விஷ்ணுபுரம் எஃபக்ட்- கடிதம்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்களின் முந்தைய கட்டுரைகளில் “குற்றாலம் எபெக்ட்”  – (மலையாள கவிஞர்கள் “குற்றாலம் கவிதை பட்டறையில்” பங்கேற்றத்தினால்  மலையாள கவிதைகளில் தமிழ் கவிதைகளின் தாக்கம்) பற்றி சொல்லி இருக்கிறீர்கள். விஷ்ணுபுரம் விருது விழாக்களில் ஒவ்வொரு வருடமும் வேற்று மொழியை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள் (வடகிழக்கு, கர்நாடகா, ஆந்திரா). விழாவில் கலந்து கொண்டு சென்ற பிறகு அவர்களிடம் மாற்றம் உண்டா? அவர்களின் படைப்புகளில் “விஷ்ணுபுரம் எபெக்ட்” உண்டா?

உங்களின் கருத்தை அறிந்து கொள்ள ஆர்வம்.

நன்றி.

இப்படிக்கு,
சா.ராஜா

***

அன்புள்ள சா.ராஜா

குற்றாலம் எஃபக்ட் என்பது புனைவில் நிகழ்ந்த ஒரு செல்வாக்கு. விஷ்ணுபுரம் விருது ஓரு நிகழ்ச்சியமைப்பு. இதன் முதன்மைச் செல்வாக்கு தமிழில்தான்.

முன்பெல்லாம் விருதுவிழாக்களில் விருதுபெறுபவர் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டு விஐபிகள் முன்னால் அமர்வார்கள். விருது பெறுபவர்களை வரிசையாக மேடையேறச் செய்வதுண்டு. விருதுபெறுபவர் கையில் துண்டைக் கொடுத்து விருது வழங்குபவரின் தோளில் போட்டு கௌரவிக்கும் விருதுகளும் இங்கே இருந்தன. இன்று அது மாறியுள்ளது. விருது வழங்குதல் ஒரு படைப்பாளிக்கான கௌரவமாக எப்படி நடைபெறவேண்டும் என்பதை விஷ்ணுபுரம் விருது தமிழ்ச்சூழலுக்குக் காட்டியுள்ளது.

இவ்விருது விழாவுக்கு வந்துசென்றவர்கள் இதைப்பற்றி வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார்கள். ஜனிஸ் பரியத், முதல் வீரபத்ருடு வரை. அண்மையில்கூட இவ்விருது நிகழும் விதம் பற்றி மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கிணையான வாசகர் அமைப்புகளை உருவாக்க தங்கள் மொழிகளில் முயல்கிறார்கள் என பலர் எழுதியிருக்கிறார்கள். நிகழலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைதுப்பறிதல், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாருநிவேதிதா:  எழுத்தும் வாழ்வும் கார்ல் மார்க்ஸ் கணபதி