அகிலன் தமிழ் விக்கி
சுந்தர ராமசாமி தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
இது அகிலன் நூற்றாண்டு. அதையொட்டி ஒரு கருத்தரங்கும் நிகழ்கிறது. (சாகித்ய அக்காதமியும் லயோலா கல்லூரியும் இணைந்து) அகிலனை சுந்தர ராமசாமி ஞானபீடம் வாங்கியதன் பொருட்டு வசைபாடியதும் நினைவுக்கு வருகிறது. இன்று இருவரையுமே எவரும் படிப்பதில்லை என்று ஒருவர் சொன்னார். அகிலன் நினைவுப்பரிசு பெற்றது நீங்கள் எழுதிய நாவல். நூற்றாண்டுவிழாவை ஒட்டி உங்கள் மதிப்பீடு என்ன?
ஆனந்த்
அன்புள்ள ஆனந்த்,
முதல்விஷயம் சுந்தர ராமசாமி அகிலனை வசைபாடவில்லை. போலிமுகங்கள்- அகிலனுக்கு ஞானபீடம் என்னும் கட்டுரை ஒரு கடுமையான எதிர்வினை. அகிலன் ஞானபீடம் பெற்றது அவருக்கும் அந்த அமைப்புக்குமான ஒரு தனிப்பட்ட நடவடிக்கை அல்ல என்று சுந்தர ராமசாமி சொன்னார். அதன் வழியாக ஒரு தரவரிசை உருவாக்கப்படுகிறது, அதை ஏற்கமுடியாது என்றார். அது தமிழின் முதன்மையான படைப்பாளிகளுக்கும் மேலாக அகிலனை நிறுவுகிறது என்றும், அது அடுத்த தலைமுறைக்கு தவறான சுட்டிக்காட்டலாக ஆகிவிடும் என்றும் சொன்னார்.
நான் அதைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் பேசியிருக்கிறேன். அப்படி அடுத்த தலைமுறை ஒன்றும் ‘தவறாக’ வாசிக்கப் போவதில்லை என்றேன். அப்படி அடுத்த தலைமுறையும் அவர் எழுத்தை வாசித்தால் அது எவ்வகையிலோ பண்பாட்டுக்கு முக்கியமானது என்றேன். (கல்கியும் சாண்டில்யனும் அப்படி வாசிக்கப்படுவார்கள் என்று சொன்னேன்). எப்படியோ ஒரு படைப்பின் தரம்தான் பயன்பாடாக ஆகிறது.
ஆனால் விருது பெறுவதை கண்டிப்பது சரிதான் என்று சொன்னேன். ஏனென்றால் அது சமகாலத்தில் அகிலன் சார்பில் ஒரு இலக்கிய மதிப்பீடு முன்வைக்கப்படும்போது அதற்கு மாற்றாக இருக்கும் இன்னொரு இலக்கிய மதிப்பீட்டை முன்வைப்பதுதான்.அதுவே இலக்கியச் செயல்பாட்டின் வழிமுறை. அதைச் செய்தாகவேண்டும்.
நான் செய்வதும் அதையே. என் விமர்சனங்கள் இலக்கியத்தை முன்வைப்பவை மட்டுமே. இன்றைக்கு ஒரு மிக அபத்தமான மனநிலையை காணமுடிகிறது. ஓர் இலக்கிய விமர்சனம் முன்வைக்கப்பட்டால் அதை உடனே அவதூறு, வசைபாடல் என சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர். அதை தனிப்பட்ட தாக்குதலாகச் சித்தரித்துக் கொண்டால் அதை எதிர்கொள்ளலாம் என நினைக்கின்றனர்.
நான் அண்மையில் ஆதவன் பற்றி ஒரு சில வரிகள் எழுதினேன். அவர் பொதுவாசிப்புக்கு அணுக்கமான எழுத்துக்களை எழுதியவர், தன் சமகாலத்து உளவியல் கொள்கைகளை அப்படியே கையாண்டவர் என்று சொல்லி என் மதிப்பீட்டை எழுதியிருந்தேன். உடனே ஓர் அசடு ‘ஆதவனை அவதூறு செய்கிறீர்கள்’ என எனக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியது. இலக்கிய விமர்சனம் என ஒன்றிருப்பதே இவர்களுக்கு தெரியவில்லை. இந்த அசடுகள் பேச ஒரு களம் அமைந்துள்ளது சமூகவலைத்தளம் வழியாக. இதுதான் இன்றைய முதன்மைப் பிரச்சினை.
அகிலன் ஒரு குறிப்பிட்ட எழுத்துமுறையின் முகம். சுந்தர ராமசாமி இன்னொரு எழுத்துமுறையின் முகம். இரண்டாவதை இலக்கியம் என்றும் முதலாமதை பொதுவாசிப்பு என்றும் சொல்கிறோம். இலக்கியக் களத்தில் சுந்தர ராமசாமி இன்றும் வாசிக்கப்படுகிறார். அதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று இலக்கிய வாசிப்புக்கு வரும் எந்த இளைஞரும் ஓராண்டுக்குள் அவரை வாசித்துவிடுவார்கள். ஆனால் இன்றும்கூட பொதுவாசிப்புக் கூட்டம் அவரை வாசிக்கமுடியாது.
மறுபக்கம், அகிலன் அன்று பொதுவாசிப்புக் கூட்டத்தால் விரும்பி வாசிக்கப்பட்டார். பொதுவாசிப்புக் கூட்டம் எப்போதுமே சமகால எழுத்தையே வாசிக்கும். ஏனென்றால் சமகால ருசி, சமகால பிரச்சினைகளே பொதுவாசிப்பின் அடிப்படை. ஆகவே சென்றகால எழுத்தை அவர்கள் வாசிக்க மாட்டார்கள். இதனால் நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களை இன்று வாசிப்பவர்கள் குறைவு.
ஆனால் அவர்களுக்கு முற்றிலும் வாசிப்பவர்கள் இல்லாமலாக மாட்டார்கள். பொதுவாசிப்புக்கான எழுத்திலேயேகூட ஒரு சிறு பகுதி என்றுமுள்ல சில கேள்விகளை தொட்டிருக்கலாம். வரலாற்றையும் பண்பாட்டையும் சொல்லலாம். அவை தொடர்ந்தும் வாசிக்கப்படும். அவ்வாறு தொடர்ச்சியாக ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையினரால் ஒரு பொதுவாசிப்பு நூல் வாசிக்கப்பட்டால் அதை அத்தளத்தில் ஒரு கிளாஸிக் என்று சொல்லலாம்.
சுந்தர ராமசாமியின் எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் கொண்டது. அது வாசகனுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுகிறது. அவனுடைய அகவினாக்களை எதிர்கொள்கிறது. அவன் அதை வாசிப்பதன் வழியாக தானும் வளர்கிறான். ஆகவே அவன் அதை தன் ஆளுமையின் பகுதியாகவே கொண்டிருக்கிறான். அவரை அவன் ஏற்கலாம், மறுக்கலாம், கடந்துசெல்லலாம், ஆனால் அவர் அவன் அறிவுச்செயல்பாட்டின் ஒரு காலகட்டம்.
அகிலனின் எழுத்து வாசகனின் சுவாரசியத்தை இலக்காக்கியது. அதை வாசிக்கையில் அவன் ஒரு புனைவுலகில் திளைத்து ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மீள்கிறான். அதிலுள்ள நெருக்கடிகளை தான் அடைகிறான். உவகைகளை பெற்றுக்கொள்கிறான். மீண்டதும் அது ஒரு வாழ்க்கையனுபவம்போல ஆகிவிடுகிறது. ஒரு வாழ்க்கை நிகழ்வை நினைவுகூர்வதுபோல அதை அவன் பொதுவாக நினைவுகூர்வான். அதில் அவன் அகம் ஈடுபடவில்லை. அவன் அதனூடாக வளரவில்லை.
அகிலன் எழுதிய பிரச்சினைகள் அவர் எழுதிய காலகட்டத்திற்கு உரியவை. அவைதான் பொதுவாசிப்பு எழுத்தில் செல்லுபடி ஆகும். இன்று சித்திரப்பாவையை வாசிப்பவன் அதிலுள்ள அந்த ஒழுக்கப்பிரச்சினை என்ன என்றே புரிந்துகொள்ள மாட்டான். ஒருவன் ஒருத்தியை வலுக்கட்டாயமாக முத்தமிட்டாலே அவனை அவள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன? ஆகவே அவனுக்கு அதில் ஈர்ப்பு உருவாவதில்லை.
ஆனால் அந்த புனைவுலகம் வாசகனுக்கு மேலதிகமாக அறிதல்களையும், கனவுகளையும் அளித்தது என்றால் அந்த ஈர்ப்பு குறையாது. அவன் அதில் இருந்து பெற்றவை என்றும் உடனிருக்கும். அவ்வாறு சில பொதுவாசிப்பு நூல்கள் காலத்தை கடக்கின்றன. அவை தங்களை அறியாமலேயே இலக்கியமாகியிருக்கின்றன என்றே பொருள்.
தமிழ்ச்சூழலில் நமது வரலாற்றுச் சித்திரம், பண்பாட்டுச் சித்திரம் விரிவாகப் பதிவானது பொதுவாசிப்புக்குரிய நூல்களிலேயே. வாசகன் அவற்றை வாசிக்கையில் வரலாற்றில் வாழும் கனவுநிகர் அனுபவத்தை அடைகிறான். அந்த அனுபவம் தமிழ்ப்பண்பாட்டை, மதத்தை, வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவுகிறது. ஆகவே அவனில் ஒரு பண்பாட்டு அனுபவமாக நீடிக்கிறது. சாண்டில்யனின் யவனராணி வாசித்த ஒருவர் மாயவரம் அருகே பூம்புகாரை உணரமுடியும். அது ஓர் ஆழ்ந்த பண்பாட்டு அனுபவமே.
இதை முப்பதாண்டுகளாக எழுதி வருகிறேன். கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் உலகிலுள்ள தமிழ்ப்பண்பாட்டுச் சித்திரம், வரலாற்றுச் சித்திரம் நவீன இலக்கிய ஆக்கங்களில் இல்லை. நவீன இலக்கியம் தமிழில் நவீனத்துவ இலக்கியமாகவே இருந்தது. ஆகவே தனிமனித ஆழங்களை மட்டுமே கவனித்தது. தனிப்பட்ட சித்திரங்களையே அளித்தது.
ஆகவே பொதுவாசிப்புத் தளத்து நூல்களில் சில தமிழுக்கு முக்கியமானவை. அவற்றை இலக்கியமாக வாசிக்கவேண்டியதில்லை, பொதுவாசிப்புத்தள நூலாகவே எண்ணி வாசிக்கலாம். அகிலனின் வெற்றித்திருநகர், நா.பார்த்தசாரதியின் மணிபல்லவம், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் போன்றவை உதாரணமானவை. கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் அவற்றில் முதன்மையானவை.
ஆகவே அகிலன் பற்றி ஓர் ஆய்வுக்கவனமும் மறுவாசிப்பும் நிகழுமென்றால் அது நல்லதுதான். இன்னும் விரிவாகவே செய்யவேண்டியது அது. அவர் படைப்புகளில் நீடிப்பதென்ன என்று பார்க்கலாம். அவை அன்று என்னவகையான உணர்வுநிலைகளை உருவாக்கின என ஆராயலாம். அது நம் பண்பாட்டுச் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.
ஜெ