விலா எலும்புகளின் பிரகடனம் -விக்னேஷ் ஹரிஹரன்

நீலி மின்னிதழ்
விலா எலும்புகளின் பிரகடனம் விக்னேஷ் ஹரிஹரன்

மேலைநாட்டுச் சிந்தனையாளர்களை இங்கே அறிமுகம் செய்து எழுதுவதில் ஒரு சில வழக்கமான ‘மாதிரி’கள் உள்ளன. ஒன்று, தான் மட்டுமே அவர்களை கண்டடைந்ததுபோல ஒரு பரவசத்துடன், இங்கே இதெல்லாம் எவனுக்கு தெரிகிறது என்னும் பாவனையில் முன்வைப்பது. இரண்டு, மேற்கே எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை அப்படியே தழுவிக்கலந்து எழுதுவது. மேலைநாட்டு சிந்தனையாளரை தனக்கு புரிந்தபடி அள்ளி, தோதானபடி வளைத்து எழுதப்படும் அரைகுறைக் கட்டுரைகள் மூன்றாம் வகை.

ஒரு மேலைநாட்டுச் சிந்தனையாளரை இங்கே பேசும்போது கருத்தில் கொள்ளவேண்டியவை என சில உண்டு.

அ. இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மெய்யான சமூக, இலக்கிய, அரசியல், பண்பாட்டு விவாதத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்தல். அந்த அறிமுகத்திலேயே அந்த சிந்தனையாளர் இங்கே புதிதாக என்ன சொல்லவிருக்கிறார் என்று தெரியும். சம்பந்தமற்ற ஒருவரை கொண்டுவந்து நிறுத்துவதில் பொருளில்லை. அவர் நம் சிந்தனைக்கு எவ்வகையில் தேவை என்பதே முக்கியமானது.

ஆ. எந்தச் சிந்தனையாளரும் காலப்போக்கில் தொகுப்பும் சுருக்கமும் அடைவார். அந்த சுருக்கமான வடிவை மறுதொகுப்பு செய்து அளிக்கவேண்டும். அவர் எழுதிய சூழலில் விரிவான விவாதங்கள் நடைபெற்றிருக்கும். நுணுக்கமான உள்ளூர் விவாதக்கூறுகளும் இருக்கும் அவற்றை அப்படியே இங்கு கொண்டுவரலாகாது.

இ. எந்த ஒரு மொழிச்சூழலுக்கும் அதற்குரிய அறிவியக்க மொழிநடை இருக்கும். அந்த மொழிநடையில் அச்சிந்தனையாளர் முன்வைக்கப்படவேண்டும். எளிய பொதுஅறிமுகம் முதல் அறிவுத்தள அறிமுகம் வரை அதற்குரிய நடைகள் மாறுபடும். அந்த நடை கைக்கொள்ளப்படவேண்டும். வாசிக்கப்படாத எழுத்து பயனற்றது

ஈ. அறிமுகம் செய்பவரின் மதிப்பீடும் கருத்தும் இடம்பெறலாம். தன் எல்லைக்குள் நின்று அவர் அதைச் சொல்வாரென்றால் அதற்கொரு மதிப்புண்டு.

சிமோன் த பூவா நான் கல்லூரி மாணவனாக இருக்கையில் ஒரு பெரிய மோஸ்தராக இருந்தார். ’அவ பெரிய சிமோன் த பூவா பாஸ்’ என சுஜாதா கதையிலேயே வசந்த் சொல்வார். நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் அவரைப்பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். தொகுக்கப்பட்ட இரண்டு நூல்களை நான் வாசித்திருக்கிறேன்.

சிமோன் த பூவா பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உருவான பெண்ணியச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக வந்தவர்.மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் முதல் ஒரு சிந்தனைமரபை நீட்டிக்கொண்டுவந்துதான் அவரை அடைய முடியும். ஆனால் அக்காலத்தில் சிமோன் த பூவா நேரடியாக, எந்த பின்புலமும் இல்லாமல்தான் இங்கே பேசப்பட்டார்.

நீலி மின்னிதழில் சைதன்யா எழுதிய அந்த விடியலின் பேரின்பம் கட்டுரையையும், விக்னேஷ் ஹரிஹரன் எழுதிய விலா எலும்புகளின் பிரகடனம் கட்டுரையையும் ஒரு சிந்தனைமரபின் இரு புள்ளிகளாக வாசிக்கலாம். விக்னேஷ் ஹரிஹரன் நான் மேலே சொன்ன நான்கு அடிப்படைகளும் பொருந்தும்படிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

ஆழமான பெண்ணிய இதழாக நீலி வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் எழுத்தும் பெண்ணியம் பற்றிய எழுத்தும் நிறைந்துள்ளன. அதில் பெண்கள் இன்னும்கூட பங்களிப்பாற்றலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅமைப்பும் மதமும், கேள்வி
அடுத்த கட்டுரைவிந்தியா