பழங்குடிகள் என்ன ஆவார்கள்?

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

ப்ரூனோ மன்ஸர் பற்றிய தமிழ் விக்கி பதிவை படித்துவிட்டு, அவரை பற்றிய டாக்குமெண்டரி ‘Bruno Manser-Laki Penan’ பார்த்தேன். அதன் இறுதியில் பழங்குடிகள் நவீன வாழ்க்கைக்குள் செல்வதை பார்த்து மனம்நொந்து ப்ரூனோ ‘Batu Lawi’ மலைகளுக்குள் சென்று மறைந்துவிடுகிறார்.

உங்களது குகைகளின் வழியே பயண நூலில் சட்டிஸ்கர் பழங்குடிகளை நவீன வாழ்க்கைக்குள் கொண்டு வரவேண்டிய தேவையை எடுத்து கூறியிருப்பீரகள். திரு. ராம்குமார் அவர்கள் உங்களை எடுத்த பேட்டி ஒன்றில் tribal life -> folk life -> feudal life -> modern life (capitalism) என்ற வரிசையில் சங்க இலக்கியத்தின் தொகுப்பு முறைபற்றி விளக்கிகொண்டிருந்த போது மனம் டக்கென்று அந்த வரிசையை பழங்குடிகள் நேராக tribal life -> modern life (capitalism) க்குள் வரநேர்வதை பிடித்துகொண்டது.

என்னுடைய சந்தேகம் இதுதான் ஐரோப்பா முன்னூறு வருடம் உரையாடி வளர்தெடுத்தது நவீன ஜனநாயக விழுமியங்கள். இந்தியா நிலபிரபுதுவத்திலிருந்து நேரடியாக ஜனநாயக யுகத்திற்குள் வந்து நாம் இன்றுவரை நிலபிரபுத்துவ விழுமியங்களை ஆழமாக சுமந்து நின்றுகொண்டு ஜனநாயக விழுமியங்களுடன் உரையாடலில் இருந்து கொண்டிருக்கும் சமூகமாகவே இருகிறோம் மேலும் தற்போதைய முதலாளித்துவ – நுகர்வு கலாச்சாரம் கருனையின்மையும், தீவிர போட்டி மனப்பான்மையும் கொண்டதாக இருக்கும்போது இதில் உலகம் முழுவதும் பழங்குடி வாழ்க்கையிலிருந்து நேரடியாக ஜனநாயக – முதலாளித்துவ சமூகத்திற்குள் நுழையும் இயற்கையின் ஒரு அங்கமாகவே வாழ பழகியிருந்த இம்மக்கள் நவீன உலகின் கருத்துக்கள், அரசியல், பொருளாதரம் பற்றிய எந்த ப்ரஞ்கையும் இல்லாமல் இதற்குள் தாக்குபிடிப்பது சாத்தியம் தானா?

இந்தியா, மலேசியா போன்ற ஏற்கனவே தீவிரமான போட்டிகள் நிகழும் இரண்டாம் உலக நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அங்குள்ள பழங்குடிகளின் வாழ்வை கருத்தில் கொள்ளுமா? அப்படி நவீன உலகிற்குள் வந்து தங்களை அதற்கு தகவமைத்து கொண்ட பழங்குடிகள் உள்ளனரா?

அன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

அன்புள்ள வேலாயுதம்,

உண்மையில் இந்த விவாதம் மானுடவியலில் முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. வெரியர் எல்வின் என்னும் காந்தியவாதியான மானுடவியலாளர் பழங்குடிகளின் வாழ்க்கையை ஒரு நவீன அரசு பேணிக்காக்கவேண்டும் என்றும், அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் இயல்பாக வாழ அனுமதிக்கவேண்டும் என்றும், அவர்களே தங்களை மாற்றிக்கொண்டாலொழிய அவர்களை மாற்ற (அதாவது முன்னேற்ற) அரசுகள் முயலக்கூடாது என்றும் சொன்னார். அது வெரியர் எல்வின் கொள்கை (எல்வின் பாலிசி) என அறியப்படுகிறது. இந்தியா கொள்கையளவில் அதை கடைப்பிடிக்கிறது. ஜவகர்லால் நேரு எல்வினின் நண்பர்.  எல்வினின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவரும்கூட.

எல்வின் கொள்கைக்கு எதிராக மிகக்கடுமையான தாக்குதல்கள் இன்று நிகழ்கின்றன. எல்வின் கொள்கை பழங்குடிகளுக்கு மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய நவீன வசதிகளை அளிக்காமல் அவர்களை கைவிடுவதாகவே உள்ளது என்றும்; அவர்களும் இந்தியக் குடிமக்களே எனும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் அவை என்றும் வாதிடப்படுகிறது. பழங்குடிகளை ’மேம்படுத்துவது’ அரசின் உரிமை என்றும், அது பிழை என்றால் பழைய கிராமங்களில் இருக்கும் சாதியமைப்பு, பஞ்சாயத்துமுறை, பழமையான வேளாண்மை முறை ஆகியவற்றை அரசு மாற்றியமைப்பதும் பிழைதானே என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

எல்வின் கொள்கைப்படியே நிகோபார், செண்டினல் தீவுகளிலும் மற்றும் ஒரிசாவின் காடுகளிலும் பழங்குடிகள் விட்டுவிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை ‘நவீன நாகரீகம்’ நெருங்குவதை கட்டுப்படுத்த நம்மிடம் சட்டமும் காவல் அமைப்பும் இல்லை. (அண்மையில் நிகோபாரிகளை மற்றவர்கள் நெருங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது) இந்நிலையில் வணிகர்கள் பழங்குடிகளை அணுகி அவர்களை மது போன்ற பழக்க்கங்களுக்கு அடிமைப்படுத்துவதும், சுரண்டுவதும் நடைபெறுகிறது. அவர்களுக்கு நோய்கள் தொற்றுகின்றன. அவர்களில் பல குடிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன.

ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்கக் கண்டங்களிலும் பழங்குடிகளை  ‘நாகரீகப்ப்படுத்தும்’ முயற்சிகள் நூறாண்டுகளாக நிகழ்ந்தன. அவை கொள்கையளவில் கருணைகொண்ட முயற்சிகளாக இருந்தாலும் மிகக்கொடிய மானுட அழிவுக்கு வழிவகுத்த ஒடுக்குமுறைகளாகவே நடைமுறையில் இருந்தன. (Rabbit-Proof Fence போன்ற படங்களை பாருங்கள்) இன்று அந்த வன்முறை அங்குள்ள முற்போக்கினரால் மிக விரிவாக ஆவணப்படுத்தப்படுகிறது.

மறுபக்கம், பழங்குடிகளை ’நவீனமயமாக்குதல்’ என பேசும் தரப்புகளின் பின்னணி எப்போதுமே ஐயத்திற்குரியதாக உள்ளது. காடுகளை ஆக்ரமிக்கும் தொழிலமைப்புகளின் குரல்களாகவோ அல்லது மதமாற்றச் சக்திகளின் தரப்பாகவோ அவர்களில் பலர் ஒலிக்கின்றனர். இந்தியாவில் ஒரிசாவிலும் மத்தியப்பிரதேசத்திலும் இடம்பெயர்க்கப்பட்ட பழங்குடிகள் எவர்களும் வாழ்க்கையில் முன்னேறவில்லை, புதியசூழலுக்குள் வந்ததில்லை. அவர்கள் அடையாளமின்றி அழிந்துபோவதே நடந்துள்ளது.

இந்த வகை முயற்சிகளின் உச்சகட்ட முன்னுதாரணங்கள் அமெரிக்கா, கனடா நாடுகளின் செவ்விந்தியர்கள். அவர்கள் அந்த அரசால் ‘பேணப்படும்’ காட்சிப்பொருட்களாக, குடிகாரர்களாக தனிப்பட்ட முகாம்களில் மெல்லமெல்ல அழிந்துகொண்டிருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான அவர்களின் பண்பாடு அழிந்து, வெறும் காட்சிப்பொருளாக எஞ்சுகிறது. அவர்கள் வாழ்ந்த இயற்கையுடன் இணைந்த மகிழ்ச்சியான எளிய வாழ்க்கையின் சாயலே கூட அவர்களிடமில்லை. அவர்களை அப்படி அழிக்க ’நாகரீக’ உலகுக்கு என்ன உரிமை என்னும் குரல் அங்கே வலுவாக உள்ளது. ஆனால் அங்கிருக்கும் அமைப்புகளின் நிதியைப்பெறும் இங்குள்ள ‘என்.ஜி.ஓ’ அமைப்புகளே பழங்குடிகளை நாகரீகப்படுத்துவது பற்றிப் பேசுகின்றன.

இங்கே எல்வின் கொள்கை இருந்தபோதிலும்கூட சென்ற ஐம்பதாண்டுகளாக பழங்குடிகள் அணைக்கட்டுகள் போன்ற ‘வளர்ச்சி’ பணிகளுக்காக இடம்பெயர்க்கப்பட்டு அவர்களுக்கு தொடர்பே இல்லாத முகாம்களில் ஒருவகை உதிரிவாழ்க்கைக்கு செலுத்தப்படுகின்றனர். அண்மையில் உலகநிதிய அமைப்புகளின் கட்டாயத்தால் மலைப்பகுதிகள் விலங்குகளின் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு பழங்குடிகள் அங்கிருந்து ஊர்களுக்கு துரத்தப்படுகின்றனர். அவர்கள் அரசதிகாரிகளின் கருணையில் வாழவேண்டியிருக்கிறது. அவர்களின் வாழ்வின் எல்லா களியாட்டங்களும் இன்பங்களும் காடுசார்ந்தவை என்பதனால் அவர்கள் உதிரிகளாக, குடியடிமைகளாக ஆகி அழிகிறார்கள்.

இரண்டு எல்லைகள் நடுவே என்ன செய்வது என்பது ஒரு பெரிய கேள்விதான். இந்திய அரசு ‘அவர்களின் கோரிக்கைக்கு உகக்க உதவுவது’ என்னும் அதிகாரபூர்வ நிலைபாடு கொண்டுள்ளது. அதுவே ஓரளவுக்கேனும் சரியானது என்று படுகிறது. அவர்களுக்கு கல்வி, மருத்துவம், சாலை போன்றவை மறுக்கப்படலாகாது – ஆனால் அவை அவர்கள்மேல் செலுத்தப்படலாகாது. அவர்களை மற்றவர்கள் சுரண்டுவது சட்டபூர்வமாகத் தடுக்கப்படவும் வேண்டும்.

உலகம் முழுக்க நிகழ்வனவற்றை கருத்தில்கொண்டு பார்த்தால் நூறாண்டுகளில் உலகில் பழங்குடிகள், நாடோடிக்குடிகள் இருக்க வாய்ப்பில்லை. தகவல்தொடர்பு – சாலை வசதிகள் உச்சமடைகின்றன. அவற்றிலிருந்து எவர்களும் தப்ப முடியாது. பலநாடுகளில் பழங்குடிகள் மற்றும் நாடோடிக் குடிகள் மறைந்துவிட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டிலும் மற்ற குடிகளைப் போல ‘இயல்பான’ மக்களாக ஆகவில்லை. எங்குமே அவர்கள் நவீன வாழ்க்கையில் பொருந்தவில்லை, வெல்லவில்லை. அவர்களின் பண்பாட்டுத் தனித்தன்மைகளுக்கு இன்றைய நவீன வாழ்க்கையில் எந்த மதிப்பும் இல்லை என்பதுடன் அவையெல்லாம் மிகப்பெரிய பலவீனங்களாகவும் தடைகளாகவுமே உள்ளன. அவர்கள் தங்களை உருமாற்றி,  ‘பிறர்’ போல ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களில் சிறப்பாக ‘நடிப்பவர்கள்’ சற்றேனும் வெல்கிறார்கள்.

அதாவது பிற மக்கள் ஐந்தாயிரமாண்டுகளில் அடைந்த மாற்றங்களை அவர்கள் ஐம்பதாண்டுகளில் அடையவேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் அடையாளத்தை, கலாச்சாரத்தை முழுமையாக துறந்துவிட வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் மொழியில் கல்விகற்க முடிவதில்லை. உதாரணமாக, தமிழகப் பழங்குடிகள் தமிழில் கல்விகற்கவேண்டும். ஆனால் அவர்களுக்கு தமிழ் முழுமையாகவே அன்னியமான மொழி அவர்களுக்கு என்பதை கண்டிருக்கிறேன்.

உங்கள் கேள்விக்கான பதில் இதுதான். இன்றுள்ள சமூக அமைப்பில் பழங்குடிகள் பழங்குடிகளாக இருக்க முடிவதில்லை. அவர்கள் மைய ஓட்டத்தில் கலந்து வாழவும் முடியவில்லை. என்ன செய்வது? எதிர்காலத்தில் அவர்கள் தங்களை உருமாற்றிக்கொள்ளாமலேயே வெற்றியடையக்கூடிய சமூக அமைப்பு உருவாகலாம். அவர்களின் தனித்தன்மைகளே தடையாக ஆகாமலிருக்கும் சூழல் அமையலாம். எத்தனையோ நல்ல மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதுவும் நடக்கலாம்

 

ஜெ

முந்தைய கட்டுரைஎம்.ஆஷாதேவி
அடுத்த கட்டுரைஏழாம் உலகத்து மக்கள்