எங்கள் ஸ்வீடன் பயணம் திடீரென்று திட்டமிடப்பட்டது. சென்ற ஜூன் மாதம் அஜிதனும் சைதன்யாவும் ஓர் ஐரோப்பியப்பயணம் திட்டமிட்டனர். அவர்கள் இருவருமே இசைமேதை வாக்னரின் ‘அடிப்பொடிகள்’ அதை இசைப்பற்று என்பதை விட ஒருவகை வழிபாடு என்பதே பொருத்தம். ஜெர்மனியில் பேய்ரூத் என்னும் ஊரின் வாக்னரால் கட்டப்பட்டு, இன்று வாக்னரின் ஓப்பராக்களுக்காக மட்டுமே நிகழும் இசைநிகழ்ச்சியில் பங்கெடுக்க இடம் முன்பதிவு செய்திருந்தார்கள். அதில் இடம் கிடைக்க பல ஆண்டுகள் காத்திருப்பு தேவைப்படும். கொரோனாவில் அவ்வாறு முன்பதிவு செய்திருந்த பலர் மறைந்தனர், பலர் தவிர்த்தனர். ஆகவே சட்டென்று இடம் கிடைத்தது. முழுமையாகப் பணம் கட்டி உடனடியாக இருக்கைகளும் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் விசா மறுக்கப்பட்டது. விசாவுக்கான நிபந்தனைகள் எல்லையில்லாமல் நீள்பவை. பேய்ரூத் முன்பதிவு இருப்பதனால் நோக்கம் தெளிவு என்பது விசா கிடைக்க எளிதாக இருக்கும் என கணித்தது தவறாகப் போய்விட்டது. அஜிதன் கொஞ்சம் சோர்வில் இருந்ததை உணர்ந்த அரங்கசாமி நண்பர் செந்தழல் ரவி வழியாக ஸ்வீடனுக்கு ஓர் அழைப்புக்கு ஏற்பாடு செய்தார். அங்குள்ள தமிழ் அமைப்பின் அழைப்பும் இணைந்தது. நானும் அருண்மொழியும் இருமுறை ஐரோப்பா சென்றவர்கள். ஆகவே விசா கிடைக்கும் என்றும், அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் முதல்முறை விசா கிடைத்தால் அடுத்தமுறை எளிதாகக் கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
செந்தழல் ரவி பவா செல்லத்துரையின் உரையாடலில் அடிக்கடி வரும் பெயர். எஸ்.கே.பி.கருணா, செந்தழல் ரவி ஆகியோரை பவாவுடன் ஆழமாக இணைக்கும் அம்சம் அவர்களிடமிருக்கும் பொதுநலன் சார்ந்த, மனிதநேயம் சார்ந்த பார்வைதான். பிறருக்கு இயல்பாகவே உதவுபவர்கள். சென்ற ஆண்டுகளில் வெவ்வேறு பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளுக்காக அவர்களை நானும் நண்பர்களும் அணுகியிருக்கிறோம். ஒருமுறை கூட அவர்கள் அவற்றைச் செய்யாமலிருந்ததில்லை. ரவி ஸ்வீடனில் தமிழ்ப்பணிகளை ஒருங்கிணைக்கிறார். பலநூறுபேருக்கு வேலைபெற உதவியிருக்கிறார்.
ஆனால் நடுவே மலேசியாவின் ஜார்ஜ் டவுன் இலக்கிய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, விமானச்சீட்டு பதிவுசெய்திருந்தேன். நவம்பரில் ஸ்வீடன் சென்றால்தான் உண்டு, இல்லையென்றால் ஜூன் ஜூலைதான். ஆகவே நவம்பர் 9ல் கிளம்பி 19ல் திரும்பி வருவதாக திட்டமிட்டோம். விசா விண்ணப்பம் அனுப்பும்போது உறுதியான நம்பிக்கையுடனிருந்தோம். ஏனென்றால் செந்தழல் ரவி ஸ்வீடனின் நிலையான குடிமகன், அங்கே வணிகம் செய்பவர்.
விசா வந்தது, ஆனால் மிகத்தாமதமாக. விசா கையில் கிடைத்தது நவம்பர் 12 அன்றுதான்.ஆகவே டிக்கெட்டை மாற்றிப்போட்டோம். நவம்பர் 13 அதிகாலையில் கிளம்பி நவம்பர் 21 காலையில் திரும்பி வரும்படியாக. ஏற்கனவே திட்டமிட்டிருந்த டென்மார்க் பயணம் தவிர்க்கப்பட்டது.
குறுகிய பயணம் என்றாலும் மிக நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. ஸ்டாக்ஹோம் நகருக்கு 13 ஆம் தேதி மதியமே சென்று சேர்ந்தோம். இப்போது எனக்கு அன்றாடவாழ்க்கையில் சில நினைவுச்சிக்கல்கள், அதன் விளைவான குளறுபடிகள், ஆகவே உருவாகும் ஒருவகை பதற்றம். அருண்மொழியை நம்பித்தான் பயணம்.
அருண்மொழியும் அஜிதனும் ஸ்டாக்ஹோமில் நேரடியாக வெளியே சென்றுவிட்டனர். நானும் சைதன்யாவும் வேறொரு திசையில் திரும்ப அங்கே ஒரு அம்மாள் எங்களிடம் போர்டிங் பாஸ் கேட்டாள். இல்லையேல் வெளியே செல்லமுடியாது என்றாள். கையில் போர்டிங் பாஸ் இல்லை. ஆகவே அதீதப் பதற்றம் அடைந்து, அங்குமிங்கும் அலைமோதினேன். சைதன்யாதான் பேகேஜ் கிளெய்ம் பகுதிக்கு நேரடியாகச் செல்லலாம் என அறிவிப்புகளை கொண்டே முடிவுசெய்து நடந்தாள். ஒன்றும் சிக்கல் இல்லை. வெளியே வந்துவிட்டோம். ஆனால் அதற்குள் சைதன்யாவை பதற்றம்கொள்ளச் செய்துவிட்டேன்.
செந்தழல் ரவியும் அவர் நண்பர் பிரகாஷும் வந்து மலர் தந்து வரவேற்றனர். பிரகாஷ் என் நல்ல வாசகர். செந்தழல் ரவியை பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்திருக்கிறேன். பவா செல்லத்துரையை பற்றி அவர் ஓர் ஆவணப்படம் எடுத்தார். அதில் நான் ஒரு பேட்டி அளித்திருந்தேன். ரவியின் சொந்த ஊர் திருவண்ணாமலைக்கு அருகே . அவர் இல்லத்தில் அவர் மனைவி அர்ச்சனாவும், மகள் கிளாராவும் மகன் அலெக்ஸும் இருந்தனர். அலெக்ஸுக்கு ஒருவயது. ஸ்வீடிஷ்குழந்தையாக ஆகிக்கொண்டிருக்கும் பருவம். ஒருநாளில் நாலைந்து கொண்டாட்டங்கள், நாலைந்து அழுகைகள், நாலைந்து தூக்கம், நாலைந்து விழிப். எப்போதும் கையில் பால்புட்டியும் சப்புவதற்கு ஒரு சிவப்பு போர்வையும் இருக்கும்.
செந்தழல் ரவி சவுத் இண்டியன் என்னும் உணவகத் தொடரை அங்கே நடத்துகிறார்.(சவுத் இந்தியன் உணவகம் Radmansgatan 52, Stockholm) கொரோனாவின் சிறு பின்னடைவுக்குப் பின் சிறப்பாக நடைபெறும் உணவகங்கள். மாலையில் வெள்ளைக்காரர்கள் நெரிசலிட்டு அமர்ந்து பரோட்டா, மட்டன் சுக்கா எல்லாம் சாப்பிடுவதைக் காண உற்சாகமாக இருந்தது.
ரவி ஒரு கொள்கை கொண்டிருக்கிறார். பொதுவாக இவ்வகையான ஐரோப்பிய, அமெரிக்க உணவகங்களில் காரமும் புளிப்பும் உப்பும் குறைவாக, வெள்ளைநாக்குக்கு உகந்ததாக மாற்றப்பட்டிருக்கும். ரசத்தில்கூட சீஸ் கொஞ்சம் இருக்கும். ரவி சரியான தமிழ்ச்சுவை கொண்ட உணவுகளை அளிக்கிறார். ஆச்சரியமாக ஸ்வீடன் மக்களுக்கு அவை பிடித்திருக்கின்றன.
பொதுவாக நான் நல்ல இந்திய உணவுகளை இந்தியாவுக்கு வெளியில், குறிப்பாக சிங்கப்பூரிலும் மலேசியாவிலுமே சாப்பிட்டிருக்கிறேன். நல்ல சமையற்காரர்களுக்குரிய ஊதியம் அவர்களாலேயே அளிக்கப்பட முடியும் என்பது ஒரு காரணம். அங்கெல்லாம் உணவுப்பொருட்களின் கலப்படம் அனேகமாக இல்லை என்பதும், உணவுத்தரம் மேல் அரசின் கட்டுப்பாடு மிகக்கறாரானது என்பதும் இன்னொரு காரணம். ஓர் உணவக அதிபர் ஒருமுறை சொன்னார். இந்தியாவில் உணவுத்துறை அமைச்சர் இல்லத்தின் சமையலுக்கே கொஞ்சமாவது கலப்படம் கொண்ட உணவுப்பொருள்தான் கிடைக்கும், இங்குள்ள பொதுவான அமைப்பு அப்படி என.
ரவியின் ஸ்வீடன் தென்னிந்திய உணவகம் நான் சாப்பிட்ட மிகச்சிறந்த அசைவ உணவு கொண்டது. அதன் சமையல்நிபுணர் சேகர் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். அமெரிக்காவிலும் ஹவாயிலும் சமையற்பணி செய்தவர். போடிநாயக்கனூரில் தோட்டங்களும் இல்லங்களும் கொண்ட செல்வந்தரும்கூட.
முதல் நாள் ஓய்வு. இரண்டாம்நால் ஸ்டாக்ஹோம் நகரைச் சுற்றிப் பார்த்தோம். ஓர் ஐரோப்பிய நகரை குளிர்காலத்தில் நான் பார்ப்பது இதுவே முதல்முறை. நகரே குளிர்ந்து உறைந்துபோய் இருந்தது. மரங்கள் இலைகளை உதிர்த்து பனிப்பொழிவுக்காகக் காத்திருந்தன. மிகமிகத் தூய்மையான நகரம். செங்கற்கள் மிகச்சீராக அடுக்கப்பட்டு கட்டப்பட்ட அழகிய சுவர்களும் வளைவுகளும் கொண்ட கட்டிடங்கள். செஞ்சுண்ணக் கல்லும் சாம்பல்நிறச் சுண்ணக்கல்லும் வெட்டி அடுக்கி எழுப்பப்பட்ட ஓங்கிய மாளிகைகள்.
பழைய கட்டிடங்கள் சாளரங்களும் உப்பரிகைகளும் கொண்டவை. புதிய கட்டிடங்கள் சாளரங்களே இல்லாமல் கண்ணாடி நீள்சதுரங்கள். சாலைகளில் கருங்கல்வெட்டுகளோ, செங்கற்களோ பரப்பப்பட்டிருந்தன. வளைவான அலைகளாக அவற்றின் அமைப்பு. ஒரு பெரும் இலையுதிர்காலம் முடிந்திருந்தது. ஆனால் எங்கும் சருகுகளே இல்லை.
ஸ்வீடனின் முதன்மைச் சிறப்பாக நான் கண்டது அந்த பரபரப்பின்மை. ஜப்பான் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். அமெரிக்கர்கள் விரைவுநடையிலேயே இருந்தனர். ஸ்வீடனில் எவருக்கும் அவசரமில்லை. எந்த முகத்திலும் பரபரப்பு இல்லை. ஒருவகையான நிதானம். அங்கே வேலைச்சூழலும்கூட நெருக்கடிகள் அற்றதுதான் என்று ரவி சொன்னார். குளிர்காலம் நெருங்கும்போது இன்னமும் நிதானம் கைகூடுகிறது.
(மேலும்)
செந்தழல் ரவி இயக்கிய பவா என்றொரு கதைசொல்லி ஆவணப்படம் பகுதி 1