சுவாமிநாத ஆத்ரேயன் -கடிதம்

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

அன்பு ஜெ சார். நலமா

முதலில் பொன்னியின் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இன்று சுவாமிநாதன் ஆத்ரேயன் பக்கம் படித்தேன். முன்பு சில கிறித்துவ இஸ்லாமிய தமிழறிஞர்கள் பற்றிய பதிவுகளையும் படித்தேன்.

விடுதலைப் போராட்ட காலத்தில் ஒளி விட்டுச் சுடர்ந்த பிராமண, கிறித்துவ, இசுலாமிய மகான்களையும் அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தோடும் இறுகப் பிணைந்து ஒற்றைக்குரலில் முழங்கி ஒட்டுறவாய் குருதியுறவாய் இணங்கி வாழ்ந்த கோலம் நினைத்துப் பார்க்கிறேன்.

இன்று அவர்களெல்லோருமே தனித்தனித் தீவுகளாக ஒதுங்குகிறார்களே. காரணங்களைச் சொல்கிறார்கள்தான். பார்ப்பன வெறுப்பும் கடவுள் மறுப்பும் இடஒதுக்கீடு மூலம் தகுதி தன் தகுதியிழக்க வைக்கப்பட்டதும் பிராமணர்களுக்கு குலப்பகையாகி இன்று இந்துத்வா என்ற ஒற்றைக்குடை கீழ் திரண்டு விட்டார்கள். மறுபுறமும் அதே இந்துத்வா பெயரைச் சொல்லி இசுலாத்திற்குள்ளும் கிறித்துவத்திற்குள்ளும் வெறுப்பைப் பரப்புகிறார்கள்.

குருக்ஷேத்திரம் தொடங்கி உக்ரேன் வரை வன்முறை, ஆயுதங்கள் போன்றவை தீராத துயரையே தரும் என்ற வரலாற்றுப் பாடத்தை மக்கள் உணர்ந்து கொள்ள அவகாசமே தராமல் வெறியூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் ஆதாயம்.

தனிமனிதத் தீவிரவாதத்தை வேரோடொழிக்கும் பூச்சிக் கொல்லி மருந்து ஏதுமில்லை என்று நன்கறிந்தும், ஒரு வெடிப்பின் மூலம் தேடியலையும் அரசையும் காவல்துறையையும் மூச்சுவிடக் கூட நேரம் தராமல் கேள்விப்பட்டியல் அரசியல் பண்ணுகிறார்கள்.

கறுப்புக்கொடி காட்டிய கூட்டத்திற்குள் துள்ளிக்குதித்து மின்கம்பத் தூண்மேல் தாவியேறி மக்கள் திரளோடு கலந்த பிரதமர் நேரு. சேறும் சகதியும் நிறைந்த நவகாளித் தெருக்களில் வெற்றுக்காலில் நடந்து வாளேந்திய, வஞ்சம் தாங்கிய கூட்டத்தைக் கட்டித்தழுவி ஆற்றுப்படுத்திய தேசத்தந்தை காந்தி. இதுபோன்ற ஒரு தலைவர் கூட கோவை தெருக்களில் இறங்கி வேலை செய்யவில்லையே. வழிதவறிப் போகும் இளைஞர்களிடம் உரையாடி மடைமாற்ற ஒருவருமில்லையே.

அரசல்புரசலாக இருக்கும் வேறுபாடுகளைக்கூட மறக்கடித்து மக்களனைவரையும் ஒற்றுமையாகவும் சாந்தி சமாதானத்தோடும் வாழவைக்கப் பாடுபடுவோர்களை இனி அரசியல்கட்சிகளில் தேடமுடியாது.

சமுகவலைத்தளங்களின் சக்தி பரந்து கிடக்கும் இந்தக் காலத்தில் அன்பையும் கருணையையும் வலுவான வாதங்களோடு பரப்பும் இணையபக்கங்கள் வேண்டும். மறுபடியும் இங்கு பிராமணர்களும் சிறுபான்மையோரும் அவரவர் தீவுகளை விட்டு ஏனைய மக்களோடு ஒன்றாகி இணங்கி இணைந்து வாழும் நிலை வரவேண்டும்.

அன்புடன்

ரகுநாதன்

***

முந்தைய கட்டுரைஅழைப்பை எதிர்நோக்கியா?
அடுத்த கட்டுரைபெருங்கை, கடிதம்