டி.பி.ராஜீவன் எழுதிய இறுதிக் கவிதை இது. அவருடைய கவிதைகளில் எப்போதுமிருந்த அதே விடம்பனமும், ஆழமும் அமைந்த படைப்பு. இதை எழுதும்போது ராஜீவன் கடும் வலியில் இருந்தார். சிறுநீரகச் சுத்தி (டயாலிஸ்) செய்துகொள்வதென்பது கடுமையான வலியையும், சோர்வையும், விளைவான உளச்சலிப்பையும் அளிப்பது. அவருடைய கால் ஏற்கனவே பலமுறை வெட்டப்பட்டிருந்தமையால் நடமாட்டம் இல்லாமலாகிவிட்டிருந்தது.
நிதிச்சிக்கலும் இருந்தது. ராஜீவனின் குணம் அப்படிப்பட்டது. அவரால் ஆதிக்கம், ஆணை ஆகியவற்றை ஏற்கவியலாது. கோழிக்கோடு பல்கலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கையில் கல்லூரிகளை கையிலெடுத்துக்கொண்ட இடதுசாரிகளின் ஏதேச்சாதிகார மனநிலையை எதிர்த்தார். தனிநபராக அவர்களுடன் முட்டிக்கொள்வதென்பது அபாயகரமானது. தற்கொலைத்தனமான வீம்புடன் ராஜீவன் எதிர்த்து நின்றார். பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றம் சென்று வென்றார். ஆனால் திரும்ப பணிக்குச் சேர்ந்தபின்னரும் நீடிக்கவில்லை. அவர் மனைவியும் ஆசிரியை என்பதனால்தான் தாக்குப்பிடித்தார்.
ஓய்வுக்குப்பின் தன் சொந்த ஊரில், பாரம்பரியமான இல்லத்தில் குடியேறினார். ஆனால் சிறுநீரகச் சிக்கல் வந்தபின் அங்கிருந்து கோழிக்கோடு வந்து செல்வது கடினமாக ஆகியது. வீட்டை விற்கலாமென்றால் பழையபாணி வீட்டுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. சிகிழ்ச்சைக்கு மாதம் அறுபதாயிரம் வரை செலவு.
ராஜீவனுக்கு என் அறம் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை அனுப்பியிருந்தேன். அழைத்தபோது மலையாளத்தில் கிடைக்காத இரண்டு கதைகளை வாசித்துவிட்டிருந்தார். அதிலுள்ள காரி டேவிஸ் கதையை பாராட்டிப் பேசினார். சிகிழ்ச்சைக்கு நிதி திரட்டுவது சம்பந்தமாக சிலவற்றை கோரினார். ஆனால் வழக்கம்போல நையாண்டி, சிரிப்பு என்றே அவ்வுரையாடல் அமைந்திருந்தது. நான் அங்கே சென்று அவரை பார்ப்பதாகச் சொன்னேன். ”சீக்கிரம் வா. நான் பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன், விஸா வரப்போகிறது“ என்றார்.
சிரிப்புதான் ராஜீவன். எத்தனை இரவுகள் பகல்கள் சிரித்துச் சிரித்து நிறைத்திருப்போம். இறுதியாகப் பேசும்போது சொன்னார். ‘மலையாளத்தின் இன்றைய கவிதை வாசகர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்பவர்கள் போல இருக்கிறார்கள். அவர்கள் எல்லா போஸ்டர்களையும் போர்டுகளையும் வாசிப்பார்கள். எல்லாமே அவர்களை பரவசப்படுத்தும். ஏனென்றால் எல்லாவற்றையுமே அவர்களால் வாசிக்கமுடிவதே பெரிய விஷயம்”
ஓர் இளம்கவிஞரைப் பற்றி கேட்டேன். அவர் கவிதைகள் “ஸ்ரீமணிகண்டவிலாஸ் காபி சாப்பாடு ஓட்டல்” என்றார். இன்னொருவரைப் பற்றி கேட்டேன். “இங்கு சிறந்தமுறையில் தியானங்கள் பொடித்துக் கொடுக்கப்படும்” என்றார். ஒரு நகைச்சுவையை எங்கெங்கோ கொண்டுசெல்வார் ராஜீவன். தானியங்கள் என்பதை தியானங்கள் என ஆக்குவதுவழியாக அவர் உருவாக்கும் பகடிதான் அவர்.
எதையுமே சிரித்தபடி எடுத்துக்கொள்ளும் ஆளுமை அவர். தன்னியல்பான பணியாமை கொண்டவர். பணியாமலேயே அந்த இறுதிக்கணத்தையும் சந்தித்தார் என்பதற்கான சான்று ராஜீவனின் இந்த இறுதி நையாண்டி.
தூமோர்ணை
டி.பி.ராஜீவன்
பொதுமருத்துவமனையின்
தீவிரசிகிச்சைப்பிரிவில்
நேற்று
யமனின் மனைவி
தூமோர்ணையைச் சந்தித்தேன்
நம்பவே முடியவில்லை
கௌரவமான, நற்குடிப்பிறப்புள்ள,
அழகான
ஒரு பெண்மணி!
’சாகவைப்பதன் அறம்’
என்னும் தலைப்பில்
மசாசுசெட்ஸிலோ
ஹார்வார்டிலோ
ஆய்வு செய்யும் காலகட்டத்தில்
அறிமுகமாகி
திருமணம் செய்துகொண்டார்
யமதர்மனை.
இப்போது
தூக்குக் கயிறு கழுத்தில் சுற்றி
துடிப்பவர்களின்
நலனுக்காக
ஒரு என்.ஜி.ஓ நடத்துகிறார்.
தொண்டைநீர் இறங்காதவர்களுக்காக
ஒன்றோ இரண்டோ துளி குடிநீர்,
மூச்சு கிடைக்காமல் தவிப்பவர்களுக்காக
ஓருசில இழுப்புக்கான ஆக்ஸிஜன்,
அணுக்கமானவர்களை காணத்தவிப்பவர்களுக்கு
குறைந்தபட்சம் அவர்களின் சாயல்,
ஒன்றுமே பேசமுடியாதவர்களுக்காக
அவர்கள் உண்டுபண்ணும் சத்தங்களுக்கு
கேட்பவர்களுக்கு தோன்றும்
அர்த்தம்,
முதலியவை அளிப்பதுதான்
முதன்மையான சேவை.
எல்லா நாடுகளில் இருந்தும்
சேவைப்பணியாளர்களுண்டு.
அன்னிய நிதி தேவைக்கேற்ப
வந்துகொண்டிருக்கிறது.
ஆனாலென்ன,
இரவுணவுக்குப் பின்
தூங்கவேண்டுமென்றால்
அன்றாடம் கேட்டேயாகவேண்டும்
ஓர் எருமைக்கடாவின்
உறுமலை.