காமத்தின் கணம், கடிதம்

அனல் காற்று வாங்க

அனல் காற்று மின்னூல் வாங்க  

அன்புள்ள ஜெ

அனல் காற்று நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் உங்களுடைய பெரிய நாவல்களை எல்லாம் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நாம் வாழும் உலகத்தை அகற்றிவிட்டு அவற்றில் அமிழவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அனல்காற்று அப்படி அல்ல. சாதாரணமாக வாசித்து முடித்துவிட்டேன்

உங்களுடைய வழக்கமான வாசகர்கள் இந்த நாவலை அதிகமாகப் பரிந்துரைப்பதில்லை. இது காமம் சார்ந்த நாவல். ஆனால் காமத்தின் கொண்டாட்டம் இதில் இல்லை. இதிலிருப்பது வலிதான். ஒரு தப்பான உறவு கதைநாயகனுக்கு இருக்கிறது. தப்பான என்று ஏன் சொல்கிறேன் என்றால் அதை மேலே கொண்டுசெல்ல முடியாது, எங்காவது முடித்தாகவேண்டும் என்பதனால்தான். அப்படி அதை எங்கே முடிப்பது என்பதுதான் சிக்கல். முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் உருவாகும் இடம் இன்னொரு பெண் உள்ளே வருவது. அதாவது சரியான ஒன்று நிகழ்வது. அப்போதுதான் வேறுபாடு தெரியும். அதை முடிக்கவேண்டும் என நினைக்க ஆரம்பித்தாலே நரகமாக ஆகிவிடுகிறது. எங்கே எப்படி முடிப்பதென்று தெரிவதில்லை. எங்கே முடித்தாலும் ஈகோ கிளாஷ் ஆகும். ரத்தம் கசியும்.

அந்நாவலில் பல இடங்களில் சைக்காலஜிக்கலான அணுகுமுறை நான் அறிந்ததை அப்படியே சொல்வதுபோல இருந்தது. அப்படி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் வாசிக்கும்போது சரிதானே என நினைத்தேன். உக்கிரமான விஷயம் கடைசியில் ரத்தத்தில் அவள் கிடப்பது. ஒரு வகையான பிரசவம் போல அது. எல்லாம் சட்டென்று முடிந்துவிடுகிறது. பிரசவம் மாதிரித்தான். அவ்வளவு ரத்தமும் அழுகையும் சட்டென்று முடிந்து இரண்டு உயிராக ஆகிவிடும்.

நான் அந்த நாட்களையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது பிரசவம் போல என நினைப்பேன். பிரசவம் எனக்கு ஒரு நைட்மேர் மாதிரி. அதுவும் அப்படித்தான் இருந்தது. அனல் காற்று நீங்கள் எழுதிய நாவல்களில் மிகமுக்கியமானது என நினைக்கிறேன். அதில் தத்துவம் எல்லாம் இல்லை. ஆனால் அந்த கணம் அதிலே உள்ளது. அது மிக அபூர்வமாகத்தான் எழுதப்பட்டுள்ளது. பாலகுமாரன் நிறைய வாசித்தவள். ஆனால் பாலா அங்கெல்லாம் பெரிய பேச்சுதான் பேசுவார். சைக்காலஜிக்கலாக உள்ளே போகமாட்டார்.

நன்றி

எம்

*

முந்தைய கட்டுரைபூமணியின் பிறகு…
அடுத்த கட்டுரைஅரிமளம் பத்மநாபன்