யன்மே மாதாவும் ரேணுகா அன்னையும் -ராஜமாணிக்கம்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்

அன்புள்ள அண்ணா,

 யன்மே மாதா கட்டுரையில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் வெண்முரசில் மீள மீள சொல்லப்பட்டு வந்திருப்பதை படித்தவுடன் உணர்ந்தேன்.   இந்து தர்ம வாழ்வியலில் நீடித்த அற வாழ்க்கை முறை (சனாதான தர்மம்) காட்டும் வழி அதுவே என்றும் உணர்கிறேன். அதோடு பழங்குடி ஞான விவேகம் இந்து பண்பாட்டின் அடிச்சரடாய் இருப்பதையும் வணக்கத்தோடு உணர்ந்தேன்.

கலை ஆரண்யகங்களான எல்லோரா, அஜெந்தா, எலிபெண்டா,  உள்ளிட்ட கலை, தத்துவ பள்ளிகளை காணச்சென்றதன் தொடர்ச்சியாக மாஹீர் ரேணுகா மாதா வின் ஆலயத்திற்கும், சென்றிருந்தேன். அங்கு அன்னையின் பாதத்தில் அமர்ந்து யன்மே மாதா என்று மனதில் தோன்றியவுடன் கண்ணீரோடு மெய்ப்பு கொண்டு அமர்ந்திருந்தேன். நித்ய சுமங்கலியான கோடிக்கணக்கான அன்னைகளுக்கு எள்ளும் நீரும் கொடுத்து பலி அன்னம் மானசீகமாக கொடுத்தேன். யன்மே மாதா கட்டுரையில் நீங்கள் சுட்டி இருந்த பண்பாட்டு மாற்றம் திரெளபதி கால கட்டத்தில் நிகழ்ந்ததாக சொல்லி இருந்தீர்கள். எனக்கு மழைப்பாடலில் ரேணுகா அன்னை, அனுஷியா, தத்தாத்ரேயர் தொன்ம காலத்திலேயே இந்த மாற்றம் வந்து விட்டதா என்று தோன்றியது.

வண்ணக்கடலின் நெற்குவை நகர் பகுதியில்         பரசுராமரை தேடி செல்லும் துரோணர்  தெற்கே தண்டகாரண்யம், விந்தியத்தில் பரசுராம ஆசிரமம் இருப்பதை தேடி கண்டடையும் இடத்தை படித்தது போலவே தான் இன்றும் இருக்கிறது. ரேணுகா அன்னை ஆலயம், பரசுராமர் மீண்டெழும் குளம், அனுஷியா அன்னை ஆலயம், தத்தாத்ரேயர் ஆலயம். நீண்ட காலமாக  ஆண்ட தேவகிரி யாதவ அரசர்களின் அரண்மனை மிச்சங்கள். மந்தையாக செல்லும் கால் நடைகள் என்று மாஹீர் பகுதியே வரலாற்றில் உறைந்து இருக்கிறது. நான் பிரத்யட்சமாகவே வெண்முரசின் வண்ணக்கடல் காலத்தில் உலாவி வந்தேன்.

ரேணுகா அன்னையே எல்லம்மா என்றும் ஏக வீரம்மா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார் என உணர்ந்து கொண்டேன். மூதன்னையை வழிபடும் போது தான் பார்த்தேன். அன்னை உருவம் ஒரு கல்பதிட்டை என்று, மற்ற மூதன்னையும் தொல் பழங்கால கல் ப்ரதிஷ்டையே, மென்ஹிரின் மேல் பரப்பாகவும் இருக்க சாத்தியமான வழிபாட்டு வடிவம். தொல்குடி மூதாதை வழிபாடு மூதன்னையர் வழிபாடு எல்லாம் எவ்வளவு நெடுங்காலமாக நம்மை தொடர்ந்து வருகிறது . கிமு 2 ஆம் நூற்றாண்டு பெளத்த விஹாரமும், சைத்யமும் இருக்கும் கார்லே குகைகளுக்கு அருகிலும் ஏக வீரம்மா ஆலயம் இருந்ததை பார்த்தோம். அந்த அன்னையும் இப்படி ஒரு நெடுங்கல் வழிபாடாகவே , சுயம்பு வடிவாக வழிபாடு செய்யப்படுவதையும் பார்த்தேன். நடுகல், கல்வட்ட, கல் பதிஷ்ட்டை , கல் ஆயுதங்கள் வழிபாடு எல்லாம் நம்மோடு நம் தொல்மூதாதையரை பிணைக்கும் முக்கிய இணைப்பு சரடாக கால, தேச வர்த்தமானங்களுக்கு அப்பால்   இன்றும் இருந்து வருகிறதா? இவை எல்லாம் நம் அறிதலுக்கு அப்பால் ஏன் உள்ளது. ? இந்து பண்பாட்டின் , இந்து ஞானத்தின் முக்கியமானமான இந்த தொல்குடி வழிபாட்டு முறை பற்றி நம் ஸ்ருதிகளிலும், ஸ்மிருதிகளிலும் எதேனும் குறிப்போ, தொடர்ச்சியோ இருக்கிறதா?

அன்புடன்

ராஜமாணிக்கம்

முந்தைய கட்டுரைகவிதைகள் நவம்பர் இதழ்
அடுத்த கட்டுரைகலைச்சொல்