விஜயா வேலாயுதம் தமிழ் விக்கி
கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் ஹவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம். எழுத்தாளர் திரு.கர்ணன் அவர்களோடு சேர்ந்து இவரிடம் அளவளாவியதாக நினைவு. அதற்குப்பின் மதுரை புத்தகக் கண்காட்சியில் “வாங்க…போய் சாப்டிட்டு வருவோம்…” என்று சர்வ சகஜமாக, மிகுந்த நெருக்கத்தோடு என் தோள் மேல் கை போட்டு அழைத்துச் சென்றபோது, அந்த அன்பில் மிகவும் மன நெருக்கமாகிப் போனேன் நான்.
மிகுந்த எளிய நிலையிலிருந்து புத்தகக்கடை திறந்து கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி ஒரு பெரியபதிப்பகத்தையே இன்று வெற்றிகரமாக நடத்தி வரும் விஜயாபதிப்பக அதிபரான திரு.மு.வேலாயுதம் ஐயா அவர்களின் வெற்றி அவரின் கடுமையான உழைப்பினாலும், சுறுசுறுப்பான நடவடிக்கைகளாலும், எல்லோருடனுமான அன்பான அரவணைப்பினாலும் கைகூடி வந்து, பெயர் சொல்லும் அளவுக்கு அவரை இன்று உச்சியில் நிறுத்தியிருக்கிறது.
காலத்தை வென்றுநின்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்களான, மதிப்பும் மரியாதையும் மிக்க மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புக்களைப் புத்தகமாகக் கொண்டு வந்து, அவற்றை எங்கெங்கெல்லாம் கவனம் பெறச் செய்ய வேண்டுமோ அங்கெல்லாம் கொண்டு சென்று விற்பனை செய்து, பதிப்பகம் மற்றும் விற்பனைப் தொழிலில் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறார் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்கள்.
அவரின் அந்தப் பல்கிப்பெருகிய அனுபவங்களைத் தொடராக எழுதும்படி அமுதசுரபி ஆசிரியர் மதிப்புமிகு திருப்பூர்கிருஷ்ணன் அவர்கள் சொல்ல, புத்தகம் விற்பவனை, வெளியிடுபவனை எழுதச் சொல்கிறாரே என்ற தயக்கத்தோடேயே, அன்பு வேண்டுகோளை மறுக்க இயலாமல், மனதில் அடுக்கடுக்காகத் தோன்றிய தனது பதிப்பக அனுபவங்களை, விற்பனை செயலாக்கங்களை, இளம் பிராயம் முதல் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த ஆழமான வாசிப்பு அனுபவத்தின் பேருதவியோடுகூடிய தனது ஆவலான முயற்சிகளை, இதயம் தொட்ட இலக்கியவாதிகளுடனான தனது நட்புப் பயணத்தை உணர்வு பூர்வமாக, அன்போடும், பண்போடும், மதிப்பு மரியாதையோடும் பதிவு செய்து தனது முதல் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார் ஐயா அவர்கள்.
சகபதிப்பக நிறுவனங்களோடு எத்தகைய ஆழமான உறவினைக்கைக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக வானதிபதிப்பகமே இவரது இந்த அருமையான நூலை வெளியிட்டு அவரை எழுத்துலகில் உயர்த்திப் பிடித்திருக்கிறது. எனக்குள் உறக்கத்திலும் விழித்துக் கொண்டிருந்த இந்தப் படைப்பு மேதைகள் எழுத்து வடிவில் உருப்பெற்றிட முழுமுதற்காரணம் அமுதசுரபி ஆசிரியர் திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் என்று நன்றியோடு தெரிவிக்கிறார்.
கவியரசு கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, மு.வரதராசனார், சுஜாதா, கவிஞர் மீரா, கவிக்கோ அப்துல் ரகுமான், வ.விஜயபாஸ்கரன், ஆகிய படைப்பாளிகளோடு ஏற்பட்ட அனுபவங்களையும், வானதி திருநாவுக்கரசு, அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம், பழனியப்ப செட்டியார், சக்தி வை.கோவிந்தன் ஆகிய பெருந்தகைகளோடு ஏற்பட்ட பழக்கமும் நெருக்கமும் கிடைத்த அனுபவங்களும் இப்புத்தகம் அழகாகவும், ஆழமாகவும், நெஞ்சைத் தொடும் வண்ணமும் அமைவதற்குக் கருணை செய்தது என்று மிகுந்த அடக்கத்தோடு விவரிக்கிறார்.
மதுரைப்பல்கலைக்கழகத்துணைவேந்தர் மு.வரதராசனார் அவர்களின் புத்தகங்கள் எங்கே…எங்கே என்று கேட்டு, துரிதமாக விற்ற காலம் அது. வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கிய வாசகர்கள். 1974 ல் அகிலன் கருத்தரங்கம் பல்கலையில் நடைபெற்றபோது அதற்குச் சென்றிருந்த எங்களுக்கான உபசரிப்பு வாழ்நாளில் மறக்க முடியாதது. அதற்குப்பின் அவரது புத்தகங்களை கோவையில் என் விற்பனையரங்கில் அதிகம் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினேன். திருக்குறளுக்கு அருமையாக உரை எழுதி குறைந்த செலவில் அதைப் பதிப்பிக்க உதவி, தமிழர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டவர் மு.வ. அவர்கள் என்று நன்றியோடும், மிகுந்த மதிப்போடும் பதிவு செய்கிறார் ஐயா அவர்கள்.
கோவையில் நடைபெற்ற நா.பா.வின் குறிஞ்சிமலர் வெளியீட்டு விழாவில் கு.அழகிரிசாமி அவர்களோடு ஏற்பட்ட பழக்கமும், அவர் காலமான போது அதே நாளில் நடிகர் அசோகனும் இறந்த செய்தி வர, பத்திரிகைகள் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட அவலத்தை வருத்தத்தோடு சொல்லிச் செல்கிறார்.
கண்ணதாசன் பொன்விழாமலர் தயாராக, அதன் வெளியீட்டு விழா கோவையில் ஏற்பாடாக, அந்த விழாவுக்கு சாண்டோ எம்.எம்.சின்னப்பாத்தேவர் வர, அவருக்குத் தன் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் என்று கண்ணதாசன் கேட்க, கவிஞரின் புத்தகங்களையெல்லாம் அடுக்கி எடுத்துப் போக, இவ்வளவு புத்தகங்களா நான் எழுதியிருக்கிறேன் என்று கவிஞர் வியக்க, இவ்வளவு புத்தகங்களையா நீங்கள் விற்பனை செய்கீறீர்கள் என்று தேவர் வியப்போடு கேட்டு, இவரது கடைக்கு விஜயம் செய்ய, குமுதத்தில் எழுதிய “இந்த வாரம் சந்தித்தேன்” தொடரில் விஜயா பதிப்பகம் பற்றியும், தன்னைப் பற்றியும் கவியரசர் கண்ணதாசன் எழுதியதை நன்றியோடு நினைவு கூறி மகி்ழ்வதைப் படிக்கும்போது எப்படிப்பட்ட வாய்ப்புக்களெல்லாம் கிடைத்திருக்கிறது இவருக்கு என்று நம்மைப் பொறாமைப்பட வைக்கிறது. எழுதியதை வரவு வைக்காமல், எழுதும் சுகத்திற்காகவே எழுதியவர் கவிஞர் என்று திரு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்.
கோவையில் நூல் வெளியீட்டுவிழாவுக்கு ஜெயகாந்தனும், நாகேஷூம் வர, இரயிலில் தூங்கிப்போய் மேட்டுப்பாளையம் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து டாக்சி பிடித்து வந்து சேர்ந்த கதை ஸ்வாரஸ்யம். ஜெ.கே.யின் நூல்களை அன்று வெளியிட்டு வந்தது மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தார். எங்களுக்குள் கணக்குகள் உண்டே தவிர வழக்குகள் இல்லை என்று வெள்ளந்தியாக பெருமிதத்துடன் சொன்னவர் ஜெ.கே. என்பதைப் படிக்கும்போதும், அவர் மறைந்தபிறகு சில லட்சங்களை ராயல்டியாக அவரது குடும்பத்திற்கு மீனாட்சி புத்தக நிலைய முருகப்பன் வழங்கியதையும் எழுத்தாளனாய் எத்தனை மதிப்போடு வாழ்ந்து மறைந்தவர் அவர் என்று வியக்க வைக்கிறது. திரு.வை.கோவிந்தன் அவர்களின் சக்தி பத்திரிகையில் ஆரம்பத்தில் விஜயபாஸ்கரன் வேலை பார்த்ததும், பிறகு சரஸ்வதி பத்திரிகையில் ஜெ.கே. அவர்களின் முதல் கதையை அவர்தான் பிரசுரம் செய்தார் என்று ஜெயகாந்தன் பெருமிதம் பொங்கக்கூறியதையும் நினைவு கூர்கிறார்.
ஞானபீடவிருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டபோது, புரோட்டோகால் மறந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரை நோக்கி ஜனாதிபதி அப்துல்கலாம் குழந்தையைப் போல் ஓடிவந்து வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நமக்கு மெய்சிலிர்க்கிறது. ஜனாதிபதி வரக்கூடிய சாலை விசேடமானது. பாதுகாப்பு நிரம்பியது. அந்தச் சாலையிலேயே ஜே.கே. வரும் காரையும் வரச்சொல்லி அனுமதித்து உத்தரவு போட்டுவிட்ட தகவல் அறியும்போது அவரின் மதிப்பும் மரியாதையும் வியக்க வைக்கிறது. கலாம் விஞ்ஞானி மட்டுமல்ல…அவர் ஞானி என்றாராம் ஜெ.கே.
நா.பா. வின் எழுத்தின் மேல் இருந்த மதிப்பில், பற்றில் தன் பையனுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தவர்கள் ஐயா வேலாயுதம் அவர்களும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும். அவரது குறிஞ்சிமலர் நாவல் அந்தளவுக்கான தாக்கத்தை தமிழக வாசகர்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தன. பூரணி என்று பலர் தங்கள் பெண் குழந்தைகளுக்குப் பெயரிட்டார்கள். அதற்குப்பின்னேதான் கொடைக்கானல் செல்பவர்கள் குறிஞ்சி மலர் எங்கே என்று தேட ஆரம்பித்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் அம்மலர் தமிழர்கள் சிந்தையில் ஓடியது
பொன்விலங்கு தொடர்வந்தபோது அப்படைப்பால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள். வேட்டிதான் கட்டுவேன் என்று நாயகன் சத்தியமூர்த்தியைப் போல் பலர் மாறிய நிகழ்வுகள் உண்டு. பாயசம் அருந்த மாட்டேன் என்று ஒதுக்கியவர்களும் உண்டு. எழுத்தைப் போல் வாழ்ந்தவர் நா.பா. ஆஜானுபாகுவான தோற்றம். எப்படிப்பட்டவரையும் வசீகரிக்கும் உருவ ஆளுமை. எளிமைப் பண்பு, பகட்டில்லாமல் பழகும் தன்மை, நகைச்சுவை உணர்வோடு இருத்தல், தானிருக்கும் சபையைக் கலகலப்பாக வைத்திருக்கும் பாங்கு, இதெல்லாம் அவரின் சொத்து.
எம்.ஜி.ஆர் இருந்த மேடையில் நூலகத்துறைக்கு வாங்கிய 600 படிகளை ஏன் 200 ஆக்கினீர்கள்? என்று நா.பா. பேசும்போது கேட்க, அவரைத் தொட்டு பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழ முயற்சிக்க, நான் பேசி முடித்துவிடுகிறேன், பிறகு பதில் சொல்லுங்கள் என்று கம்பீரமாய் நா.பா. சொல்ல, பிறகு எழுந்த முதல்வர் இக்கூட்டத்திற்கு வரும்முன், தான் திரும்பவும் 600 பிரதிக்கு கையொப்பம் இட்டுவிட்டு வந்தேன் என்று தகவல் சொன்ன நிகழ்வும், எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையும், நா.பா.வின் நக்கீர தைரியமும் நினைத்து நடுங்க வைக்கிறது நம்மை.
விழாவுக்குச் சென்ற பொழுதில் சாப்பாட்டு இலையில் தவறாய் அசைவம் ஓரமாய் வைக்கப்பட, ஐயா பதறிப்போக, ஏன் பதற்றம், ஓரமாய் அது இருக்கட்டும், மற்ற சைவ வகைகளைச் சாப்பிட்டால் போச்சு…என்று நிதானம் இழக்காமல் நா.பா. பதில் சொன்னதும், என்ன ஒரு பண்பாடு? யாருக்கு வரும் இது? என்று வியந்ததும், எப்பொழுது சாப்பிட்டாலும் எதையும் வீணாக்காமல் இலையைத் துடைத்து வைத்தாற்போல் சாப்பிட்டு எழும் அழகும்….நல்ல பழக்கங்களின் தீவிரம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நா.பா. வெளிநாடு சென்று திரும்பி உடல்நலமின்றி இருந்து காலமான செய்தி யாருக்கும் தெரியாமல் போக, தகவல் தொடர்பு குறைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை எதற்கும் வகையின்றிப் பழிவாங்க, மறுநாள் சென்று நின்றபோது அவரது பூதஉடல் எரிக்கப்பட்ட சம்பவம் துயரத்தைப் பெருக்குகிறது.
சிறந்தவைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, சிறந்தவைகள் நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன என்று கவிஞர் மீரா சொன்னதும், தரமான படைப்பாளர்களாய்த் தேர்ந்தெடுத்து, அன்னம் பதிப்பகம் வெளியிட்டதும் எவ்வளவு லட்சியமான செயல்பாடு?
நான் பசியே அனுபவித்ததில்லை, அதனால் வறுமையைப் பற்றி எனக்கு எழுதத் தெரியாது என்று சொன்ன சுஜாதா, கற்றதும் பெற்றதும் தொடரில் விஜயா பதிப்பகம் பற்றியும், ஐயா பற்றியும் மறக்காமல் எழுதியது,. கூட்டத்திற்கு வர ஒரு லட்சம், ஐம்பதாயிரம் என்று கேட்டவர்கள் மத்தியில் ரயில் டிக்கெட் போக வர, சாப்பாடு இது மட்டும் போதும் என்று சொன்ன கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள், சரஸ்வதி இதழை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர். விஜயபாஸ்கரன் அதற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட தாமரை இதழ், பிறகு படிப்படியாக அந்தப் போட்டியில் பின்தங்கிப்போன சரஸ்வதி இதழ், வெளிவருவதற்குப் பட்ட இன்னல்கள்….தமிழ் இலக்கியத்தில் மேதைகள் பலரைக் கண்டுணர்ந்த விஜயபாஸ்கரன் அவர்கள். இவ்வாறு பல சித்திரங்கள்.
…வானதி திருநாவுக்கரசு ஐயா அவர்கள் கொடுத்த ஆதரவு, பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் நடத்திய விழாவுக்கு கவிஞர் வாலி வருதல், அவர் சென்னை திரும்பப் போட்ட டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல், ரயிலில் அவதிப்பட்டு யாரையோ பிடித்து, எப்படியோ அவர் ஊர் போய்ச் சேர்ந்த நிகழ்வு, இலக்கியத்திற்கு ஒரு தனிப்பெருங்கருணையாய் விளங்கிய அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் நிதியுதவி, சிறந்த புத்தகங்கள் வர அவர் காட்டிய ஆர்வம், நூறு நூறு என்று அந்தப் புத்தகங்களை வாங்கி பலருக்கும் விநியோகித்த தன்மை ஆகியவற்றை எடுத்துச் சொல்லவேண்டும்.
பழனியப்ப செட்டியார் அவர்களின் பழனியப்பா பிரதர்ஸ் பற்றிய தகவல்கள், பதிப்புலகத் தந்தையாகக் கருதப்படும் சக்தி வை.கோவிந்தன் அவர்களின் தொண்டு, பிறகு அவரின் குடும்பத்தின் நலிவுற்ற நிலைமை, நிதியுதவி அளிப்பு, தனது பங்களிப்பாக அவரின் மகன் வழிப் பேத்தியின் கல்விச்செலவை நடிகர் சிவகுமார் ஏற்றுக்கொண்டது என்று இப்புத்தகத்தில் ஏராளமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன.
ஐயா விஜயா வேலாயுதம் அவர்களின் இந்த அனுபவப்பதிவுகள் 40 ஆண்டுகளாக தன் நினைவு அடுக்குகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்றும் தன்னை வளர்த்தவர்கள் வாசகர்களும், தன்னுடைய அற்புதமான வாடிக்கையாளர்களுமே என்று பெருமிதத்தோடு முன் வைக்கிறார். அவரின் இந்த அனுபவப்பதிவுத் தொகுப்பு ஒரு சிறந்த ஆவணம் என்றே கூறலாம்.
உஷாதீபன்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்