அதிமானுடரின் தூக்கம்

டெஸ்லா

தூக்கம், கவனம்

அன்புள்ள ஜெ,

கடந்த ஈரோடு வாசகர் முகாமில் “யாரெல்லாம் இரவு நேரம் கழித்து உறங்குகிறீர்கள்?!” எனக் கேட்டுவிட்டு, என்ன பண்றீங்க அதுவரை?! என விசாரித்துவிட்டு,தூங்காமல் share market பார்த்து இறந்த ஒருவரை பற்றியும்  குறிப்பிட்டீர்கள். அன்றே இதைப்பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என இருந்தேன்.

“Uberman sleep cycle” என்பது ஒரு நாளுக்கு இரு மணி நேரம் மட்டுமே உறங்குவது,அதையும் ஒரு நாளுக்கு  ஆறு முறை இருபது நிமிட power nap ஆக உறங்குவது.இதை Da Vinci மற்றும் Nikola Tesla இருவரும் கடைபிடித்தார்கள் என நம்பப்படுகிறது. நான் திருநெல்வேலி அரசினர் பொறியியல்  கல்லூரியில் Electrical Engineering படித்தேன்.மிசோரம் மாநிலத்தில் இருந்து படித்த senior எனக்கு Tesla பற்றிய அறிமுகத்தை கொடுத்தார்.கரன்டை கண்டுபிடித்த பெருமை இந்நாள் வரை பல்பை கண்டுபிடித்த எடிசனயே சேர்கிறது,Teslaவும் கிட்டதட்ட அதே நேரத்தில் கண்டுபிடித்ததாகவும் அவருக்கு அங்கிகாரம் கிடைக்க கால தாமதம் ஆனது.Tesla கண்டுபிடித்தது AC ,எடிசன் கண்டுபிடித்தது DC. ACயின் பயன்பாடே மிகுதி எனிலும் Tesla நம் நினைவில் இருப்பதில்லை. இவ்வாறு அவர் கூறிய பின் ,நான் பதிலாக Magnetic field Intensityயின் unit Tesla வாக இருக்கிறது என பதிலளித்தேன். அது மட்டும் தான் இருக்கிறது என சலித்துக்கொண்டார்

இந்த பேச்சு நடத்து இரு வருடங்கள் கழித்து war between AC and DC என இந்த முரண் ஒரு படமாக வந்துள்ளது.எனக்கு அந்த சீனியரிடம் இருந்த டெஸ்லா பைத்தியம் எனக்கும் தொற்றிக்கொண்டது.Tesla Uber man sleep cycle-ஐ கடைபிடித்தார்.Uber man sleep cycle மிகவும் ஆபத்தானதே,இதை பற்றி என் புரிதல்- எட்டு மணி நேர தூக்கத்தில் ஆழ் உறக்கம் இரண்டு முதல் மூன்று மணி நேரமாக மட்டுமே இருக்க முடியும்.அதனால் ஒரு நாளுக்கு இரு மணி நேர ஆழ் உறக்கம் போதுமானது‌.ஒரு நாளுக்கு16 மணி நேரம் போதாதவர்கள் இதை கடைபிடித்தாரகள் என்பது மேலோட்டமான பார்வை.

தூங்காமல் ஏதோ சாதிக்க வேண்டியது இருந்திருக்கலாம்.இதன் மூலம் மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.இதை பற்றி தங்கள் கருத்து என்ன?!.

நன்றி,

அன்புடன்,

சரவணப் பெருமாள்.செ

நீட்சே

அன்புள்ள சரவணப்பெருமாள்,

நான் கல்லூரியில் படிக்கும்போதும் எங்களிடம் பேரா.மனோகரன் அதிமானுடரின் தூக்கம் பற்றி நீங்கள் சொன்னதைச் சொன்னார். ’எறும்புகள் துயில்வதே இல்லை என்பதைப்போல மனிதனுக்கு ஊக்கமூட்டும் முன்னுதாரணம் ஏதும் இல்லை’ என்ற எமர்சனின் வரியையும் கூறினார். மேதைகள் தூங்குவதில்லை, சாதனையாளர் தூங்குவதில்லை என்று அவர் சொன்னதை நான் நீண்டநாள் கடைப்பிடித்தேன். ஒரு காலத்தில் நான் நான்குமணி நேரம் தூங்கினால் அதிகம்.

பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் இருபதாம் நூற்றாண்டு வரை உலகசிந்தனையில் ஆட்சி செலுத்திய ஒரு கருதுகோள் அதிமானுடன் (Uberman) என்பது.  உலகமெங்கும் சர்வாதிகாரிகள் உருவாக வழிவகுத்தது அதுவே.

மன்னராட்சியில் இருந்து ஜனநாயகத்துக்கான பாதையில் சர்வாதிகாரிகளின் ஆட்சி ஒரு காலகட்டமாக இருந்தது. இரு உலகப் போர்களை உருவாக்கி உலகை பேரழிவுக்கு கொண்டுசென்றவர்கள் சர்வாதிகாரிகள். தங்களை அவர்கள் அதிமானுடன் என முன்வைத்தனர். அதை மக்கள் நம்பினர். அவர்களிடம் முற்றதிகாரத்தை ஒப்படைத்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்தான் அதிமானுடன் என்னும் கருத்தின் மேல் அவநம்பிக்கை உருவாகியது. அதிமானுடர் என அறியப்பட்டவர்கள் ஆணவமும் அச்சமும் சரிவிகிதமாகக் கலந்த எளிய மானுடர் மட்டுமே என தெளிவாகியது. அதிமானுடர் என்னும் கருத்துநிலை மெல்ல மெல்ல மறைந்தது.

அதிமானுடன் என்னும் கருதுகோள் அதற்கு முன்பிருந்த இரண்டு கருதுகோள்களில் இருந்து உருவானது. ஒன்று புனிதர் என்னும் நிலை. இரண்டு, அரசன் என்னும் நிலை. இரு சாராருமே தெய்வ அருள் பெற்றவர்கள், அதீத திறன்கொண்டவர்கள் என கருதப்பட்டனர்.

பழங்கால மதமும், பண்பாடும் அவ்விரு ஆளுமை உருவகங்களையும் உருவாக்கி நிலைநிறுத்தின. அவர்களை நம்பியே அன்றைய சமூகம் செயல்பட்டது. மதம், அரசு இரண்டுக்கும் அவர்களே மையங்கள்.

நீட்சேக்கு முன்னரே அதிமானுடன் என்னும் நவீனக்கொள்கையை உருவாக்கியவர் ஜெர்மானியக் கவிஞர் கதே. நெப்போலியனை அவர் ஓர் அதிமானுடனாகக் காண்கிறார். அடிப்படைவிசையின் வெளிப்பாடு என்கிறார். (Elemental power) அவரிடமிருந்து நீட்சே வழியாக ஹிட்லர் வரை வந்தது அந்த கருத்துநிலை.

இன்றைய யுகத்தில் அதிமானுடர் என்னும் கருத்துக்கு எந்த இடமும் இல்லை. இன்று மூளை பற்றி, சிந்தனையும் படைப்பூக்கமும் அதில் நிகழும் விதம் பற்றி ஏராளமான ஆய்வுமுடிவுகள் வெளியாகி பொதுப்புரிதல்கள் உண்டாகிவிட்டன.

கதே

மானுடத்திறன் பலதரப்பட்டது. மூளையின் திறனிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. ஆனால் எவரும் அதிமானுடர்கள் அல்ல. பெருஞ்சாதனையாளர்கள் என்பவர்கள் மூன்று அம்சங்களின் கலவையால் உருவாகிறவர்கள்.

அ. இயல்பான மூளைத்திறன். அவர்களின் மரபு வழியாகவே மூளையின் திறன் கூடுதலாக இருக்கும். நினைவுத்திறன், கற்பனைத்திறன், தர்க்கத்திறன், மொழியுணர்வுத்திறன் என அந்த தனித்திறன்கள் மாறுபட்டவை. ஆனால் அவை ஒன்றும் அதீதத் திறன்கள் அல்ல

ஆ. குவிதல் .ஒரு குறிப்பிட்ட களத்தில் அந்த மூளைத்திறனை முழுமையாகவே செலுத்துதல். அதற்கான பயிற்சிகளை இளமைமுதல் எடுத்துக் கொள்ளுதல். முழுவாழ்க்கையையும் அதற்கென்றே செலவிடுதல்.

இ. வரலாற்றுச் சூழல். தனிமனிதனின் திறன் எத்தகையதாக இருந்தாலும் ஒரு பண்பாட்டுச் சூழலின், ஒரு சமூகத்தின் , ஒரு காலகட்டத்தின் ஒரு பகுதியாகவே அவன் வெளிப்படமுடியும். அக்காலகட்டத்தின் தீவிரமும், படைப்பூக்கமும் அவனில் வெளிப்படுகின்றன.

இம்மூன்றும் இணையும் புள்ளிகளில் உருவாகும் பேராளுமைகளை நாம் நம் சாமானியத் தன்மையால் மதிப்பிடும்போது அவர்கள் அதிமானுடர் என எண்ணத் தலைப்படுகிறோம். வழிபடத் தொடங்குகிறோம்.

அதிமானுடர் இல்லை என்னும்போது அதிமானுட வாழ்க்கைமுறை அல்லது பயில்முறை என ஏதும் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு சாதனையாளருக்கும் அவரே உருவாக்கிக் கொண்ட செயல்பாட்டுமுறையும் வாழ்க்கைநெறிகளும் இருக்கும். அவற்றுக்கிடையே பொதுத்தன்மை என பெரிதாக ஏதும் இருக்காது. இருக்கும் ஒரே பொதுத்தன்மை என்பது அவர்கள் தங்கள் செயற்களத்தில் முழுமையாக குவிந்துவிடுவார்கள் என்பது மட்டுமே.

சென்ற நூற்றாண்டுவரை தூக்கத்தை எதிர்மறையாக பார்க்கும் கோணம் உலகசிந்தனையாளர்களிடம் இருந்தது. கிறிஸ்தவ, இஸ்லாமிய நோன்புமரபுகளில் (Asceticism) தூக்கம் துறத்தல் ஒரு முக்கியமான கூறு. அவர்களுக்கு தூக்கம் ஒருவகை பாவம்.

தொடர்ச்சியாகத் தூக்கம் விழித்தல் வழியாக உருவாகும் மூளைச்சலிப்பு விழிப்புமனத்தை ரத்துசெய்து ஒருவகை போதைநிலையை உருவாக்குகிறது. ஆழுள்ளம் வெளிப்படும் நிலை. கனவுகளும் எண்ணங்களுமாக அகம் பீரிடுகிறது. அதை தொடர்ச்சியான இறைவழிபாடு, பிரார்த்தனை, கூட்டான வழிபாடுகள், தொடர் இசை போன்றவற்றினூடாக கட்டுப்படுத்தும்போது ஆன்மிக அனுபவம் உருவாகிறது என நம்பப்பட்டது.

அதேபோல இந்திய யோகமுறைகளில் ஒரு சாரார் (வாம மார்க்கிகள்) தூக்கத்தை தமோநிலை (இருள்நிலை) என நம்பினர். தூக்கத்தை தவிர்க்கும் நோன்புகளும் சடங்குகளும் அவர்களால் செய்யப்பட்டன. பின்னாளில் நவீனச்சூழலில் அந்த வாமமார்க்க யோகப்பயிற்சிகள் மீட்டெடுக்கப்பட்டபோது தூக்கம் தவிர்த்தல் ஒரு பயிற்சியாக அளிக்கப்பட்டது. ஓஷோ ஓர் உரையில் அவ்வாறு பலநாட்கள் துயில் நீத்து கொடுங்கனவுகளுக்கு ஆட்பட்டு, உடல்நலிந்து நடுக்கம் கொண்டிருந்த ஒருவர் தன்னிடம் வந்ததைப் பதிவுசெய்கிறார்.

ஆனால் பதஞ்சலி யோகமரபில் நல்ல தூக்கம் மிக அவசியமானது. யோகப்பயிற்சியில் தூக்கம் ஊடாடவே கூடாது. அதுவே பிழை. ஆகவே ஒழுங்கான வாழ்க்கை நெறிகள், உடல்சார்ந்த யோகப்பயிற்சிகள் வழியாக செறிவான நல்ல தூக்கம் கட்டாயமாக ஆக்கப்படுகிறது.

இந்த வாம மார்க்க மரபுகளின் விளைவாக சாமானியர்களில் தூக்கம் ஒரு பிழையான விஷயம் என்னும் எண்ணம் உருவாகியிருக்கிறது. அதிமானுடர் துயிலமாட்டார்கள் என்று நம்புகிறார்கள். பெரும்பாலான யோகிகளைப் பற்றி அவர்கள் தூங்குவதே இல்லை என்னும் தொன்மம் உள்ளது. யோகவிழிப்பு பற்றி சித்தர்கள் சொல்லும் வரிகளை நேரடியாகப் பொருள்கொண்டு தூக்கம் ஞானத்துக்கும் ஊழ்கத்திற்கும் எதிரானது என்று புரிந்துகொள்கிறார்கள். (உலகம் துயில்கையில் யோகி விழித்திருக்கிறான் என்னும் கீதை வரியை நேரடிப்பொருள் அளித்து எழுதப்பட்ட ஏராளமான உரைகள் உள்ளன)

இதையே பின்னர் எல்லா சாதனையாளர்களுக்கும் பலபடிகளாக நீட்டிக்கொள்கிறார்கள். அதிமானுடர் தூங்குவதில்லை  என்னும் கருத்தின் அடிப்படை இதுவே.

உண்மையில் எந்த மூளைக்கும் அதன் உழைப்புக்கு ஏற்ப ஓய்வு தேவை. கூரிய உழைப்பு மேலும் ஓய்வை தேவையாக்குகிறது. ஓய்வில்லா உழைப்பு என்பது உழைப்பல்ல, நேர வீணடிப்பு.

நமக்கு தேவை ’பொழுது’ அல்ல, ’கூரிய பொழுது’தான். எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதல்ல, எப்படி செலவழிக்கிறோம் என்பதே முக்கியம்.

எண்ணிப் பாருங்கள், நம் வாழ்க்கையில் நம் முழுப்புலன்களும் குவிந்து, மொத்த உள்ளமும் கூர்கொண்டு, எதையாவது செய்த பொழுதுகள் எவ்வளவு? கற்ற பொழுதுகள் எவ்வளவு? மெய்மறத்தல் என்று அந்நிலையையே சொல்கிறோம். எங்கிருக்கிறோம் என்றே தெரியாமல், காலபோதமே இல்லாமல் கவனித்தல், செயலில் ஈடுபடுதல். எவ்வளவு நேரம் அதற்கு நம்மால் செலவிடப்பட்டிருக்கும்?

மிகக் கறாராகப் பார்த்தால் ஒரு சாமானியரின் வாழ்வில் முப்பதாண்டுகளில் ஏழெட்டு மணிநேரம் கூட அவ்வாறு செலவிடப்பட்டிருக்காது. சில நிமிடங்களே அந்தக் கூர்நிலை நமக்கு நீடிக்கிறது. உடனே உள்ளம் சிதறிவிடுகிறது. அந்த கூர்நிலையில் கற்றவற்றை நாம் மறப்பதே இல்லை. அந்தக் கூர்நிலை நிகழ்ந்ததுமே நாம் புதிதாக எதையேனும் கற்றிருப்போம். அகத்தே ஒரு படி மெலேறி இருப்போம்.

அந்தக்கூர்நிலையை ஒவ்வொரு நாளும் ஓரிரு மணிநேரம் அடைபவர் எவரோ அவர்தான் பெருந்திறனாளர். அவர்தான் அதிமானுடர். அவர் ஒருநாளில் எவ்வளவு நேரம் உழைத்தார் என்பது கணக்கே அல்ல. அவரைவிட உழைக்கும் வணிகர்கள், தொழிலாளிகள் உண்டு. அவர் உழைக்கவில்லை, உள்ளம் கூர்கிறார்.

ஒரு கழிக்கும் ஈட்டிக்குமான வேறுபாடு. கழிக்கு கூர்மை இல்லை. அதன் விசை பரந்து விழுகிறது. ஈட்டியின் முழு விசையும் ஒரு சிறு புள்ளியில் கூர்கொள்கிறது.

அந்த வகையான கூர்மைக்கு மூளைக்கு ஓய்வு இன்றியமையாதது. ஓய்வெடுக்கும்தோறும் மூளை கூர்மைகொள்கிறது. ஓய்வில்லாமல் மூளையை அவ்வாறு செயற்கையாக விசைகூட்டினால் அது உளச்சிதைவுக்கே கொண்டுசெல்லும்.

உங்கள் வினாவின் இறுதிக்கேள்வி, ஆழ்துயில் பற்றி. துயில் பற்றிய ஆய்வுகள் அதை விரிவாக இன்று விளக்கியுள்ளன. இமையசைவு (REM- Rapid Eye Movement ) கொண்ட தூக்கம் இருபது நிமிடம் என்றால் அடுத்த நாற்பது நிமிடம் ஆழ்துயில் அமையும். அதன்பின் மீண்டும் இமையசைவு துயில். இப்படித்தான் மனிதர்கள் துயில்கிறார்கள்

அதை அறிதுயில் என்று சொல்லலாம். அது வீணான துயில் அல்ல. அதில்தான் நாம் சூழலுணர்வை அடைகிறோம். ஒலிகளைக் கேட்கிறோம். வாசனையை உணர்கிறோம். அவற்றை ஒட்டி கனவுகள் நிகழ்கின்றன. எண்ணங்கள் ஓடுகின்றன. எல்லாம் சரியாக உள்ளது என ஆழுள்ளம் நிறைவுகொள்கிறது. அதைத் தொடர்ந்தே ஆழ்துயில் அமைகிறது. அது உயிரின் பரிணாமத்தால் உருவான மூளையின் தகவமைவு.

அறிதுயிலை ரத்துசெய்து எவரும் ஆழ்துயிலை மட்டும் அடையமுடியாது. ஒருவர் ஒரு மணி நேரம் மட்டும் துயின்றால் அவருக்கு நாற்பது நிமிடம் ஆழ்துயில் வாய்க்கும், அவ்வளவுதான். மனித மூளை தன் விழிப்புணர்வை, சூழலுடனான உறவை ரத்து செய்யவே செய்யாது. அது அதன் இருப்புக்கே அபாயமானது.

மேலும் அறிதுயிலில்தான் நாம் உடலை இலகுவாக்கிக் கொள்கிறோம். புரள்கிறோம். தசைகளை இடமாற்றி ஓய்வெடுக்கச் செய்கிறோம். ஒருவர் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் ஆழ்துயிலில் மட்டுமே இருந்தால் ஒரே வகையில் படுப்பதனால் தசைகள் இறுகி உடல் வலி கொள்ளும். தாடையும் கழுத்தும் இறுக்கமாகிவிடும். அது துயிலே அல்ல. அறிதுயில் என்பது துயிலை ஒரு கரண்டியால் கிண்டி கிண்டி விடுவதுபோல. கிண்டாவிட்டால் அடியில்பற்றி கரிந்து போய்விடும்.

அறிதுயிலை நாம் நினைவுகூர்வதில்லை. ஆழ்துயில் நேரத்தை மட்டும் இணைத்துக் கொள்கிறோம். ஆகவே எட்டு மணிநேரத்தில் ஏறத்தாழ மூன்று மணிநேரம் அறிதுயிலில் இருந்தாலும் நாம் எட்டுமணிநேரம் ஆழ்துயிலில் இருந்ததாகவே எண்ணிக்கொள்கிறோம்.

ஆகவே ஒருவருக்கு ஐந்து மணிநேரம் மூளைத்துயில் அதாவது ஆழ்துயில் வேண்டும் என்றால் எட்டுமணிநேரம் தூங்கியே ஆகவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைவிந்தியா
அடுத்த கட்டுரைவெந்து தணிந்தது காடு, 50 நிகழ்வு