பனிநிலங்களில்-4

ஒருநாள் முழுக்க ஸ்டாக்ஹோம் நகரில் செலவிட்டோம். இந்தியாவின் மாலை ஆறுமணிக்கு இருக்கும் வெளிச்சம் நடுப்பகலிலும் இருந்தது. விமானத்தில் வரும்போது பார்த்தேன், மேலே முகில்களால் ஆன மிகச்செறிவான கூரை. இறங்கி நடக்கமுடியும் என்று தோன்றும். அதற்குமேல் சூரியனின் ஒளி கண்கூச சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அந்தக்கூரைக்கு கீழேதான் இத்தனை இருளும் குளிரும்

அன்றைய வெப்பநிலை நான்கு பாகையில் இருந்து ஒரு பாகை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததுஸ்டாக்ஹோம் நகரின் தெருக்கள் கிறிஸ்துமஸுக்கான ஒளியமைப்புகளை தொடங்கிவிட்டிருந்தன. ஐரோப்பிய நாகரீகத்திற்கே உரிய வாங்கு வாங்கு என அமைதியாக ஆணையிடும் கடைகள். மின்னும் கண்ணாடிச் சன்னல்களுக்கு அப்பால் உடைகள், உணவுகள், நகைகள்.ஒரே ஒரு நாடகசாலை. திரையரங்கு என எதையும் நான் பார்க்கவில்லை.

ஐரோப்பாவின் இன்றைய நகர்கள் அனைத்திலும் பெருகிக்கிடக்கும் அகதிகள், வீடிலிகளான இரவலர்கள் இல்லை. நான் பார்த்தவர்கள் தன் முன் தொப்பியை வைத்துக்கொண்டு கண்மூடி அமர்ந்திருந்த ஒரு சிரிய அகதியும், தங்கள் குழந்தைகளின் படங்களை வைத்துக்கொண்டு பாடியபடி இருந்த ஒரு மத்திய ஆசிய அகதித் தம்பதிகளும்தான். தெருக்களில் பாடும் இசைக்கலைஞர்கள், ஓவியங்களை பார்வைக்கு வைத்திருப்பவர்கள் பாரீஸில் மிகுதி. இங்கே இல்லை. குளிர்காலமானதனாலும் இருக்கலாம். 

ஸ்வீடன் நாடு அங்கே வரும் அகதிகளை பெரும்பாலும் இல்லங்களில் குடியமர்த்தி உழைப்பதற்கும் ஏற்பாடு செய்துவிடுகிறது. போதையடிமைகளை தெருக்களில் விடுவதுமில்லை. அந்தக் குளிரில் வீடிலிகள் செத்துவிட வாய்ப்புண்டு. எங்கும் மக்கள். ஆனால் கூச்சல்கள் இல்லை. பெரும்பாலானவர்கள் நாய்களுடன் நடந்துகொண்டிருந்தார்கள்.

ஸ்வீடன் மன்னரின் அரண்மனையை, அவர் மக்களைச் சந்திக்கும் சதுக்கமேடையை பார்த்தேன். அவை பழுதுநீக்கப் பணிகளுக்காக போர்வை போர்த்தி மறைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாமே ஒரு தெருவையே அடைத்துக்கொண்டு நீளும் மாபெரும் கட்டிடங்கள். பலநூறு சாளரங்கள் கொண்டவை. ஆனால் எவையும் எப்போதும் திறக்கப்படுவதே இல்லை என தோன்றும். இறுக்கமாக வாய்மூடிய, நட்பற்ற கண்கள் கொண்ட  கனவானைப் போன்றவை

சதுக்கத்தில் மின்விளக்குச் சரடுகளாலான ரெயிண்டீர் சிலைகள். மின்விளக்குத் தோரணங்கள். மக்கள் நீரில் மிதப்பவர்கள் போல மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தனர். அமெரிக்கா போல மிகையான உடலசைவுகளும் முகவெளிப்பாடுகளும் இங்கில்லை. முணுமுணுத்துக்கொண்டும் புன்னகைத்துக்கொண்டும் சென்றனர்.

ஒரு நகரம் தன்னை அணிகொள்ளச் செய்வதென்பது ஓர் அழகிய காட்சி. அதன் உள்ளுறையும் கொண்டாட்டம் வெளிவருகிறது. இந்திய நகரங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றனவே ஒழிய நகரம் அணிகொள்வதே இல்லை. மதுரை சித்திரைத் திருவிழாவில்கூட நகரம் வழக்கம்போலவே இருக்கும்

ஸ்டாக்ஹோம் நூலகம்

ஸ்டாக்ஹோம் குடிக்கொண்டாட்டத்தின் நகரும்கூட. விதவிதமான குடிநிலையங்கள். ஒளிரும் புட்டிகளில் பொற்திரவங்கள். இங்கே குடி இல்லாமல் உணவகம் நடத்தவே முடியாது. பீருடன், ஒயினுடன் இட்லி சாப்பிடுகிறார்கள். ஆனால் பொதுவாக நான் ஐரோப்பிய நாடுகளில் பொதுவெளியில் குடித்துவிட்டு சலம்புபவர்கள், கலாட்டா செய்பவர்களை பார்த்ததில்லை. நம்மூர் வெயில்தான் அப்படிச் செய்யவைக்கிறதா? 

ஐந்து பாகை வெப்பம்கைகள் உளைச்சல் எடுத்தன. மூச்சில் குளிர் நுரையீரலை கருங்கல் என உணரச் செய்தது. ஏற்ற இறக்கமான சாலைகளில், கற்கள் பதிக்கப்பட்டு முதலைமுதுகு போல தோன்றிய பரப்பின்மேல் நடந்தபடி சுற்றிலும் உறைந்தவை போல் நின்றிருந்த நூற்றாண்டுத் தொன்மை கொண்ட கட்டிடங்களைப் பார்த்துச் சென்றோம். சுண்ணக்கற்களாலும், திறந்த செங்கற்களாலும் ஆனவை. திறந்த செங்கல் கட்டிடங்கள் மொரோக்கோ தோலால் ஆனவை என்னும் விழிமயக்கு உருவாகியது.

ஓர் இடத்தில் காஷ்மீரி கவா போன்ற சுவை கொண்ட ஒரு பானத்தை குடித்தேன். டீயுடன் அல்மாண்ட் கொட்டைகளின் சீவல்களும் ரோஜாமலரிதழ்களும் தேனும் கலந்தது. கூடவே கொஞ்சம் ஒயின். ஆனால் வெறும் வாசனைதான் அது. வெப்பத்தால் ஒயின் ஊற்றியதுமே ஆவியாகிவிடுகிறது

ஸ்டாக்ஹோம் ஏரிகளின் நகரம். அல்லது ஒற்றை நீர்ப்பரப்பின் மேல் எழுந்த சிறுசிறு தீவுகளின் தொகுப்பு. மாலரென் ஏரி ( Lake Mälaren ) நகரின் மையத்தில் இருந்து பால்டிக் கடலுக்குள் செல்கிறது. அதன் கரையில் நடந்தோம். விமானமிறங்கும்போது நீர்க்குட்டைகளும் நடுவே பசுந்திட்டுகளுமாக விந்தையான ஓர் அள்ளித்தெளிப்பாக தெரிந்தது நகரம்.

நகரின் உயர்ந்த மேட்டில் நின்று கீழே நோக்கினால் ஏரிகளில் பெரிய படகுகள் மெல்ல ஒழுகிச் சென்றன. குறைந்த வானொளியில் நீர்ப்பரப்பு மங்கலாக மின்னிக்கொண்டிருந்தது. இந்நகரின் ஏரிகளையும் தீவுகளையும் கணக்கிட்டு எழுதவேண்டுமென்றால் பலகாலம் அங்கே வாழவேண்டும். சுந்தர ராமசாமி ஒருமுறை பேச்சில் நீர்நிலைகளே நிலத்தின் அழகு என்றது நினைவுக்கு வருகிறது. நீர்நிலைகளை நிலமகளின் அணிகலன்களாகவே பெரும்பாலான கவிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஸ்டாக்ஹோம் என்பது நோபல் பரிசினால் நினைவுகூரப்படுவது. (ஸ்வீடன் என்பது நமக்கு போஃபர்ஸ் பீரங்கியால் நினைவுகூரப்படும் நாடு. ஆனால் போஃபர்ஸ் இன்றும் உலகின் தலைசிறந்த பீரங்கியாக கருதப்படுகிறதுநோபல் அருங்காட்சியகம் சென்றோம். அங்கே வெவ்வேறு ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்களி படங்கள், விவரங்கள் உள்ளன. நோபல் பரிசு மெடல்களின் போலிவடிவங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அங்கே நான் கவனிக்க ஆரம்பித்தபின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் எவரெவர் என்று பார்த்தேன். நான் விரும்பும் படைப்பாளிகளின் முகங்கள் அளித்த பரவசம் அந்த அருங்காட்சியகத்தின் நல்ல அனுபவங்களில் ஒன்று. அது ஓர் உலக இலக்கிய நினைவுத்தொகுப்பு போலிருந்தது.

இர்விங் வாலஸ் எழுதிய The Prize நோபல் பரிசின் பின்னணி பற்றி எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல். இலக்கியவாதிகள் பலரும் அதை விரும்பி வாசித்திருப்பார்கள். நோபல் பரிசிலுள்ள ஊழல்கள், தேர்வு முறைகள், அதன் மாண்பு ஆகிய எல்லாமே அதில் பேசப்பட்டுள்ளன. அறிவியலுக்கான விருதுகளில் ஒரு புறவயத்தன்மை உண்டு. இலக்கியத்தில் புறவயத்தன்மை உருவாக நீண்டகாலமாகும்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளில் பிழைகள் என கருதப்படும் பல உண்டு. நான் பிரெஞ்சு நாவலாசிரியர் குளோட் ஸீமோன், பிரிட்டிஷ் நாவலாசிரியர் வில்லியம் கோல்டிங், அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசன் போன்றவர்களை வாசித்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.

ஓர் எழுத்தாளர் நோபல் பரிசு வரை கொண்டுசென்று சேர்க்கப்படுவதற்கு அமைப்புசார்ந்த பணி தேவை. அரசுகள் அல்லது கல்வியமைப்புகள் முன்னெடுக்கவேண்டும்சிறந்த மொழியாக்கங்கள், ஆய்வரங்குகள், விமர்சனக் கட்டுரைகள் அவருக்கு அமையவேண்டும். அதற்கு அப்பால் இலக்கியத் தகுதியும் ஓர் அளவுகோல். அப்பால்தான்.

இந்தியாவில் இருந்து எப்போதும் மகாஸ்வேதா தேவி அல்லது அருந்ததி ராய் போல முதிரா முற்போக்கு எழுத்துக்களை உருவாக்குபவர்களே நோபல் வரை கொண்டுசெல்லப் படுகிறார்கள். சரிதான், சல்மான் ருஷ்திக்கு அவர்கள் பலமடங்கு மேல் என ஆறுதல்கொள்ளவேண்டியதுதான். நம்மை அவமானப்படுத்தும்படி ஒருவர் நோபல் வாங்காமலிருப்பதே நல்லது – நோபல் நமக்கு கிடைக்காமல் இருந்தாலும் சரி.

 

ஸ்வீடனின் தேசியநூலகம் சென்றோம்.Stockholm Public Library எந்த வாசகனையும் பெருமிதம் கொள்ளச்செய்யும் ஓர் அற்புதம். கடலூர் சீனுவுக்கு ஒரு புகைப்படம் அனுப்பினேன். ‘ஐயய்யோ, சொற்கம் இப்டித்தான் சார் இருக்கும்என்று பரவசப்பட்டிருந்தார். போர்ஹெஸ் சொற்கம் என்பது ஒரு நூலகம் என்று சொல்லியிருக்கிறார்.

இந்நூலகம்  31 மார்ச் 1928ல் இளவரசர் யூஜினின்Prince Eugen) முன்னிலையில் திறக்கப்பட்டது  . ஸ்வீடன் கட்டிடக்கலை நிபுணர் கன்னர் ஆஸ்பிளண்ட் (Gunnar Asplund) வடிவமைத்த இக்கட்டிடம் வட்டவடிவமானது. 7 அடுக்குகள் கொண்டது. ஒரே பார்வையில் ஏறத்தாழ இருபது லட்சம் நூல்களை பார்க்கலாம் என்பது இதன் சிறப்பு.

ஸ்வீடனின் மூளைக்குள் நாம் நுழைந்துவிட்டதுபோல உணர்வோம். பெரும்பாலும் ஸ்வீடிஷ் மொழி நூல்கள். ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் ரோமன் லிபி என்பதனால் தலைப்புகளை படிக்கமுடியும், உள்ளடக்கமும் தோராயமாக புரியும். ஆங்கிலத்தில் கிடைக்கும் எல்லாமே ஸ்வீடிஷ் மொழியிலும் கிடைக்கின்றன. ஆங்கிலம் ஸ்வீடிஷ் நடுவே தானியங்கி மொழியாக்கமும் இன்று தொண்ணூற்றொன்பது சதவீதம் சரியாக அமைந்து விட்டிருக்கிறது. ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆங்கில நூல்களும் உள்ளன.

நான் செல்மா லாகர் லெவ் (Selma Lagerlöf ) எழுதிய நூல்களின் அடுக்கை தேடிப்பிடித்து அதிலுள்ள படைப்புகளை பொதுவாகப் பார்த்தேன். ( செல்மா போன்ற ஒரு கதாபாத்திரத்தை இர்விங் வாலஸின் பிரைஸ் நாவலில் காணலாம். ஸ்வீடிஷ் எழுத்தாளர் ஆனதனாலேயே தகுதியில்லாமல் நோபல் வென்று, அந்தச் சங்கடத்தில்  உழல்பவராகச் சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆனால் செல்மா ஒரு நல்ல எழுத்தாளர், எளிமையின் அழகு கொண்டது அவர் எழுத்து) .நா.சு அவருடைய கெஸ்டா பெர்லிங் என்னும் நாவலை மதகுரு என்ற பேரில் மொழியாக்கம் செய்துள்ளார். அடிமைப்பெண் போன்ற வேறு கதைகளும் தமிழில் உள்ளன.

 

அடுத்து பார்லாகர் க்விஸ்ட் ( Pär Lagerkvist ) .நா.சு அவருடைய பரபாஸ் என்னும் நாவலை அன்புவழி என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். தமிழிலக்கியத்தில் தீவிரச் செல்வாக்கு செலுத்திய நாவல் அது. ஸ்டிரின்ட்பெர்க் (August Strindberg) பற்றி க.நா.சு எழுத்து இதழிலேயே எழுதியிருக்கிறார். .நா.சு தமிழுக்கு அளித்த கொடை என்ன என்பது அப்படி ஓர் அன்னிய மண்ணில் நின்றிருக்கையில்தான் தெரிகிறது. அங்கே ஒரு ஸ்வீடிஷ் இலக்கிய வாசகனிடம் பேச நமக்கு ஒரு பொதுத்தளம் அவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் குளிர்நாடு என்பதனாலேயே பேய்க்கதைகளும் திரில்லர்களும் அங்கே அதிகமாக வாசிக்கப்படுகிறன. லிண்ட்க்விஸ்ட் ( Lindqvist  ) அதில் ஒரு மாஸ்டர். அவர்தான் ரேவன் பறவையை கண்டாலே அஞ்சும்படி என்னை ஆக்கியவர். ஆனால் என்னால் இன்று அவரை வாசிக்கமுடியுமா என்று தெரியவில்லை.

பிரமிப்பூட்டும் அனுபவம். நூல்கள் வழியாகவே நடந்துகொண்டிருத்தல். நூல்கள் வழியாக காலத்தை உணர்தல்நூறாண்டுகள் தொன்மையான நூல்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் அவையெல்லாம்கூட மிக நன்றாக பேணப்பட்டிருந்தன. இந்த வட்டவடிவ நூலகத்தை இந்தியாவில் அமைக்கமுடியாது. இதன் வடிவக் குறைபாடென்பது தூசி வந்து படியும் என்பது. ஆனால் ஸ்வீடன் நூலகம் காற்று பதப்படுத்தப்பட்ட கூடம் என்பதனாலும், தொடர்ச்சியான பராமரிப்பாலும் மிகத்தூய்மையாக உள்ளது.

அண்மையில் திருவனந்தபுரம் அரசு மையநூலகம் சென்றிருந்தேன். எனக்கு மிகப்பிடித்தமான இடம் அது. தொன்மையான கட்டிடம். பல அடுக்குகளாக மலையாள, ஆங்கில நூல்கள். திருவனந்தபுரத்தில் ஒரு காலத்தில் மூன்று பெரும்நூலகங்கள் இருந்தன. அவற்றில் பிரிட்டிஷ் நூலகம், ருஷ்ய நூலகம் இரண்டுமே மூடப்பட்டு நூல்கள் திருவனந்தபுரம் மையநூலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை தனித்தனி பகுதிகளாக அமைத்துப் பராமரிக்கிறார்கள்.

திருவனந்தபுரம், பிரிட்டிஷ் நூலகப் பகுதிப் பொறுப்பாளர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். என் வாசகர். அப்பகுதியில் ஒரு நாளுக்கு ஒருவர் உள்ளே நுழைந்தால் அதிகம் என்றார். இவ்வளவுக்கும் நூல்கள் நிறைய வாசிக்கப்படும் நூலகங்களில் ஒன்று அது. முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காக படிப்பவர்களே அங்கே வருகிறார்கள்அவர் என்னையும் சைதன்யாவையும்  அந்நூலகத்தின் மேல் தட்டுக்கு சுழல்படிகள் வழியாக செல்ல அனுமதித்தார். மேலிருந்து பார்த்தபோது உறைந்து செயலற்ற மூளை ஒன்றை கண்டேன்.

ஸ்டாக்ஹோம் நூலகம் ஒரு கடிகாரத்தின் உட்பகுதி என்று தோன்றியது. அது பல பற்சக்கரங்களுடன் சுழன்றுகொண்டே இருந்தது. நூல்களை திரும்பக்கொண்டுவந்து அடுக்குவதற்கு தன்னார்வல ஊழியர்களும் மாணவ ஊழியர்களும் பலர் இருந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக பணியாற்றிக்கொண்டே இருந்தனர். தூசு துடைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. வாரநாள் பகல் என்றபோதிலும்கூட இருநூறுபேர் வரை அங்கே வாசித்தபடி, நூல்களை எடுத்தபடி இருந்தனர்.

மிக விரைவிலேயே இருட்டி விடுகிறது. மூன்று மணிக்கெல்லாம் மாலை. நான்குமணிக்கு அந்தி. ஐந்து மணிக்கு ஆழ்ந்த இருள். நான் எட்டு மணிக்கெல்லாம் படுக்க்கைக்குச் சென்றுவிடுவேன். காலையில் சாளரம் வழியாகப்பார்த்தால் ஏழுமணிக்கும் இருள் விலகியிருக்காது. இருள் இருந்தாலே தூங்கு என மூளைக்கு உள்ளம் ஆணையிடுகிறது. ஒன்பது மணிக்குத்தான் வெளிச்சம், அதுவும் இந்தியாவில் வரும் அதிகாலை ஒளி. அந்த ஒளியே பகல்.

ஒருநாளைக்கு சராசரியாக பன்னிரண்டு மணிநேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். பொதுவாக ஊட்டியிலும் நான் அப்படி துயில்வதுண்டு. குளிர், இருள் ஆகியவை காரணம். நாம் திறந்த உடலுடன், உடல்மேல் காற்றுபட தூங்கும்போது ஆழ்ந்த துயில் அமைவதில்லை. உடல்பரப்பு ஒரு கூர்புலன். அதில் படும் எந்த ஒன்றும் மூளைக்குச் செய்தியாகிறது. அது நம் துயிலை கலைத்து அரைத்துயிலை அளிக்கிறது. குளிரில், மெத்தையையே போர்த்திக்கொண்டு, நம் உடல்வெம்மையில் நாமே தூங்கும்போது கருப்பைக்குள் சுருண்டமைந்த குழந்தை ஆகிறோம். ஆழ்துயில் அமைகிறது

.

நீண்டநேரத் துயில் ஆதலால் கனவுகள். ஆனால் புற ஓசைகளால் உருவாக்கப்படும் கனவுகள் அல்ல அவை. நம் ஆழத்தில் இருந்து எழுபவை. ஆகவே இனிய பழைய நினைவுகள் வந்துகொண்டிருந்தன. என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன். மறைந்துபோன பள்ளிநாட்கள். ரப்பரின் வருகைக்கு பின் இன்று இல்லாமலேயே ஆகிவிட்ட குமரிமாவட்டத்தின் பழைய நிலங்கள். நான் சென்ற இமையமலைப்பகுதிகள். அவையெல்லாம் ஒன்றாகக் கலந்த ஒரு வாழ்க்கைப்பரப்பு.

அது எங்குள்ளது? அது அக்கனவில் அப்போது ஒன்றாகக் கலக்கப்பட்டது. கனவுகளை சமைப்பது நம் அறிவோ உணர்வோ அல்ல. நம்மைக் கடந்த ஒன்று. நம்முள் நாமறியாத மேதமையாகக் குடிகொள்வது. அது வரை ஒரு சாத்தியக்கூறு என்னும் வடிவில் இப்பிரபஞ்சத்தில் எஞ்சியிருப்பது. சூனியம் என்பதை வேதாந்தம் சாத்தியக்கூறுகளின் வெளி என வரையறை செய்கிறது. அது பிரபஞ்சத்தைவிட பிரம்மாண்டமானது. பிரபஞ்சங்களை தன்னுள் அடக்கியது.

(மேலும்)
முந்தைய கட்டுரைஎம்.கோவிந்தன்
அடுத்த கட்டுரைகறுப்பு மண்- வெங்கி