முதுநாவல் வாங்க
முதுநாவல் மின்னூல் வாங்க
ஜெயமோகன் நூல்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
இன்று[11 நவம்பர்] திருப்பூரில் நல்ல மழை.காலை முதல் மெதுவாக தூறிக்கொண்டிருந்தது. மாலையில் உக்கிரமாகிவிட்டது.மழைக் கவச ஆடைகளை அணிந்துகொண்டு டீ குடிக்க வந்துவிட்டேன். டீயை வாங்கிக் கொண்டு இந்த மழைக்கு எந்த கதை படிக்கலாமென தேடிக் கொண்டிருந்தேன். அருள் கதை கிடைத்தது. ஏற்கனவே படித்துள்ளேன்.மீண்டும் வாசித்தேன்.கதையின் சாராம்சம் கொடூர தெய்வங்கள் அளிப்பது அருளா? இருளா?இரண்டுக்கும் கதையில் பதிலுண்டு.என்னுடைய அப்பா இதுவரை இரண்டு மருத்துவர்களை மட்டுமே பெரும் மரியாதையோடு புகழ்ந்துள்ளார்.அதில் ஒருவர் கோவக்காரர். நோயாளியிடம் உரிமையோடு திட்டுவார். கூட்டத்திற்கு குறைவில்லை. அவரிடம் வருபவர்களுக்கு அந்த கோவத்தின் உறுதி தேவைப்படுகிறது.கோவத்தின் உறுதி தேவைப்படாதவர்கள் அவரிடம் சென்றால் எரிச்சலைடைவார்கள்.உங்கள் தளத்தில் ஒருவர் எழுதியிருப்பார் நரசிம்ம சுவாமியை கண்டுகொண்டபின் பயம் தன்னை விட்டு அகன்றுவிட்டாதாக. சாதனாவுக்கும் அந்த தெய்வம் அளித்தது ஒரு தெளிவு.ஆழ்மனத்திற்க்குள் இருந்த இருளை கண்முன்னே கண்டபின் விழிப்புமனம் புரிந்துகொண்டது.பதில் தெரியும்வரை மட்டுமே கேள்வியால் துரத்த முடியும். கொடூர தெய்வம் தெளிவை பதிலாக அருளியது. சாதனாவின் கணவன் அவளோடு உள்ளே போயிருந்தால் அவனுக்கு கேள்வியை இருளாய் அளித்திருக்கும்.
இந்த கதையை படித்துவிட்டு யோசிக்கும்போது இந்து மத தெய்வங்களின் எண்ணிக்கை கிளைச் சிந்தனையாய் வந்தது.மனதின் ஆழம் முடிவற்ற சாத்தியங்கள் கொண்டது. ஏதோ ஆழத்தில் சிக்கிக் கொண்ட ஒருவனை மீட்க அதே ஆழம் கொண்ட தெய்வம் வேண்டும்.இதனால்தான் இங்கே தெய்வங்கள் தோன்றிக் கொண்டேயிருப்பதாய் தோன்றியது. கணிப்பொறியின் அடிப்படை அலகு 0 மற்றும் 1. இவை இரண்டால் கணிப்பொறியில் அமையக்கூடிய சாத்தியங்கள் முடிவற்றவை.
அன்புடன்
மோகன் நடராஜ்
***
அன்புள்ள ஜெ
என்னை பொறுத்தவரை அதீதங்களில் சுழலும்போதுதான் ஒரு கதைக்கு புனைவின் அழகே அமைகிறது. அன்றாட யதார்த்தம் எவ்வளவு நுட்பமாக இருந்தாலும் அதற்கு பெரெனியல் தன்மை அமைவதில்லை. அந்தவகையில் உங்கள் கதைகளில் படையல், தூவக்காளி, புழுக்கச்சோறு போன்றவை அற்புதமான படைப்புகள். அதேபோல முதுநாவல் மகத்தான கதை. எவ்வளவு மிஸ்டிக் ஆன அனுபவங்கள் அவை. நாம் அழுந்திக்கிடக்கும் இந்த சாமானிய வாழ்க்கையில் இருந்து சட்டென்று வெளியே போய் ஒட்டுமொத்தத்தையும் பார்க்கச்செய்யும் கதைகள்.
ஜெயப்பிரகாஷ் சங்கர்
***