நாட்டியப்பேர்வழி

Padmini_Actress

 

சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது?”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள்.

”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல? பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…”

”போப்பா. அதுக்குண்ணு நாட்டியப்பேர்வழி மாதிரி கைல சொப்பு வச்சுக்கிட்டு ஆட்டிட்டே வரணுமா?” என்று சொல்லி தொற்றி ஜன்னல்மேல் ஏற நான் அவளைப்பிடித்து உட்காரவைத்து விசாரிக்கத்தலைப்பட்டேன். ”அதென்னதுடீ நாட்டியப்பேர்வழி?”

”அஜிதான் சொன்னான்….அந்த மாமிக்கு அப்டி ஒரு பேரு உண்டுண்ணுட்டு” திகைப்புடன் ”எந்தமாமி?” என்றேன். ”புருவத்திலே கசவு ஒட்டி வச்சுகிட்டு அதை ஆட்டி ஆட்டி கண்ணெமைய இப்டி படபடாண்ணு மூடிமூடி பேசுவாங்களே? வாயி கூட சின்னதா டப்பி மாதிரி இருக்குமே…” என சைதன்யா விளக்கத்தலைப்பட்டாள்.

எனக்குப் பிடிகிடைக்கவில்லை ”ஆருடீ?” அவள் கண்களை நாகப்பழம் போல உருட்டி ” மூஞ்சியிலே செவப்பா பெயிண்டு அடிச்சிருப்பாங்களே? மூக்குத்தியும் போட்டிருப்பாங்க…தோளை இப்டி பயில்வான் மாதிரி தூக்கிட்டு நடப்பாங்க…” சைதன்யா செய்யுள் தெரியாமல் பெஞ்சுமேலேறி நிற்க நேரிட்ட முகபாவனைகளைக் காட்டி சட்டென்று தெளிந்து ”ஆ! அவுங்க பத்துமணிக்கு…இல்ல..அவங்க பேரு வந்து பத்துமணி…இல்ல அது அஜி சொல்றது. அவுங்கே…–”

நாட்டியப்பேரொளி பத்மினி என்னுடைய அப்பாவின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்கள் என்று அவரது பாலியநண்பர் நாராயணன் போற்றி சொன்னார். அப்பாவுக்கு நாயர் ஸ்திரீகளை மட்டுமே கனவுக்கன்னிகளாக ஏற்க முடியும். பத்மினிக்குப் பின்னால் அவர் கனவு காண்பது குறைந்துவிட்டாலும் ஒரே ஒருமுறை அப்பு அண்ணனிடம் அம்பிகா படத்தைக் காட்டி ”ஆருடே இது?” என்று கேட்டார். நாயர்தான் என்றும் உறுதிசெய்துகொண்டார்.

ஆகவே நான் பள்ளி நாட்களிலேயே பத்மினியை ஒரு சித்தி அந்தஸ்து கொடுத்துத்தான் வைத்திருந்தேன். கறுப்புவெள்ளைப் படமொன்றில் அவர்களின் குட்டைப்பாவாடை குடையாகச் சுழன்றெழுந்தபோது தலைகுனிந்து மேப்புறத்து பகவதியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தேன்.’நீலவண்ண கண்ணா வாடா’ என்று அவர்கள், பக்கத்துவீட்டிலிருந்து தூக்கிக் கொண்டுவரப்பட்டமையால் திருதிருவென விழிக்கும் குண்டுக் குழந்தையை கொஞ்சியபடி, பாடும் பாட்டைப் பார்த்து மனமுருகியும் இருக்கிறேன்.

அப்படியானால் சைதன்யாவுக்கு பாட்டி முறைதானே?”..அப்டில்லாம் சொல்லப்பிடாது பாப்பா…அவுங்கள பத்மினிப் பாட்டீண்ணுதான் சொல்லணும்… என்ன?” என்றேன் .”அப்ப நாட்டியப்பேர்வழிண்ணு அஜி சொல்றான்?” என்று புருவத்தைச் சுளித்தாள். பொறுமையை சேமித்து ”அப்டீல்லாம் சொல்லப்படாது பாப்பா. அவங்க எவ்ளவு கஷ்டப்பட்டு டான்ஸெல்லாம் ஆடறாங்க… பத்மினிப்பாட்டீண்ணுதான் சொல்லணும்” பத்மினி நாயர்தானே, ஏன் அம்மச்சி என்றே சொல்லிவிடக்கூடாது? ஆனால் அஜிதனை அப்படிச் சொல்லவைப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். அவனுக்கு பத்மினி என்றாலே சிரிப்பு. சிவாஜியுடன் அவர் சேர்ந்து நிற்பதைக் கண்டாலே அவன் வயிறு அதிரும்.

”செக்கச் சிவந்திருக்கும் முகத்தில்ல்ல்ல் புளிரசமும்…” என்று பாடி அறுபது பாகை சாய்ந்து முகத்தில் விரல்களை சரசரவென பரவ விட்டு புருவத்தை நெளிந்தாடச் செய்து ஆடிக்காட்டினான். எனக்கே தாங்க முடியவில்லை. முன்கோபக்காரரான அப்பா இருந்திருந்தால் உடனே குடையை எடுத்துக் கொண்டு நிரந்தரமாக வீட்டைவிட்டுக் கிளம்பி சென்றிருப்பார்– குடை இல்லாமல் அப்பா எங்கும் போவதில்லை.

இம்மாதிரி மூன்றாம்தலை முறை பிறவிகளுடன் சேர்ந்து பழைய விஷயங்களைப் பார்ப்பது எப்போதுமே சிக்கல்தான், நம் கண்களும் அப்படியே ஆகிவிடுகின்றன. நாட்டியப்–சரிதான்- பேரொளி பத்மினியின் நடிப்பையும் நடனத்தையும் இப்போது பார்க்கும்போது சிரிப்பு வராமலிருக்க வேறு பத்திரிகை ஏதாவது புரட்டி கண்களை தாழ்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் காதுகளில் அவர்களின் நடிப்பு வந்து கொட்டியபடியேதான் இருக்கிறது.

அவர்களின் குரல் நல்ல நாயர்ப்பெண் குரல். ஓரம் உடைந்திருக்கும். என் சொந்தக்கார மாமா ஒருத்தர் திருவனந்தபுரத்தில் பத்மினி சாயலிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து மேற்கொண்டு யோசிக்காமல் கல்யாணம் செய்து கொண்டார். முதலிரவில் ”எந்தா பேரு?” என்றார். நாணத்துடன் தலை குனிந்து இருந்த மாமியிடம் ”எத்ர தவண கேட்டேன், பேரு சொல்லியால் எந்து, சியாமளே?” என்று பரிதாபமாக அவர் பத்தாம் முறை கேட்டபோது மாமி எம்.ஆர்.ராதா குரலில் ”சியாமளை”என்றார். அதன்பின் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை குறைவு, எட்டு குழந்தைகள்.

தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன், நாயர் நடிகைகள் அம்பிகா, ராதா, சோபனா எல்லாருக்குமே அதே குரல்தான். சமீபத்தில் பாவனா பேசக்கேட்டபோது பக்கத்தில் யாரோ பேசுகிறார்கள் என்றே தோன்றியது. வால்மாட்டிய எலிபோன்ற டப்பிங் குரல்களுக்கு அதுவே மேல் என்று எனக்குப் படுவதற்கு சாதி காரணமல்ல என நினைக்கிறேன்.

மோகனாம்பாளாக வேஷமிட்ட சித்தி பதவிசாக நடந்துவரும்போது சைதன்யா சொன்னதுபோல இடது உள்ளங்கையில் ஒரு சின்ன செம்பையோ சம்புடத்தையோ வைத்து வலது உள்ளங்கையால் அதைப் பொத்தி வயிற்றுடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இருதோள்களையும் முன்னுக்கு சற்றே தள்ளி அவற்றை ‘லெ·ப்ட் ரைட்’ என அசைத்தசைத்து வருகிறார்கள். நடையழகுக்கு அவர்கள் பின்னழகை நம்புவதில்லை, அவர்களுக்கு அப்படி ஒன்று இல்லை. பட்டுப்புடவைக் கொசுவம் விரிய விரைப்பாக நின்று கழுத்தை ஒருபக்கமாகத் திருப்பி ”வரதா அவரிட்ட சொல்லு…”

பத்மினியின் நடிப்புக்கு தோள்கள் உறுதுணையாக இருக்கின்றன. சோகத்தில் அவை எகிறி முன்னுக்கு வளையும்போது நடனத்தில் விம்மிப்புடைத்து ‘வெற்பெனத் தூக்கிய தடந்தோள்’ களாக ஆகின்றன. தோள்களுக்கு இத்தனை அருகே மார்பகங்கள் அமைந்துள்ள வேறு நடிகை உலகில் கிடையாது என்று படுகிறது. இது இப்போது கண்ணில்படுவது,அப்போதெல்லாம் கண்களை எப்படிக் கீழே கொண்டுவருவேன்? பத்மினி சோகத்தில் ஒரு கோணத்தில் சாய்கிறார். அடுத்த வசனத்தைக் கேட்டு புழுவாய் துடித்தபடி வெடுக் என திரும்பி மறுகோணத்தில் சாய்கிறார். புழுவாய் துடிப்பதே நடிப்பு என்பது அவர் நம்பிக்கை. புருவங்கள் சின்னப்புழுக்கள்.இதே சாய்வு நடனத்திலும் உண்டு. கேவி அழும்போது சிறியவாயை லேசாக திறந்தபடி முகத்தைத்தூக்கி அண்ணாந்து விடுகிறார்.கண்ணீர் சரிகையுடன் சேர்ந்து மினுமினுக்கிறது

தமிழ்க் கதாநாயகிகளின் நடிப்புக்கு பத்மினியின் கொடை என சில உண்டு. எதையாவது கண்டு அஞ்சி கிரீச்சிட்டு அலறும்போது இடக்கையை சுழற்றி மேலெடுத்து புறங்கையால் வாயை மூடிக்கொண்டு விழிபிதுங்குவது அவற்றில் தலையாயது. வலக்கையில் அனேகமாக விளக்கோ விளக்குமாறோ இருக்கும். வேகமாக வந்து நின்று வேறுபக்கம் முகம்திருப்பி பார்வையை சரித்து ஒரு புருவத்தைமட்டும் வளைத்து தூக்கி ‘ம்?’ என்பது. அதை சரோஜாதேவி அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார். அப்போது பின்னல் நுனியை கையால் சுழற்றுவது சரோஜாதேவியின் கொடை. கடைசியாக, எப்போதுமே புருவங்களை வில்லென வளைத்து வைத்திருப்பது. சித்தியை எப்போது பார்த்தாலும் ‘படிச்சியாடா? ” என்று அவர்கள் அதட்டுவதுபோன்ற அச்சம் எனக்கு ஏற்பட்டமைக்குக் காரணம் அதுதான்.

அழும்போது வாயை கையால் பொத்திக் கொள்வது பத்மினியின் வழக்கம். அப்போதுதான் குலுங்கச் சௌகரியமாக இருக்கும். தமிழ்த் திரையுலகின் சீர்மிகு கண்டுபிடிப்பான ‘எதிரொலி வசனமுறை’யை உச்சகட்டத் திறனுடன் கையண்டவர் பத்மினியே. ”அப்படிச் சொல்லாதீர்கள் அத்தான், அப்படிச் சொல்லாதீர்கள்! உங்கள் காலில் விழுகிறேன் அத்தான், காலில் விழுகிறேன்!”

பத்மினி நடித்த வண்ணப்படங்களில் அவர் உடலில் எப்போதுமே ஏழுவண்ணங்களும் இருக்கும்.அவர்களைத்தான் ‘வண்ணத்தமிழ்ப்பெண்’ என்று சொல்ல வேண்டும். தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பட்லே ”ஒருமுறை நன்றாக உரசிக் கழுவிவிட்டு புரஜக்டரில் விட்டு ஓட்டினால் கண்ணுக்கு நன்றாக இருந்திருக்குமோ?”என்று அபிப்பிராயபப்ட்டதாகச் சொல்வார்கள். பத்மினியை இன்னொருமுறை கழுவவேண்டியிருக்கும்.

பத்மினி புகழ்பெற்றது நடனத்துக்காகத்தான். சமீபத்தில் ஓட்டல் அறையொன்றில் நள்ளிரவில் பார்த்த ஒரு பழைய பாடலில் இருபெண்கள் ஒரு மன்னன் முன்னால் நின்று இடுப்பில் கைவைத்து ”அய்யே மூஞ்சியப்பாரு மூஞ்சிய ,ஏய்யா நீயும் ஒரு ஆளா?” என்பதுபோல சைகை காட்டுவதைக் கண்டு சுவாரஸியமாக பார்த்தால் அது அக்கால அரசவை நடனக் காட்சி. ஆடுவது பத்மினியும் சகோதரி ராகினியும். இருவர் முகங்களிலும் சீனிப்பருக்கைகள் போல ஏதேதோ மினுக்கங்கள். இறுக்கமான கால்ராய் போட்டு ஒட்டியாணம் கட்டி தோள்வளை அணிந்து ஒரே இடத்தில் நின்று சுழன்று ஆடினார்கள். ஒருத்தி ஆடும்போது இன்னொருத்தி இடுப்பில் ஒரு கைவைத்து மறுகையை வளைத்து தொங்கவிட்டு ”ஆமா போடி” என்பதுபோல சில முகச்சுளிப்புகளை காட்டினாள். ராஜாவுக்கு கனிந்த வயோதிகம். அவர் ‘மாதம் மும்மாரி பொழிந்தாலே இப்படித்தான்’ என்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் பத்மினியின் நடனங்கள் புகழ்பெற்றன. தமிழ் நடனங்களுக்கு அவரது கொடை என மூன்றைச் சொல்லலாம். தென்னைஓலை, புல்கதிர் போன்றவற்றை பிடித்து இழுத்துமுகத்தின் குறுக்காக அசைத்துச் சரிந்து புருவத்தை ‘எப்டி எப்டி?’ என்பதுபோல அசைத்துச் சிரித்தல். மெல்லிய புடவை முந்தானையை தூக்கி அதனூடாக பார்த்துச் சிரித்து உடனே அதை உதறி ஓடுதல். கதாநாயகன் பிடிக்க வந்ததும் துள்ளி ஓடி எள்ளுக்கதிர் மிதிப்பதுபோல கால்சலங்கைகளை ஒலிக்க வைத்தல்.

ஆனால் தில்லானா மோகனாம்பாள்தான் அவரது நடனக்கலையின் உச்சம். ‘மறைந்திருந்து பார்க்கும் மருமகனே’ என அஜிதன் பாடும் அந்தப்பாட்டில் கோபுரப் பொம்மையைப் பார்க்கும் கோணத்தில் நாம் அவரைப் பார்க்க அவர் காலை தூக்கித் தூக்கி வைத்து ஆடும் அந்த அசைவு அதில் முதலிடம்.’நலம்தானா?’ பாட்டில் இருகைகளையும் கயிற்றில் கட்டி இழுத்து மேலே தூக்கியிருப்பது போன்ற பாவனையுடன் அவர் சுழன்றுவரும் சோகம் மிக்க அசைவு. அதன்பின் அவர் செய்வதற்கு ஒன்றுமே இல்லை, இவற்றை அமெரிக்க மாமிகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைத் தவிர.

ஆனால் பாலும் பழமும் கைகளில் ஏந்தி மடிசார் உடுத்து பதவிசாக வந்த அவர் ‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’ பாட்டுக்கு திடீரென்று பின்னலை தூக்கிப் பின்னால் போட்டு ஆடிய ஆட்டத்துக்கு இணையாக எதுவுமே என் நினைவில் இல்லை. அப்போது குலசேகரம் செண்டிரல் திரையரங்கில் நான் திடுக்கிட்டு கையிலிருந்த மொத்த பட்டாணிக்கடலையையும் கொட்டிவிட்டேன்.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம்

முந்தைய கட்டுரைகாமிக்ஸ் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33