கமலதேவியின் இரண்டு சிறுகதைகள்

கமலதேவி – தமிழ் விக்கி

நவீன இலக்கியச் சிறுகதை உலகில் முக்கியமான இடத்தை வகித்துக் கொண்டிருப்பவர் கமலதேவி. இதுவரை ”சக்யை, குருதியுறவு, கடுவழித்துணை, கடல்” என நான்கு சிறுகதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டிருக்கிறார். சிறிது காலம் அவர் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் பணியாற்றி உள்ளார். அக்குழந்தைகளுக்குக் கற்பிக்க நிறையப் பொறுமை வேண்டும். அத்துடன் அவர்களிடம் அன்பு காட்டி, அன்பைத் திரும்பப் பெற வேண்டும். அதனால்தானோ என்னவோ கமலதேவியின் சிறுகதைகளில் பெரும்பாலும் அன்பே மையப் பொருளாகி இருக்கிறது.

“அன்பிற்கான ஏக்கமும், அன்பின் ஆதிக்கம் மீதான அவநம்பிக்கையும் அவரை அலைக்கழிக்கும் கேள்வி. இக்கேள்வியை வெவ்வேறு உறவு நிலைகளின் வெளிச்சத்தில் பரிசீலனை செய்து பார்க்கிறார்” என்று எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் கோடிட்டுக் காட்டுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

அப்படிப் பரிசீலனை செய்து பார்க்கும் இரண்டு சிறுகதைகளாக ”கண்ணாடிப் பரப்பு” மற்றும் ”சிலுவைப் பாதை” என்னும் ஆகியவர்றைக் காணலாம்.

அண்மையில் [28-8-22] சொல்வனம் இணைய இதழில் கமலதேவி எழுதி உள்ள சிறுகதை ”கண்ணாடிப் பரப்பு” ஒரு சிறுகதைக்கான வடிவமைப்புக்குக் கச்சிதமாகப் பொருந்தும் கதை இது. அத்துடன் எழுத்தாளரின் எழுத்து வல்லமையைக் காட்டும் கதை இது. கதைசொல்லிக்குப் பெயர் இல்லை. அவருடைய எண்ணம் வழியாகத்தான் கதை முழுதும் சொல்லப்பட்டுள்ளது.

கதைசொல்லி ஒரு பெண். கதையில் அவளும் ஒரு மீனும்தான் பாத்திரங்கள். வேறு யாரும் இல்லை. அவளின் மாடிவீட்டில் இருப்பவர்கள் மீன் வளர்க்கிறார்கள். அவர்கள் ஒருமாதம் வெளியூர் செல்வதால் அவளிடம் மீனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு செல்கிறார்கள்.  தொடக்கத்திலேயே அவளுக்கு மீன்தொட்டி பிடிக்கவில்லை என்று கதாசிரியர் மறைமுகமாகக் காட்டுகிறார்.

“இதையெல்லாமா திருமணப் பரிசாகக் கொடுப்பார்கள்” என்று அவள் நினைக்கிறாள். மேலும் “எங்கள் ஊரில் மீனைத் தின்பதோடு சரி” என்ற அவளின் நினைப்பு அவளுக்கு இந்த வளர்ப்பு பிடிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. ”நாயை வளர்க்கலாம். அதுவும் வீட்டுத் திண்ணையோடு சரி என்பது அவளின் எண்ணம். ”இந்த மீன்தொட்டி; அதையும் வைப்பதற்கு வாஸ்து பார்க்கவேண்டுமாம்” என்றெல்லாம் அவள் நினைப்பதைக் கதாசிரியர் காட்டுவதிலிருந்து அவளின் விருப்பமின்மையை உணர்த்துகிறார்.

அந்த மீனுக்கு எப்பொழுது உணவு போட வேண்டும் எப்பொழுது தண்ணீர் மாற்ற வேண்டும் என்று அதன் உரிமையாளரை நான்கு முறைகள் கைப்பேசியில் நச்சரிக்க அவர்கள் ”உன்னால் முடிந்தபோது போய்ப்பார்” என்று சொல்லிவிடுகிறார்கள். அவள் தான் உணவு உண்ணும்போது நினைவுக்கு வந்து அம்மீனுக்கும் உணவு போடுகிறாள். தண்ணீர் மாற்ற மட்டும் அவளுக்கு அச்சம்.

மாடிவீட்டு மாப்பிள்ளை தண்ணீர் மாற்றும்போதுதான் ஜோடியாக இருந்த ஆரஞ்சு வண்ண மீன்களில் ஒன்று இறந்துவிட்டது. மீதமுள்ள மீன்தான் இப்பொழுது அவளிடம் தரப்பட்டது. தன் துணை மீன் இறந்தது இருக்கும் மீனுக்குத் தெரியுமா என்றும், தொட்டியில் இருக்கும் வெள்ளை மீன்கள் அதைச்சேர்த்துக் கொள்ளுமா என்றெல்லாம் எண்ணுவதிலிருந்து அவள் மனத்தின் ஆழத்தில் இருக்கும் உணர்வு காட்டப்படுகிறது

சிறிது சிறிதாக அவள் மீனுடன் ஐக்கியமாகிவிடுவதை மெல்ல மெல்ல நமக்கு உணர்த்துகிறார் கமலதேவி. சிறிய அளவு தண்ணீர் வைத்து அத்துடன் மீனை எடுத்து வேறு தண்ணீர் மாற்றக் கற்றுக் கொள்கிறாள், மீனின் உருவத்தையும் அதன் கண்களைச் சுற்றி இருக்கும் பசும் வண்ணத்தையும் ரசிக்கிறாள். அதன் உருவத்தைக் குறிப்பிடும்போது அவள் வழியாகக் கமலதேவி, “ஆள்காட்டி விரலின் நுனியிலிருந்து முதல்ரேகை வரையிலான அளவுள்ளது” என்று எழுதுவது அவள் எந்த அளவுக்கு அம்மீனுடன் ஒன்றிவிட்டாள் என்பதைக் காட்டுகிறது.

ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வோர் இயல்பு இயற்கையாக அமைந்துள்ளது. மீன்தொட்டிக்குள் மீன் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காமல் அலைந்து கொண்டே இருக்கும். இதுதான் மீனின்தன்மை என்று கதாசிரியர் எழுதுகிறார். மீனை மீனாக்குவது அந்த நிலைகொள்ளாத தன்மை என்று எழுதியிருப்பது மிகவும் பொருத்தம்.

மீன்தொட்டிக்குப் பக்கத்திலேயே அவள் உறங்கும் அளவுக்கு அத்துடன் தன்னை மீறி அன்பு காட்டி ஒன்றிப்போய் விடுகிறாள். இறுதியில் மீனின் உரிமையாளர்களான வீட்டுக்காரர்கள் வந்து விடுகிறார்கள். வந்து கதவைத் தட்டுகிறார்கள். அவள் இப்பொழுது மீன்தொட்டி அருகில் செல்கிறாள். அந்த மீன் கண்ணாடிப் பரப்பிற்கு வரும்போது அவள் அப்பரப்பின் மீது முத்தமிடுகிறாள்.

அவள் கதவைத் திறக்கப் போகிறாள். ”நான் பார்வையை விலக்கி வெளியே வரும்போது முத்தமிட்ட பரப்பைக் குட்டி மீன் முட்டி மோதிக்கொண்டிருந்தது” என்று கதை முடிகிறது. அவள் காட்டிய அன்பிற்குப் பதிலாக அதுவும் அன்பு காட்டுகிறது என்று நாம் எண்ண முடிகிறது “நாய்க்குட்டியைத் தொட்டு விடை பெறலாம்; கூண்டுப் பறவைகளிடம் உதட்டைக் குவித்து ஒலி எழுப்பி ஏதாவது சேட்டை செய்து விடை பெறாலாம். மீன்களிடன் என்ன செய்வது” என்று முதலில் எண்ணிக் கொண்டிருந்த அவள் அந்த மீனுடன் தான் ஒன்றியவுடன் முத்தமிடும் அளவிற்கு மாறிவிடுகிறாள்.

இதில் காட்டப்படும் கண்ணாடிப் பரப்பு என்பது நம் மனம். ஏற்கனவே எடுத்த முடிவின் கீழ் நம் மனம் செயல்படுகிறது. ஒரு கண்ணாடிப்பரப்பாக அது இருக்கிறது. அது தன் பார்வையை இப்பொழுது மாற்றிக்கொள்கிறது. அதற்குக் கண்ணாடிப்பரப்பு உதவுகிறது.

“நிலவொளி தெளிவாக சரிந்து ஒளி உருண்டைகளாகத் தரையில் விழுந்தது” என்பது கதையில் இருக்கும் கவித்துவமான வரியாகும்

”அன்பு என்பது இருவழிப்பாதையாகும். நாம் ஒருவர் மீது செலுத்தும் அன்பு நமக்கு அவரிடமிருந்து திரும்பி வந்தால் நம் மனம் நிறைவு பெறுகிறது. வராவிடினும் கவலைப் படாதே. அதற்காக நீ அன்பு காட்டுவதை விட்டுவிடாதே” என்று கூறுகிறது கமலதேவி எழுதி உள்ள “சிலுவைப்பாதை” சிறுகதை. இதுவும் 8-5-22 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்ததாகும்

முசிறி நகரில் உள்ள ஓர் உண்டு உறைவிடப்பள்ளியில் சிறுகதை நடக்கிறது. இடையில் ஒரு சர்ச்சும் காட்டப்படுகிறது. விடுதியில் உணவுண்ணல், குளித்தல், உறங்கல் எல்லாமே மிகவும் கலைநயத்தோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ப்ரியா—சாந்தி என்னும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளைச் சுற்றிக் கதை பின்னப் பட்டுள்ளது. இடையில் அவர்களின் ஆசிரியை மற்றும் சர்ச்சில் பியானோ வாசிக்கும் ஒரு மாணவன் டென்னிஸ் ஆகியோர் வந்து போகிறார்கள்.

சாந்திக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவளின் பெற்றோர் எங்கோ போய்விடுகிறார்கள். அவள் திருச்சியில் கிறித்துவ மடத்தில் சேர்க்கப்படுகிறாள். அந்த இடமே அவளுக்குப் பிடிக்கவில்லை.

சாந்தி ப்ரியாவிடம், “அங்க ரொம்ப அமைதியா இருக்கும் பயமா இருக்கும். எல்லாரும் வயசானவங்க; யாருக்காவது ஒடம்பு சரியிருக்காது; யாராவது செத்துப் போவாங்க” என்று திருச்சி விடுதியைப் பற்றிக் கூறுவதிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் அத்துடன், “ரொம்பக் கஸ்டமா இருக்கும்; பாவமா இருக்கும்; அழுகையா வரும்” எனச் சொல்வதிலிருந்து சாந்தியின் உள்ளார்ந்த மனத்திலிருப்பதைக் கமலதேவி தெரிய வைக்கிறார்.

இறைவன் இசையில், நல்லவர் உள்ளத்தில், இனிமையான பேச்சில் எங்கும் குடிகொண்டுள்ளான் என்பது கதையில் உணர்த்தப்படுகிறது. ஜூலி சிஸ்டர், பியானோ வாசிக்கும் டென்னிசிடம், “நீ கை வைச்சா பியானோவில கர்த்தர் இருக்காரு” என்று சொல்கிறார். அவரே, ப்ரியாவிடம், “ஒன்னோடப் பேச்சிலக் கர்த்தர் இருக்காரு” என்ரு சொல்ல. பதிலுக்குப் ப்ரியாவோ, “சிஸ்டர், உங்களோட  சிரிப்பில் இருக்காரு” என்று கூறுகிறாள்.

விடுதியில் இருக்கும் ஓர் ஆசிரியை மாணவிகளிடம் எப்படி அன்பைக் காட்டவேண்டும் என்றும் கதை காட்டுகிறது. குளித்துவிட்டு வரும் ப்ரியாவிடம், “துண்டால முடியை நல்லாத் துவட்டணும்” என்று சொல்லி ஜூலி டீச்சர் அவளின் தலையைத் துடைத்துவிடுவதும் “ட்ரஸ் பண்றதுக்கு முன்னால பெட்டிக்கோட் ஹூக் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும் என்று கூறுவதும் ஓர் அன்னையின் அன்பைக் காட்டி நம் மனத்தை நெகிழச் செய்கிறது.

தோழிகளின் உரையாடல்கள் மூலமே கமலதேவி கதையை லாவகமாக நகர்த்துகிறார். ப்ரியாவும் மேனகாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதாவது ”பெஸ்ட் ப்ரண்ட்ஸ்”. ஆனால் ராஜி என்பவள் வந்தவுடன் மேனகா ப்ரியாவைத் தவிர்த்து விடுகிறாள். அதைப் ப்ரியாவால் தாங்க முடியவில்லை.

இருந்தாலும் மேனகாவிடம் அவள் கொண்ட அன்பு மாறவே இல்லை. மேனகாவிற்கு வயிற்று வலி வந்தவுடன் மேனகாவின் ஜட்டியைக் க்ளின் செய்வதிலிருந்து ப்ரியாதான் எல்லாம் செய்கிறாள். ஆனால் நான்கு நாள்கள் முன்னர் வந்த மேனகாவின் பிறந்த நாளுக்கு அவள் ப்ரியாவுக்குச் சாக்லெட் தரவில்லை. அது பற்றிச் சொல்லும்போது கூட அவள் கண்களில் கண்ணீர் வருகிறது.

அப்போது சாந்தி, “சிஸ்டர் இயேசுவோட பேரால எல்லார் மேலேயும் அன்பா இருங்கன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு அவளக் கண்டாலே கோவம் கோவமா வருதுன்னு சொல்கிறாள். உடனே பதில் சொல்லும் ப்ரியாவின் உள்ளம் நமக்குப் புரிகிறது. ’தூற்றாதே தூரவிடல்’ என்று நாலடியார் கூறியிருப்பதும் நினைவுக்கு வருகிறது. “அவளும் நல்லப் பொண்ணுதான், பஸ்சுல ஒரு தடவைக் கூட்டமா இருந்தப்ப எனக்கு அவ்தான் டிக்கெட் எடுத்தா. கம்பியை நல்லாப் புடிச்சுக்கோன்னு ரெண்டு தடவ சொன்னா” என்று ப்ரியா கூறுகிறாள்.

சிலுவைப் பாதை என்பது அன்பினைக் காட்டுவது. அது திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் நீ அதன் வழி போ எனச்  சொல்வது. கதையில் வரும் ப்ரியாவின் அப்பாவும் அதையே வலியுறுத்துகிறார். அவர், “ஒனக்கு மேனகாவை ரொம்பப் பிடிக்குமா? அப்படின்னா அவளைத் தொந்தரவு பண்ணாத” என்கிறார்.

இப்படிக் கதை முழுவதும் அன்பே பெரியது என்று காட்டப்படுகிறது அம்மா அப்பா இல்லாமல் அன்பிற்கு ஏங்கும் சாந்தி, ப்ரியாவிற்கு அன்பின் வலிமையைக் காட்டுவதாகக் கதை முடிகிறது. சாந்தி, ப்ர்யாவிடம் “நான் ஒனக்கு ஆட்டோகிராப் எழுதித்தரேன். நீ அதைப் பள்ளியை விட்டுப் போனபின்தான் படிக்கணும் என்று கூறிவிட்டு எழுதிக்கொண்டிருப்பதுடன் கதையை கமலதேவி நிறுத்துகிறார். சாந்தி என்ன எழுதி இருப்பாள் என்பதை நாம் மிக எளிதாக ஊகிக்க வைக்கிறார்.

உலகம் அன்பினை மறந்துவிட்டுப் பொருள்வயமாக மாறிவரும் சூழலில் அன்பினைப் பிரச்சாரமாக இல்லாமல் கலைநயத்துடன் வலியுறுத்தும் கமலதேவியின் சிறுகதைகள் நவீன இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன எனத் துணிந்து கூறலாம்.

வளவ துரையன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
முந்தைய கட்டுரைகனவு இல்லம் – கடிதம்
அடுத்த கட்டுரைசாரு நிவேதிதா – வாழ்வும் கலையும். அய்யனார் விஸ்வநாத்