என்றுமுள்ள கனவுகளில் இருந்து…

இந்து மதம் என ஒன்று உண்டா?-3

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

இந்து மதம் என ஒன்று உண்டா? – 1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்து மதம் என ஒன்று உண்டா? கட்டுரையில் மதம் பற்றி விரிவாக எழுதியிருந்தீர்கள்.

இது சம்பந்தமாக அண்மையில் படிக்கக் கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. (ஒரு வேளை ஏற்கனவே உங்கள் கவனத்திற்கு வந்திருக்கலாம்)

துருக்கியில் கோபெக்லி டெபெ (Gobekli Tepe) அகழாய்வுகளின் சான்றுகள்படி இந்த இடம் சுமார் 11,000 வருடங்களுக்கு முன்பு வழிபாட்டுத்தலமாக இருந்திருக்கிறது. கோவில் போன்ற வளாகத்தில் உயர்ந்த ஒற்றைக்கல் தூண்களில் விலங்குகளின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த வளாகம் கி மு 9500 லிருந்து கி.மு. 8000 வரை உபயோகத்திலிருந்தது என்று அனுமானிக்கப்படுகிறது.

ஆனால் அருகாமையில் அந்தக் காலகட்டத்தில் எங்கும் வேளாண்மை செய்யப்பட்டதற்கோ, கால்நடைகள் பரமாரிக்கப்பட்டதற்கோ தடயங்களே இல்லை. வேளாண்மை தொடங்கிய பிறகே நிரந்தரமான குடியிருப்புகள் அமைந்தன. அதன் பிறகே மத அமைப்புகள் உருவாகின என்று இதுநாள்வரை நம்பப்பட்டு வந்ததை இந்த அகழாய்வு கேள்விக்குள்ளாக்குகிறது. வேட்டை சமூகங்கள் வேளாண்மை செய்வதற்கு முன்னரே, ஏன் கால்நடை சமூகமாவதற்கு முன்பே, பெரும்சுவர்கள் கட்டி கோவில் எழுப்பி வழிபாடுகள் நடத்தினார்கள் என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக அருகாமையிலுள்ள காரஹான் டெபெ (Karahan Tepe) என்ற இடத்தில் அண்மையில் நடந்த அகழாய்வுகளில் இதற்கு சற்றும் குறையாத கோவில் அமைப்புகள் வெளிவந்துள்ளன. இந்த இடம் சுமார் 200 ஆண்டுகள் பிந்தையதாக கருதப்படுகிறது. இங்கு சுவர்களில், விலங்குகள் அல்லாமல் மனித உருவங்கள் தென்படுகின்றன. ஓர் உள்ளறையில் லிங்கம் போன்ற சிற்பங்களும், பலி கொடுத்த திரவங்களை வெளியே கொண்டு செல்ல ஓடைகளும் காணப்படுகின்றன. இயந்திரங்கள் இல்லாமல் நெடுந்தொலைவிலிருந்து பெருங்கற்களை கொண்டுவந்து ஒரு பெரும் உயரத்திற்கு ஏற்றியிருக்க வேண்டும். யார் இவர்கள்? எது இவர்களை இப்படி செய்ய வைத்தது?

நீங்கள் அடிக்கடி சொல்வது போல மதம் என்று இன்று நாம் நம்புவதன் பெரும்பகுதி பழங்குடிகளின் வாழ்க்கைமுறையின் தொடர்ச்சியாக நம் ஆழ்மனத்தில் உறைந்துள்ள படிமங்களால் ஆனது என்பதே நிரூபணமாகிறது.

– வைகுண்டம்

மதுரை

அன்புள்ள வைகுண்டம்,

நாகரீகங்களைப் பற்றிய பொதுவான புரிதல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாளர்களின் புரிதல்களை ஒட்டியே இன்னமும் மார்க்ஸியர்கள் சிந்திக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை உபரி என்பதே நாகரீக வளர்ச்சியாக ஆகும். (ஒரு சமூகத்தில் அவர்களின் வாழ்க்கைத்தேவைக்கு மேல் உற்பத்தியாகும் பொருள் உபரி. அதுவே செல்வமாகி முதலீடாகி, நாகரீகங்களை உருவாக்குகிறது) ஆனால் வேட்டைச்சமூகங்களில் உபரி இருக்காது. ஏனென்றால் வேட்டைப்பொருட்களை பெரிதாகச் சேமிக்க முடியாது. வேட்டைப்பொருட்களை விற்க சந்தைகளும் இல்லை.

வேட்டைச்சமூகங்கள் தேவைக்கு மட்டுமே வேட்டையாடுபவை. அவை உற்பத்திச் சமூகங்கள் அல்ல. ஆகவே வேட்டைச்சமூகங்களால் பெரிய நாகரீகங்களை உருவாக்க முடியாது. அவை நிலையான சமூகங்களாகவும் இருப்பதில்லை. அவை பெரும்பாலும் நாடோடிக்குடிகளே. வேட்டைச்சமூகத்தில் இருந்து மேய்ச்சல் சமூகங்கள் உருவாகின்றன. அவை காலப்போக்கில் வேளாண்மைச் சமூகங்கள் ஆகின்றன. இதெல்லாம்தான் நாம் அறிந்து, இயல்பான உண்மைகளாக ஏற்றுக்கொண்டிருக்கும் கருத்துகள். இவை மார்க்ஸிய சமூக – வரலாற்றாசிரியர்களால் உருவாக்கப்பட்டவை.

இந்தக் கருத்துகளின் போதாமைகள் இரண்டு. ஒன்று, இவை மானுட உள்ளத்தின் இயல்பான கற்பனைத்திறனை, மானுட இனத்தின் கூட்டுக்கனவை உதாசீனம் செய்கின்றன. மானுடர் செய்பவை எல்லாமே ‘தேவை’யின் பொருட்டே என இவை புரிந்துகொள்கின்றன. தேவை இல்லாத எதையும் மானுடர் செய்வதில்லை என்பதனால் எதைக் கண்டாலும் ‘இதன் தேவை என்ன?’ என்றே இக்கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு கேட்கிறார்கள். தொல்பழங்கால மக்களின் பெருங்கற்களை காண்கையில் அவை எல்லாம் இடம்சார்ந்த எல்லையை வரையறை செய்வதற்கானவை என விளக்குகிறார்கள். அதற்கு ஏன் அத்தனை பெரிய கற்கள் என்றால் நெடுந்தூரம் தெரிவதற்காக என்று சொல்கிறார்கள். அதற்கு ஒரு மரத்தின்மேல் ஒரு தோலை கட்டி தொங்கவிட்டாலே போதுமே? மாபெரும் குலக்குறித்தூண் (Totem Pole) களையும் அவ்வாறே விளக்குகிறார்கள். அதற்கு அத்தனை கலைத்திறன் மிக்க செதுக்குவேலைப்பாடுகள் எதற்கு என அவர்களால் சொல்ல முடிவதில்லை.

வேட்டைப்பழங்குடிகள் வேளாண்பழங்குடிகளைப்போல பெரும் எண்ணிக்கையில் இருக்க முடியாது, அவர்களின் சமூகங்களில் அதிகம்போனால் ஆயிரம்பேர்தான் இருக்க முடியும், ஆகவே அவர்களிடம் பெரிய அளவில் உபரி திரளாது, ஆகவே அவர்களால் பெரிய கட்டட அமைப்புகளை உருவாக்கமுடியாது என்பது இன்னொரு கொள்கை. ஒரு குறிப்பிட்ட நிலஅளவுக்குள் வேட்டையாடியாக வேண்டிய, மேய்ச்சல் செய்தாகவேண்டிய பழங்குடிகளின் எண்ணிக்கை பெருகாது என்பதும் வேளாண்மை வழியாகவே குறைந்த நிலத்தில் அதிக உணவு உருவாக முடியும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கொள்கைகள்.

ஆனால் பெருங்கற்கள் இந்தக் கொள்கையை மறுக்கும் தடையங்கள். அவை பல ஆயிரம்பேரின் கூட்டான உழைப்பால் மட்டுமே நிகழக்கூடியவை. வேட்டைச்சமூகங்கள்தான் அவற்றை நிலைநிறுத்தியுள்ளன. உலோகங்களில்லாத காலத்திலேயே மண்ணுக்குள்ளும் வெளியிலுமாக ஐம்பது அடி நீளம் கொண்ட எடைமிக்க பெருங்கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு, கற்களைக்கொண்டே சீராக உடைக்கப்பட்டு, குன்றுகளின் மேல் கொண்டுசென்று நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்படி நிறுத்தவேண்டிய தேவை என்ன, அதற்கான சமூக அமைப்பு என்ன ஆகிய வினாக்களுக்கு மரபான மானுடவியலில் பதில்கள் இல்லை. மார்க்ஸியர்களிடமும் விளக்கம் இல்லை.

அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிவிடலாம் – கடவுள். பெரும்பாலான பழங்குடிகளை இயக்குவது அந்த நம்பிக்கைதான். கடவுள்களின் ஆணைகளே அவர்களை இயக்குகின்றன. கடவுளின் ஆணையாலேயே அவர்கள் ஒன்றுகூடுகின்றனர், பெருங்கட்டுமானங்களை உருவாக்குகின்றனர். சிலசமயம் மிகமிகக் கடுமையான உழைப்பால் கட்டப்பட்ட கட்டுமானங்களை அப்படியே கைவிட்டுவிட்டு இடம்பெயர்கின்றனர். அமெரிக்காவில் நியூமெக்ஸிகோ மாநிலத்தில் செவ்விந்தியப் பழங்குடிகள் மாபெரும் மலைக்குகைக்குள் உருவாக்கிய சிறுநகர்களை கட்டிய சில ஆண்டுகளிலேயே தெய்வங்களின் ஆணையால் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

ஆஸ்திரேலியப் பழங்குடிகளும் வேட்டைச் சமூகங்களே. ஒரு சமூகக்குழுவில் ஆயிரம்பேர் இருப்பது அரிது. ஆனால் அவர்கள் தெய்வங்களால் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை இப்போது கன்பரா என அழைக்கப்படும் நகர் இருக்குமிடத்தில் கூடி பொது முடிவுகளை எடுத்தனர். கூட்டாகச் செயல்பட்டனர். அப்படித்தான் தொல்குடிகளும் செயல்பட்டிருக்க வேண்டும். அக்கூட்டங்கள் இணைந்து பெருங்கற்களை நிறுவின. அவர்களே பின்னர் பெருங்கட்டுமானங்களை உருவாக்கியிருக்கலாம். அதைப் புரிந்துகொள்வதற்கு இந்த வழக்கமான உபரி இருந்ததா என்னும் ‘டெம்ப்ளேட்’ சரிவராது.

அவர்களை இயக்கும் அந்தக் கடவுள் என்பது என்ன? அவர்களின் கூட்டான ஆழுள்ளமா? அல்லது இயற்கையிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட உள்ளறிதலா? அல்லது மானுடஇனத்துக்குள் அதனுயிரியல்பாகப் பொறிக்கப்பட்டுள்ள ஏதாவதா? ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெருங்கற்களை நிறுவிய தொல்குடிகளுக்கு சமைக்கக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் காலம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். எதிர்காலத்தை கற்பனை செய்திருக்கிறார்கள். முடிவிலா எதிர்காலத்தில் தங்கள் குலச்சின்னம் நின்றிருக்கவேண்டும் என கனவு கண்டிருக்கிறார்கள். அந்த அகப்புரிதல், அந்த அடிப்படை உருவகங்கள், அந்தக் கனவு அவர்களுக்குள் எப்படி வந்தது?

வரலாற்றையும் சமூகத்தையும் புறவயமாகவே புரிந்துகொள்ள முயலவேண்டும், புறவயமான தரவுகளும் தர்க்கங்களுமே அடிப்படையானவை. அதை நான் முழுமையாகவே ஏற்பவன். ஆனால் எல்லாவற்றையும் அப்படி புறவயமாகப் புரிந்துகொள்ள முடியாது. மானுட உள்ளத்தை இயக்கிய அடிப்படை விசைகளை புறவயத்தர்க்கம் வழியாக மதிப்பிட்டுவிட எவராலும் இயலாது. அதற்கு முயன்றால் அதை சில்லறைப்படுத்துவோம் (trivialize) அல்லது அன்றாடப்படுத்துவோம். ஆய்வாளர் பலர் செய்வது அதைத்தான்.

பெரிதினும் பெரிது உருவாக்க, தங்கள் எல்லைகளை ஒவ்வொரு கணமும் கடந்துபோக மானுடம் முயன்றபடியே இருக்கிறது. மானுடம் தேவைகளால் இயக்கப்படவில்லை, கனவுகளால் இயக்கப்படுகிறது. உன்னதம், உச்சம், அழகு ஆகிய மூன்றுமே கனவுகளால் வடிவமைக்கப்படுவனதான். ஆகவேதான் அது மாபெரும் ஆலயங்களை எழுப்புகிறது. பெருங்காவியங்களை உருவாக்குகிறது. இலியட்டும் ஒடிசியும் ராமாயணமும் மகாபாரதமும் நமக்கு கிடைக்கின்றன. அக்காவியங்களே சுட்டுவதுபோல மாகாவியங்கள் பல நாவிலேயே புழங்கி மறைந்தன. அதைப்போன்று எத்தனையோ மாநகர்களும் மாளிகைகளும் மறைந்திருக்கும். கல்லில் உருவாக்கப்பட்டவையாதலால், பாலைநிலத்து மணலில் மூழ்கியவை என்பதனால் எஞ்சி நமக்கு கிடைப்பவை சிரியா, துருக்கி பகுதியின் தொல்நகர்கள்.

மனிதனின் ஆணவமும் படைப்பூக்கமும் திகழ்வது அவன் கனவுகளிலேயே. அங்கே அவன் கடவுள்களால் ஆட்டிவைக்கப்படுகிறான், அவ்வப்போது கடவுளுக்கு நிகர் எனவும் உணர்கிறான். பாபேல் கோபுரத்தை மானுடர் விண்ணை தொட்டுவிடும்பொருட்டு கட்டினர் என்பது வெறும் புராணம் அல்ல, ஓர் அடிப்படையான உருவகம்.

ஜெ

***

ஜெயமோகன் நூல்கள்

சாதி ஓர் உரையாடல் வாங்க

சாந்தி ஓர் உரையாடல் – மின்னூல் வாங்க 

இந்து மெய்மை வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க 

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைசி.பி.சிற்றரசு
அடுத்த கட்டுரைவெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி