அம்புலிமாமா ஏன் நின்றது?

ஏறத்தாழ எழுபது ஆண்டுக்காலம், இந்தியக்குழந்தைகளின் கனவை சமைத்த சிறுவர் இதழ் அம்புலி மாமா. மூன்று தலைமுறைகள் அதை வாசித்து வளர்ந்துள்ளனர். அதைச்சார்ந்த இனிய நினைவுகள் இந்தியாவில் எங்கும் உண்டு. அத்தகைய ஓர் இதழ் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வந்திருந்தால் அது இப்போது மிகப்பெரிய ’கருத்துமுதலீடு’ ஆகி காப்புரிமைகள், திரைவடிவங்கள் வழியாக கோடிகளை அறுவடை செய்துகொண்டிருக்கும். ஆனால் அம்புலிமாமா ஆதரவில்லாமல் நின்றுவிட்டது.

ஏன்? அம்புலிமாமா முற்றிலும் இந்தியத்தன்மை கொண்டது. இந்தியாவின் காவியப்பின்னணி, நாட்டார்பின்னணியை முன்வைப்பது. இலட்சியவாதமும் அறவுணர்வும் அதன் பேசுபொருள்.

நாம் சொல்லும் இந்தியத் தன்மை கொண்ட எதையும் உதாசீனம் செய்யவும், அமெரிக்கா உருவாக்குவனவற்றை பாய்ந்து கொள்முதல் செய்யவும் நாம் பழகிவிட்டிருக்கிறோம். நமது கனவுகள் மேற்குநோக்கியவை. நாம் ஒரு சமூகமாகவே அமெரிக்கா நோக்கி நகர்பவர்கள், நம் இனவெறி, சாதிவெறி, மொழிவெறி, மதவெறி ஆகியவற்றைச் சுமந்தபடி அங்கே செல்கிறோம்.

அம்புலிமாமாவைவும் அதைப்போன்ற இந்திய சிறுவர் இதழ்களையும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ‘ஆய்வு’ என்ற பேரில் தாக்கிவந்தனர். அதில் சாதியம் மதவாதம் எல்லாவற்றையும் கண்டடைந்தனர். நம் கல்வியமைப்புகள் அதற்கு நிதியுதவி செய்தன. வெளிநாட்டுப் பல்கலைகள் ஆதரவளித்தன. அம்புலிமாமாவின் செல்வாக்கு 1990 களிலேயே இல்லாமலாகிவிட்டது. அதற்கு முன்பு அணில், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள் நின்றுவிட்டன.

அந்த ‘வெற்றிடத்தில்’ இங்கே அமெரிக்க சிறுவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வரைபடக் காணொளிகள் நுழைந்தன. இந்தியக் குழந்தைகளின் உள்ளம் திட்டமிட்டு திருடப்பட்டது. ஐரோப்பியத் தொன்மங்களிலுள்ள ஆக்ரமிப்புத்தனம், நுண்ணிய இனமேட்டிமைத்தனம் பற்றி எந்த ‘ஆய்வும்’ நிகழ்வதில்லை. நிதி கிடைப்பதில்லை என்பதே காரணம். தனிப்பட்ட முறையில் செய்தாலும் அந்த ஆய்வுகள் நம் ஆங்கில ஊடகங்களில் முன்னிலைப்படுவதுமில்லை.

இப்போது பாகுபலி முதல் பொன்னியின் செல்வன் வரை ஒரு இந்திய சுவை குழந்தைகளிடம் அறிமுகமாகிறது. ஆகவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தப் படங்கள் எவ்வளவு ‘ஆபத்தானவை’ என நிறுவும் ஆய்வுகள் கல்வித்துறையில் நிகழும், ஆங்கில ஊடக் அறிவுஜீவிகள் முதலில் எழுத உள்ளூர்மொழி அறிவுஜீவிகள் வழிமொழிந்து எழுதுவார்கள். இப்போதே அது தொடங்கிவிட்டது என தெரியவந்தது.

இன்று இந்திய சிறுவர் காட்சியூடகம் எவ்வளவு பெரிய தொழில் என நான் அறிவேன். தமிழ்நாட்டில் அது இங்குள்ள மொத்த சினிமா தொழில் அளவுக்கே பெரியது. இது தவிர பொம்மைகள், ஆடைகள் என மிகப்பெரிய வணிகம் வெளியே உள்ளது.

நம் குழந்தைகளுக்கு விக்ரம் வேதாளம் கதை இன்று தெரியாது. நாம் அந்த இதழ்களையோ பொம்மைகளையோ வாங்கிக் கொடுப்பதில்லை. இன்று தமிழில் ஒரு நல்ல குழந்தைகள் இணைய இதழ் இல்லை. இணையம் எவ்வளவு பெரிய வாய்ப்பு. வாசிப்பதற்கும் பார்ப்பதற்கும் கதைசொல்வதற்கும். ஆனால் நாம் பெரியவர்களுக்காகக் கதைசொல்லிக் கொண்டிருக்கிறோம். சிறுவர்கள் தமிழில் எதையும் கவனிப்பதில்லை என ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிரான்ஸ்பார்மர்கள், தோர் என இன்னொரு உலகில் வாழ்கிறார்கள்.

இதற்காகத்தான் இந்திய சிறுவர் ஊடகங்கள் அழிக்கப்பட்டன என்று சொன்னால் ஒரு சதிக்கோட்பாடு எனத் தோன்றும். ஆனால் காணொளி வணிகத்தின் உள்ளே சென்றுள்ளவன் என்னும் நிலையில் முதல்நிலைத் தகவலாகவே அந்த வகை வணிகச்சூழ்ச்சிகள் மிக எளிதாக நிகழ்கின்றன என்பதை என்னால் சொல்லமுடியும்.

அம்புலி மாமா

அம்புலிமாமா
அம்புலிமாமா – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா
அடுத்த கட்டுரைஇன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்-2