தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
கண்களில் மிக மெல்லிய நீர்ப்படலத்துடன் அண்ணன் வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் எனும் தம்பியை நினைக்கும் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மாவில் இருந்தே அவருடனான க.நா.சு கலந்துரையாடலை தொகுத்து கொள்ள விழைகிறேன்.
தமிழை கற்றதன் மூலம் நீங்கள் அடைந்த மாற்றம் என்ன? என்ன பெற்று கொண்டீர்கள் ? என்ற சுசித்ரா அக்காவின் கேள்விக்கு இரு விடைகளை கூறினார். முதலாவது, தமிழ் தான் தனக்குள் இருந்த கவிதை வாசகனை, கவிஞனை அறிய செய்தது. இரண்டு, விருந்தோம்பல், அன்பு, பாசம் போன்ற விழுமியங்களையும் குடும்பம் என்ற அமைப்பின் சாரத்தையும் உணர செய்தது இவ்விரு பதில்களும் இப்படி கடிதத்தில் எழுதுகையில் தனித்தனியாக ஒலிக்கின்றன. ஆனால் அவருடனான உரையாடலில் வைத்து நோக்கினால் ஒன்றையொன்று நிரப்பி முழுமையை கொணர்கிறது. கவிஞன் எப்போதும் மொழியில் வெளிப்படும் உணர்வு நிலைகளுடனும் வாழ்க்கை நோக்குடனும் அப்பண்பாட்டின் சாரம்சமான ஆன்மிக உணர்வுடனும் தொடர்பில் இருக்கிறான். தனக்கு அந்நியமான பண்பாடொன்றை அணுகி அதன் சாரத்தை வந்தடைவதற்கு வெறுமே மொழி பயிற்சி அல்ல, மொழியின் மீதும் அதன் மக்கள் மீதும் பெருங்காதல் வேண்டும். எல்லா தாழ்களையும் விடுவிப்பது அதவே. தாமஸ் அவர்கள் தன் தமிழக குடும்பத்தை பற்றியும் கவிதையை மொழியாக்கம் செய்யும் நுட்பம் குறித்தும் பேசுவதை இவ்வண்ணம் இணைத்து கொள்கிறேன்.
கவிதையின் மொழியாக்கம் குறித்தும் பிற மொழியாக்கம் குறித்தும் அவர் சொன்னவை யுவன் சந்திரசேகர் சார் கூறுவனவற்றை ஒருபக்கம் நினைவில் எழச் செய்தன. வெறுமே வார்த்தைக்கு வார்த்தை அல்ல, கவிதையென்பது சொல்லிணைவுகளின் வழியே குறிப்பிட்ட உணர்வுநிலைகளை, இசையை, சந்தத்தை, பண்பாட்டையும் அதன் விவேகத்தையும் வெளி கொணர்வது. எக்கவிதையையும் முழுமையாக ஒரு மொழியில் இருந்து மற்றொன்றிற்கு நூறு சதவீதம் கொண்டு செல்ல இயலாது. பிறிதொரு மொழியில் கவிதை நிகழ்த்துவதை உள்வாங்குவதன் வழியாக அம்மொழி சொற்களுக்கு இணையான சொல்லை கையாள்வதனூடாக மூலத்தில் நிகழ்ந்ததை நம் பண்பாட்டிற்கு கொண்டு வருதலே மொழியாக்கத்தில் நாம் சாத்தியமாக்கும் உச்சநிலை. கவிதை குறித்த இவ்வரையறையினை கலந்துரையாடல் நெடுக சொல்லியும் குறிப்புணர்த்திய படியேயும் இருந்தார்.
இதற்கு இணையாகவே மொழி காதில் ஒலிப்பதற்கான தேவையையும் வலியுறுத்தினார். நவீன வாசிப்பிற்கு வருகையில் நாம் மறந்துவிட கூடிய விஷயம், மொழி காதில் ஒலித்து நம்மில் கிளர்த்தும் உணர்வுநிலைகள். அடிப்படையில் மொழி செவிக்குரியது. கற்றலின் கேட்டல் நன்று என்பது உணர்த்துவது அதை தானே. கலந்துரையாடலின் தொடக்கத்தில் முதன்முதலில் தான் பேச மட்டுமே கற்று கொண்டதையும் பின்னரே எழுத்து மொழிக்கு மாறியதையும் கூறிய பின், திருக்குறளை, சிலம்பை வாசிக்கையில் அதன் சந்தம் கிளர்த்தும் உணர்வுகளின் வழி அடைந்த திறப்பையும் பரவசத்தையும் பகிர்ந்தது பின் வந்த உரையாடலின் பொழுது அழுத்தமாகியது.
தாமஸ் திருக்குறளை எல்லா வகையிலும் கவிதையாக மட்டுமே அணுகுகிறார். திருக்குறளை நீதி நூலாக, அற நூலாக, கவிதை நூலாக அல்லது இவையெல்லாம் சேர்ந்த முழுமையாகவா என்ற கேள்விக்கு முழுமையில் என்று பதிலளித்திருந்தார். ஆனால் கவிதையென்பதே முழுமையை நோக்கிய ஒரு தாவல் தானே என்பது உரையாடலின் வழி சொல்லப்படாமல் கடத்தப்பட்டது. குறிப்பாக தெய்வம் தொழாள் என்ற குறளுக்கு கொடுத்த விளக்கம். அக்குறளின் நேர் கருத்தான புற சட்டகம் இன்று காலாவதியாகி விட்டாலும் கவிதையென அணுகி அர்ப்பணிப்பின் மகத்துவத்தை சென்றடைந்த விதம். அந்த சொற்களை பெரும் உள எழுச்சி ஒன்றுடனேயே கேட்டேன். மொழிகளை கடந்து வந்து நிற்கும் பெரும் கவிதை வாசகர் ஒருவரை காணும் நிறைவு.
அறம் போன்ற சொற்களுக்கு அவர் இடத்திற்கேற்றவாறு பொருளமைந்த சொற்களை கையாண்டதையும் தவம் போன்ற குறிப்பிட்ட சொற்களுக்கு இணையான சொல்லில்லை என்கையில் அவ்வண்ணமே பயன்படுத்திய விதமும் மொழியாக்கம் செய்பவர்களுக்கு கற்றலுக்கு உரியவை. இதனூடாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதியை வாங்கியதும் சொற்களை அவற்றின் வேர் சொல் வரை சென்று அறிவது எழுத்தாளர்களுக்கு எத்தனை முக்கியமானவை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை.
இவ்வுரையாடல் மீண்டும் ஒரு சிறந்த ஆசிரியரிடம் பயிலும் தனிக்கல்வி எத்தனை வீரியமிக்கது என்பதை காட்டியது. அவரது ஆசிரியர் கே.வி ராமகோடி போன்ற சிறந்த தமிழாசிரியர்களின் பங்களிப்பை தாமஸின் வழியாக உணர செய்தது. உரையின் முடிவில் ராஜகோபாலன் சார் சொன்னது போல ஒரு தமிழ் வாசகனாக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மிக மகிழ்வான அமர்வுகளில் ஒன்று.
உரையாடலின் தொடக்கமாக அமைந்த சஹா அவர்களின் சிற்றுரையை குறித்தும் சொல்ல வேண்டும். சஹாவின் பின்னர் தாமஸ் கலந்துரையாடலில் பகிர்ந்து கொண்ட கவிதை மொழியாக்கம் குறித்த விஷயங்களுக்கான சிறப்பான அடித்தளமாக அமைந்தது. தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்து அமெரிக்க ஆங்கில பண்பாட்டில் வளர்ந்த ஒருவர், தன்னுடைய வேர் பண்பாடான தமிழ் எவ்வண்ணம் தன்னில் தாக்கம் செலுத்துகிறது. அதன் சொற்களின் சந்தம் மட்டுமே தன்னில் உருவாக்கும் உணர்வுகளையும் அதை தாமஸின் மொழியாக்கத்திலும் உணர முடிகிறது என்றார். அதே போல தமிழர்களான பெற்றோர் எவ்வண்ணம் திருக்குறளின் சிந்திக்கிறார்களோ, அதை தனக்கும் ஆங்கில வாசக உலகத்திற்கும் சாத்தியப்படுத்தியதையும் சுட்டினார். அதே போல காலத்துக்கு ஒவ்வாத கருத்தமைந்த குறள்கள் என்று தாமஸ் எதையும் விலக்காததையும் முழுமையாக பண்டைய இலக்கிய செல்வமொன்றை கொணர்ந்திருக்கிறார். முடிவுகளை வாசகனுக்கே விட்டுவிட்டு மொழியாக்குநராக மட்டுமே தன்னை நிறுத்தியுள்ள விதத்தை கூறி சிறப்பான தொடக்கவுரையாக அமைந்தது, சஹாவினுடையது.
அடுத்து பேசிய ஜெகதீஷ் குமாரின் உரை, ஒரு தமிழக வாசகருக்கு ஔவையின் பாடல்கள் ஆங்கிலத்தில் எந்த உணர்வுகளை ஏற்படுத்துகிறது. ஔவையின் அங்கதமும் பயின்று வந்திருக்கும் சிறப்பையும் கூறி நிறைவுற்றது.
முடிவில், தாமஸ் அவர்கள் மனதிற்கு மிக நெருக்கமாகி விட்டார். அவரை வேறு ஒருவர் என்றே நினைக்க முடியவில்லை. நம் பண்பாட்டை அறிந்த நம்மில் ஒருவராகவே நினைக்கிறது மனம். பல வகையிலும் அறிதல் மிக்க கலந்துரையாடலாக அமைந்தது. ஒருங்கமைத்த அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் கலந்துரையாடலை சிறப்புற வழி நடத்திய ராஜகோபாலன் சார் அவர்களுக்கும் நன்றிகள். இனி அவரது நூல்களை வாங்கி வாசிக்க வேண்டும்.
அன்புடன்
சக்திவேல்