமூகத்தின் மீதான விமர்சனங்களை முன்வைக்கப்படுகின்றன. அறிவுஜீவிகளின் போலித்தனம் பற்றிய விமர்சன நோக்கு சாருவின் கதைகளில் தொடர்த்து இடம்பெறுவது.  ஒரு எதிர்கலாச்சார நிகழ்வில் பெருமளவில் மாட்டுகறியை குப்பையில் கிடப்பதை கதைசொல்லி கவனிக்கிறான். மாட்டுக்கறி உண்பது எதிர்கலாச்சார செயல்பாடா என்றொரு கேள்வியை பார்பரா எழுப்புகிறாள். இந்திய சூழலில் சைவ உணவு உண்பதே எதிர்கலாச்சாரமாக இருக்க முடியும் எனும் பார்வையை முன்வைக்கிறாள். உண்மையில் எதிர்கலாச்சாரமும் கூட ஸ்தாபனம் அனுமதிக்கும் குரல் மட்டும்தானா? இந்த கேள்வியை அவருடைய வேறு இரண்டு கதைகளை கொண்டு விவாதிக்கலாம்.

‘கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது’ கதையில் வரும் மிஸ்ரா அவனது தோழி என எக்சிஸ்டென்ஷியல் நாவலில் சில தொடர்ச்சிகளை காண இயலும். வெகுமக்கள் போக்கு சில சமன்பாடுகளால் ஆனதென்றால் அதன் மீதான அறிவுஜீவிகளின் விமர்சனம் தேய்வழக்குகளால் ஆனதென்பதை சுட்டிக்காட்டித் தொடங்குகிறது. நகுலனை நிராகரிக்கிறான். ‘தஸ்தேயேவ்ஸ்கியில் காணும் விறுவிறுப்பு எனக்கு எம்.ஜி.ஆர் படங்களிலும் கிடைக்கிறது’ என சொல்கிறான். தர வேற்றுமையை அங்கீகரிக்க மறுக்கிறான். சார்த்தர் ‘ஆத்தென்டிசிடி’ என குறிப்பது தனக்கு தானே உண்மையகவும் நம்பகமாகவும், முரணற்றுமிருப்பது. சிற்றிதழ் அறிவு சூழலின் போலிதனங்களை இந்த கோணத்திலிருந்து விமர்சிக்கிறது கதை. ரவியின் டீ குடிக்கும் பாடைப்பற்றிய கதை குறித்து கதைசொல்லி எழுதுகிறார் ‘டேய் பனாதைப் பயலே.. பசித்தால் போய் திருடு. இல்லாவிட்டால் குப்பி கொடு. ஏன் பயமாக இருக்கிறதா? வெட்கமாக இருக்கிறதா? அப்படியானால் நீ உயிரோடு இருக்க லாயக்கில்லை. செத்து ஒழி.’ சார்த்தரின் கூற்று ஏறத்தாழ இதுதான்.  வெகு மக்கள் பண்பாட்டின் பிரதிநிதியாக கிரிக்கெட்டை விதந்தோதி அதற்கு எதிராக சிற்றிதழ் மரபை நிறுத்தி அதை நம்பகமற்றது என விமர்சிக்கிறார். இறுதி பத்தி வரை தன்னிலையில் அறிவுஜீவிகளின் மீதான விமர்சனமாக வெகுமக்கள் பண்பாட்டை கொண்டாடுவதாக  செல்லும் கதை சட்டேன திரும்புகிறது. இறுதி பத்தியில் படர்கையில்  மாறி வெகுமக்கள் பண்பாட்டின் மீதான விமர்சனமாக பரிணாமம் கொள்கிறது. அவன் கும்பல் வன்முறையில் ஈடுபட்டு கையில் அகப்படும் எவனுடைய விரையையோ பிடித்து இழுக்கிறான். சுயத்தை இழந்து திரளில் முழுமையாக முழ்குகிறான். திரளில் கலவாமல், அதன் வன்முறையில் திளைக்காமல் நம்மால் இருக்க முடியுமா? இலக்கியமும் கலையும் கும்பலில் நம் சுயத்தை இழக்காமல் நம்மை நாம் மீட்டுக்கொள்ள முடியும் எனும் உறுதியை நமக்கு அளிக்குமா? தெரியவில்லை.

‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ முனியாண்டியின் கதைகளின் மீதான விமர்சனத்திற்கு பதில் சொல்லத்தொடங்குகிறது. நிறுத்தக்குறி இல்லாமல் கட்டற்று பாயும் கதை. கதை திருடப்பட்டது, வாழ்ந்து பெற்ற அனுபவமில்லை, யாரெல்லாம் இலக்கியவாதி எனும் விவாதத்திற்கான பதில், பாலியல் எழுத்தா போன்ற விமர்சனங்களை கதை எதிர்கொண்டு நகர்கிறது. பிக்கு என புரிந்துகொள்ளப்படும் மொட்டைதலை ஃபூக்கோ, கதை முடியாமல் இருக்க வேண்டும் என கலவியை பாதியில் நிறுத்தியதற்காக எழுத்தாளனை நிந்திக்கும் கதாபாத்திரம் என முனியாண்டி சந்நதம் கொண்டவன் போல் கட்டற்று பெருகுகிறான்.  மனித மனத்தை கர்நாடக முரசு புரிந்துகொண்ட அளவிற்கு கூட சிறுபத்திரிக்கைகள் புரிந்துகொண்டதில்லை என சொல்கிறது. சார்த்தர் சொன்னது போல் கும்பல் கலாச்சாரம் மற்றும் புத்திஜீவிகளின் கலாச்சார நடவடிக்கையின் மறைமுக வன்முறை என இரண்டு அமைப்புகளுமே தகர்க்கப்பட வேண்டியவை என கருதுவதாக சொல்கிறது.

ஏறத்தாழ ‘கிரிக்கெட்டை முன்வைத்து’ கதையைப்போலவே சிற்றிதழ் சூழலின் மீதான விமர்சனமாக பயணிக்கிறது. ஆனால் ‘கிரிக்கெட்’ கதையில் கதைசொல்லியின் குரல் வெகுமக்கள் தரப்பிலிருந்து, தன்னை முட்டாள் என பிரகடனப்படுத்திக்கொண்டே பேசுகிறது. இக்கதையில் வெகுமக்கள் பண்பாட்டையும், ஸ்தாபனத்தின் குரலாக ஒலிக்கும் சிற்றிதழ் பண்பாட்டையும் ஒருசேர நிராகரிக்கிறது. ஆகவேதான் சிற்றிதழின் போலித்தனங்கள் ஏதுமற்ற ‘கர்நாடக முரசு’ எனும் போர்னோ இதழ் முன்வைக்கப்படுகிறது. கர்நாடக முரசும் சிற்றிதழ் போலவே அதிகம் பேரால் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் கர்நாடக முரசுக்கு இருக்கும் நம்பகத்தன்மையும் முக்கியத்துவமும் சிற்றிதழுக்கு இல்லை என வாதிடுகிறது. கர்நாடக முரசு கதைசொல்லி தகர்க்க விரும்பும் இரண்டு பண்பாட்டுக்கும் மாறான வெளியைக் குறிக்கிறது.  ஜீரோ டிகிரி நாவலில் இருந்து ஒரு இடத்தை இந்த விவாதத்திற்கு மேற்கோள் காட்ட வேண்டும். முனியாண்டியின் ‘டெலிபோன்’ நாவலின் சரச உரையாடல்கள் ஒருபக்கம் உள்ளது. இதில் மறுபக்கம் முனியாண்டியை அறிந்துகொண்ட வாசுகி அவனுடன் அதே விளையாட்டை இயைந்து விளையாடுகிறாள். அவளுடைய கூற்றாக வரும் ஒரு அத்தியாயம் வழியாக மொத்த ஜீரோ டிகிரி நாவலும் தலைகீழாக்கம் பெறுகிறது. ‘உண்மையில் பார்த்தால் எந்தச் சமூக மதிப்பீடுகளை அவன் மறுக்கிறானோ அதே சமூக மதிப்பீடுகளைத்தான் அவன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்… அவன் பேசும் எதிர்க் கலாச்சாரத்தையும் கலாச்சாரமானது உப கலாச்சாரமாக உள்வாங்கிக்கொண்டுவிடவில்லையா. இது ஏன் அவனுக்கு தெரியவில்லை.’  எனினும் பழுப்புநிற பக்கங்கள் போன்ற ஆக்கம் வழியாக சிற்றிதழ் மரபின் மீதான அவரது விமர்சன பார்வை மாற்றமடைந்துள்ளதாக உணர்கிறேன்.

6

அரசியல், சாதி ஆகியவை முக்கியமான பேசுபொருளாக விளங்கிய கதைகள் என சாருவின் சில கதைகளை சுட்டலாம். ‘சிதைவு’ அமைப்புகளும் லட்சியங்களும் சிதைந்துபோவதைப் பற்றிய கதை. சார்த்தர் தன்னை பொதுவுடைமை சாய்வுகொண்டவராக அறிவித்துக்கொண்டாலும் அவர் பொதுவுடைமை எனும்  அமைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்க மறுத்தார். மருத்துவத்தில் தேர்ச்சியடைந்த ஒருவனை இயக்கப்பணிக்கு தோழர்கள் வரவேற்றபோது நீ மருத்துவனாக கிராம மக்களுக்கு இதைவிட மேலான தொண்டை ஆற்ற முடியும் என அறிவுறுத்துகிறான் கதைசொல்லி. மக்கள் நலனுக்கு முன்நிற்பதாக கூறிக்கொள்ளும் முற்போக்கு இயக்கங்களுக்குள் பாலியல் ஒடுக்குமுறையும் ஒழுக்கவியல் சிக்கல்களும் உள்ள முரணைப்பற்றி சொல்கிறது இக்கதை. ஒரு இயக்கத்திற்குள் தனி மனிதனின் இடமென்ன என்பதை கேள்வி கேட்கிறது.

‘உடல்’ எனக்கு ‘புதிய நந்தனின்’ பேசுபொருளை நினைவுறுத்தியது. ஒத்த பொருளியல் வசதிகள் கொண்ட ஆனால் வெவ்வேறு சாதிகளை சேர்ந்த நண்பர்கள் முனியனும் கலைச்செல்வனும்.  முனியனின் கடிதமாக கதை விரிகிறது. தொழில்மயமாதல் எனும் பொது எதிரிக்கு எதிராக கிராமத்தினர் ஒன்று திரள்கிறார்கள். எனினும் அந்த ஒற்றுமையின் பொருள் சாதி அடுக்குகளுக்கு இடையேயான வேற்றுமை ஒழிந்தது என்பதல்ல. இந்திய சமூகத்தின் முரண்பாடுகளை நுட்பமாக சித்தரிக்கிறது. மேல்சாதியைச் சேர்ந்த கலைச்செல்வன் கீழ் சாதியினருக்கு சிரட்டையில் தேநீர் வழங்கப்படுவதைக் கண்டு கொதிக்கிறான். அவன் அனுபவிக்கும் வதை ஜீரோ டிகிரியில் தாயுமானவன் சிறையில் செய்யும் வதையை நினைவுபடுத்துகிறது. கிராமம் என்பது சினிமாவில் காட்டப்படும் சிலுசிலுப்புகள் கொண்டதல்ல என்பதை நகரவாசிகளுக்கு உணர்த்தும் நோக்கில் கடிதம் எழுதியதாக கதை முடிகிறது. உயிருடனிருக்கும்போதே ‘உடலானவன்’  கலைச்செல்வன்.

டி. தர்மராஜ் எழுதிய ‘நான் ஏன் தலித்தும் அல்ல’ தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையில் மாட்டுக்கறி உண்பதற்கும் அதை சமையலறையில் சமைப்பதற்கும் இடையேயான முரண்பாடை  சுட்டிக்காட்டுவார். இதற்கு முன்னோடி என்பது பார்த்தா சாட்டர்ஜி காலனியத்தைப் பற்றி விவாதிக்கும் ‘உள்ளே’ ‘வெளியே’ கோட்பாடு என சொல்லலாம். காலனியத்தை எதிர்க்கும்போது கூட அதன் அரசதன்மையை வெளியே வைத்துக்கொண்டு உள்ளே இந்திய பண்பாடை, ஆன்மீகத்தை காக்க வேண்டும் என சொல்வது. ‘உள்முகம்’ கதையை ‘உடல்’ கதையுடன் சேர்த்து வாசிக்கலாம். அழிசோடையும் பெருமாள்சாமியும் ஏறத்தாழ ஒரே பொருளியல் நிலையில் உள்ள வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள்.  இன்னும் சொல்வதானால் பெருமாள் சாமி சாதிப்படிநிலையில் அழிசோடையைக் காட்டிலும் மேலென்றாலும் பொருளியல் ரீதியாக அவனைவிட ஏழைதான். பன்றிக்கறி மட்டுமே அவர்களுக்கு இடையேயான வேறுபாடு. பன்றிக்கறி உண்பவன் என்பதாலேயே பெருமாள்சாமியால் பலமுறை கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளான் அழிசோடை. ஆனால் அவன் உண்மையை அறியும்போது பெருமாள்சாமியை எண்ணி பரிதாபப்படுகிறான். உள்ளேயோரு முகமும் வெளியேயொரு முகமுமாக மனிதர்களின் கபடமும் முரண்பாடும் பேசுபொருளாகிறது. சாதித்தூய்மை என்பது எதனால் தீர்மானிக்கப்படுகிறது என்றொரு கேள்வி எழுகிறது.

‘அவ்வா’ சாருவின் சிறந்த கதைகளில் ஒன்று. கதை நகரத்து தெருநாய் தொல்லையைப்  பற்றிய கதையாக தொடங்கி அவ்வாவைப் பற்றிய நினைவலையாக உருமாறுகிறது. நாய்களின் மீது வெந்நீரை ஊற்றும் குரூரத்திற்கு பின் அவ்வாவின் நினைவுகளுக்குள் செல்கிறான் பின்னர் நாய்க்குட்டியை அரவணைத்துக்கொள்ளும்  இடத்தில் கதை நிறைவடைகிறது. அவ்வாவின் நினைவுகள் அவனுக்கு என்ன அளித்தது? இந்திய தாய் தெய்வங்களுக்கு இரண்டு முரண்பட்ட நிலைகள் உண்டு. அரவணைக்கும் அன்னை, அழிக்கும் உக்கிரம். சிஷ்ட பரிபாலனம், துஷ்ட நிக்கிரஹம். ஒருவகையில் இயற்கையை அன்னை வடிவமாக கண்டு அதிலிருந்து நாம் கண்டடைந்த தரிசனம் என சொல்லலாம். அவ்வாவும் இதே வார்ப்பில் உருவானவள்தான். பன்றிகளை வளர்க்கும் தொம்பக்குடியில் இருந்தபடி பிள்ளைகளை ஒற்றையாளாக வளர்கிறாள். அவள் வளர்த்த பன்றிகள் அவளுடைய சொத்து. அதை அழித்த காட்டூர் கந்தன் எனும் உள்ளூர் சண்டியரின் மீது வெந்நீர் ஊற்றுகிறாள். தொம்பக்குடியிலிருந்து அய்யங்கார் பெண்ணை மணந்த கதைசொல்லியின் மனவோட்டம் எனக்கு ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகள்’ கதையின் காப்பானை நினைவுபடுத்தியது. பீபத்சம் காவிய ரசங்களில் ஒன்று. சாரு தனது படைப்புகளில் தொடர்ந்து பீபத்ஸத்தை கையாண்டு வருகிறார். சார்த்தரின் நாசியா நாவலைப் பற்றி சொல்லும்போது அதில் வரும் ‘ஓங்கரித்தல்’ மனித வாழ்க்கையின் மீது ஒட்டுமொத்தமாக எழும் ஓங்கரிப்பு என விமர்சகர்கள் சொல்கிறார்கள். லலிதமும் பீபத்சமும் இரு முனைகள் என கொண்டால் அவை எப்படி வரையறை செய்யப்படுகின்றன என்பதை நோக்கியே சாரு கேள்வி எழுப்புகிறார். அவந்திகாவிற்கு தேநீர் அளித்துவிட்டு கதைசொல்லி நோஞ்சான் நாயொன்று காய்ந்த மனிதப்பீயை தின்பதை விவரிக்கிறார். “பாரேன் முறுக்கு சாப்பிடுவதை போல அந்த பீஸை ‘நறுக் முறுக்னு. சாப்பிடுது. அருவெறுத்து வாந்தியெடுக்கிறாள்.  “வாந்தியெடுத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த அவந்திகாவிடம் இதயெல்லாம் சொல்ல நினைத்தேன். ‘நீ அவ்வா மாதிரி பீ அள்ளியிருந்தால் என்ன ஆகியிருப்பாய் அவந்திகா? அவந்திகா எனக்காக பெங்களூர் போர்க் சமைத்துத் தருகிறாள். மிக ருசியாக, ஐந்து நட்சத்திர ஓட்டலின் செஃப் போல. நன்றி. ஆனால், நான் இருபது வயதுவரை மனிதப்பீயை மட்டுமே உணவாக கொண்ட கருப்பு பன்றிகளையே சாப்பிட்டு வளர்ந்தவன் என்று உனக்குத் தெரியுமா? அதையெல்லாம் பேச ஆரம்பித்தாலே வேண்டாம் பழசை விடு என்பாள்.” பீபத்சமும் லலிதமும் ஒன்றின் இருபக்கங்கள். ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. சாரு எழுதும் பீபத்சம் இந்த உண்மையை உணர்த்தத்தான் என எனக்கு தோன்றுகிறது.

7

அர்த்தமற்றது அல்லது அர்த்தத்தை ரத்து செய்வது என்பது பிரக்ஞைப் பூர்வமான தேர்வு, ஒரு நிலைப்பாடு, அறைகூவல். பிழைக்கும் பாணிக்கும் இடையேயான வேறுபாடென்பது பிரக்ஞைப்பூர்வமான தேர்வா இல்லையா என்பது  தான். நம்மை மீறி, நாமறியாமல் நிகழும்போது பிழை, விழிப்புணர்வுடன் கூடிய நமது தேர்வாக இருக்கும்போது அது பாணி.

சாருவின் சிதறிய கட்டற்ற வடிவம் கொண்ட கதைகளில் ஒழுங்கையும் சீர்மையும் தேடிச்சலிக்க வேண்டியதில்லை. வாசகனாக அவற்றை முழுமையாக உள்வாங்கிக்கொண்டேனா என எனக்குச்சொல்ல தெரியவில்லை. ஆனால் சொற்களில் ஒரு வித லாகிரித்தன்மை கூடி விறுவிறுவென்று இருந்தது. ‘The Joker Was here’  வில்லியம் பர்ரோஸின் வாழ்க்கைக்குறிப்பு வருகிறது. The main threat to existentialism is non availability of good quality condoms எனும் வரியை எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சிபனியனும் நாவலில் பயன்படுத்தியிருப்பார். அது சார்த்தரின் மேற்கோள் என நினைவு. அமைப்பியல் மற்றொரு எதிரி, இவையிரண்டும் ஒன்று என போகும் விவாதமெல்லாம் ஒருவித கட்டற்ற ஓட்டம். ‘கற்பு என்ற வார்தையைக் கேட்டாலே எனக்குப் பெரியதொரு குசு வருவது வழக்கமென்றாலும்..’ என பல இடங்களில் கூர்மையான பகடி வெளிப்படும். ‘ஆக நாய் வண்டி நாய்களைப் பிடிப்பதற்கென்று இல்லாமல், நாய்களின் எக்ஸ்கர்ஷனுக்குத்தான் பயன்பட்டு வந்தது’ (நாகமணி) சாருவுக்கு எல்லா சமயங்களிலும் துடியேறுவதில்லை. ஆனால் அப்போது வெளிப்படும் எழுத்து கட்டற்று பயணப்படுவது. ‘நேநோ’ எழுத்தாளரின் மரணம், கதை மாந்தர்களின் தன்னிச்சை என பின் அமைப்பியல் தன்மைகளை கொண்டுள்ள கதை. கதையில் புழங்கி வரும் மொழியே முனியாண்டியை கொலை செய்துவிடுகிறது.  பாலியல் அடையாளங்களின் திடத்தன்மை சார்ந்த உரையாடல் நேநோவில் இடம்பெறுகிறது. ‘பல சமயங்களில் இந்த கோவைக்காய் சைஸ் உறுப்புதான் என் முழு வாழ்வையும் எழுத்தையும் நிர்ணயிக்கிறதோ என ஐயமாக இருக்கிறது’ என கதைசொல்லி எழுதுகிறான்.

சில அமானுட அனுபவங்கள் அவர் கதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. சாருவை சுவாரசியமான கதைசொல்லியாக அப்பகுதிகள் அவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘பிள்ளைப்பூச்சியில்’  அமுக்கு பிசாசு சார்ந்த அமானுட அனுபவம் கதையினூடாக சொல்லப்படுகிறது. ‘ரங்கையன் கோட்டை’ ‘நாகமணி’ போன்ற கதைகள் மாயத்தன்மையும் அமானுடத்தன்மையும் கொண்டவை. ரங்கையன் தென்னமேரிக்காவிற்கு பயணித்தவர். அங்கு அவனுக்கு அளிக்கப்பட்ட மாந்த்ரீக தாயத்தைக்கொண்டு சூதில் தொடர்ந்து வென்று எக்கச்சக்க சொத்தை சேர்த்து மண்ணில் புதைத்து வைத்தவன். புதையலாக பலரும் அதை தோண்டி எடுக்கிறார்கள்.

‘நாகமணி’ ஒரு பேய்க்கதை. கதைசொல்லியின் நாய் பயத்திலிருந்து தொடங்கி பேயைக் கண்ட அனுபவமும், அந்த பேயின் முன்கதைச் சுருக்கமும் சொல்லப்படுகிறது. பெண்கள் மீதான வன்முறை பலகதைகளில் தொடர்ந்து பேசுபொருளாக வருகிறது. சித்தப்பாக்கள், மாமாக்கள், தாத்தாக்கள் என அனைவரும் ஊருக்கு நல்லவர்களாகவும் வீட்டு பெண்களுக்கு மட்டும் எமனாகவும் இருக்கும் இரட்டை நிலை சித்தரிக்கப்படுகிறது.

ஜீரோ டிகிரி தமிழ் இலக்கிய வரலாற்றில் இரு தளங்களில் ஒரு முன்னோடி படைப்பு. என்றே கருதுகிறேன். மொழியிலும் வடிவத்திலும் பெரும் உடைவை ஜீரோ டிகிரி ஏற்படுத்தி இருக்கிறது.. ஜீரோ டிகிரியின் முதன்மை பலம் என்பது அது அளிக்கும் வாசிப்பின்பம்.  பொதுவாகவே வாசிப்பின்பம் அளிக்கும் ஒன்று நவீன இலக்கியமாக கருதப்படக் கூடாது என்றொரு வரையறை உண்டு. இது சிற்றிதழ் வெகுஜன இதழ் என இருவேறு துருவங்களாக இலக்கிய ஊடகம் பிரிந்து செயல்பட்டபோது தனது தனித்துவத்தை பேணுவதற்காக எடுத்துக்கொண்ட நிலைப்பாடு என்றவகையில் சரி.  இது ஒரு கறாரான அளவுகோலாக ஆகும்போது படைப்பூக்கத்திற்கே எதிரானதாகவும் ஆகிவிடுகிறது. .

இரண்டாயிரத்தின் மத்தியிலிருந்து நவீன இலக்கியத்தின் இணைய யுகம் தொடங்குகிறது.  சிற்றிதழ் வெகுஜன இதழ் எனும் ஊடக பாகுபாடு பொருளற்று போகிறது. பெரும் ஜனநாயகமயமாக்கம் நிகழ்கிறது. பல புதிய வாசகர்கள் புதிய எழுத்தாளர்கள் உருவாகி எழும்போது அவர்களுக்கான முதன்மை ஆதர்சங்களில் ஒருவராக சாரு ‘ஜீரோ டிகிரி’ வழியாக ஒரு பாதையை வகுத்து அளிக்கிறார். அகவயமான இறுகிய மொழியிலிருந்து முற்றிலும் இலகுவான ஆற்றோட்டமாக ஒழுகிசெல்லும் துள்ளல் நடை. இலக்கிய எழுத்தின் வரையறையை நெகிழ்த்தி பல்வேறு சாத்தியக்கூறுகளை நிகழ்த்திக் காட்டியது அவருடைய முக்கியமான பங்களிப்பு. சூர்யா, ரவி, முனியாண்டி, ராஜா என பல கதைசொல்லிகள் வழியாக வெளிப்படும் கதைகளின் வழியாக கலகக்காரர் மற்றும் கலகமற்ற சாமானியர் என இரண்டு முரண்பட்ட தளங்களில் அவர் கதைகளில் கதைசொல்லி வெளிப்படுவதை கவனிக்கலாம். இந்த இருமையை சிறுகதைகளிலும் நாம் காண முடிகிறது. ரவிக்கும் முணியாண்டிக்குமான வேறுபாடு அது. நான் இணைய தலைமுறையில் எழுத வந்தவன். ஏதோ ஒருவகையில் ‘விஷக் கிணறு’ போன்ற ஒரு கதையை நான் எழுத சாருவின் தாக்கம் இருக்கும் என்றே நம்புகிறேன். விஷ்ணுபுரம் விருது பெறும் சாருவுக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி
அடுத்த கட்டுரைபனிநிலங்களில்- 1