நமது கட்சியரசியல்,நமது அறம் – கடிதம்

லோகமாதேவி

மயிலாடுதுறை பிரபு – ஒரு போராட்டம்

ஜெயமோகன் அவர்களுக்கு

மயிலாடுதுறை பிரபுவின் போராட்டம் குறித்து வாசித்து அதிர்ந்து போனேன். இப்படியான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மரங்களை பார்த்தாலே அவற்றை வெட்ட வேண்டும் என்று தோன்றும் இந்த தாவரகுருட்டை, இதிலும்  சுயநலமாக தங்களது செல்வாக்கை செலுத்தி பிறரை துன்புறுத்தும் மனிதர்களை நினைக்கையில் துக்கமாக இருக்கிறது பிரபுவின் சூழல் சார்ந்த பல முன்னெடுப்புக்களை அறிவேன். இப்படி இடைஞ்சல்களும் அச்சுறுத்தல்களும் இருக்கையில் எப்படி தனிமனிதர்கள் சூழல் பாதுகாப்பை குறித்து கவலைப்படவும் ஏதேனும் செய்யவும் நினைப்பார்கள்?

பிரபு இவ்வாறு சொல்லியிருந்தார். “தமிழ்ச் சூழலில் பொதுமக்கள் அரசாங்கம் மீது எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் இருப்பார்கள். எனக்கு எப்போதும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உண்டு. ஒரு ஜனநாயக நாட்டின் அரசாங்க அமைப்பு அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்க முடியும். ஆங்காங்கே தவறுகள் இருக்கலாம். குறைகள் இருக்கலாம். முறைகேடுகள் இருக்கலாம் . அதற்காக ஒட்டு மொத்த அமைப்பின் மேலும் அவநம்பிக்கை கொள்வது சரியானது அல்ல என்ற எண்ணத்தை வலுவாகக் கொண்டவன் நான்என்று குறிப்பிட்டிருந்தார்

நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சில வருடங்களுக்கு முன்னால்  வீட்டு முன்னால் நடப்பட்டு வளர்ந்து மலரத்துவங்கி இருந்த 6 புங்கைமரங்களை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வந்து அடியோடு ஒருநாள் வெட்டி அகற்றினர். நான் இந்த கிராமத்துக்கு வசிக்க வந்தே நிறைய மரம் செடி கொடிகளுடன் அரிய மூலிகைகளையும் சேகரித்து வளர்த்து  இயற்கையுடன் நெருக்கமாக இருக்கும் விருப்பத்தின் பேரில்தான் மேலும் ஒரு தாவரவியலாளராக எந்த மரம் எத்தனை வளரும் எவ்வளவு கிளை விரிக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியும் எனவே யாருக்கும் எந்த தொல்லையும் இல்லாதவாறு மரங்கள் வளர்த்து கொண்டிருந்தேன். என்னால் எந்த வகையிலும் யாருக்கும் தொந்தரவு இருந்ததில்லை எனினும் மரங்கள் அப்படி செழித்து வளர்வது பலருக்கு பிடிப்பதில்லை, வெட்டிய நபர் வீட்டில் இருந்த பிற மரங்களையும் வெட்டுவதாக அச்சுறுத்தி விட்டும்போனார்

நான் அவை வெட்டப்பட்ட போதும் அச்சுறுத்தப்பட்ட போதும் காவல் துறையின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவளாக இருந்தேன். ஒரு கல்வியாளராக ஆசிரியராக பெரும் நம்பிக்கையுடன் நடந்தவைகளை குறித்து புகார் எழுதி காவல் நிலையம் சென்றேன். வீட்டில் நானும் மிக சிறியவர்களாக மகன்களும் மட்டும் இருந்தோம்.அவர்களையும் அழைத்துக்கொண்டு கல்லூரிக்கும் பள்ளிக்கும் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றோம் அங்கிருந்த காவலர்களுக்கு நான் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது புரியவில்லை எனவே தமிழில் நடந்தவைகளை விவரித்தேன் . ஒரு இளம் காவலர் ஆர்வமாக அப்போதே என்னுடன் புறப்பட்டு என் காருக்கு பின்னால் தொடர்ந்து வந்து வீட்டை, வெட்டப்பட்ட மரங்களை இனி வெட்டிவிடுவதாக சொல்லப்பட்ட மரங்களை எல்லாம் பார்த்தார்.

’’எந்த தொந்தரவும் இல்லையே இந்த மரங்களால வெட்டாம நான் பார்த்துக்கறேன்’’ என்று நம்பிக்கை அளித்துவிட்டு சென்றார்.நான் முதன் முதலாக அப்போதுதான் காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறேன். அதுவே கடைசியுமாகிவிட்டது

நான் அந்த கிராமத்தில் எங்கும் அதிகம் வெளியில் போனவளில்லை வாசித்துக்கொண்டு மகன்களுக்கு கதை சொல்லிக்கொண்டு தோட்டத்தை பராமரித்துக் கொண்டிருந்த எளிய ஆசிரியை நான். காவார்களை அணுகியது முதல்முறையாதலாலும் என் தோட்டத்து மரவளர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று அறிந்திருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஆனால் மறுநாள் வீட்டுக்கு ஒரு கூட்டமாக ஆட்கள் வந்து ரகளை செய்தார்கள் அப்போது காவலர்களும் உடனிருந்தார்கள். புகார் அளித்தது நான் ஆனால் விசித்திரமாக என் வீட்டிலிருந்து பாம்புகள் அடுத்த வீட்டுக்கு போவதாக புதிதாக ஒரு அபாண்டத்தை சொல்லி பலர் மிரட்டினார்கள்.நான் வாழ்க்கையில் மறக்கவே முடியாத இழிவு என்றால் அப்போது நிகழ்ந்தவை தான்.

உடன் வந்தவர்களுக்கு எதற்கு சண்டையிட்டு என்னை இழிவு படுத்துகிறோம் என்பதே தெரியவில்லை. யாரோ அனுப்பி வந்திருக்கிறார்கள்.வீட்டில் இருக்கும் அனைத்து மரங்களையும் வெட்டவேண்டும் என்று ரகளை, அதில் பலர் குடித்திருந்தார்கள். மகன்கள் பயந்து அலறிக்கொண்டு என்னை கட்டிக்கொண்டிருக்க யார் உதவியும் இல்லாமல் அவர்களை தடுக்க முடியாமல் இருந்தேன்

காவல் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து மேலும் இரு காவலர்கள் வந்தார்கள் அவர்களும் அதே கும்பலுக்கு வேண்டியவர்கள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை

மரங்கள் வளர்ப்பது அத்தனை பெரிய தவறென்று நான் நினைத்திருக்கவே இல்லை. எனக்கு பெரிய கனவு இருந்து ஒரு துண்டு நிலத்தையாவது என் விருப்பப்படி ரசாயனங்கள் இல்லாமல் பாதுகாத்து நல்ல தூய கற்று வரும் ஓரிடத்தில் வாழ வேண்டும் என்று

அதன்பொருட்டு நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அடுத்தடுத்த நாட்களில் யார் யாரோ அகாலத்தில் வந்து சண்டையிட்டார்கள் நான் அந்த ஊருக்கான காவல் உயரதிகாரி ஒருவரை காணச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அங்கு சென்றேன்

அந்த அதிகாரி வரும் வரை மகன்களுடன் சிவப்பு சிமென்ட் பூசப்பட்ட ந்த படிக்கட்டுகளில் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருப்பேன். அப்படி பலநாட்கள் அவரிடம் முறையிட்டு கெஞ்சி மரங்களை காப்பாற முயன்றேன் அவர் வீட்டுக்கு வந்து பார்ப்பதாக சொன்னார்

ஆனால் வீட்டுக்கு வந்து  மரங்களை பார்த்தும் என்னை அவரும் அச்சுறுத்த துவங்கினார்

உடனே இந்த மரமெல்லாம் வெட்டிரு இல்லாட்டி வேரில் பக்கத்து வீட்டுகாரங்க விஷம் வச்சுருவாங்க என்றெல்லாம் மிரட்டினார்.

ஒரு தனி மனுஷியாக இரு குழந்தைகளுடன் அந்த மரங்களை பாதுகாக்க நான்  பட்ட கஷ்டங்களை இப்போதும் என்னல முழுமையாக எழுதக் கூட முடியவில்லை

காவல் துறை அரசாங்கம் கல்விக்கென்றிருக்கும் கெளரவம் என்று என் நம்பிக்கைகள் எல்லாம் தரைமட்டம் ஆன காலமது

அந்த உயரதிகாரி மீண்டும் ஒரு நாள் வீட்டுக்கு வந்து 2 நாட்களில் எல்லா மரத்தையும் வெட்ட வேண்டுமென ஆணையிட்டு சென்றார்

செய்வதறியாது  பைத்தியக்காரி போல பசுமை விகடன் உட்பட யார் யாருக்கோ அழைத்து பேசினேன். எந்த உதவியும் கிடைக்கவில்லை. அந்த கிராமத்தில் நான் வெளியூரிலிருந்து வந்தவள் என்பதால் இது ஒரு வேடிக்கையாக இருந்தது போல யாரும் உதவிக்கு வரவில்லை, நிராதரவாக இருந்தேன்.

2 நாட்கள் கழித்து அந்த அதிகாரி  மரம் வெட்டும் வேலையாட்களுடன் ஒரு லாரியும் கொண்டு வந்தார்

எங்கள் கண்ணெதிரிலேயே மூன்று பெருமரங்களை, ஒரு வாகை , கத்திச்சவுக்கொன்று மரமல்லியொன்று மூன்றும் 8 வருடங்கள் ஆன பெருமரங்கள்  வெட்டி லாரியிலேற்றிக்கொண்டுபோனார். அம்மரங்களுடன் எனக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு இருந்தது, அவை வெட்டப் படுகையில் நான் அமைதியாக  பார்த்துக்கொண்டிருந்ததை அந்த மரங்கள் எப்படி எடுத்துக்கொண்டிருக்கும் என்று நான் இன்னும் குற்ற உணர்விலிருக்கிறேன்,

சீருடையுடன் ஒரு காவல் உயரதிகாரி இதை செய்கையில் ஒருத்தி எதுவும் செய்யமுடியாமலாகியது. என் மகன்களுகிணையாக பிரியத்துடன் நான் வளர்த்த அந்த மரங்கள் என் கண்ணெதிரெ அடியோடு வெட்டப்பட்டன தென்னைகளையும் பிற மரங்களையும் 2 நாட்களில் முழுமையாக வெட்டிவிட்டு தன்னிடன் வந்து தகவல் சொல்ல வேண்டும் என அவர் அச்சுறுத்தி விட்டுத்தான் புறப்பட்டு போனார்

இரண்டு நாட்கள் கழித்து அன்று மரம் வெட்டிய ஆட்கள் வந்து அந்த காவலதிகாரி மரம் வெட்டியதற்கு கூட கூலி தரவில்லை என்றும் வெட்டிய மரங்களை 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார் என்றும் சொல்லிப்போனார்கள். அந்த கெடு கொடுக்கப்பட்ட இரண்டுநாட்களில் அந்த அதிகாரிக்கு சேலத்துக்கு மாற்றலாகிவிட்து இல்லையெனில் நான் எல்லா மரங்களையும் இழந்திருப்பேன்

எத்தனை  முயன்றும் என்னால் அதை மறக்கவே முடியவில்லை.அப்போது எதற்கென்றே தெரியாமல் பலர் என்னை அச்சுறுத்தினார்கள்.அரிவாளால் வெட்ட வந்த ஒருவனுக்கு பயந்து வீட்டுக்குள் அமர்ந்திருக்கையில் வாசல்கதவை எட்டிஎட்டிஉதைத்து கூச்சலிட்டவர்கள், காவல் அதிகாரிகளின் முன்பே என்னை இழிவாக பேசியவர்கள் என்று எனக்கு அவற்றை நினைக்கவே அச்சமாக இருக்கிறது இன்றும்

 புங்கை மரங்களை வெட்டியவர் ஒரு கட்சியில் செல்வாக்குடன் இருந்தவருக்கு உறவினர் என்றும் அவர் மீது புகாரளித்தினால் எனக்கு அத்தனை பிரச்சனைகள் என்று  பிற்பாடு தெரிந்துகொண்டேன். அதன் பிறகு பல வருடங்கள் தேர்தல் அதிகாரியாக பணியாற்றுகையில் அவற்றையெல்லாம் நினைத்துக்கொள்வேன்எந்த பொருளும் இன்றி நான் எனக்கான கடமையை சரியாக செய்து கொண்டிருந்தேன். இயற்கையின் மீது அக்கறை கொண்டவளாக ஒரு துண்டு நிலம் வாங்கி  மரங்கள் வைத்து வளர்க்க நினைத்தற்கு எனக்கு செய்யப்பட்டது  பெரிய அநியாயம்

இன்று பிரபு இதை தெரிவித்த போது எனக்கு இவற்றை சொல்லத்தோன்றியது. . பிரபு சொல்லித்தான் எனக்கு துணைஆட்சியர் தாசில்தாரெல்லாம் இதில் தலையிடும் அதிகாரம் உள்ளவர்கள் என்று தெரிந்தது. இப்போதும் வீட்டில் மரங்கள் இருக்கின்றன, அவ்வப்போது பிரச்சனைகள் செய்கிறார்கள் ஆனால் ஒரு போதும் காவலுதவியை மட்டும் நான் நாடுவதில்லை

காவல் துறை, சமூக பாதுகாப்பு, அரசு, கல்வியின் நிமிர்வு என அனைத்திலும் நம்பிக்கை முற்றாக இழக்கச் செய்த நிகழ்வு அது என் ஆதங்கத்தை என் மாணவர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருந்தேன் சில வருடங்கள். பல மாணவர்கள் வீட்டுக்கு தாவரங்களை பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் வருவதுண்டு பல அரிய வகை தாவரங்கள் வளர்க்கிறேன் இனியும் எப்போது வேண்டுமானாலும் அவைகளும் வெட்டப்படலாம் என்றும் தயாராக இருக்கிறேன் பிரபுவுக்கு நடப்பவற்றை கேள்விப்படுகையில் இன்னும் அச்சமாக இருக்கிறது. இது எனக்கும் பிரபுவுக்கும் மட்டுமல்ல பலருக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  

இவற்றை சொல்ல வாய்ப்பளித்ததற்கு நன்றியுடன்

லோகமாதேவி

***

அன்புள்ள லோகமாதேவி,

நீங்கள் ஒரு தாவரவியல் நிபுணர், உலகில் தலைசிறந்த தாவரவியல் இதழ்களில் இன்று உங்கள் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் பேராசிரியை ஆக பணியாற்றுகிறீர்கள். ஆனால் உங்களுக்கும் இதுதான் நிலைமை. எவருக்கானாலும் இதுவே நிலைமை. இதே சூழல் இன்று தமிழகத்தின் எந்தச் சிற்றூரிலும் உள்ளது.

அரசியலும் ரௌடித்தனமும்ல் இன்று கைகோத்துள்ளன. அதை எதிர்கொள்ள சாமானியர்களால் இயலாது. எவராக இருந்தாலும் அதன்முன் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவர்களே.சட்டம், காவல்துறை, ஊர்க்கூட்டம் எல்லாமே அவர்களின் ஆட்சியில்தான் உள்ளன.

அரசியல் இதில் ரௌடித்தனத்துடன் கலந்துள்ளதன் சிக்கல் ஒன்று உண்டு. நீங்கள் எவரிடமும் எங்கும் நியாயம் கோரமுடியாது. பேச ஆரம்பித்ததுமே அந்த அரசியலுடன் சார்புள்ளவர்கள் அந்த ரௌடித்தனத்தை ஆதரிப்பார்கள். அதற்காக களமிறங்கி உங்களை இழிவுசெய்யவும் ஏளனம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். அதை தங்கள் அரசியல்கடமை என்றே நினைப்பார்கள்.

நீங்கள் அப்பிரச்சினையை எதிர்கொண்ட காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை. இருந்திருந்தால் அதில் புலம்பியிருப்பீர்கள். உங்களுக்கு அணுக்கமான சிலர் ‘அடடா’ என்றிருப்பார்கள். மிகப்பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரியாது. இதோ பல ஆயிரம்பேர் படிக்கும் ஒரு தளத்தில் ஒரு கடிதமாக இது வருகிறது. படிப்பவர்களில் அனேகமாக 90 சதவீதம்பேருக்கு ‘மரம்தானே, என்ன பெரிய விஷயம்?’ என்றே தோன்றும். ஏதேதோ அற்பகாரணங்களுக்காக சமூக ஊடகங்களில் பொங்குபவர்களுக்கு இது ஒரு விஷயமாகவே இருக்காது. இந்த மனநிலையே பொதுவாக தமிழ்ச்சமூகத்தில் உள்ளது. நம்மிடம் உள்ள இந்த பொதுமனநிலையே உண்மையான பிரச்சினை.

அவ்வகையில் பார்த்தால் மயிலாடுதுறை பிரபுவின் விஷயத்தில் அந்த ஊர்க்காரர்கள் மரங்களுக்காக புகார்கொடுக்க வந்தது ஒரு மிகச்சிறந்த விஷயம். அவர் சட்டத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டதும் கவனத்திற்குரியது. அவரைப்போல இயற்கை மீதும் அறத்தின்மீதும் ஆர்வம்கொண்ட மிகச்சிலர் அவருடன் இருந்தாலே போதுமானது

ஜெ

முந்தைய கட்டுரைதண்ணீரின்மை – உஷாதீபன்
அடுத்த கட்டுரைவ.சு.செங்கல்வராய பிள்ளை