நீல பத்மநாபன், யதார்த்தம் – கடிதம்

நீல பத்மநாபன்

அன்புள்ள ஜெ

நீல பத்மநாபன் பற்றிய விக்கி பக்கம் படித்தேன். மிக மிக விரிவான பதிவுகள். பழைய புகைப்படங்களின் ஆவணமதிப்பு இத்தகைய பதிவுகள் வழியாகவே தெரிகிறது. தலைமுறைகள் எழுதும்போது நீப எப்படி இருந்திருப்பார் என்பதை பார்ப்பது ஓர் அற்புதமான அனுபவம்.

நீல பத்மநாபனின் எழுத்து எல்லாருக்கும் உரியது அல்ல. கதைகளை படிக்கும் சுவாரசியத்துக்காக அதை படிக்கமுடியாது. கதையோட்டம் பலவீனமானது. நிகழ்ச்சிகளே இருக்கும். நீப நிகழ்ச்சிகளை புனைவதில்லை. யதார்த்தம் மட்டுமே இருக்கும்.

இளமையில் நான் நிறைய பரபரப்பு நாவல்களை வாசித்திருக்கிறேன். சாகசங்கள், கொலைகள், காதல், குடும்பச்சண்டைகள். அப்புறம் நவீன இலக்கியம். நவீன இலக்கியத்தை நான் சமகாலத்தில் இருந்து வாசித்தேன். கொடிய சித்திரங்கள், நெகெட்டிவான சித்திரங்கள். அதெல்லாம் இலக்கியம் என்று நம்பினேன். கடுமையான துக்கம் என்றால்தான் இலக்கியம் என்றே நினைத்தேன்.

எல்லா நவீன இலக்கியங்களும் என்னை வெறுமையிலேயே கொண்டுசென்று சேர்த்தன.’வாழ்வின் அபத்தம்’ என்றுதான் நூல்களின் பின்னட்டையில் இருக்கும். அதையெல்லாம் பார்த்தாலே எனக்கு அன்று ஆர்வமாக இருக்கும். ஆனால் 2008 வாக்கில் எனக்கு ஒரு மனச்சோர்வு நோய் வந்தது. பல காரணங்கள். முக்கியமாக வியாபாரம், குடும்பம்.

அப்போது அந்த வாழ்வின் அபத்தம் என்ற சொல்லை பார்த்தாலே தீயாய் எரியும். அந்நாட்களில் எம்விவியின் காதுகள் வாசித்து எனக்கே கொஞ்சம் ஸ்கிசோப்ரினியா வந்தது போல உணந்தேன். 2011 ல் உங்கள் தளம் வழியாக அறிமுகமானவர் நீல பத்மநாபன். அவரை வாசித்தது என்பது ஒரு மகத்தான அனுபவம்,

என் மனநிலைக்கு மிக உகந்த எழுத்தாக இருந்தது. நேரடியான எதார்த்தம். எதையும் மிகையாக்கவில்லை. நாடகமாக ஆக்கவில்லை. எல்லாமே அப்படியே வாழ்க்கையில் கண்முன் நடைபெறுவதுபோல. துக்கம்,சலிப்பு எல்லாம் உண்டு. ஆனால் வெறுமை இல்லை. நான் வாசித்த முதல் நாவல் உறவுகள். அதை வாசித்து முடித்தபோது வாழ்க்கைமேல் நம்பிக்கையும் பிடிப்பும் உருவாந்து. பொய்யான எதையும் அவர் சொல்லவில்லை. எல்லா எதிர்விஷயங்களையும் சொல்கிறார். ஆனால் உறவுகளின் அர்த்தமென்ன என்று காட்டிவிட்டார்.

அதன்பின் நீப எழுதிய நாவல்களை வாசித்தேன். நீப எனக்கு தமிழில் ஆதர்ச எழுத்தாளர். எழுத்தாளர்களிடம் பொய் சொல்லாதீங்க பாஸ் என்று சொல்லும் வாசகர்களுக்கான எழுத்து அது. நன்றி அவரை அறிமுகம் செய்தமைக்கு.

ஆர்.மாணிக்கவாசகம்

முந்தைய கட்டுரைடெல்லியில் மொழியாக்கக் கருத்தரங்கு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம், கனவுகள் – கடிதம்