கறுப்பு மணி பாலகும்மி பத்மராஜு- இணைய நூலகம்
பாலகும்மி பத்மராஜு – தமிழ் விக்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
சமீபத்தில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட பாலகும்மி பத்மராஜுவின் “கறுப்பு மண்” வாசித்தேன் (தமிழ் மொழிபெயர்ப்பு பா. பாலசுப்பிரமணியன்).
நான் எதிர்பார்க்கவேயில்லை, நாவல் இப்படி ஒரு ரோலர் கோஸ்டர் ஆக்ஸன் திரில்லராய் இருக்குமென்று. முதல் பாதி வரையிலும் நதிபோல் இயல்பான ஓட்டத்தில் சென்றுகொண்டிருந்த நாவல் அதன்பின் காட்டாற்று வெள்ளம் போல் வேகமெடுத்து பாய்ந்தது. விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நூலை கீழே வைக்கவே விடவில்லை. அந்த களிமண் பூமியும், அதன் மண் மணமும், நிலப்பரப்பும், அதன் கதாபாத்திரங்களும், மனவோட்டமும், அவர்களின் பண்பாட்டு அசைவுகளும் சிறப்பான வாசிப்பனுபவம் தந்தன.
தமிழில் முதல் பதிப்பு எழுபதுகளில் வெளியாகியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தையும் தெலுங்கு இலக்கியத்தையும் ஒப்பிட்டு தெலுங்கில் நுற்றாண்டு கால நாவல் வளர்ச்சியையும் எழுத்தாளர்களையும் தொடக்க காலத்திலிருந்து குறிப்பிட்டு என்.ஆர். சந்தூர் அருமையான முன்னுரை ஒன்றை அளித்திருக்கிறார்.
எளிமையான கதைதான். ஆந்திர கிராமம் ஒன்று. கறுப்பு மண் கொண்ட விவசாய பூமி. டிராக்டர் போன்ற எந்திரங்கள் விவசாயத்திற்குள் நுழையும் காலம். ஊரை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய “மல்லம்மா” எனும் பெண் தெய்வத்தின் அம்மன் கோயில் ஒன்று ஊரில் இருக்கிறது
(அப்போதைய சமூக அடுக்கில் கடைக்குடியில் பிறந்த, துர்கையின் அவதாரமாய் ஜொலிக்கும் பதினாறு வயது இளம்பெண் மல்லம்மா தெய்வமான கதை நாவலில் உள்ளது). வருடா வருடம் முளைப்பாரியும், நாடகமும், கூத்தும், நடனமுமாய் கோயில் திருவிழா மிக விஷேஷமாக நடக்கும்.
ஊரில் இரண்டு பெருந்தலைகள். இருவரும் பண்ணையார்கள். சுப்பையா மற்றும் முன்சீப் ராமையா. சுப்பையாவின் மனைவி ஷேஷம்மா. சுப்பையாவிற்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் புன்னையா (மனைவி சுந்தரம்மாள்). இரண்டாவது மகன் ராஜு. சுப்பையா பன்ணையாரின் மனைவி ஷேஷம்மாவின் தூரத்துச் சொந்தக்காரர்களான கங்கப்பாவும் மல்லியும், அண்ணன் தங்கை. இருவரும் சிறுவயதிலிருந்தே சுப்பையா பண்ணையாரின் வீட்டில் வளர்ந்தவர்கள். மல்லிக்கு ராஜு அத்தான் மேல் மிகப் பிரியம். சுப்பையா பண்ணையாரிடம் வேலை செய்யும் பதாலு, பதாலுவின் மனைவி புல்லி, பதாலுவின் நான்கு வயது மகன் புடத்தடு, பதாலுவின் தங்கை ராமி (கங்கப்பாவிற்கு ராமி என்றால் மிகுந்த இஷ்டம்). ராமையாவின் மனைவி சூராலு. ராமையாவிற்கு ஒரு மகனும் மகளும். மகன் வெங்கன்னாவிற்கு திருமணமாகிவிட்டது (மனைவி இந்திரா). மகள் லட்சுமி என்ற லச்சம்மாவிற்கு சுப்பையாவின் மகன் ராஜுவின் மேல் காதல். ராஜுவும் அவளை விரும்புகிறான். சூராலுவின் தங்கை நாகம்மாவின் பையன் ரங்கன் சூராலுவின் வீட்டில்தான் வளர்கிறான். ரங்கன் ராமையாவிற்கு செல்லம். கொஞ்சம் அடாவடி இளைஞன். ரங்கனுக்கு ராமியின்மேல் ஒரு கண். கணக்கர் தர்மராஜு, அவர் மகன் லிங்கராஜு என்கிற லிங்கையா, இருவரும் மோகிக்கும், எண்ணெய்ச் செக்கு வைத்திருக்கும் மங்கி என்கிற தெலுக்குல மங்கம்மா.
ஊரில் அனைவரும் அந்நியோன்யமாக அன்பாக கலந்து வாழ்கிறார்கள். கிராமத்திலேயே முதன்முறையாக ராஜு புதிதாக டிராக்டர் வாங்கி ஊருக்கு கொண்டுவருகிறான். அவனுக்கும் லச்சுமிக்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் கோவிலில் தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். அம்மன் திருவிழா வருகிறது.
உற்சவத்தின் போது ரங்கனாலும், கணக்கர் தர்மராஜுவாலும் பிரச்சினை உருவாகிறது. பெரிதாகி கலவரமாக மாறுகிறது. ஊர் இரண்டாகப் பிரிந்து (சுப்பையா கோஷ்டி, ராமையா கோஷ்டி) அடித்துக்கொள்கிறது. திருவிழா தடைப்படுகிறது. தீ கனன்று ஊரில் பதட்டம் நிலவுகிறது. குடிசைகள் எரிகின்றன. காவல் போடப்படுகிறது. ராஜு லச்சுமி கல்யாணம் நின்றுபோகிறது.
நாவலில் மல்லியின் பாத்திரப் படைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மல்லி ஒரு தூய ஆத்மா. மல்லிக்கு ராஜு அத்தான்தான் உலகமே. அவன் எது சொன்னாலும் அவளுக்கு அது வேத வாக்கு. ராஜு அத்தான் லச்சுவை திருமணம் செய்யப் போவது அவளுக்குத் தெரியும். இருந்தும் அது அவளின் ராஜு அத்தான் மீதான பிரேமத்தை எள்ளளவும் குறைக்கவில்லை. ராஜு அத்தான் எழுதப் படிக்க கற்றுக்கொள்ளச் சொன்னான் என்று ஓய்வு நேரத்தில் அம்மன் கோயிலில் உட்கார்ந்து படிக்கவும், எழுதவும் பயில்கிறாள். ராஜு அத்தானிடம் பேச வேண்டியதையெல்லாம் குட்டி குட்டி வரிக் கடிதங்களாக எழுதி அவனிடம் கொடுக்காமல் தானே வைத்துக் கொள்வது அவள் வழக்கம்.
“அத்தான், நேத்து ராத்ரி எறாக் கறி எப்படி இருந்தது? நான்தான் பண்ணினேன்“
“கெங்கன் கொடுத்த கீச்சு செருப்பு நல்லா இருக்குது. ஏன் போடமாட்டேங்கிறே?”
“குரங்குப்புட்ட மாமரம் செமயாப் பூத்துருக்குது. தலெக் காய்ப்பு பிஞ்சுங்க எவ்வளவு நல்லாஇருக்குது தெரியுமா?”
“கல்யாணத்துக்கப்புறம் நீயும், லச்சுமி அக்காவும் குடித்தனம் நடத்த நீ கட்டிட்டிருக்கற புது வீட்டுல தெற்குப் பக்கம் ரோஜாப் பதியம் போட்டேன். வீடு முடியறதுக்குள்ள பூக்கணும்“
“முந்தாநாள் லச்சுமி அக்கா, கஞ்சீவரம் பட்டுப்புடவையாம், கட்டிக்கிட்டு வந்தா, கோவிலுக்கு. எவ்வளவு நல்லா இருந்தது தெரியுமா, லச்சுமி தேவி மாதிரி?#
அக்கிராமத்தின் அம்மன் பெயரும் அவள் பெயர்தான் “மல்லம்மா”…
இந்நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டதா ஜெ?. சினிமாவாக உருமாறக் கூடிய அத்தனை காரணிகளும் நாவல் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது.
வெங்கி
*
“கறுப்பு மண்” நாவல்
தெலுங்கு மூலம்: “Nalla Regadi” – பாலகும்மி பத்மராஜூ
தமிழில்: பா. பாலசுப்பிரமணியன்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
*