சாதிகள் வரையறை செய்யப்பட்ட வரலாறு

சாதிகள் ஓர் உரையாடல் வாங்க

ஜெயமோகன் நூல்கள் வாங்க

சாதி ஓர் உரையாடல் மின்னூல் வாங்க

ஐயா வணக்கம்!

எனக்கு, நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம்! இதுபற்றி எவ்வளவோ தேடினாலும் விடைதான் கிடைக்கவில்லை. கண்டிப்பாக தங்களால் (மட்டுமே) முடியுமென்றே, இந்த மின்னஞ்சலை எழுதுகின்றேன்.

இந்த சாதி, இந்தப் பிரிவுக்குள்தான் வருகிறது என்பதை நம் சுதந்திர இந்தியாவில், ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்தவர்கள் யார் யார்? எப்போது? அந்த அமைப்பில் எத்தனை பேர் இருந்தார்கள்? அவர்களுக்கெப்படி இந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் தெரியும்? உதாரணமாக, வெள்ளாளர் இனத்தில், சைவ வெள்ளாளர்கள் OC என்றும், வீரகொடி வெள்ளாளர் BC என்றும், இசை வெள்ளாளர் MBC என்றெல்லாம் வகுத்தது யார்? இப்படி ஒவ்வொரு சாதிக்குள்ளும் எத்தனையோ பிரிவுகள் உள்ளது. இதையெல்லாம் யார் வகுத்தார்கள்? எப்படி வகுத்தார்கள்? அவர்கள் வகுத்தவைகள் எல்லாம் சரியா?

இன்னும் இந்த சாதியக்கட்டுகள் இருப்பதை எப்படி மாற்றலாம் என்னும் திட்டங்கள் எல்லாம் நம் அரசியல் அமைப்பில் உள்ளதா? அப்படி இருந்தால், ஏன் கட்சிப் படிவங்களில் சாதிய ஓட்டுக்கள் பற்றியெல்லாம் கேட்கும்படியான கேள்விகள் உள்ளன? இன்னும் சாதி பார்த்தே வேட்பாளர்கள் நிறுத்தும் போக்கைத் தாங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? உண்மையில் நம் இந்தியா அல்லது தமிழகம் சாதியத்தில் இருந்து வெளிவரும் சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா? இந்நிலை மாற வாய்ப்புள்ளதா?

தயவுகூர்ந்து விளக்க வேண்டுகிறேன்!

இப்படிக்கு,

செ. இராசமாணிக்கம்.

எட்கார் தர்ஸ்டன்

அன்புள்ள இராசமாணிக்கம்,

மிக விரிவாகவே இதற்கு பதில் சொல்லவேண்டும். ஏற்கனவே நிறையவே சொல்லிவிட்டேன். அவை நூலாகவும் வெளிவந்துள்ளன. எளிதில் வாங்கி வாசிக்க முடியும்.

ஏற்கனவே சொன்னவற்றை மீண்டும் சுருக்கமாக சொல்கிறேன். ஏன், எவ்வாறு என்னும் ஐயமிருந்தால் நூலையே வாசிக்கவும்.

சாதி பற்றி நமக்கு சில பொதுவான புரிதல்கள் தேவை.

அ. சாதி எவராலும் உருவாக்கப்பட்டது அல்ல. அது சமூகம் உருவாகி வந்த பரிணாம வளர்ச்சியில் உருவான ஓர் அமைப்பு.

ஆ. பிறப்பு அடிப்படையில் மக்களை பிரித்து, மேல்கீழாக அடுக்கும் போக்கு என்பது நிலவுடைமைச் சமூகத்தின் இயல்பு. அச்சமூகத்தின் உற்பத்திமுறைக்கு அவசியமானதாக இருந்தது. அந்த போக்கு இல்லாத சமூகமே உலகிலெங்கும் இல்லை. ஆகவே சாதிபோன்ற அமைப்பு எல்லா நாட்டிலும் இருந்தது. வேறுவகைகளில் நீடிக்கிறது.

இ. சாதிகள் என்பவை  பழங்குடிகளின் இனக்குழுக்களாக இருந்தவை. பழங்குடிக்குழுக்கள் சமூகமாக இணைந்தபோது அச்சமூகத்திற்குள் இனக்குழுக்கள் சாதிகளாயின. வென்றசாதி மேல், சிறிய சாதிகள் கீழ் என ஆகியது.

இ. இந்திய சாதியமைப்பு எப்போதுமே மாறாததாக இருந்ததில்லை. அடித்தளச் சாதிகள் மேலெழுந்து ஆட்சியமைத்து அரசகுடிகள் ஆகியுள்ளன. ஆண்ட சாதிகள் அடிமைப்பட்டு கீழ்சாதிகளும் ஆகியுள்ளன.

*

இவற்றின் அடிப்படையில் உங்கள் கேள்விகளுக்கான விடை.

இந்தியாவிற்கு பிரிட்டிஷார் வந்தபோது இங்குள்ள சாதியமைப்பைப் புரிந்துகொள்ள முயன்றனர். நிர்வாகத்திற்கு அது தேவையாகியது. தொடக்ககாலத்தில் சாதிமுறை பற்றி ஐரோப்பிய மதப்பரப்புநர்கள் ஆராய்ந்து முதற்கட்ட பதிவுகளை உருவாக்கினர். அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சியர்கள் மானுவல்கள் எனப்படும் நிர்வாகக்குறிப்புகளை எழுதியபோது சாதிகளைப் பதிவுசெய்தனர்.

ஜே.ஹெச்.நெல்சன் எழுதிய மதுரா கண்ட்ரி மானுவல் ஓர் உதாரணம். (இணையத்தில் மின்னூலாகக் கிடைக்கிறது) அதில் சாதிகளைப் பற்றிய விரிவான குறிப்பை அளித்துள்ளார். ஆனால் அவர் சாதிகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் அவற்றின் இயல்புகளையும் பற்றி பிரிட்டிஷ் அரசில் பணியாற்றியவர்களிடம் விசாரித்து எழுதியவைதான் அவை.

அதன்பின் சமூகவியல் ஆய்வாளர்கள் சாதிகளைப் பற்றி பதிவுசெய்தனர். எட்கார் தர்ஸ்டன் விரிவாக தென்னகச் சாதிகளை பற்றி பதிவுசெய்தார். அவருடைய ஏழு பகுதிகள் கொண்ட மாபெரும் நூலான  Castes and Tribes of Southern India ஒரு மிகப்பெரிய ஆவணத்தொகுப்பு. (கே.ரங்காச்சாரியுடன் இணைந்து எழுதியது) 1909 ல் இந்நூல் வெளிவந்தது. இன்றுவரைக்கும்கூட இந்நூல் ஒரு உசாத்துணை நூலாக உள்ளது. இணையத்தில் மின்னூலாகக் கிடைக்கிறது.

அதன்பின் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரிட்டிஷார் நடத்தினர் 1881 ல் இந்தியாவில் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தது. அதில்தான் இன்ன சாதி இன்ன வகையானது, இன்ன சாதி இன்னசாதிக்கு கீழானது என்பது உறுதியாகப் பதிவுசெய்யப்பட்டது. அதற்கு முன் ஒரு சாதி இன்னொரு ஊருக்குச் சென்று இன்னொரு தொழில் செய்தால் அதன் நிலை மாறிவிட வாய்ப்பிருந்தது. ஏராளமான தரவுகள் உள்ளன.

உதாரணமாக, சோழ அரசு வீழ்ச்சியடைந்தபோது போர்ச்சாதிகள் சேரநாட்டுக்கு குடிபெயர்ந்து நெசவுத் தொழில் செய்தனர். அவர்கள் கைக்கோளமுதலியார் என அறியப்பட்டனர். இதை அ.கா.பெருமாள் பதிவுசெய்துள்ளார்.  இப்படி பல சாதிகளின் இடம் மாறியுள்ளது. பிரிட்டிஷ் கணக்கெடுப்புக்கு பின் அது இயலாதது ஆகியது.

பிரிட்டிஷ் கணக்கெடுப்பில் ஒவ்வொரு சாதியும் தங்கள் இடம் என்ன, இயல்பு என்ன என அவர்களே கூறியதன் அடிப்படையில்தான் பதிவுசெய்யப்பட்டது. 1911 ல் நடந்த கணக்கெடுப்பில் இந்தியா முழுக்க பல சாதிகள் இணைந்து ஒரே பெயரை பதிவுசெய்துகொண்டன. ஒரேபெயரில் சாதியை பதிவுசெய்யவேண்டும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்ட்ன. ஏன் என்றால் அப்போது ஜனநாயகத்தில் என்ணிக்கையின் பலம் என்ன என தெரிய ஆரம்பித்திருந்தது .அப்படி ஒன்று திரள்வது அதிகாரம் அடைய உதவியது.

அப்படி ஒரு சாதி தன்னை ஒருவகையில் குறிப்பிட்டபோது மற்ற சாதிகள் அதை எதிர்த்தன. இன்றைக்கும்க்கூட தேவேந்திரகுல வேளாளர் அவ்வாறு தங்களைச் சொல்லிக்கொள்வதை மற்ற வேளாளர்கள் எதிர்க்கிறார்கள் அல்லவா அதைப்போல.சில சாதிகள் தங்களை ஷத்ரியர் என சொல்லிக்கொண்டபோது மற்ற சாதிகள் எதிர்த்தன. இந்தப்பூசல் பல ஆண்டுக்காலம் நடைபெற்றது.

ஆங்கில ஆட்சியாளர்கள் அவர்கள் எடுத்த மூன்று மக்கள்தொகை கணக்கெடுப்பின் வழியாக திரட்டிய செய்திகளைக் கொண்டு சாதிகளின் இயல்பையும் இடத்தையும் முடிவுசெய்தனர். சாதிகளின் சமூக இடம், பொருளாதாரம் ஆகியவை அதற்கு கருத்தில்கொள்ளப்பட்டன. சாதிகளின் கோரிக்கையும் கருத்தில்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் எல்லா சாதியும் தங்களை உயர்சாதி என்று சொல்ல விரும்பின. 1921 ல் சாதிவாரி இட ஒதுக்கீடு வர ஆரம்பித்த பிறகு எல்லா சாதிகளும் தங்களை பிற்பட்ட சாதி என சொல்ல விரும்பின.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பல சாதிகள் பிற்பட்ட சாதிகளாக அறிவிக்கப்பட்டன. அது இடஒதுக்கீட்டை அடைவதற்காக அரசியல் வழியாக பெற்ற அடையாளம். தேவேந்திரகுல வேளாளர் இன்று தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம், தாங்கள் தாழ்த்தப்பட்டோர் அல்ல என்கிறார்கள். எப்படியும் இருபதாண்டுகளில் அவர்கள் அந்த அடையாளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

இப்படித்தான் சாதிகளின் அடையாளங்கள் சென்ற  இருநூறாண்டுகளாக பதிவுசெய்யப்பட்டு வரைமுறைப்படுத்தப்பட்டன

*

சாதிகள் இன்று இந்தியாவில் முன்பு போல இறுக்கமான சமூகக் கட்டுமானங்கள் அல்ல. ஆனால் அவை கூட்டு அடையாளங்களாக ஆகியிருக்கின்றன. மக்கள் தங்களை பெரிய சமூகக்குழுக்களாக திரட்டிக்கொள்ளவும், அரசியல் அதிகாரத்தையும் பொருளியல் அதிகாரத்தையும் அடையவும் அவை உதவுகின்றன. சாதியின் சமூகம் சார்ந்த இறுக்கம் போய்விட்டது. ஆனால் சாதியின் அரசியல் முக்கியத்துவம் வலுவாகி வருகிறது.

அதன் விளைவாகவே குற்றம்சாட்டும் அரசியல் உருவாகியுள்ளது. விசித்திரமான ஓர் இரட்டைநிலை. தங்களை சாதிசார்ந்து திரட்டிக்கொள்வதும், சாதியடிப்படையில் செயல்படுவதும், சாதிப்பெருமிதங்களை கொள்வதும் ஒருபக்கம். இன்னொரு பக்கம் சாதியைக் கற்பித்தவர்கள் என பிராமணர்களை, இந்து மதத்தை வசைபாடுவது. அதாவது சாதியின் எல்லா சாதக அம்சங்களையும் நாங்கள் ஏற்போம், அவற்றின் எதிர்மறையம்சங்களுக்கும் வேறுசிலர் பொறுப்பு என்னும் ஒரு நிலைபாடு. அதுவே இங்கே சாதிசார்ந்த எல்லா விவாதங்களிலும் உள்ளுறை.

ஜனநாயகத்தில் மக்கள் எப்படியாவது தங்களை திரட்டிக்கொண்டு அதிகாரத்தை அடையமுற்படுவதே இயல்பாக நிகழ்கிறது. தொழிற்சங்கம் என்பது அப்படிப்பட்ட ஒரு திரட்டு. அதேபோல ஒன்றாக சாதியும் ஆகிவிட்டிருக்கிறது. நம்மைவிட ஜனநாயகம் மேலோங்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட மக்கள் இப்படி பிறப்பு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த பல குழுக்களாக திரண்டுதான் அதிகார அரசியலில் ஈடுபடுகிறார்கள். பொருளியலில், அதிகாரத்தில் வெல்லும் குழுக்கள் ஆதிக்கம் கொள்கின்றன.

இது சரியா தவறா என நாம் சொல்ல முடியாது. வரலாறு இப்படி நிகழ்கிறது என்று மட்டுமே சொல்லமுடியும். ஜனநாயகம் என்பதே அதிகாரப்போட்டிதான் எனும்போது அது சரியும்கூட. சாதிகளுக்குள் மோதல்கள் நிகழாதவரை, சாதிகளின் அடிப்படையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அவமதிக்காதவரை வேறுவழியில்லை என கொள்ளவேண்டியதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை
அடுத்த கட்டுரைதத்துவக் கல்வி, கடிதம்