விதைமுளைக்கும் மழை

மழைப்பாடல் செம்பதிப்பு வாங்க

மழைப்பாடல் மின்னூல் வாங்க

வெண்முரசு எழுதி முடித்தபின் அதிலிருந்து உளம் விலகி பிறிதொருவனாக ஆகி இங்கு நின்றிருந்து அந்நாட்களைத் திரும்பிப்பார்க்கையில் ஒரு பெரும் தியான அனுபவத்தின் வெவ்வேறு தருணங்களாகவே அதை எண்ண முடிகிறது. முதற்கனல் தியானத்தில் வந்தமையும் முதல் நிலைகடத்தலின் தருணம். அதற்குமுன் பலமுறை பலவாறாக எழுதி அழித்தவை அனைத்தையுமே தியானத்திற்கு முந்தைய நிலைகொள்ளாமை என்றே சொல்லவேண்டும்.

முடிவின்மையின் முதல் தொடுகை. இந்தப்பாதையின் முதல் திறப்பு. தன் எல்லைகளை தானே உளம் கடக்கும் நிலை. பிறிதொன்று வந்து தொடும் புள்ளி. அது நிகழ்ந்ததுமே பரவசம் கொள்கிறோம். ஆம் இதோ என்று உள்ளம் துள்ளுகிறது. பிறிதொன்றும் முக்கியமல்ல என்றாகிறது. அதற்கு முழுக்க தன்னை கொடுத்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது. ஓர் ஆழமான கத்திக்குத்து போல என்று அதை யோகமரபிலே சிலர் சொல்லியிருக்கிறார்கள். அது நிகழ்ந்து, மெல்ல விடுவித்துக்கொண்டு அமர்ந்திருக்கையில் அது ஒரு சிறுவிதை என்று தெரிகிறது. தம் உள்ளத்தில் பெருகும் நீரை ஊற்றி ஊற்றி வளர்க்கவேண்டிய ஊற்று. அதற்குள் இருப்பது ஓர் உயிர்த்துளி மட்டுமே.

முதற்கனலை எழுதி முடித்ததுமே அது பலதிசைகளில் முளைத்து விரியும் பெரும் தாவரம் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. முதற்கனலில் அத்தியாயங்கள் அனைத்தும் சுருக்கமானவை. உணர்வுகள் மிக விரைவாகச் சொல்லி செல்லப்பட்டன. குறியீடுகள் படிமங்கள் ஆழ்படிமங்கள் முகங்காட்டி மறைகின்றன. ஆனால் முதற்கனலில் பின்னர் இந்நாவல் பேருருக்கொண்டு விரிந்தபோது இதில் என்னென்ன இருக்குமோ அனைத்துமே உள்ளது. வெவ்வேறு புராணங்களின் இணைப்பினூடாக உருவாகும் புதிய அர்த்தம். புராணங்கள் வழியாகச் சென்றடையும் தத்துவ தரிசனங்கள். வாழ்க்கைத் தருணங்களின் நாடக உச்சங்கள். வாழ்க்கையினூடாக திரண்டு வரும் கவித்துவ தருணங்கள். வாழ்க்கையின் சாரமென வெளிப்படும் கருத்துக்கள். எல்லாமே அதில் தங்கள் வடிவமென்ன என்று காட்டிவிட்டன. அதன்பின் எழுதுவது மிக எளிதாக ஆகிவிட்டது என்று இப்போது தோன்றுகிறது. மொத்த வெண்முரசையே கண்முன் பார்த்துவிட்டது போல.

உண்மையில் என் அகக்கண் அதைப்பார்க்கவில்லை. அதற்கும் அடியிலிருக்கும் அறியா விழி ஒன்றுதான் அதைப் பார்த்திருக்கிறது. அதன் பின் இருபத்தைந்து பெருநாவல்களை எழுதிமுடித்து ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முதற்கனல் அதன் பின்னர் எழுதப்பட்ட அனைத்தையும் தொடங்கி வைத்திருக்கிறதென்றும், முதற்கனலின் இயல்பான நீட்சியாகவே மொத்த நாவலின் மொத்த பக்கங்களும் அமைந்திருக்கின்றன என்றும் தெரியவந்தது. இந்த நாவல்தொடரின் உச்சமென்றும் சாரமென்றும் திரண்டு வந்த அனைத்துமே முதற்கனலில் வில்லிலிருந்து எழும் அம்புகள் போல கிளம்பியிருந்தன.

வெண்முரசை எழுதி முடித்தபின் திரும்பி வந்து முதற்கனலைப் புரட்டிப் பார்க்கையில் நான் ஒரு பெரும் திகைப்பை அடைந்தேன். நான் எண்ணாத அனைத்தையும் அதில் எழுதியிருந்தேன். என்னில் அடுத்த ஏழாண்டுகளில் நிகழப்போகும் அனைத்தையுமே அதில் தொட்டுவிட்டிருந்தேன். அப்போது எனக்கு அது தெரிந்திருக்கவில்லை. இன்று பார்க்கையில் முதற்கனலே மொத்த வெண்முரசையும் பொருந்துவதற்கான தாழ்க்கோல் என்று தோன்றுகிறது.

முதற்கனலுக்குப்பின் மழைப்பாடலை எழுதத்தொடங்கும்போது முன்பிருந்த எந்தத் தத்தளிப்பும் இல்லாத ஒரு பரவச நிலையை அடைந்திருந்தேன். மழைப்பாடல் மலையிறங்கி ரிஷிகேசத்தில் நிலம் தொட்ட கங்கை அகன்று பெருகி பரவுவது போல வடிவம் கொண்டது. விரைந்தோடி வந்த ஒவ்வொன்றும் விசையழிந்து விரியத்தொடங்கின. நான் அதன் நிலக்காட்சிகளை மிக விரும்பி எழுதினேன். அந்நாட்களில் முற்றிலும் அயலான நிலங்களில் அலைந்துகொண்டிருந்தேன். கனவுவெளிகளில் வாழ்ந்தேன். மழைப்பாடலில் தான் வெண்முரசு முழுக்க வளர்ந்து நிறைவடையும் மையக்கதைமாந்தர் அனைவருமே தோன்றினர்.

மழைப்பாடல் ஒரு  விந்தையான இணைப்பையும் கொண்டிருக்கிறது. முதற்கனல் முடியும்போது பாலை நிலம் சொல்லப்படுகிறது. ஒரு கைப்பிடி மணலை அள்ளினால் பல லட்சம் விதைகள் அடங்கியது அந்நிலம் என்று பீஷ்மர் உணருகிறார். மழைப்பாடல் பீஷ்மர் மழையை உணர்வதில் தொடங்குகிறது. நாவல் முழுக்க மழை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இப்புவியில் இருந்து விண்ணுக்கு ஆணையிடும் ஆற்றல் கொண்டவை  வேதமும் தவளையின் குரலும்தான் என்று வேதகால ஞானிகள் நம்பினர். மழை மழை மழை என விண்நோக்கி ஆணையிடும் தவளைகளின் குரலில் இந்நாவல் முடிகிறது. இந்நாவலை சம்ஸ்கிருதத்தில் எழுதியிருந்தால் மாண்டூக்யம் என்று பெயரிட்டிருப்பேன்.

விண்ணிலிருந்து மண்ணுக்கிறங்கும் மழை விண் மண்ணுக்கு அளிக்கும் ஓர் உறுதிப்பாடு. இங்கு உயிர் நிகழவேண்டும் வாழ்க்கை பெருக வேண்டும் என்று விண் விரும்புவதின் சான்று. மழைபெருகுக!

இந்நாவலை என்னுடைய இணையதளத்தில் வெளியிட்டேன். பின்னர் நூல் வடிவில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது. இதற்கான ஓவியங்களை ஷண்முகவேல் வரைந்து தந்தார். மணிகண்டன் உதவினார். இந்நாவலின் மாபெரும் கற்பனையை வாசகர் உள்ளத்தில் எழுப்ப அவ்வோவியங்கள் பெருந்துணையாக அமைந்தன. முன்விலைத் திட்டத்திலேயே முந்நூறு பிரதிகள் இந்நாவல் விற்றது மலிவுப்பதிப்பும் வெளிவந்தது. அதன்பிறகு கிழக்குப் பதிப்பகம் இதை வெளியிட்டது. இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் மூன்றாவது பதிப்பாக வெளியிடுகிறது.

இத்தனை பெரிய நாவல், இத்தனை செறிவுள்ள படைப்பு இக்குறுகிய ஆண்டுகளில் மூன்றாவது பதிப்பை நெருங்குவதென்பது தமிழ்ச்சூழலை பொறுத்தவரை வியப்புக்குரியதுதான். இதை மெய்ப்பு நோக்கி, செம்மையாக்கி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா இணையருக்கும், பின்னர் மெய்ப்பு பார்த்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மற்றும் ஹரன் பிரசன்னா ஆகியோருக்கும், இப்போது மெய்ப்பு பார்க்கும் மீனாம்பிகை, செந்தில்குமார் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

இதை முன்னர் வெளியிட்ட நற்றிணை யுகனுக்கும் கிழக்கு பத்ரிசேஷாத்ரிக்கும் நன்றிகள். தொடர்ந்து எட்டாண்டுகளுக்கும் மேலாக இந்நாவல் உடனேயே வாழ்ந்துவரும் இதன் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பிறந்து இந்நாவலை நோக்கி வந்துகொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மீண்டும் வணக்கம்.

ஜெ

09.11.2022

(விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவந்துள்ள மழைப்பாடல் நாவல் செம்பதிப்புக்கான முன்னுரை)

விஷ்ணுபுரம் பதிப்பகம்- வெண்முரசு நூல்கள்

முந்தைய கட்டுரைகோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்  
அடுத்த கட்டுரைமைத்ரி விமர்சன அரங்கு