கனவு இல்லம், கடிதம்

கனவு இல்லம்

குளச்சல் மு யூசுப் தமிழ் விக்கி பதிவு

அன்புள்ள ஜெயமோகன்,

கனவில்லம் குறித்த உங்கள் கட்டுரையை முன்வைத்து, முதன்முதலாக  ஒரு கடிதம் எழுதுகிறேன்.

உங்களது வாசகனாக இருந்த நான், விஷ்ணுபுரத்திற்குப் பிந்தைய  25 ஆண்டுகளாக உங்களை நண்பராகக் கருதி வருகிறேன். அருகருகில் இருந்தும் நாம் அபூர்வமாகவே சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு சந்திப்பின்போதும் நீங்கள் சொல்லும்  தகவல்களும் ஆலோசனைகளும் என்னுடைய நினைவுத் திறனைக் கடந்தும் மனதுக்குள் தங்கி நிற்கும். என்னுடைய தனிப்பட்ட சில வாழ்வியல் இடர்பாடுகள் உட்பட, சங்க இலக்கியங்களை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ததுவரை நான் மேற்கொண்ட பல நல்லவைகளின் பின்னணியிலும் உங்கள் ஆலோசனைக் கரங்கள் செயல்பட்டன என்பதை எல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டுதான் இதை எழுதுகிறேன்.

தங்கள் கட்டுரையில், அரசு கனவில்லம் வழங்கியவர்களில் கப்பல் கம்பெனிகளின் தலைமைப் பொறுப்பை வகித்து, தற்போது வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் நடத்தி வரும் நமது நண்பருக்கும், பாராளுமன்ற உறுப்பினரான தோழருக்கும் வழங்கியதை அவர்களுக்குக் குடியிருக்க உதவும் என்று நீங்கள் எழுதியதைக் கேலி செய்வதாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இவர்கள் விருதுகளுக்குத் தகுதியுள்ளவர்களே தவிர அரசு வழங்கும் இலவசங்களுக்குத்  தகுதியுள்ளவர்கள் அல்ல என்பது என்னுடைய கருத்து.

இது எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முயற்சிதானே தவிர நலிந்த எழுத்தாளர்களுக்கான உதவியல்ல என்று நீங்கள் வாதிடக்கூடும். ஏற்கனவே, எல்லா நலன்களுடனும் கௌரவமாக வாழ்கிறவர்களைத் தேடித்தேடி கௌரவப்படுத்துகிற அதே வேளையில், அதே விருதைப் பெற்று விட்டு, நீரோடைப் புறம்போக்கிலும், வாடகை வீட்டிலும், c/o முகவரியிலும், ரேஷன் அரிசியிலும் உயிர் வாழ்கிற விருதாளர்களை நீங்களும் அறிவீர்கள்.

பெரிய அளவு பொருளாதார இலாபமற்ற, கனவில்லத்திற்கு முந்தைய சாகித்திய அகாதெமி விருதைப் பெறுவதற்கே, தகுதியற்ற சில தமிழ் எழுத்தாளர்கள் என்னென்ன திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு பெற்றுக்கொண்டார்கள் என்பதும், தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளரான உங்களுக்கு அது கிடைக்காத காரணத்தையும் நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. இப்போதைய சூழலில் அதை வழங்க முன்வந்தால் நீங்கள் மறுத்து விடுவீர்கள் என்ற உண்மையை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

புகழுக்காக விஷத்தைக் குடிக்கவும் முன்வருகிற நபர்கள் வாழும் மண்ணில் இனி, விருதுடன் இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள வீடும் கிடைக்கும் என்றால் இலக்கியத் துறையில், வணிக ரீதியான தரகுப்பணிகள் மேலும் சிறந்து விளங்கும்.  சுயமரியாதையும் திறமையுமுள்ள, அரசியல் செல்வாக்கோ பணபலமோ இல்லாத, மண்சார்ந்த, வாழ்வியல் அனுபவங்களுடன்கூடிய எழுத்தாளர்கள் சாதனையாளர்களாகும் வாய்ப்புகள் குறையும். இனி, செல்வந்தர்களின், செல்வாக்குப் படைத்தவர்களின், துணைவேந்தர்களின், பேராசிரியர்களின் புழங்குதளமாக மாறப்போகிறது தமிழ் இலக்கிய உலகம். உண்மையில் இதை நீங்கள் விரும்புகிறீர்களா என்ற ஒரு கேள்வியை மட்டும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

குளச்சல் மு யூசுப்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள்

இலக்கிய விருதுகளை ஏற்பது

விருதுகள்,விடுபடல்கள் – கடிதம்

விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

விருது – கடிதங்கள்

அன்புள்ள யூசுப்,

தமிழகத்தில் நல்லெண்ணத்துடன் தொடங்கப்படும் திட்டங்கள்கூட காலப்போக்கில் திரிபடைந்து தன்னலம் நோக்கிகளின் கைகளுக்குச் செல்வது வழக்கமாக நிகழ்வது. உலகியலில் எல்லா லாபங்களுக்காகவும் முழுமூச்சாக முண்டியடித்தல், ஒரு துளிகூட விடாமல் தேற்றி எடுத்துக்கொள்ளுதல் என்பது இங்கே இயல்பான சாமர்த்தியமாகக் கருதப்படுகிறது

இப்போது சாகித்ய அக்காதமி விருதின் பணமதிப்பு இதனூடாக பலமடங்காகிவிட்டிருப்பதனால் ஊழல் பெருக்க மிகுந்த வாய்ப்பு உள்ளது. இன்று அதில் இருப்பவர்கள் ஊழலில் புழுத்த ஆளுமைகள். நடுவர்களாக வரும் பேராசிரியர்கள் எந்த எல்லைக்கும் இறங்கும் நபர்கள். ஆகவே வரும்காலத்தில் சாகித்ய அக்காதமி விருதுகளின் தரம் கீழிறங்க, கமிஷன் வியாபாரமாக அது சீரழிய எல்லா வாய்ப்புகளும் உண்டு.

ஆனால் ஒரு திட்டம் தொடங்கப்படும்போது அதற்கான நம்பிக்கையை அளிப்பதும், நல்லவற்றை எதிர்பார்ப்பதும்தான் நாம் செய்யவேண்டியது. ஆகவேதான் என் வாழ்த்துக்கள். இவ்விருது இலக்கியம் மீதான அரசின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. இது இந்திய அளவில் கவனிக்கப்படும் திட்டம் என்பதனால் முன்னோடியானதும்கூட. தமிழ்ச் சூழலிலேயே எழுத்து – இலக்கியம் என்பதற்கு பொதுமக்கள் பார்வையில் ஒரு முக்கியத்துவம் உருவாகி வரும். 

சாகித்ய அக்காதமி விருது, கலைஞர் விருது போன்றவற்றை பெற்றவர்களே இப்போது இதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அந்த அளவுகோல் இப்போதைக்கு புறவயமானதுதான். ஆனால் இந்த கனவு இல்லம் உண்மையிலேயே இது தேவைப்படும் நிலையில் உள்ள வறிய எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படவேண்டும், அல்லது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதே என் எண்ணம். அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். 

ஜெ

முந்தைய கட்டுரைவிஷக்கன்னி – வெங்கி
அடுத்த கட்டுரைமுத்தம், ஒரு கடிதம்