தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலம். விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமாரின் மகள் ஆராதிரிகா, பாலும் தெளிதேனும் பாடித் துவக்க , மொழியாக்க வல்லுனரும், கவிஞருமான தாமஸ் புரூக்ஸ்மா அவர்களுடனான உரையாடல் இனிதே ஆரம்பமானது. முதல் பத்து நிமிடம் எங்கே நண்பர்கள் அதிகம் வரவில்லையோ என்று நினைக்க நினைக்க கிட்டத்தட்ட 60 நண்பர்கள் ZOOM-லும், 30 / 35 நண்பகள் யூட்யூப் நேரலையிலும் கலந்துகொண்டார்கள். நான் இந்த நிகழ்வை பற்றிய குறிப்பை அனுப்பியதும், UT Austin-ல் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கும், ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் டைலர் ரிச்சர்டும் கலந்து கொள்வேன் என்று பதில் அனுப்பினார். அவரும் வந்திருந்து சிறப்பித்தார்
ஜாஜா, அவரது மனைவியிடம் தாமஸ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த குறள்களை வாசித்துக்காட்டியதாகவும், அவர் பத்துக்கு எட்டு குறள்களை தமிழில் நினைவுகூர்ந்தார் என்று அறிமுக உரையில் கூறியது , புரூக்ஸ்மா அவர்களின் மொழியாக்கத்தின் சிறப்பைச் சொல்ல நல்லதொரு துவக்கம். சஹா, தாமஸ் மொழியாக்கம் செய்த திருக்குறள் நூல் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதியிருந்தாலும், இந்த நிகழ்வுக்காக, தமிழுடன் அவனுக்குள்ள ஈடுபாட்டை எடுத்துச் சொல்லி மேன்படுத்திய உரையாற்றினார். குறளை தமிழில் கேட்கும் பொழுது இருக்கும் இனிமையை அவர் ஆங்கிலத்திலும் கொண்டு வந்ததை உதாரணங்களுடன் சொன்னார். ஜெகதீஸ் , தமிழ் இலக்கியம் கண்ட ஔவையார்கள் பற்றிய ஒரு அழகிய முன்னுரை கொடுத்து, தாமஸ் மொழியாக்கம் செய்துள்ள அவரது பாடல்களில் நான்கை தேர்வு செய்து பேசினார். ஜெகதீஸ் ஆங்கிலமும், தமிழும் கலந்து பேசினாலும், அவரது உரை நல்லதொரு நீரோட்டம்போல் அமைந்தது. அவர் ஆங்கிலத்தில், அமெரிக்கப் பள்ளிகளில் பாடம் நடத்துபவர் என்ற மேன்மை தெரிந்தது
தாமஸுடன் உரையாடல் இருக்கிறது என்றவுடனேயே நம் நண்பர்கள் அவரது புத்தகங்களை , குறிப்பாக ‘The Kural’ வாங்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் கேட்ட கேள்விகளில் அது பிரதிபலித்தது. திருக்குறள் , உலகம் கொண்டாடும் நூல் என்றாலும், மாறிவரும் காலத்தால், சிந்தனையால், மதம், பெண்ணியம், ஆண் ஆதிக்கம் என்ற பலவிதமான குழப்பங்களை கோடிட்டு கேள்விகள் வந்தால் என்ன செய்வது என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. தாமஸ் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும், தனது 25 வருட பரிச்சியமான தமிழின் உதவியுடன் ஆத்மார்த்தமாக தெளிவாக பதில் சொன்னார். அதுவும் லோகாவின் கேள்வியையும் அதற்கு அவர் சொன்ன பதிலையும் , நிகழ்வில் கலந்துகொள்ளாத நண்பர்களுக்கு ஒரு suspense-ஆக வைத்து விடுகிறேன்.
என்ன வார்த்தை எதற்காக எடுத்தாய் என்று மொழியாக்க வல்லுனர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் இங்கும் இருந்தன. ‘அறம்’, ‘தவம்’ போன்ற வார்த்தைகளுக்கு அவர் எடுத்துக்கொண்ட குறள்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தியதை விளக்கினார். அவரது பதிலில் ஒரு பணிவும் அடக்கமும் இருந்தது. அடுத்து வருபவர், தான் செய்வதை மேலும் சிறப்பாக செய்யலாம் என்று ஒரு ஏற்றுக்கொள்ளல் இருந்தது.
தாமஸ் திருக்குறள் , ஔவையார் பாடல்களையும் மட்டுமா வாசித்தார். சிலப்பதிகாரப் பாடல்களையும் மனப்பாடம் செய்தார், என்று காளிப்ரஸாத் கேட்ட கேள்விக்கு பதிலாக வந்தது. அறம் நூலை வாசித்துக்கொண்டிருப்பதாக சொன்னார். மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களில், Stories of The True குறிப்பிட்டுப் பேசப்படுகிறது என்பதையும் நினைவு கூர்ந்தார். ஆங்கிலமொழி பேசுபவர் ஒருவர் மரபு இலக்கியம் முதல் இன்றைய நவீன சிறுகதைகள் / நாவல்கள் வரை வாசிப்பது, நம்மை நாம் ஒரு முறை திரும்பி பார்த்துக்கொள்ள வேண்டும் என ஒரு கொட்டு வைக்கிறது. ஔவையை பாட்டி, பாட்டி என்று அவ்வளவு பிரியமாக சொல்கிறார். தமிழ் மண்ணில் வாழ்ந்ததால், பாசம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டதை நம் மதுரை பக்கத்துவீட்டுக்காரனைப்போல உணர்வுப்பூர்வமாக சொன்னார்.
தாமஸின் திருக்குறள் தனித்து நிற்பதின் காரணம். அவர் உரையாடலின் மூலம் , எனக்குக் கிடைத்த புரிதல், தாமஸ்,திருக்குறளை, நீதி நூல், காலம் கடந்த பொருள் சொல்லும் நூல், கவித்துவத்தை பொதித்து வைத்திருக்கும் நூல், இசையை, நகைச்சுவையை ஒளித்துவைத்திருக்கும் கவிதைகள் அடங்கிய நூல் என்று எல்லா பார்வையிலும் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழ்ப் பண்பாட்டில் வாழ்ந்து உணர்வுப்பூர்வமாக உள்வாங்கி மூலக் கவிஞனாக நின்று இந்த நூலைக் கொண்டு வந்துள்ளார். அவருடன் இப்படி ஒரு உரையாடல் நடத்தக் கிடைத்தது நமது நல்லூழ். தமிழும் தமிழர்களும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்
நிகழ்வின் நேரடி அலை அப்படியே, அங்கேயாதான் உள்ளது. கலந்துகொள்ள தவறவிட்ட நண்பர்கள் தவறாமல் பார்த்துப் பயன்பெறவும்.
நிகழ்வின் பொழுது உங்கள் ஐரோப்பா பயணம் ஆரம்பிக்க இருக்கிறது என்று தெரிந்திருந்தால், முதல் கேள்வியை உங்களை கேட்க வைத்திருப்போம். ஆனாலும் கடமை தவறாமல், Airport-லிருந்து அழைத்து நிகழ்வு எப்படி சென்றது என்று கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள் என்பதில் மகிழ்கிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்.