சினிமாவும் ஓவியங்களும்

சினிமா, நுகர்வோரும் பயில்வோரும்

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் கட்டுரையை வாசிக்கும் வரை படத்தின் ஷாட்களில் இத்தனை நுட்பங்களுண்டு, இப்படி அவற்றை கவனிக்கவேண்டும் என்று நான் எண்ணியதில்லை. அதைப் படித்தபின்புதான் நான் படமே பார்க்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.

இவ்வளவு நுட்பமாகவும் ஆழமாகவும் ஷாட்களாக சினிமா உருவாக்கப் படும்போது அது பரபரவென்று ஓடவேண்டும் என எதிர்பார்ப்பதே சினிமாவுக்கு எதிரான அராஜகம் என புரிகிறது. அத்துடன் இங்கே சினிமா பற்றி எழுதுபவர்கள் பெரும்பாலும் கதைச்சுருக்கம் கொடுத்து கதையைத்தான் விவாதிக்கிறார்கள். அல்லது அதிலுள்ள அரசியலை நோண்டி எடுக்க முயல்கிறார்கள். சினிமாவிமர்சனம் என்பது இங்கே இல்லை என்றே தோன்றிவிட்டது. சினிமா அபிப்பிராயமே உள்ளது என்ற எண்ணம் வந்தது. இந்தக் கட்டுரைகள் மிக உதவியாக இருந்தன.

ஆராவமுதன் ஆர்

அன்புள்ள ஆராவமுதன்,

நான் சினிமா விமர்சனங்களை குறை சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு தோன்றியதை சொல்வதில் தவறில்லை. அக்கருத்துக்கள் வழியாகவே ஒரு சினிமா எப்படி ஏற்கப்பட்டது என்று சினிமாக்காரர்களுக்குப் புரிகிறது. பொழுதுப்போக்குச் சினிமா என்பதே ’ஃபீட்பேக்’ வழியாக உருவாக்கப்படும் கலைதான்.

நான் தீவிரசினிமாவை 1984 முதல் காசர்கோடு திரைப்பட சங்கம் வழியாக அறிமுகம் செய்துகொண்டவன். உலகசினிமாக்களை வாரந்தோறும் பார்த்த ஒரு காலம் இருந்தது. திரைவிழாக்கள் தோறும் சென்றுகொண்டிருந்தேன். அதை என் இலக்கியரசனையின் பகுதியாகவே கருதினேன்.

அதன்பின் திரைப்பட உருவாக்கத்துடன் தொடர்புகொண்டேன். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்கள் எனப்படுபவர்களின் சினிமாக்களில் பணியாற்றியிருக்கிறேன். திரைக்கதையை முறையாகவே பயின்றுமிருக்கிறேன். சினிமாவின் கோட்பாடும் தெரியும், அதன் நடைமுறைச் சமரசங்களும் தெரியும்.

ஆனால் சினிமா பற்றிப் பேசியதில்லை, பேசவேண்டியதில்லை என்பதே என் எண்ணமாக இருந்தது. இந்தியாவின் வரலாற்றிலேயே இரண்டாவது மாபெரும் வெற்றிப்படமும், தமிழ் சினிமா வரலாற்றிலேயே பெரிய வெற்றிப்படமும் ஆன 2.0 ஒரு தோல்விப்படம் என இங்கே அசடுகள் சொல்லிச் சொல்லிப் பரப்பியபோதுகூட ஒரு சொல் கூடச் சொல்லி நான் அதை விளக்கியதில்லை.

நான் சினிமா பிரமோக்களில் கலந்துகொள்வதில்லை. என் படங்களின் எந்த விழாக்களிலும் கூடுமானவரை பங்கெடுத்ததில்லை. அந்த நிலைபாட்டுக்கு மாற்றம் வந்தது அண்மையில் சினிமாவே மாற ஆரம்பித்தபோது. இன்று சினிமாவின் பிரமோக்களில் எல்லாருமே கலந்துகொண்டாகவேண்டும். கமல்ஹாசனே ஊர் ஊராகச் சென்று சினிமாவை விளம்பரம் செய்கிறார். ஆனாலும் இப்போதும் சினிமா வெற்றிவிழாக்களில் கலந்துகொள்ளவேண்டாம் என்றே இருக்கிறேன். இன்றும் நாளையும் என் படங்களின் வெற்றிவிழாக்கள். வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் உட்பட எந்த கொண்டாட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் சினிமா பிரமோவுக்கு என முன்வந்தபோது அதை முழுமையாகவும் திறமையாகவும் செய்ய முயன்றேன். அவ்வாறு முழுமையாகச் செய்வதே என் வழக்கம். வெந்து தணிந்தது காடு மெல்லச்செல்லும் படம் என்பதை திட்டமிட்டு சொல்லி நிறுவியது என் உத்தியே. அப்படியல்ல, அது வேகமான படம் என திரையரங்கில் வந்து உணர்ந்த ரசிகர்கள் அதைப் பரப்பி படத்தை வெற்றியடையச் செய்தனர்.

பொன்னியின் செல்வன் தமிழ்ப்பெருமிதம் சொல்லும்படம் என்பதும் சரி, ஃபேண்டஸி படமான பாகுபலியையும் சரித்திரப்படமான பொன்னியின் செல்வனையும் ஒப்பிடுவது அபத்தமானது என்பதும் சரி, ஊடகத்தில் நான் சொல்லி நிறுவியவை. அவை அப்படத்தின் வெற்றிக்கும் பேருதவியாக இருந்தன.

இவ்வாறு செயலாற்றத் தொடங்கும்போதுதான் விமர்சனங்களைக் கவனித்தேன். அவற்றின் போதாமைகளைக் கண்டபின்னரே சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தேன். எவரையும் திருத்தும், இடித்துரைக்கும் நோக்கம் இல்லை. நான் பேசுவது என் வாசகர்களாகிய சிறு வட்டத்திடம் மட்டுமே. ஓரிரு சினிமா ரசிகர்களும் கவனிக்கக்கூடும். சினிமா என் களம் அல்ல என்பதே என் எண்ணம், இப்போதும். ஆனால் இங்கே சினிமா பற்றிப் பேசுபவர்களுக்கு நான் அறிந்ததில் சிறு பங்குகூட சினிமா தெரியாது என்று பட்டது.

இங்கே விமர்சனங்கள் என எழுதப்பட்டவை பெரும்பாலும் படத்துக்குள் செல்ல மறுத்து, தாங்களே ஒரு கதையை அல்லது திரைக்கதையை எண்ணிக்கொண்டு அது படத்தில் இல்லையே என பேசுவதுதான். அடுத்தபடியாக, ‘ஐஸ்வர்யா ராய்க்கு வயசாகிவிட்டதா?’ போன்ற எளிமையான ‘கமெண்டு’கள். அல்லது ‘எங்கே வில்லன்?யார் ஹீரோ?’ என்பதுபோன்ற டெம்ப்ளேட் ரசனைகள்.  இவற்றுக்கு உலகிலெங்கும் சினிமா விமர்சனம் என்னும் வகைமைக்குள் இடமே இல்லை என இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இலக்கியரசனையிலேயே கூட ‘கமெண்டுகள்’ முதிர்ச்சியின்மையாகவே கருதப்படும்.

வரலாற்றுக் கற்பனை என்னும் வகைமைக்குள் பொன்னியின் செல்வன்தான் தமிழில் மட்டுமல்ல, இந்திய சினிமாக்களிலேயே முதன்மையானது. அதை நான் சொல்லவேண்டியதில்லை. இந்திய சினிமாவின் விமர்சகர்களில் எவர் முக்கியமானவர்கள் என நான் நினைக்கிறேனோ அவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் இப்படி ஒரு படம் வந்தபின்னரும்கூட, அவற்றை தமிழ்மக்கள் பெருந்திரளாக ரசிக்கையிலும்கூட, சினிமா விமர்சகர்கள் என எழுதுபவர்களுக்கு அதை எளியமுறையில் அணுகும் ரசனைகூட இல்லை என்பதும், அவர்கள் சாதாரணமாகக்கூட பொன்னியின் செல்வனுடன் ஒப்பிடமுடியாத எளிய திரைமொழி கொண்ட பாகுபலி அல்லது பாஜிராவ் மஸ்தானியை கொண்டாடுகிறார்கள் என்பதும் திகைப்பூட்டியது. இப்போதேனும் சிலவற்றைச் சொல்லவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் இவர்கள் தமிழ் ரசனையை தெலுங்குசினிமாத் தரத்துக்கு கொண்டுசென்று விடுவார்கள். ஆகவேதான் இக்குறிப்புகள்.

நான் சொல்பவை சினிமா ரசனை பற்றிய சில அடிப்படைகள்தான். ஆனால் அவற்றை இப்படி பொன்னியின் செல்வன் போன்ற ஒரு சினிமாவுடன் இணைத்துச் சொல்லாவிட்டால் கவனிக்கப்படாது என்று நினைக்கிறேன். ஒரு கலையை முறையாக அறிவதற்குரிய வழிகள் இவை.

சினிமா விமர்சகர்கள் சினிமாவின் ‘வசூல்’ பற்றிப் பேசுவது இங்கு முக்கியமாக உள்ளது. சினிமாவின் வசூலைப் பற்றி சினிமாவுக்குள்ளேயே சரியான தரவுகள் கிடையாது. பெறவும் முடியாது. ஆனால் இணையதளங்களில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். படம் வெற்றியா தோல்வியா என்று ஆராய்கிறார்கள். அது சினிமாவை மதிப்பிட அளவுகோலா என்ன? என்ன ஆச்சரியமென்றால் ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அது மாபெரும் வசூல்படம் என்றாலும் அது தோல்வி என சலிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சினிமா விமர்சகன் சினிமா பற்றி பேசவேண்டியது மூன்று அடிப்படைகளில்.

அ. அந்த சினிமாவை எப்படிப் பார்க்கவேண்டும், என்னென்ன கவனிக்கவேண்டும் என்று. அதற்கு அந்த சினிமா எந்த வகையானது, அதை எந்த படங்களுடன் ஒப்பிடவேண்டும், என்னென்ன பின்னணிகளை அறிந்திருக்கவேண்டும் என்று சொல்லவேண்டும். அந்தப்படத்தில் கவனிக்கவேண்டியதென்ன என்று சுட்டவேண்டும்.எந்த விமர்சனமும் ரசனைப்பயிற்சிதான்.

ஆ. அந்தப் படத்தின் மேல் தன் சொந்த ரசனையை  முன்வைக்கவேண்டும். அதற்கு அந்த விமர்சகரின் தனிரசனையின் தரமென்ன என்பது சொல்லப்படவேண்டும் (பொன்னியின் செல்வன் தரமான படம் இல்லை என விமர்சித்த ஒருவர் பாஜிராவ் மஸ்தானி தரமானது என்றார் என்றால் சரிதான் என அவரைப்பற்றி முடிவுசெய்யவேண்டியதுதான்)

இ. மேலே சொன்ன இரண்டையும் செய்தபின், அதன் அடிப்படையில் விமர்சனங்களை சொல்லலாம். மதிப்பிடலாம்.

அந்த வகையான பயிற்சியளிக்கும் அம்சம் இங்குள்ள விமர்சனங்களில் இல்லை. ஒரு படம் வந்ததுமே முடிந்தவரை முண்டியடித்து உடனடியாக ஒற்றைவரி மதிப்பீட்டைச் சொல்வதுதான் நடக்கிறது. ஆகவேதான் இக்கட்டுரைகள்.

அத்துடன் ஒரு படம் வந்துசென்றபின் அதைப்பற்றி பேச்சே இல்லை. உண்மையில் சினிமா ரசனை என்பது அதன்பிறகுதான் ஆரம்பிக்கிறது.

உதாரணமாக, பொன்னியின் செல்வனில், அந்த படத்தின் ஷாட்களில் மணியம் வரைந்த ஓவியங்களின் பங்களிப்பு எவ்வளவு? எவராவது எழுதியிருக்கிறார்களா?

இரு ஷாட்களை உதாரணமாகச் சொல்கிறேன்

இவ்விரு ஷாட்களும் மணியம் 1951ல்  பொன்னியின் செல்வனுக்கு வரைந்த எளிமையான கோட்டோவியங்களில் உள்ளவை. 70 ஆண்டுகளுக்குப்பின் அவை திரைவடிவமாகியிருக்கின்றன. ஒரு கதைச்சித்தரிப்பு ஓவியம் எப்படி சினிமா ஷாட் ஆகும், சினிமா ஷாட்களுக்கும் ஓவியங்களுக்குமான உறவாடல் என்ன, இதையெல்லாம் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது. அமெரிக்க – இத்தாலிய காமிக்ஸ்களுக்கும் சினிமா ஷாட்களுக்குமான உறவு விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஜப்பானிய காமிக்ஸ்கள் எப்படி சினிமாவை உருவாக்கின என பேசப்பட்டுள்ளது. தமிழில் இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி அண்மைக்காலத்தில் வரப்போவதில்லை. அதைப்பேசத்தான் சினிமா விமர்சகர்களே ஒழிய வசூல்கணக்கை பேச அல்ல.

உண்மையில் இதையெல்லாம் சினிமாக்காரர்கள் எங்களுக்குள் பேசிக்கொள்கிறோமே ஒழிய வெளியே எந்தப் பேச்சும் இல்லை. எவருக்கும் கவனமும் இல்லை. ஆகவேதான் இப்படிப் பேசலாமே என்று சுட்டிக்காட்டுகிறேன். மற்றபடி சினிமா பற்றிப் பேசுவது என் வேலை அல்ல.

ஜெ

பொன்னியின் செல்வன் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஜ.ரா.சுந்தரேசன்
அடுத்த கட்டுரைடி.பி.ராஜீவன் – சாம்ராஜ்