மு. இளங்கோவனுக்குத் தமிழக அரசின் விருது!

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

பேரா. மு. இளங்கோவனை நான் பதினைந்தாண்டுகளுக்கு முன் சந்தித்தேன். அன்று தமிழ் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கணிப்பொறியை அறிமுகம் செய்ய கடுமையான முயற்சியை மேற்கொண்டிருந்தார். இளங்கோவனின் தமிழ்ப்பணிகள் பலவகையானவை. தமிழறிஞர்களை தேடித்தேடி ஆவணப்படுத்துகிறார். தமிழிசை மரபை பதிவுசெய்கிறார். வி.ப.கா.சுந்தரம் போன்ற மேதைகளின் பலநூறு மணிநேர இசையை சேகரித்துள்ளார். நூல்களை பதிப்பிக்கிறார். சென்ற தலைமுறை தமிழறிஞர்களின் தளரா ஊக்கம் கொண்டவர்

மு. இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்

பேராசிரியர் முஇளங்கோவனுக்குத்

தமிழக அரசின் தூய தமிழ் ஊடக விருது!

 

 

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆண்டுதோறும் ஊடகத்துறையில் சிறப்புத் தமிழ்ப்பணி செய்பவர்களுக்குத் தூய தமிழ் ஊடக விருதினை வழங்கி வருகின்றது. புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான காட்சித்துறை ஊடக விருது இன்று (08.11.2022) சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கமும், தங்கப் பதக்கமும், தகுதியுரையும் அடங்கியது ஆகும்.

 

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளிலும்  இணையத் தமிழ்ப் பயிலரங்குகளை நடத்தி, தமிழ் இணையத்துறையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய மு. இளங்கோவன் தம் வலைப்பதிவு வழியாக (http://muelangovan.blogspot.com) ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தூய தமிழ்க் கட்டுரைகளைப்  பல்லாயிரம் பக்கங்களில் எழுதியுள்ளார். இதனை உலக அளவில் 7,95,820 பேர் பார்வையிட்டு, பயன்படுத்தி வருகின்றனர். இக்கட்டுரைகளில் தமிழகத்து மக்கள் அறியப்பட வேண்டிய மூத்த தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கி உள்ளன.

 

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினை உலக அளவில் கொண்டுசேர்க்கும் முயற்சியில் உலகத் தொல்காப்பிய மன்றம் கண்டு, அதற்கெனத் தனி இணையதளம்(https://tholkappiyam.org) உருவாக்கி அதில் தொல்காப்பியம் குறித்த அனைத்து அரிய செய்திகளையும் மு.இளங்கோவன் பதிவேற்றியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்களைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்து இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொலிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் (https://www.youtube.com/channel/UCH39TKckc3dl8Bi42kDpKnw/videos)

இதனை உலக அளவில் 4, 51,109 பேர் பார்வையிட்டு, பயன்பெற்றுள்ளனர்.

 

தமிழிசைக்குத் தொண்டாற்றிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், யாழ் நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆகியோரின் வாழ்வியலையும், பணிகளையும் ஆராய்ந்து, ஆவணப்படமாக்கி, உலகத் தமிழர்களின் பாராட்டினைப் பெற்றுவரும் மு. இளங்கோவன் இணைய ஊடகம் வழியாக ஆற்றிவரும் பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டுக்கான தூய தமிழ் ஊடக விருதினை அளித்துள்ளது.

முந்தைய கட்டுரைபுரிசை, சந்தோஷ் சரவணன்
அடுத்த கட்டுரைஆர்.எஸ்.ஜேக்கப், கிறிஸ்தவ இலக்கியம்