ஜெயமோகனும் பெண்ணியமும், கடிதம்

தேவி வாங்க

அன்புள்ள ஜெ,

அண்மையில் ஒரு பெண் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகன் பெண்ணிய எதிர்ப்பாளர் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் நன்றாகவே வாசிப்பவர். எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இணையத்தில் உழலும் நாலைந்து அரசியல் லும்பன்களின் முகநூல் குறிப்புகளை சுட்டிக்காட்டினார். எரிச்சலாக இருந்தது.

ஆனால் இரண்டுநாட்களுக்குப்பின் அவருக்கு புதிய பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியது என்று சொல்லி அவருக்கு இரண்டு சிறுகதைகளை அனுப்பியிருந்தேன். அவர் அடாடா என்று பரவசமாகி கடிதம் எழுதியிருந்தார். ‘அசலான பெண்ணியக் கதைகள். சர்வதேசத் தரம்கொண்ட கதைகள்’ என்று எழுதியிருந்தார். உங்களுடைய கூந்தல், என் பெயர் ஆகிய இரண்டு கதைகளும்தான் அவை.

அவருக்கு நான் அக்கதைகள் நீங்கள் எழுதியவை என மின்னஞ்சல் செய்தேன். பதிலே இல்லை. அதன்பிறகுதான் தெரிந்தது, அவருக்கு உண்மையை எதிர்கொள்ள மனமில்லை என்பது. அது ஒரு பாவனை. அண்மையில் பெண்கள் தங்களை சுதந்திரமாக காட்டிக்கொள்ளும் ஒரு பாவனையாக அதீதமான அரசியல்சார்பு, அதனுடன் இணைந்த பெண்ணியம் ஆகியவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் அரைகுறைச் செய்திகளால் உருவான பிரமைகளையே பேசுகிறார்கள். முகநூலில் புரட்சிகரமாக தென்படுவது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது.

நான் அவருக்கு இன்னொரு மின்னஞ்சல் செய்தேன். தமிழில் எழுதப்பட்ட நல்ல பெண்நிலைவாதக் கதைகள் என்று ஒரு ஐம்பது கதைகளை எடுத்தால் பத்து கதைகள் ஜெயமோகன் எழுதியவையாக இருக்கும். அவர் அளவுக்கு எவரும் தீவிரமாகவும் தரமாகவும் எழுதவில்லை. நீங்கள் எழுதிய கதைகளின் ஒரு பட்டியலையும் அனுப்பினேன். பெரியம்மாவின் சொற்கள் ஓர் அற்புதமான உதாரணம். இன்னொரு கதை துணை. தேவி கூட சிறந்த கதைதான்.

நீங்கள் பெண்நிலைவாதக் கதைகள் என்ற தலைப்பிலேயே இத்தகைய கதைகளை மட்டும் தொகுத்து ஒரு நூல் போடலாம். எவர் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்போம். இதை ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன்

சீனிவாசன் கண்ணன்

***

அன்புள்ள சீனிவாசன்,

நான் என் கதைகளை ‘பெண்நிலைவாதம்’ என்று சுருக்க நினைக்கமாட்டேன். அவை அக்கதைகளின் விரிவை தடுத்துவிடும்.

நான் பெண்மையச் சமூகம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன். வலுவான அம்மா, பாட்டி என ஆளுமைகளைக் கண்டவன். ஆகவே பெண்களின் தன்னிமிர்வு, சுதந்திரம் ஆகியவற்றை எழுதுகிறேன். அவை இயல்பான வெளிப்பாடுகளே ஒழிய எந்தவகையான அரசியல் கருத்துக்களும் அல்ல.

தேவி தொகுதியில் புனைவுக் களியாட்டின்போது எழுதிய பெண்கள் சார்ந்த கதைகள் உள்ளன. மலைபூத்தபோது, ஆயிரம் ஊற்றுக்கள் போன்ற தொகுதிகளிலும் மிக வலுவான பெண் ஆளுமைகளைச் சித்தரிக்கும் கதைகள் உள்ளன.

நான் உணர்ந்ததுதான், இங்கே தமிழில் ‘ஒடுக்கப்பட்ட பெண்களின் துன்பங்களை’ எழுதும் கதைகளே பெண்நிலைவாதக் கதைகளாகக் கருதப்படுகின்றன. நான் எழுதுபவை அப்படி அல்ல. ராணி பார்வதிபாய் போன்ற ஒரு பெண்ணை சமகால வரலாற்றின்முன் கொண்டுவந்து நிறுத்துவதே உண்மையான பெண்நிலைவாதம். அத்தகைய பெண்நிலைவாதத்தை தமிழில் இன்னொருவர் எழுதி நான் படித்ததில்லை – எந்தப் பெண் எழுத்தாளரும்.

என் பெண்நிலைவாத ஆதரவு என்பது பெண்கள் எழுதியமையாலேயே எல்லா குப்பைகளையும் புகழ்வது அல்ல. அவர்களின் கூட்டுப்பாவலாக்களை ஏற்றுக்கொண்டு பேசுவதும் அல்ல. என் அழகியல் அளவுகோல்கள் வெளிப்படையானவை, திட்டவட்டமானவை. அவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். பெண்கள் பெரிதாக எழுதமுடியாது என்று சொல்லி அவர்களை அனுதாபத்துடன் பார்ப்பதில்லை. அவர்களிடம் அவர்களின் மிகச்சிறந்ததையே எதிர்பார்க்கிறேன். அவற்றை படைக்கும் ஆற்றலுள்ள பெண்களுக்கு விருப்பமான எழுத்தாளனாகவும், முன்னோடியாகவும்தான் இருக்கிறேன்.

பெண்களில் சிலர் வசைபாடட்டும். அதனாலும் அளவுகோல்கள் மாறாது. அம்பை எனக்கெதிராக ஒரு ‘கையெழுத்தியக்கம்’ நடத்தினார். என்னை பெண் வெறுப்பாளர் என்று எழுதினார். பெண்களிடம் அசடுவழியும் எழுத்தாளர்களின் பட்டியலிலும் நுட்பமாக என்னைச் சேர்த்தார். ஆனாலும் என் அழகியல்பார்வையில் அம்பை தமிழின் முக்கியமான எழுத்தாளர்தான். ஒரு அணுவிடை அவர் இடத்தை குறைக்க மாட்டேன்.

அதேசமயம், என் ஆதர்சப் படைப்பாளிகளான ஆஷாபூர்ணா தேவி போலவோ குர்ரதுலைன் ஹைதர் போலவோ தமிழில் பெண் எழுத்தாளர்கள் இல்லை என்பதையும் சொல்ல தவறமாட்டேன். அடுத்த பட்டியலில் உள்ள மாதவிக்குட்டி (கமலாதாஸ்) பிரேமா காரந்த், இஸ்மத் சுக்தாய், அம்ரிதா ப்ரீதம் ஆகியோருக்கு நிகரானவர் அம்பை என்றும் சொல்வேன்.

முதல்நிலைப் படைப்பாளிகள் பெண்களிலிருந்து உருவாகி வரவேண்டுமென்னும் எதிர்பார்ப்பையும் எப்போதும் பதிவுசெய்வேன்.

ஜெ

மலை பூத்தபோது வாங்க

ஆயிரம் ஊற்றுகள் வாங்க

கூந்தல் வாங்க

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப் -நினைவேந்தல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் – கடிதம்