பனிநிலங்களில்- 5

ஹெல்சிங்கி விமானநிலையம்

இந்தப்பயணத்தில் ரவி முயற்சி எடுத்து ஒருங்கமைத்திருந்த பயணம் ஆர்ட்டிக் வட்டத்திற்குள் சென்று துருவஓளி (அரோராவை) பார்ப்பது. அது ஓர் அரிய அனுபவம் என பலர் பதிவுசெய்திருக்கின்றனர். குளிர்காலத்தின் தொடக்கத்தில் இரவில் உருவாகும் வானொளி அது. சூரியனின் ஒளி துருவம் வழியாக மறுபக்கத்தில் இருந்து கசிந்து வானில் பரவுவதனால் உருவாவது.

ஃபின்லாந்தில் ரோவநேமி (Rovaniemi) என்ற ஊரில் சாண்டா கிளாஸ் சிட்டி என்னும் சுற்றுலாநகர் உள்ளது. அங்கே சென்று ஒருநாள் தங்கி மீள்வதாகத் திட்டம். ஸ்டாக்ஹோமில் இருந்து விமானத்தில் ஹெல்சிங்கி சென்று அங்கிருந்து இன்னொரு விமானத்தில் ரோவநேமி சென்றோம்.  ஊர் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள கடினம், ராமநவமி என்று நினைத்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் நேமியை ஏந்திய பெருமாளின் ஊர் என்றும் திரித்துக்கொள்ளலாம். பனிமயப்பெருமாள் என ஏன் இருக்கக்கூடாது? பனி அந்தியில் பீதாம்பரமாக ஆகிவிடுகிறதே?

உறையத்தொடங்கிய ஆறு.

ஃபின்லாந்து மக்கள்தொகை குறைவான நாடு. நம் கண்களுக்கு பெரும்பகுதி நிலம் ஒழிந்துகிடப்பதாகத் தோன்றும். ஹெல்சிங்கிக்கு வெளியே உயிரசைவே  தென்படுவதில்லை. மக்கள் குடியிருப்பதே நகரங்களில்தான். சிற்றூர்களில் சில விவசாய இல்லங்கள். கண்ணுக்குப்படும் பெரும்பாலான இல்லங்கள் கோடைகால தங்குமிடங்கள். ஒவ்வொன்றிலும் பனிச்சறுக்கு வண்டிகள், மென்படகுகள், அவற்றை தூக்கிச் செல்லும் டிரக்குகள் நின்றன. அவை குளிரூழ்கத்தில் ஆழ்ந்திருந்தன

சில குடில்கள் குளிர்காலப் பனிச்சறுக்கு விளையாட்டுக்குரியவை. தொலைவில் மலைமடிப்புகளில் பனியால் பனிச்சறுக்குப் பாதைகளை அமைக்க தொடங்கிவிட்டிருந்தனர். வெள்ளை அங்கவஸ்திரம் போல அந்த பனிப்பாதைகள் மலைகள்மேல் தென்பட்டன.  அவற்றை உருவாக்கும் விதத்தை பின்னர் பார்த்தேன். நீரை இறைத்து வேகமாக சிதறவிடுகிறார்கள். விரிவடைதலே நீரை குளிரச்செய்யும். சூழலின் பாகை சுழியம் வெப்பநிலை அவற்றை பனிப்பொருக்குகளாக்கி படியச் செய்கிறது. 

வயல்கள் அறுவடைக்குப்பின் குளிர்காலத்துக்காக காத்து பனிப்புதர் மூடி காத்துக்கிடந்தன. வெயில் போலவே பனியும் புல்லை கருகச்செய்யும். மரங்கள் இலையுதிர்த்து வெறுமை கொண்டு நின்றன. வெண்பனி நெருப்பின் வேறொரு வடிவம் போலும். சாம்பல் நிறமான ஊமையொளி கொண்ட வானம். இலையுதிர்ந்த மரங்களின் கிளைச்சல்லிகள் வானில் நரம்புகள் போல மென்மையாக பரவியிருந்தன. வானம் ஒரு மென்சவ்வு போல அதிர்ந்துகொண்டிருந்தது என தோன்றியது. 

ஸ்டாக்ஹோமிலேயே குளிர்தான். ஆனால் ஃபின்லாந்தில்தான் கடுங்குளிரை அறிந்தோம்ஹெல்சிங்கியில் இறங்கியபோதே குளிரை உணர முடிந்தது. அதை விவரிப்பது கடினம். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. சட்டென்று ஒரு அகஅதிர்வு. லட்சரூபாயை கைமறதியாக தொலைத்துவிட்டு சட்டென்று நினைவுகூர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி.  மிகச்சிறிய விமானநிலையம். ஓரிரு விமானங்கள்தான்.வெளியே பகல்நேர வெப்பநிலையே பூஜ்யம் இருந்தது. காற்றும் வீசிக்கொண்டிருந்தமையால்  நடுக்கியெடுத்தது.

ரவி காரை எடுக்கச் சென்றார். நாங்கள் காருக்காகக் காத்திருந்தபோது வெளியே சென்றோம். கார்கள் எல்லாம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட பழங்கள் போல உறைந்து மண்ணில் ஒட்டியிருந்தன. கண்ணில்பட்ட எல்லாமே மெல்லிய பனிப்பொருக்குப் படலத்தால் மூடப்பட்டிருந்தன. அவற்றில் நம் பெயர் எழுதாமல் அப்பால் நகர்வது கடினம். வெண்பரப்பு ஒரு தாள் என தோன்றுகிறது. வெண்பரப்பு வெறுமையாக இருப்பது நம்மை தொந்தரவு செய்கிறது.

புற்களில் பனி விழுந்து அவை பனியாலான புற்களாக மாறிவிட்டிருந்தன. கண்ணாடித்துருவல்களால் ஆன உலகம். வெண்ணிறத்தாளில் எண்ணையைத் தொட்டு வரைந்தவை போல கட்டிடங்கள். ஹெல்சிங்கியே ஒரு கரைந்து மறைந்த ஓவியம். கொஞ்சம் வண்ணம் தொட்டு தீற்றித் தீற்றி மீட்டெடுத்துவிடமுடியும்.

சட்டென்று எனக்கு நம்மூர் இனிப்புச்சேவு நினைவு வந்ததுமாவுச்சீனியில் முக்கிய சேவு. நாகர்கோயிலில் சவேரியார் கோயில் விழா வரப்போகிறது. அது இனிப்புச்சேவுக்கு பிரபலம். மொத்த நகரமே மாவுச்சீனியில் முக்கிய மாபெரும் பலகாரக்கடை அலமாரி போல தோன்றியது. குளிரில் நன்றாகவே பசிக்கிறது. இந்த வெள்ளைக்காரர்கள் பெருந்தீனிக்காரர்களாக இருப்பது இதனால்தான். குளிர்காலத் தீனியை கோடையிலும் தொடர்கிறார்கள்.

கார் வந்தது. ரவி ஓட்டினார். நாங்கள் உள்ளேயே பனியாடைகளுடன் அமர்ந்துகொண்டோம். கார் சூடேறத் தொடங்கியபோது வலியுடன் உறைந்திருந்த விரல்கள் விடுபட்டுக்கொண்டன. மெல்லமெல்ல உடல் சூடேற ஆரம்பிக்கும்போது புழுக்கமாக இருக்கிறதா என்னும் பிரமை உருவாகிறது. ஆனால் உள்ளேயே வெப்பநிலை உறையும் அளவுதான்.

வெளியே பனியின் உலகம். இருள் தேங்கிய காடுகள், உறைபனி மூடிய வயல்கள். மரங்களில் இருந்து பனிவிழுதுகள் முளைக்கத் தொடங்கி தொங்கி நின்றன. கிளைகளில் இளங்குழந்தைகளின் பால்பற்கள் போல பனிமொட்டுகள்.

ரோவநேமியில் ஸாமி இன மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். ரோவநேமி என்றால் மலைவிளிம்பி அனல் என்று பொருள். இரண்டாம் உலகப்போரில் ஜெனரல் லோதர் ரெட்லக் ( Lothar Rendulic ) ஆணைப்படி ரோவநேமி  முழுமையாகவே அழிக்கப்பட்டது. எஞ்சிய மரக்கட்டிடங்களை ஒரு தீ முற்றாக அழித்து நகரை சாம்பல்மேடாக்கியது. இன்றைய ரோவநேமி பின்லாந்தின் கட்டிடவியலாளர் ஆல்வார் ஆல்ட்டோ (Alvar Aalto) இந்நகரை மீண்டும் புதிதாக வரைந்து உருவாக்கினார். இந்நகர் ஒரு ரெயிண்டீரின் தலை போலவும், நகருக்குள் வரும் சாலைகள் ரெயிண்டீரின் கொம்பு போலவும் அமைக்கப்பட்டுள்ளன எனப்படுகிறது.

ரோவனேமியில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்திருந்தோம். அங்கே எல்லா தங்குமிடங்களும் அவ்வாறு சுற்றுலாவுக்கு அளிக்கப்படும் கட்டிடங்கள்தான். வசதியான வீடு. வெளியே குளிர் உறைநிலைக்கு இரண்டுபாகை கீழே. நாங்கள் சென்றுசேர்ந்தபோது மூன்று மணி. அஜிதனும் சைதன்யாவும் வெளியே சென்று கூகிள் எர்த் வழியாக அருகே இருக்கும் ஓர் ஆற்றை கண்டடைந்தனர். கெமிஜோகி ( Kemijoki ) ஆற்றின் துணையாறான உனாஸ்ஜோகி ( Ounasjoki ) ஆறு அது.  உறைந்துகொண்டிருந்த ஆற்றின்மேல் மிதக்கும் கண்ணாடிப்பாளங்கள் போல பனிப்படலங்கள். அவை உரசி ஒலிக்கும் உறுமல்களுடன் இணைந்து இசை கேட்டோம் என்றனர்.

அந்தக் குளிரில் அண்மையில் இருந்த ஊரில் இருந்து இரண்டு நண்பர்கள் என்னை பார்க்க வந்திருந்தனர். முந்நூறு கிலோமீட்டர் கார் ஓட்டி வந்ததாகச் சொன்னார்கள். ஃபின்லாந்தில் அதுதான் அண்மை என்பது. அந்தப்பாதையே அபாயகரமானது. பனிமூடியிருக்கும். காருக்குக் குறுக்காக ரெயிண்டீர்கள் பாயும். ஆனாலும் தேடிவந்திருந்தனர்.

வடதுருவத்தில் இரு வாசகர்கள் என்பது பரவசம் அளித்தது. ஆனால் அவர்கள் எப்படி திரும்பிச் செல்வார்கள் என்னும் எண்ணமே அவர்களிடம் பேசும்போது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. உற்சாகமாகப் பேசி அவர்கள் பனியில் சிக்கிவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். இரவு எட்டு மணிக்குத்தான் அவர்கள் சென்றனர். அவர்களுக்கு நான் கொண்டுவந்திருந்த நூல்களை கையெழுத்திட்டு அளித்தேன்.

அவர்களில் சரவணன் மன்னார்குடி அருகே கொரடாச்சேரி. அங்கே டிசம்பரில் தீவெயில் அடிக்கும். திருவிதாங்கூர் வரலாற்றை படிக்கையில் எங்கோ டென்மார்க்கில் குளிர்நிலத்தில் பிறந்த டிலென்னாய் தன் 21 வயதில் குளச்சலுக்கு வந்து, திருவிதாங்கூரின் படைத்தலைவர் ஆனது பெருவிந்தையாக தோன்றும். இன்று நம்மவர் அங்கே செல்கிறார்கள். அது நம் வெற்றிதான். நாம் ஆயுதங்களுடன் செல்லவில்லை, அறிவுடன் செல்கிறோம்.

இரவில் நான் எழுந்து பார்த்தபோது வெளியே புகை கீழ்நோக்கி இறங்குவதுபோல பனி பொழிந்துகொண்டிருந்தது. பகலில் இருந்ததை விட சற்று ஒளி கூடியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் ஒளி வெண்ணிறமான திரைபோல தெரிந்ததே ஒழிய எந்த காட்சியும் துலங்கவில்லை. ஜன்னல் கண்ணாடி பனிக்கட்டிபோல் இருந்தது. அதில் கையை ஊன்றியபோது மின்னதிர்ச்சி பட்டதுபோலவே இருந்தது. வெளியே விழிகூர்ந்து பார்த்தபோது முந்தையநாள் கண்ட மரங்கள் எல்லாமே வெண்படலத்தில் வெண்ணிறமான நிழலால் வரையப்பட்ட  ஓவியங்கள் போல் இருந்தன.  

ஆறு முழுமையாகவே உறைந்த பிறகு

தாகம் எடுத்தது. உடலுக்குள் அனல் இருப்பதுபோல. வெந்நீர் குடிக்கவேண்டும் என அருண்மொழி சொல்லியிருந்தாள். ஆனால் நான் குளிர்ந்த நீர் குடித்தேன். உள்ளே இருந்த அனலை அவித்து ஆறுதலளித்தது. இந்தப் பனிநிலத்தில் பெரும்பாலானவர்கள் பனிக்கட்டி போட்டு பானங்கள் அருந்துவதை அதன்பின் கண்டேன். காற்றிலுள்ள நீராவி முழுமையாகவே பனியாகிக் கீழே பொழிந்துவிடுவதனால் வரண்ட மூச்சுச்சூழல் உருவாகி உடலுக்குள் வெம்மையை நிறைக்கிறது. ஊட்டியின் குளிர்காலத்தில் ஜட்டி துவைத்துப்போட்டால் காய்வதற்கு ஒருவாரமாகும். இங்கே அரைநாளில் தக்கைபோல ஆகிவிடுகிறது.

குளிர் நமக்கு ஒரு விந்தை. ஒரு வகையான அதீத நிலை. அதில் நாம் திளைக்கையில் ஒரு களியாட்டை உணர்கிறோம். உண்மையில் அது என்ன? நமது பழக்கத்தின் பிசுக்கை அகற்றி இயற்கையை புதியதாகக் காண்கிறோம். வாழ்க்கையை புதியதாக வாழ்கிறோம். அதுதான் அந்த கிளர்ச்சியை அளிக்கிறது. அங்கும் பழகினால் பனி சலிப்பூட்டும். திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் பத்தாயத்தில் தங்கியிருக்கும் ஒரு ஃபின்லாந்து இளைஞர் உண்டு. அவருக்கு வெயிலே போதை. திருவண்ணாமலையின் வெயிலனலில் மேமாதம் சைக்கிளில் சீட்டி அடித்தபடி சுற்றிவருவார்.

வெண்மையை பார்த்துக்கொண்டே இருந்தேன். அது உள்ளத்தை செயலறச் செய்கிறது. எண்ணங்கள் மறைந்து விடுகின்றன. செயலூக்கமும் இல்லாமலாகிவிடுகிறது. நான் படுத்து மீண்டும் தூங்கி விழித்தபோது எட்டு மணி. ஆனால் அதேபோல அரைவெளிச்சமாகத்தான் இருந்தது. அஜியும் சைதன்யாவும் எழுந்துவிட்டனர். அஜி, பனி!’ என்றான். “வெளியே போகலாமா?” அந்த ஆறு உறைந்துவிட்டதா என்று பார்க்க விரும்பினேன்.

அருண்மொழிஅய்யய்யோ, நான் வரமாட்டேன்என்று சொல்லிவிட்டாள். நானும் அஜிதனும் சைதன்யாவும் ஆடைகளை அணிந்துகொண்டோம். வெளியே இறங்கிய ஐந்து நிமிடநேரம் பெரிதாக ஏதும் தெரியவில்லை. அதன்பின் உடல் உலுக்கிக் கொள்ள தொடங்கியது. மூக்குநுனி எரிந்தது. மூச்சில் நுரையீரல் கல்லென ஆகியது. விரல்களின் எலும்புப்பொருத்துகள் உளைச்சலெடுத்தன. நடப்பது சந்திரமண்டலத்திலா என்று தோன்றியது.

வெண்ணிற வெளியில்.

சுற்றிலும் பனிபொழிந்து பூமியே நுரைத்துவிட்டதுபோலிருந்தது. மரங்கள், கூரைகள், கார்கள் எல்லாவற்றின்மீதும் வெண்பனி.  அறிந்த எல்லாவற்றைக் கொண்டும் வர்ணிக்கலாம். இலையுதிர்ந்த செடிகள் பூத்த பருத்திச்செடிகள் போலிருந்தன. வெண்மலர்கள் பூத்தவை போல மரக்கிளைகள். அபத்தமாக அரைத்த உளுந்தமாவை அனைத்தின்மீதும் கொட்டி வைத்ததுபோல என்னும் உவமையும் மனதில் எழுந்தது.

காலடியில் பனி நொறுங்கி முனகியது. பனிப்பொழிவுக்கு மலர்களை உவமையாக்குவதை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு பனியுதிர் துளிக்கும் ஒரு படிகவடிவம் உள்ளது. அது மலர்போன்றது. கண்ணாடிக்கு அப்பால் ஒரே ஒரு பனியுதிர்கை ஒட்டியிருக்கையில் வானத்தின் பகைப்புலத்தில் அதன் வடிவை காணமுடியும். விந்தையான வெண்மலரின் சிற்றிதழ்களோ என எண்ணச் செய்யும்.

எல்லா இல்லங்களும் பனிமூடியிருந்தன. சில சாளரங்களில் ஒளி. உள்ளே சிலர் நடமாடும் நிழலசைவு. செவ்வொளி இந்தப்பனியில் அனல் என தோன்றியது. அதைப் பார்ப்பதே வெம்மையை அளிப்பது என்று எண்ணச் செய்தது. தொல்மனிதன் நெருப்பு மேல் கொண்ட பெரும் பித்து ஏன் என்பதை உணர பனிவெளியில் உலவவேண்டும். நெருப்பு போல இனிதான ஒன்றும் இல்லை இங்கே. அழகானது. அள்ளி அள்ளி குடிக்கலாமென்றுகூட உள்ளம் தவித்தது.

சாளரத்திற்கு அப்பால் ஒரு சிறுவன் எங்களை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். எங்கள் பாதத்தடங்கள் வெண்மையான துணியில் தையல்வரிசை போல நீண்டன. ஆற்றை பார்த்துவிட்டேன். வெண்பனிப் படிக்கட்டுகளுக்கு அப்பால் அது வெண்ணிற மைதானம் போல உறைந்து கிடந்தது. அசைவற்று. திக்பிரமை பிடித்த நதி. மரங்களின் நிழல்கள் உறைந்த பரப்பில் விழுந்துகிடந்தன. வெண்பரப்பிலேயே பலவகையான நிறமாற்றங்கள். அலைவரி வடிவங்கள்.

பனிப்பரப்பு எவ்வளவு கடினமானது? மெல்லிய படலம்தானா? ஒரு கல்லை எடுத்து வீசினேன். சற்று கனமான கல். ஆனால் கடகடவென ஓசையிட்டுக்கொண்டு உருண்டது. அது சென்றபாதை தெரிந்து கண்ணெதிரில் மறைந்தது. கல் பனிப்பாளம் மேல் அசைவின்மை கொண்டது. இன்னொரு பெரிய கல்லை வீசினேன். அதுவும் மரப்பலகைமேல் விழுந்து ஓடும் ஓசையையே எழுப்பியது. மேலே நடக்கலாம். ஆனால் அபாயம். அந்த ஆற்றை நன்கறிந்தவர்களுக்கே அது அபாயமானது.

அரைமணிநேரம் அங்கே நின்றிருந்தோம். கரிய சுருள்முடி கொண்ட நாயுடன் ஒருவர் காலைநடை சென்றார்.அவர் உடல் பல அடுக்கு ஆடைக்குள் இருக்க நாய் நிர்வாணமாக இருந்தது. ஆனால் அவர் நடுங்கி உடலை குறுக்கிக்கொண்டு நடக்க நாய் வாலைச் சுழற்றிக்கொண்டு குதூகலமாக குதித்துச் சென்றது. தரையில் நாய்க்காலடிகள் விந்தையான ஒரு நீள்கோலமாக தெரிந்தன. இந்த நாய்களை சென்னையின் கொதிக்கும் வெயிலில் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

காலை பத்துமணிக்கு கிளம்பி சாண்டாகிளாஸ் கிராமத்துக்குச் சென்றோம். இருபக்கமும் சாலை வெண்குழம்பலாக, மரங்கள் பனிவழிந்த கிளைகளுடன் ஓடிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே மான்களை பார்த்தோம். அவை பனிப்பரப்பில் கரிய நிழலுருக்கள். வால்களை வெடுக் வெடுக் என அசைத்தபடி மேய்ந்தன.பனியை விலக்கி, காய்ந்துபோன புற்களை தின்றுகொண்டிருந்தன. மரக்கிளைகளில் கரிய அணில்கள். நாய்களுக்காவது கம்பிளிபோன்ற மயிர்த்தோல். இந்த மான்கள் எப்படி குளிர்தாங்குகின்றன என்று தெரியவில்லை.

(மேலும்) 

முந்தைய கட்டுரைராஜம் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைமத்துறு தயிர்,கடிதம்