புரிசை, சந்தோஷ் சரவணன்

எனது சொந்த ஊர் எது என கேட்கப்படும் பொழுதெல்லாம், புரிசை என ஊர் பெயருடன், தெருகூத்து கலையில் புகழ்பெற்ற கண்ணப்ப தம்பிரான் அவர்களின் ஊர் என்பதையும் சேர்த்தே கூறுவேன். அதில் ஒரு பெருமிதம். ஆனாலும் தெருக்கூத்தை பார்க்கும் வாய்ப்பு அமைந்ததில்லை.

மிக சிறிய வயதில் பார்த்த நினைவு மங்கலாக இருக்கிறது. ஊர் திரௌபதி அம்மன் கோவிலின் 20 நாள் திருவிழாவில் முதல் நாளில் இருந்தே தினம் மாலை பாரதம் சொல்வார்கள்… பத்தாம் நாள் திரௌபதி சுயம்வரம் அன்றிலிருந்து இரவு கூத்து தொடங்கும். தொடர்ந்து வாரணவதம், வஸ்திராபகரணம், பகாசுர வதம், அர்ஜுனன் பாசுபதம் பெறுவது, கீசக வதம், விராட பர்வம் (ஆநிரை ஓட்டுதல்), கண்ணன் தூது, அரவான் பலி, அபிமன்யு வதம், கர்ண மோட்சம் என விழா சடங்குகளில் ஒரு பகுதியாக தினம் கூத்து நடைபெற்று பதினெட்டாம் நாள் இரவு துரியோதன வதத்துடன் கூத்து முடிவடையும். பத்தொன்பதாம் நாள் தீ மிதி, இருபதாம் நாள் தர்மராஜா பட்டாபிஷேகம் என திருவிழா நிறைவுக்கு வரும்.

ஆனால் நினைவு தெரிந்து (குறைந்தது கடந்த பத்து ஆண்டுகளாகவாவது) ஊர் திருவிழாவில் கூத்து நடைபெறவில்லை. திருவிழாவிற்கு வெளியே நடக்கும் கூத்து விழாக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் ஊர் நண்பர்கள் / உறவினர்களிடம் இருந்து வருவதும் இல்லை. இம்முறை சந்தர்ப்பவசமாக கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடகக்கலை விழா மற்றும் கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனை விருது வழங்கும் விழா குறித்த அறிவிப்பை இணையத்தில் பார்த்தேன். எனது ஊரில் நடக்கும் நாடக விழா, அவசியம் கலந்து கொள்வது என முடிவு செய்தேன்.

புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் ஐந்து தலைமுறைகளாக தெருக்கூத்து கலையில் ஈடுபட்டு வருகிறது. சித்தர், மந்திர ஜாலம் அறிந்தவர் என சொல்லப்படும் வீராசாமி தம்பிரான் ஒரு தோல்பாவை கூத்து கலைஞர். அவர் பரதம், இசை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர். தேவதாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் நட்டுவனாராகவும் இருந்தார் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர் தோல்பாவை கூத்தில் இருந்து விலகி கம்ச சம்ஹாரம் என்ற தனது முதல் தெருக்கூத்தை அரங்கேற்றுகிறார். புரிசை தெருக்கூத்து மரபின் தொடக்கம் அது தான்.  தெருக்கூத்தில் அவரது முன்னோடிகள் / குரு யார் என்பது குறித்த தகவல்கள் இல்ல. வீராசாமி தம்பிரானுக்கு பிறகு ராகவ தம்பிரான், துரைசாமி தம்பிரான் இரண்டாம் தலைமுறையாகவும், கிருஷ்ண தம்பிரான் மூன்றாம் தலைமுறையாகவும், கண்ணப்பத் தம்பிரான், நடேச தம்பிரான் நான்காம் தலைமுறையாகவும், கண்ணப்ப சம்பந்தன், கண்ணப்ப காசி ஐந்தாம் தலைமுறையாகவும் இந்த கலையை பயின்று நிகழ்த்தி வருகிறார்கள்.

கண்ணப்பத் தம்பிரான் ஊமை திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களை மேடை நாடகங்களின் பாணியிலேயே நிகழ்த்தியுள்ளார். ஆனால் தெருக்கூத்தையும் கைவிடவில்லை. இந்த மேடை நாடக அறிமுகம் பின்னாளில் அவர் நவீன நாடக குழுகளுடன் இணைந்து செயல்பட உந்துதலாக அமைந்திருக்கலாம். மரபார்ந்த மகாபாரத கதைகளுடன் நின்றுவிடாமல், பாரதியின் பாஞ்சாலி சபதத்தை தெருக்கூத்தாக அமைக்க கண்ணப்பத் தம்பிரான் முயன்ற போது அவரது குடும்பத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்தது. எனவே அவர்களிடமிருந்து பிரிந்து வந்து ‘புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தை’ நிறுவுகிறார். திரௌபதி அம்மன் திருவிழாவுடன் இணைந்து மகாபாரத கூத்து பரவலாக இருந்தாலும், தமிழகத்தில் ராமாயண கூத்து வழக்கொழிந்து விட்டிருந்தது. அதை மீட்கும் வகையில் அனுமன் தூது, இந்திரஜித், வாலி மோட்சம் போன்ற கூத்துக்களையும் கண்ணப்பத் தம்பிரான் இயக்கினார். சிறுதொண்டர் புராணம், தெனாலிராமன் கதைகளையும் கூத்து வடிவில் நிகழ்த்தியுள்ளார்.

கண்ணப்ப தம்பிரானுக்கு 1975ல் நா முத்துசுவாமியின் அறிமுகம் கிடைக்கிறது… 1977ல் கூத்துப்பட்டறை தொடங்கப்பட்டது முதல் அதனுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்ன் (Gabriel García Márquez) Un señor muy viejo con unas alas enormes (The old man with huge wings) என்ற கதை பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன் என்ற பெயரில் Mapa theatre of Colombiaவின் உதவியுடன் தெருகூத்து வடிவில் நிகழ்த்தப்பட்டது. அதேபோல் ஜெர்மானிய எழுத்தாளர் ப்ரெக்ட்டின் Bertolt Brecht’s “Caucasian chalk circle” தமிழில் வெள்ளை வட்டம் என்ற நாடகமாக அரங்கேறிய போது அதற்கு கண்ணப்பத் தம்பிரான் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படி தெருகூத்தின் சாராம்சம் அழியாமல் நவீன போக்குகளுடனும் இணைந்து செயல்படும் அவரது பண்பு இன்று வரை தொடர்கிறது. இந்த விழாவில் நிகழ்த்தப்பட்ட வீர அபிமன்யு கூத்து இந்தியநோஸ்ட்ரம் தியேட்டர், புதுச்சேரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. பொதுவாக தெருக்கூத்துகளில் பெண் நடிகர்களுக்கு இடம் இல்லை என்றாலும், இந்த கூத்தில் சரிசமமான கதாபாத்திரங்களாக பெண்களே நடித்தனர்.

மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கூத்து முறையில் எந்த மாறுதலும் இல்லை என கலைஞர்கள் கூறுகிறார்கள். ஆட்டம், அடவுகள், அலங்காரம், முகபூச்சு, புஜகீர்த்தி என அனைத்துமே நூற்றாண்டுகளாக மாறாமல் பின்பற்றப்படுகின்றன. இன்று வடக்கத்தி பாணி தெருகூத்தின் முதன்மை மாதிரியாக புரிசை கூத்தை கூறலாம் எனவும் தெரிவிக்கிறார்கள்.

கண்ணப்பத் தம்பிரான் 2003ல் மறைந்த பிறகு ஆண்டுதோறும் புரிசையில் அவரது நினைவாக நாடக விழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவினை ஒருங்கிணைத்து வருகிறார்கள். இவ்வருட விழா அக்டோபர் 1&2ம் தேதிகளில் நடைபெற்றது. விழாவில் கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளா் விருது நா்மாபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மூத்த தெருக்கூத்து கலைஞா் எம். பலராமப் பிள்ளைக்கு வழங்கப்பட்டது. தெருக்கூத்து பனுவல் ஆசிரியர் பெரிய செங்காடு எஸ்.எம். திருவேங்கடம் எழுதிய வாலி மோட்சம் என்ற கூத்து பனுவல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து கண்ணப்ப காசி மற்றும் முனுசாமி அவர்களின் நினைவேந்தல். திரு கண்ணப்ப காசி கட்டியக்காரனாக நடித்தவர். உலகெங்கும் கூத்துக்களை நிகழ்த்தியுள்ளார். National School of Dramaவில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். நவீன நாடக குழுக்களுடன் தொடர் உரையாடலில் இருந்தவர். சித்தாமூர் திரு.முனுசாமி கட்டியக்காரன், கர்ணன், துரியன், இராவணன் என்று பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

இரு நாள் நிகழ்வுகள்:

1.     வேலூர் சாரல் கலைக்குழு வழங்கிய கிராமிய இசை. கிராமிய இசை பாடல்கள் என தனியாக கேட்டதில்லை. முதல் முறை இந்த நிகழ்வில் கேட்டேன். இவர்கள் அப்படி தேர்வு செய்தார்களா அல்லது அவை அப்படி தானா என தெரியவில்லை ஆனால் எல்லா பாடல்களுமே தலைவன் தலைவிக்கோ தலைவி தலைவனுக்கோ பாடும் பாடலாகவே அமைந்தன…

2.     தொடர்ந்து புரிசை மாணவர்களுக்கு கூத்து மன்றத்தை சேர்ந்த கங்காதரன் மற்றும் நெல்லை மணிகண்டன் அவர்கள் பயிற்சி அளித்து அறங்கேற்றிய தப்பாட்டம் மற்றும் கழியல் ஆட்டம். நகர வாழ்க்கையில் தப்பாட்டம் கேட்க வழியில்லை. சினிமாவில் பின்னணி இசை அல்லது சாவு வீடுகளில் பறை சத்தம் என குறைவாகவே கேட்டுள்ளேன். இங்கு மேடையில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் தப்பு இசை மற்றும் கலைஞர்களின் கால் சிலம்பு ஒலி. குதிரை குளம்பு… இடி.. கொட்டும் மழை… இளம்சாரல்… பெரும் இடி என ஓசைகளாலான ஒரு உலகிற்குள் நுழைந்தது போலிருந்தது. மேற்கத்திய வாத்திய இசையை ஒலிக்க விட்டு, அதில் ஒன்ற பலமுறை முயன்றதுண்டு. ஆனால் இயன்றதில்லை. இங்கு எந்த முயற்சியும் இல்லாமல் இசை உணர்வுகளாக உருமாறியது நிறைவான அனுபவமாக அமைந்தது.

நாடகங்கள்…

3.     சென்னை ராஜீவ் கிருஷ்ணன் நடத்தி வரும் பெர்ச் நாடக அரங்கும் புதுவை இந்தியநோஸ்ட்ரம் குழுவும் இணைந்து வழங்கிய கிந்தன் சரித்திரம். நடிகர்கள்: காளி, தரணி & டேவிட்.

மரபான சபாக்களின் மேடை நாடகங்களை பார்த்து பழகிய எனக்கு மாற்று நாடகங்கள் / நவீன நாடகங்களுக்குள் நுழைய நல்ல திறப்பாக இந்த நாடகம் அமைந்தது. பெருந்தொற்று காலத்தில் எளிமையாக மக்களை மகிழ்விக்கும் நோக்கில் எழுதப்பட்ட இந்த நாடகம் திரைப்பாடல்களுடன் இணைந்து கிந்தன் என்பவனின் வாழ்வை விவரிக்கிறது. பெரிய கதையம்சம் நீதி போதனை என எதுவும் இல்லாமல் கதை ஓட்டத்தின் மூலம் சுவாரஸியமாக நகர்த்திச் செல்கிறார்கள். கதாபாத்திரங்களே கதை சொல்பவர்களாகவும் மேடை பொருட்களாகவும் (props) மாறுவது, தங்களுக்குள்ளும் பார்வையாளர்களுடனும் பேசிக்கொள்வது என fourth wallயை இல்லாமல் செய்தது புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து பார்த்த பல நாடகங்களும் இந்த தன்மையை கொண்டிருந்தன. இதில் நடித்த காளீஸ்வரி சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் விமோசனம் சரஸ்வதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.     திருபத்தூர் முகத்திரை நாடகக்குழு வழங்கிய கிரிஷ் கர்னாட்டின் நாகமண்டலா. இயக்கம் அறிவழகன்.

5.     சிவப்பு யானை நாடக நிறுவனம் திருநெல்வேலி வழங்கும் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ஔரங்கசீப். இயக்கம் சந்திரமோகன்.

இவை இரண்டுமே மரபான மேடை நாடகங்கள். பல முறை பலரால் மேடையேற்றப்பட்டவையும் கூட. இரண்டையுமே நான் பார்ப்பது முதல் முறை. பிறகு இணையத்தில் தேடி இவற்றின் வேறு நாடக வடிவங்களையும் பார்த்தேன். தெளிவாக எழுதப்பட்ட நாடக காட்சி குறிப்புகள் இருந்தாலும் நாடகப்படுத்தலில் இவ்வளவு வித்தியாசங்கள் சாத்தியப்படும் என எதிர்பார்க்கவில்லை.

நாகமண்டலா மேடை அமைப்பு, தேர்ந்த நடிப்பு என மிக அருமையாக இருந்தது. குறிப்பாக நாயாக & வயதான மூதாட்டியாக நடித்தவர்கள் சிறப்பாக நடித்திருந்தார்கள். ஔரங்கசீப் நாடகம் என்னை அதிகம் கவரவில்லை.

6.     தியேட்டர் பிளமிங்கோ வழங்கிய பாதல் சர்க்கார் அவர்களின் அட்டமலச்சிய பல்யாட். நடிகர்கள் Shravan Fodnekar, Pranav Tengse and Parajkta Kavlekar

மராட்டிய மொழியில் அமைந்த இந்த நாடகம் சிக்குராம் மற்றும் விக்குராம் என்ற இரு திருடர்களை பற்றியது. எனக்கு இந்தி தெரியும் என்றாலும் மராட்டி வசனங்கள் மிக குறைவாகவே பிடிகிட்டின. இந்த நாடகத்தில் மேடை உபகரணங்களின் உபயோகம் மிக கச்சிதமாக இருந்தது. இரண்டு சட்டகங்களை மட்டுமே வைத்து அவற்றை ஊராக, கடையாக, காடாக, நதியாக என மாற்றி அமைத்துக் கொண்டனர். கையில் பிடிக்கும் வகை முகமூடி கொண்டு ஒருவர் இரண்டு கதாபாத்திரங்களாக மாறி மாறி நடிக்கும் முறையும் புதிதாக இருந்தது. இந்த நாடகம் புகழ்பெற்ற பெங்காலி நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் ஹொட்டொமலர் ஒப்பாரெ (Hottomalar oparey) என்ற நகைச்சுவை நாடகத்தின் மராட்டி தழுவல். பணம், கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லாத, அனைத்து அனைவருக்கும் என மக்கள் வாழும் ஒரு உலகில் மாட்டிக் கொள்ளும் இரு திருடர்கள் எதை திருடுவது, எதை அபகரிப்பது என புரியாமல் குழம்பி தவிப்பதை குறித்த நாடகம்.

7. திரு. சி. இராமசாமி இயக்கத்தில் வெளிப்படை அரங்க இயக்கம் புதுச்சேரி வழங்கிய நடபாவாடை – நடிகர்கள் மாணிக் சுப்ரமணியன், கலைச்செல்வி மற்றும் அர்ச்சனா

புதுச்சேரி குருவிநத்தம் கிராமத்தில், இறப்பு சடங்குகளை செய்த ஆண்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில், அந்த குடும்ப பின்னணியை கொண்ட ஒரு விதவை பெண் அதே பணிக்குள் தள்ளப்படுகிறாள். அவளை மையப்படுத்தி இந்த நாடகம் நகர்கிறது.

நாடகம் என்பதை விட ஒரு காட்சித்தொடராக நம்முன் நிகழ்கிறது. இறுதிசடங்கின் உணர்வு கொந்தளிப்புகளை கண் முன் கொண்டு வந்து இறுதியில் பார்வையாளர்களையும் பங்குபெற அழைக்கிறது.  மிக அழுத்தமான தருணங்கள் நிறைந்த நாடகம்.

8.     மணல்மகுடி நாடக நிலம் வழங்கும் இடாகினி கதாய அரத்தம். எழுத்து இசை & இயக்கம் – ச. முருகபூபதி

இருநாள் விழாவில் மிகவும் புதுமையான நவீன நாடகம். கதை என ஒன்று வெளிப்படையாக இல்லாமல் காட்சிகளை கொண்டு பார்வையாளர்கள் தங்களுக்கான கதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது. குழந்தைகளின் உலகம் குறித்து பேச தொடங்கும் நாடகம் போர், அடிமைத்தனம், அகதி, இடபெயர்வு என பலதையும் தொட்டுச் செல்கிறது. உலகெங்கும் உள்ள பழங்குடிகளின் இசை கருவிகளை உபயோகித்துள்ளார்கள். நடிகர்களின் உடல் மொழி, அவர்கள் உபயோகப்படுத்தும் props, முகமூடிகள் என அனைத்தும் மிக விரிவான உலகிற்குள் நம்மை இட்டுச் செல்கிறது. மேடைக்குள் அடைபடாமல் நாடக வெளி மேடைக்கு முன்பும் பின்னும் விரிந்துச்செல்கிறது. நாடகம் முழுதும் திரைச்சீலைகளும் நாடக மாந்தர்களாகவே முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ் விக்கிக்கு வெளியே சயாம் மரண ரயில் பாதை குறித்து நான் கேள்விப்படும் முதல் தருணம் இதுதான். நாடகத்தில் இரு குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். கச்சிதமான நடிப்பு.

இந்த நவீன நாடகங்கள் எதிலுமே பதிவு செய்யப்பட்ட இசை உபயோகிக்க படவில்லை. இசை கலைஞர்கள் நேரடியாக வாசித்து பின்னணியை உருவாக்கினார்கள்.

9,10. அட்டப்பாடி இருளர் சமூகத்தினர் வழங்கிய பாரம்பரிய பழங்குடி நடனம் மற்றும் ராமர் கூத்து.

இரு தனி நிகழ்வுகளாக நடந்தது. நமக்கு நாமே கலை மற்றும் பழங்குடி கலாச்சார குழு ஒருங்கிணைத்தது. அட்டப்பாடிக்கு வெளியே முதல்முறை இந்த மக்கள் பங்கேற்ற நிகழ்வு இது.  பாடலாக இல்லாமல் இசைக்கருவிகள் மற்றும் ஒலி குறிப்புகளால் ஆன இசைக்கு இருளர் மக்களும் உடன் பார்வையாளர்களும் இணைந்து மேடையில் நடனமாடினர்.

பிறகு அவர்களின் பாரம்பரிய ராமர் கூத்து. பாரம்பரியமாக வாலி, அரிச்சந்திரன், ராமன் மற்றும் கண்ணகி கூத்துகள் நிகழுமாம். தற்பொழுது கூத்து நிகழ்த்துபவர்கள் குறைந்துவிட்டனர். பல இடங்களில் அவை சடங்காக பெயரளவில் நிகழ்ந்து வருகிறது. பொன்னையன் (பொன்னன் ரங்கன்) குருவின் முயற்சியில் இந்த குழு பாரம்பரிய வகையில் கூத்தை முன்னெடுத்து வருகிறது. கூத்திற்கான உடைகளணிகலன்கள் வாங்க கூட பொருள் வசதி இல்லை என கையில் இருந்த பொருட்களை கொண்டு உடைகளை வடிவமைத்திருந்தனர். அட்டப்பாடியின் பல்வேறு நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் மொழிகள் வேறு வேறாக இருக்கும். அவர்களின் மொழிக்கு எழுத்துரு கிடையாது என தெரிவித்தனர்.

அவர்களின் கூத்தில் நடன அம்சம் மிக குறைவாக இருந்தது பாடல் முக்கிய பங்கு வகித்தது. கூத்தின் மொழி எனக்கு புரியவில்லை. நடனத்திலும் உணர்வு வெளிப்பாடு குறைவாக இருந்ததால் கதையை சுத்தமாக பின் தொடர இயலவில்லை. ஆனாலும் இசை மற்றும் நடனத்தின் லயம் நீண்ட நேரம் கழித்தும் மனதில் ஒலித்துக்கொண்டு இருந்தது.

11. வாலி மோட்சம் – தெருக்கூத்து

தெருக்கூத்தை முழுதாக முதல் முறை பார்க்கிறேன். இதுவரை ஆங்காங்கு காணொளிகள் பார்த்ததில் அதன் பாடல்கள் புரிந்ததில்லை, வசனமும் சில இடங்களில் தான் புரிந்தது என்பதால் புரியுமா என்ற சந்தேகம் இருந்தது. நல்லவேளையாக அன்று வாலி மோட்சம் கூத்து பனுவலை வெளியிட்டு விற்பனைக்கு வைத்திருந்தனர். அதை வாங்கி உதவிக்கு வைத்துக் கொண்டேன். முதல் நாள் இரவு நாடகங்கள் முடிந்து கூத்து தொடங்க 2:30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. விடியும் பொழுது முடிக்க வேண்டும் என்பதால் பனுவலில் இருப்பது போல் இல்லாமல் கொஞ்சம் சுருக்கி நடித்தார்கள். முதலில் பக்கங்களை தேடி தேடி பின்தொடர முயன்று கொண்டிருந்தேன். பிறகு பாடல்கள் தானாகவே முக்கால்வாசி பிடி கிடைக்க தொடங்கி விட்டது. பாடல்களை விவரிக்கும் வகையில் தொடர்ந்து வரும் வசனங்கள் அமைந்திருந்தன.

நான் கேள்விப்பட்ட ராமாயண கதையிலிருந்து இந்த கூத்து மாறுபட்ட இடங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.

சபரி என்னும் மூதாட்டி சுக்கிரீவனின் உதவி இருந்தால் சீதையை மீட்கலாம் என கூற, சுக்கிரீவனை தேடி ராம, லட்சுமணர்கள் வருகிறார்கள். ராமனிடம் அடைக்கலம் கேட்கும் சுக்கிரீவன் அவரது பலத்தை குறித்து ஐயம் கொள்கிறான்.  முன்பு வாலி தந்துபி என்ற அசுரனை கொன்று அவன் எலும்புக்கூட்டை காலால் தூக்கி வீசியுள்ளான். அந்த எலும்புக்கூட்டை ராமனும் எடுத்து எறிகிறான். ஆனாலும் முழுமையாக சுக்கிரீவனின் தயக்கம் அகலவில்லை.

அங்கிருக்கும் ஆச்சா மரங்களை வாலி ஒவ்வொன்றாக முறித்தான் என கூறி தயங்குகிறான். அதை கேட்ட ராமன், ஒரே அம்பில் ஏழு ஆச்சா மரங்களை துளைத்து சுக்கிரீவனுக்கு நம்பிக்கை அளிக்கிறான்.

இந்நிலையில், சகோதரனை கொன்றால் தான் உதவி கிடைக்கும் என கூறும் சுக்கிரீவனை நம்பலாமா என லட்சுமணன் கேட்கிறான். விவேகமில்லாத விலங்குகளிடம் சகோதர வாஞ்சையை எதிர்பார்க்கலாமா என ராமன் கேட்கிறான். முன்பு வேதங்கள் பயின்றதாலும் சிறந்த ஞானமுள்ளதாலும் இவற்றை குரங்கு என கூறக்கூடாது என்றீர்கள், இன்று குரங்கிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது என்கிறீர்கள் இந்த முரண்பாடு உங்களுக்கு தெரியவில்லையா என லட்சுமணன் கேட்கிறான்,

ராமன் இதற்கு சரியான பதில் சொல்லவில்லை. நமக்கு துணையாக கிடைப்பவர்களிடம் தேவையான உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.  சரணடைந்த சுக்கிரீவனுக்கு உதவ வேண்டும். பிறர் மனைவியை கவர்ந்த வாலி தண்டிக்கப்பட வேண்டும் என கூறி விடுகிறான்.

சுக்கிரீவன் வாலியை இரண்டாம் முறை போருக்கு அழைக்கும் பொழுது, தாரை வாலியை போருக்கு செல்ல வேண்டாம் ராமன் சுக்கிரீவனுக்கு துணையாக இருப்பதாக ஒற்று செய்தி வந்துள்ளது என்கிறாள். நாட்டை தம்பிக்கு கொடுத்த ஒழுக்கசீலன் ராமன். உடன்பிறப்பை விட உயர்ந்த செல்வம் இல்லை என நினைப்பவன். யாருடைய உதவியையும் எதிர்பார்க்கும் நிலையில் இல்லாதவன். அவனா சுக்ரீவனுடன் சேர்ந்து என்னை கொல்வான். இதை என்னால் ஏற்க முடியாது என கூறி வாலி போருக்கு கிளம்புகிறான்.

வாலி தன் மீது அம்பு பட்ட பின்… எனது வீரத்திற்கு இப்படி எவரோ எறிந்த அம்பில் மடிவது தான் அழகா என சிவனிடம் முறையிடுகிறான். பிறகு இந்த அம்பை ஏய்தது யாராக இருக்கும் என எண்ணுகிறான். இந்திரனாக இருக்குமோ? இல்லை அவர் எனது தந்தை ஆயிற்றே! திருமாலா? அவருக்கும் எனக்கு எந்த பகையும் இல்லையே! சிவனா? நான் சிவனின் பக்தன் ஆயிற்றே! முருகனின் வேலாயுதமாக இருக்குமோ? ஆனால் அவருக்கு நான் எந்த அபச்சாரமும் செய்யவில்லையே! என யோசித்து பிறகு அது ராமனின் அம்பு என காண்கிறான்.

ராமன் வாலியிடம் நீ தம்பியை கொல்ல துணிந்தாய்.. தம்பி மனைவியை உனதாக்கிக்கொண்டாய் அதானால் தான் இந்த தண்டனை என கூறுகிறான்.

பதிலுக்கு வாலி, இப்பொழுது ஊர்மிளை அயோத்தியில்  பரதனின் பாதுகாப்பில் இருக்கிறாள், அதனால் பரதன் ஊர்மிளையை கைப்பற்றிக்கொண்டான் என கூறமுடியுமா என கேட்கிறான்.

பிறகு மறைந்திருந்து தாக்குவது உங்கள் குல வழக்கமா? உன் தந்தையும் இப்படி தான் மறைந்திருந்து சிரவணன் மீது அம்பு எய்தார் என கூறுகிறான்.

பிறகு ராமன் கடைசியாக, வேறு வழியில்லாமல் காலம் இப்படி என்னை என் வசமிழக்க செய்துவிட்டது என கூறுகிறான். ராமன் இப்படி கூறியதும் இதுவரை பேசியதற்கு மன்னிப்பு கேட்டு ராமனை கடவுளாக கருதி வாலி பேசத் தொடங்குகிறான்.

வாலி பேசி முடித்து இறுதி மூச்சு பிரியும் வேளையில் வானம் நன்றாக விடிந்திருந்தது….

12. இந்தியநோஸ்ட்ரம் தியேட்டர் புதுச்சேரி & புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் வழங்கிய வீர அபிமன்யு.

இங்கும் வழக்கமான கதையிலிருந்து மாறுபட்ட விஷயங்களை மட்டும் கூறுகிறேன்.

துரியன் மகன் லக்னகுமாரனை அபிமன்யு தேரில் கட்டி தோல்வியடைய செய்துவிட்டான்… அதற்குப் பழிவாங்க தர்மனை தேரில் கட்டி இழுத்து வரவேண்டும் என துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி விரும்புகிறார்கள். அப்படி கட்டி இழுத்து வருபவர்களுக்கு நேர் பாதி ராஜ்யத்தை அளிப்பதாக துரியோதனன் கூறுகிறான். இதற்கு துரோணரின் உதவியை நாடுகிறார்கள்.

மறுநாள் போரில் துரோணர் தர்மனை போருக்கு அழைக்கிறார்.. தர்மர் தோற்று ஒளிந்துக்கொள்கிறார்… அப்பொழுது அங்கு வரும் அபிமன்யு துரோணருடன் போருக்கு செல்ல தருமனின் ஆணையை கோருகிறான்…. குழந்தையை எப்படி அனுப்புவது என தர்மன் தயங்க மீண்டும் மீண்டும் தனது வீரத்தை எடுத்து கூறுகிறான் அபிமன்யு. ஒரு கட்டத்தில் தர்மர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய்..  போடா போ.. என கூறிவிடுகிறார்.

வென்று வா என கூறாமல் போடா போ என தந்தை கூறிவிட்டாரே என அபிமன்யு மனம் கலங்குகிறான்..  பிறகு துரோணருடன் போருக்கு சென்று அவரை தோற்கடிக்கிறான்.

மீண்டும் ஆலோசனை செய்யும் துரியோதனன், சைந்தவனை அழைத்து வருவோம்.. அவனது கதை மற்றும் கொன்றை மாலையை கொண்டு அபிமன்யுவை வீழ்த்த முடியும் என நினைக்கிறார்கள்.

ஜயத்ரதனோ, பீமனை கொல்ல இந்த கதையையும் மாலையையும் பெற்றேன் என கூறுகிறேன். ஆனால் அபிமன்யு செய்யும் சேதத்தை காமித்து தனக்கு உதவுமாறு துரியன் கேட்டதால் அபிமன்யு மீது மாலையை உபயோகிக்க சைந்தவன் ஒப்புக்கொள்கிறான்.

போருக்கு அபிமன்யு வரும் பொழுது, அவனை சுற்றி அந்த கொன்றை மாலையை வீசிவிடுகிறார்கள்.

என்னை சுற்றி சிவனுக்கு உகந்த கொன்றை மாலையை தூவி விட்டானே….. ஈசனே உனக்கு உகந்த மாலையை நான் எப்படி தாண்டுவேன் என அபிமன்யு யோசிக்கிறான்… அதை தாண்டினால் அந்த சிவனையே பழித்ததாக ஆகுமே என தயங்குகிறான்.

தந்தை இருந்தால் இந்த மாலையை தூக்கி என்னை காப்பாற்றுவார்… எல்லா வித்தையையும் கற்ற நான் என் தந்தையிடம் இந்த கணை தொடுக்க மட்டும் (மாலையை தூக்க) கற்கவில்லையே என துயரப்படுகிறான். ஆனாலும் இந்த மாலைக்குள் நின்றுக்கொண்டே உங்கள் அனைவருடனும் வாள் சண்டை புரிவேன் என ஒரே நேரத்தில் துரியன், சகுனி, கர்ணன், சைந்தவன் என நால்வருடனும் போர் புரிகிறான்.

முதலில் அவனது கைகள் வெட்டப்படுகின்றன.. கால்களை வைத்து போர் புரிகிறான்… அவனது கால்களும் வெட்டப்பட்டதும்.. கர்ணனிடம் கேட்டதை கொடுக்கும் வள்ளலே என் பல்லுக்கு ஒரு கத்தியை தாருங்கள் என கேட்டு ஒரு கத்தியை வாங்கி போர் புரிகிறான்… கடைசியில் தலையும் வெட்டப்பட்டு இறக்கிறான்.

இந்தியநோஸ்ட்ரம் தியேட்டருடன் இணைந்து நிகழ்த்திய இந்த கூத்தில் பெண்கள் பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்… இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நடிகர்கள் பங்குபெற்றதாக தெரிவித்தனர்.

இவரது நடிப்பு நன்றாக இருந்தது என்றோ.. இது நன்றாக இருந்தது.. இது சரியில்லை என விமர்சனம் கூறும் இடத்தில் நான் இல்லை. இரு இரவுகள்… இரண்டு கூத்துகள்… மிக புதுமையான அனுபவம்.

தெருக்கூத்தை பொறுத்தவரை.. ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னை விரிவாக அறிமுகம் செய்துக் கொள்கிறது.. ராமனே வந்தாலும்.. இப்படி பட்ட ராமனாகிய நான் என தனது அருமை பெருமைகளை கூறி தான் தொடங்குகிறது. சிகை அலங்காரங்கள்… புஜகீர்த்திகள்… என பார்த்தால்.. அரசர்கள் வாலி, சுக்கிரீவன், துரியன், கர்ணன், சகுனி, தர்மன் ஆகியோர்க்கு கிரீடமும் புஜகீர்த்தியும். காட்டில் இருக்கும் ராமன், லட்சுமணன் மற்றும் சைந்தவனுக்கு இறகு கிரீடம். துரோணருக்கு கிரீடம் மட்டும். கூத்து அலங்காரங்கள்  எதுவும் இல்லை. அபிமன்யுவிற்கு புஜகீர்த்தி மட்டும் என அமைத்திருந்தனர். துரியன், சகுனி, கர்ணன் & சைந்தவனுக்கு கருப்பு நிறம். தர்மனுக்கும் அபிமன்யுவிற்கும் சிவப்பு.

பாடல்கள் வசனங்கள் இரண்டிலுமே பல குறிப்புகள் வந்துகொண்டே இருந்தன. புராணங்கள் குறிப்பாக வாய்மொழி புராணங்களில் பரிச்சயம் உடையவர்களுக்கு அவை புரியும் என நினைக்கிறேன்.

இரண்டு நாட்களுமே அரங்கு (மைதானம்?) நிறையும் கூட்டம். உள்ளூர் / அருகிலுள்ள கிராம மக்கள் ஒரு பக்கம், வெளியூரிலிருந்து பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் அதிகம். எங்கள் ஊரில் இவ்வளவு நகர கூட்டத்தை பார்ப்பது புதிதாக இருந்தது. நேரடி / எளிய பேருந்து வசதி.. தங்கும் / உணவக வசதி என எதுவும் இல்லாத ஊரில் இத்தனை முகங்கள். பெரும்பாலும் நவநாகரீக யுவயுவதிகள். அனைவருமே நண்பர் குழுக்களாக வந்திருந்தனர். தீவிரத்துடனும் உற்சாகத்துடனும் பங்குபெற்று, உரையாடி, விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் புது இடத்திற்கு வந்தது போல் தெரியவில்லை, புரிசை ஒரு நாள் அவர்களின் உலகிற்குள் நுழைந்து மீண்டது என்று தான் கூற வேண்டும்.

இலக்கியம் வாசிக்கிறோம்… இலக்கிய விவாதங்களில் பங்கேற்கிறோம் என்பதாலேயே தமிழ் அறிவியக்கத்தில் புழங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு வெளியேவும் பல உலகங்கள் இருக்கிறது என்பதை இந்நிகழ்வு காட்டியது… தெருக்கூத்து நமது பண்பாட்டின் பிரதி என்றால்.. இடாகினி கதாய அரதம் நவீன நாடகத்திற்குள் மட்டும் அல்லாமல் எல்லா வகையிலுமே முக்கியமான கலைப்படைப்பாக தோன்றுகிறது. ஆனால் தமிழ் சூழலில் இது குறித்து ஒரே ஒரு விமர்சனம் (ரசனை குறிப்பு) மட்டுமே வெளிவந்துள்ளது (கனலியில்). அதிர்ச்சி மதிப்பை பிரதானமாக கொண்டிருந்தாலும் பேசப்பட வேண்டிய முயற்சி நடபாவாடை.

இங்கு புதிதாக கண்டுக்கொண்ட நவீன நாடகம் போல் தமிழில் / தமிழகத்தில் இன்னும் எத்தனை கலைகள் மற்றும் அறிவுதுறைகள் செயல்பட்டு வருகின்றனவோ…? மேலும் அவை ஏன் ஒன்றுடன் ஒன்று உரையாடலில் இல்லை?

சந்தோஷ் சரவணன்

படங்கள் 

முந்தைய கட்டுரைக.நா.சு . உரையாடல் அரங்கு – தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா 
அடுத்த கட்டுரைமு. இளங்கோவனுக்குத் தமிழக அரசின் விருது!