‘அங்கே ஏன் போனாய்?’

வணக்கம் சார்.

சரவண கார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ நூல் அறிமுகக் கூட்டத்தில் நான் பேசிய உரை தொடர்பாக நீங்கள் உங்களது தளத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன். அந்த நிகழ்வுக்கு நான் போயிருக்கக்கூடாது என்றும் பெண்ணியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டேன் என்றும்  கடுமையான கண்டனங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவர்களில் பலரும் நான் பேசியதை கேட்டிருக்க மாட்டார்கள், இவர்களது எதிர்வினைகள் முன்முடிவில் எழுதப்பட்டவை. அதனால் பதிலளிக்கத் தகுதியில்லாத பதிவுகள் என எதற்கும் விளக்கம் தரவில்லை.

இந்தச் சூழலில் நீங்கள் உங்கள் தளத்தில் எனது உரை குறித்து எழுதியது ‘சரியாத் தான் பேசியிருக்கோம்’ என நம்பிக்கையை இன்னும் உறுதிபடுத்தியது. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை அறிவேன். அதை நீங்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சியைத் தருகிறது.

எனது நன்றிகள்.

அன்புடன்

ஜா.தீபா

*

அன்புள்ள ஜா.தீபா,

அந்த விவாதங்களை என் கவனத்திற்கும் கொண்டுவந்தனர். இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது ஒரு சிக்கல். முன்பு இச்சிக்கல் அரசியல் கட்சிகளுக்குள், குறிப்பாக இடதுசாரிக் கட்சியின் கலாச்சார அமைப்புகளுக்குள் இருந்தது.

நாகர்கோயிலில் நாங்கள் இலக்கியக்கூட்டம் நடத்தினால் கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பொன்னீலன் வருவார். ஆனால் மற்ற எவரும் வரக்கூடாது என அவர்களே ’ஃபத்வா’ போட்டுவிடுவார்கள். ஒருவர் அந்த அமைப்புகளுக்குள் சென்றதுமே எவருடன் பேசலாம், எந்தக்கூட்டத்திற்குச் செல்லலாம் என்னும் வரைமுறைதான் முதலில் அளிக்கப்படும். பல இடதுசாரி அமைப்புகளில் ‘வாசிக்கக்கூடாத’ நூல்களை பட்டியல்போட்டு கொடுப்பார்கள்.

நான் என்ன நினைத்தேன் என்றால் அப்படி ஒரு பட்டியல் கொடுத்தால் அதைத்தான் முதலில் படிப்பார்கள் என்று. ஆனால் அப்படி இல்லை. அண்மையில் ஒருவர் விஷ்ணுபுரம் படித்துவிட்டு எழுதினார். 20 ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் இருந்தவர். அவர்கள் தடைசெய்தமையால் என் நூல்கள் எதையும் படிக்கவில்லை, இப்போது வெளிவந்தமையால் படித்தேன் என்று எழுதியிருந்தார். வியப்பாக இருந்தது. அவ்வளவு கட்டுப்பாடு, அடக்கம்!

இதுவே  ‘குழு மனப்பான்மை’ என சுந்தர ராமசாமி அடிக்கடிச் சுட்டிக்காட்டுவது. இன்று சமூக வலைத்தளங்களில் அது ’கும்பல் மனநிலை’யாக மாறிவிட்டிருக்கிறது. எழுத்தாளர் என்பவர் எல்லாவகை சமூகப்போராட்டங்களிலும் கலந்துகொள்ளலாம். எல்லாவகை அமைப்புகளிலும் பங்கெடுக்கலாம். ஆனால் எந்த புற அமைப்புக்கும் முழுக்க கட்டுப்படலாகாது, எந்தக் கும்பலிலும் முழுமையாக உறுப்பினர் ஆகிவிடலாகாது என்பதே நான் என் முன்னோடிகளிடமிருந்து கற்றது.

முப்பதாண்டுகளுக்கு முன்பு சுந்தர ராமசாமியை பிரமிள் மிகக்கடுமையாக தாக்கிவந்தார். ஆனால் ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார், கட்டைக்காடு ராஜகோபாலன் என சுந்தர ராமசாமியின் அணுக்கர்கள் அனைவருமே பிரமிளுக்கும் வேண்டியவர்களே. சுந்தர ராமசாமிக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் முட்டிக்கொண்டபோது வெங்கட் சாமிநாதனின் யாத்ரா இதழை வெளியிட்டுவந்த அ.கா.பெருமாள் சுந்தர ராமசாமி இல்லத்தில் வைத்து  அவ்விதழை மெய்ப்பு பார்ப்பார். அதில் சுந்தர ராமசாமியை கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை இருக்கும். சுந்தர ராமசாமி அதை படிக்க மாட்டார். நான் எடுத்து படித்துப்பார்த்திருக்கிறேன். இலக்கியம் செயல்படுவது வேறொரு தளத்தில்.

அரசியல்கட்சிகள் அல்லது அதேபோன்ற மனநிலை கொண்ட கும்பல்கள் எழுத்தாளர்களைப் பற்றி அவர்களே ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அவர்கள் எவரும் அந்த எழுத்தாளரை வாசிப்பவர்கள் அல்ல. ஆனால் அந்த அவர்கள் தங்கள் அரசியல் சார்ந்தோ, தங்கள் கூட்டான காழ்ப்புகள் சார்ந்தோ மேலோட்டமாக அணுகி உருவாக்கிக்கொண்ட பிம்பத்தை அந்த எழுத்தாளரை உண்மையாகவே வாசிக்கும் எழுத்தாளர்களும் ஏற்கவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். ஏற்காவிட்டால் அவர்களையும் ‘எதிரி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். அவர்களையும் சேர்த்து வசைபாடுகிறார்கள்.

இன்று சமூகவலைத்தளங்கள் எளிதாக கும்பல்கள் கூடவும், செயல்படவும் வழியமைக்கின்றன. ஆகவே கும்பல்களின் அதிகாரம் கண்கூடானது. அந்த கூட்டான எதிர்ப்பையும் அதில் வெளிப்படும் உச்சகட்ட காழ்ப்பையும் சந்திப்பது எழுத்தாளர்களுக்குக் கடினமானது. தனிநபராகச் செயல்படும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அந்த கூட்டான மிரட்டலுக்கு அஞ்சி பணிந்து ஒடுங்கிவிடுவதே நிகழ்கிறது.

இது இங்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உண்டு. அமெரிக்காவில் தீவிரமாக இயங்கிய மக்கார்த்தியிசத்தின் செயல்முறை இதுவே. இன்று உலகமெங்கும் அரசியல்சரிநிலைகளை எழுத்தாளர்களுக்கு நிபந்தனையாக விதிக்கும் ‘தீவிர’க் குழுக்கள் உள்ளன. அவர்களின் நடைமுறைகளும் இத்தகையவையே. இந்தியாவில் இடதுசாரி, வலதுசாரி இருசாராரின் குழுக்களும் இதே மனநிலையை நிலைநிறுத்துகின்றன. அவர்களின் ஆற்றல் என்பது நம் பொதுச்சூழலில் உள்ள ஒரு குறிப்பிட்ட உளநிலையில் இருந்து எழுகிறது. இங்கே எவர் எதன்பொருட்டு எந்த எழுத்தாளரை வசைபாடினாலும் ஒரு பெருங்கும்பல் வந்து சேர்ந்துகொண்டு தாங்களும் வசைபொழிய ஆரம்பித்துவிடுவார்கள்.

எழுத்தாளர் என்பவர் தனக்கு எதிரான எந்த அதிகாரத்தையும் ஏற்காதவராகவே இருக்கவேண்டும். தன் தனிவாழ்வில் எத்தகையவராக இருந்தாலும் தன் எழுத்தை அவர் இன்னொரு அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதாக அமைத்துக்கொள்ளக் கூடாது. அது அவர் ஆளுமையை வெகுவாகப் பாதிக்கும். அவருடைய எழுத்துக்குள் அது எப்படியோ ஊடுருவும். மனிதாபிமானம், முற்போக்கு, அறம், கருணை  போன்ற விழுமியங்கள்கூட எழுத்துக்கு முன்நிபந்தனைகள் ஆகக்கூடாது. எழுத்து என்பது ஆழ்மனவெளிப்பாடு மட்டுமே. அதை எதுவுமே தடுக்கலாகாது.

ஒருவேளை ஓர் எழுத்தாளர் எழுதுவது அவர் வாழும் காலத்தில் முற்றிலும் எதிர்மறையானதாக கருதப்படலாம். ஒழுக்கமீறலாக, அறமீறலாக மதிப்பிடப்படலாம். அவர் நசிவுசக்தியாக எண்ணப்படலாம். ஆனால் அவர் தனக்கு அதுவே உகந்தது என எண்ணுவாராயின், அவருடைய ஆழத்தின் வெளிப்பாடு அது என நினைப்பாராயின் அதை அவ்வண்ணமே வெளிப்படுத்தலாம். கும்பல்களால் அவர் வசைபாடப்படுவார். வேட்டையாடவும்படுவார். ஆனால் அனைத்துக்கும் மேலாக தனக்கு உண்மையாக இருத்தலே எழுத்தாளனின் கடமை. அதன்பொருட்டான எல்லா வசைகள், தாக்குதல்கள், ஒடுக்குமுறைகளையும் அவன் எதிர்கொண்டாகவேண்டும்.

சென்ற காலங்களில் அவ்வாறு ஃபாஸிஸ்ட் என்று ஒட்டுமொத்தச் சூழலாலும் வசைபாடப்பட்ட பலர் புத்துயிர்கொண்டு எழுந்து உலகசிந்தனையின் சிற்பிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரு உதாரணங்கள் நீட்சேயும் போர்ஹெஸும்.  அவ்வாறு காலம் தனக்கான மீட்பை அளிக்கும் என அவன் நம்பிக்கொள்ளவேண்டியதுதான். இல்லையென்றாலும் மானுடசிந்தனையின் மாபெரும் முரணியக்கத்தில் தன் பங்களிப்பை ஆற்றிவிட்டதாக நிறைவுகொள்ள வேண்டியதுதான். கும்பல்கள் என்றுமே படைப்பியக்கத்துக்கு எதிரானவர்கள். அவர்களிடம் இதையெல்லாம் எவரும் சொல்லிப் புரியவைக்க முடியாது.

ஒரு கட்டத்தில் இன்னொரு விசித்திர நிலையும் உருவாகும். எழுத்தாளர் அதுவரை அவரே எழுதி உருவாக்கிக்கொண்ட கருத்துநிலைக்கு அடிமையாக தன்னை உணர நேரிடும். தன் பொதுப்பிம்பத்தை தானே சுமந்தாகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகவேண்டியிருக்கும். உள்ளம் அதை விலக்கி முன்சென்றாலும் அந்த கருத்துநிலையின் அதிகாரத்தை, தன் சாதனைகள் உருவாக்கிய பிம்பத்தை துறந்து செல்ல முடியாமல் ஆகும். அப்போதும் எல்லா இழப்புகளையும் எதிர்கொண்டு தன் ஆழுள்ளம் செல்லும் வழியில் செல்வதே எழுத்தின் இயல்பாக இருக்க முடியும்.

நீங்கள் அடைந்துள்ள அரசியல் உங்கள் அவதானிப்புகள் வழியாக அடைந்தது, உங்கள் எழுத்துக்களில் இயல்பாக வெளிப்படுவது. பெண்ணியமோ இடதுசாரிக் கருத்துக்களோ அவ்வண்ணம் தனிப்பட்ட முறையில் வெளிப்படும்போதே அதற்கு இலக்கிய மதிப்பு. நீங்கள் எந்தக் குழுவின் குரலும் அல்ல. எந்த அமைப்பின் பிரதிநிதியும் அல்ல. எவருக்கும் கட்டுப்படவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லை.

இங்கே இலக்கியம் என்றும் பல கருத்துத் தரப்புகள், அழகியல் தரப்புகளாகவே செயல்படும். அறிவியக்கத்தின் இயல்பே அதுதான். அவற்றுக்குள் ஓயாத விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும். அந்த விவாதத்தில் தன் தரப்பைச் சொல்லுவது மட்டுமே சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் செய்வது. நேரடியாகச் சொல்லலாம். அல்லது எழுத்துக்கள், படைப்புக்கள் வழியாக வெளிப்படுத்தலாம். அது எந்நிலையிலும் விவாதப்புள்ளிகள் வழியாகவே நகரும்.

அரசியல்கட்சியின் தொண்டர்களின் மாறிமாறி பழிக்கும், விலக்கும் மனநிலைகளுக்கு இங்கே இடமில்லை. ஒரு குழுவுக்குள் அடங்கி, அக்குழுக்களுக்குள் பேசிக்கொள்ள எழுத்தாளன் தேவையில்லை. தன் கருத்துக்களில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர் எங்கும் சென்று தன் தரப்பைச் சொல்லலாம்.

செல்லாமலிருக்கவும் அவருக்குச் சுதந்திரமுண்டு. மரியாதையாக எதிர்வினை அமையாது என எண்ணும் இடத்திற்கு எழுத்தாளர் செல்லாமலிருப்பது நன்று என்பது என் எண்ணம். அதேபோல எழுத்துக்குச் சம்பந்தமே அற்ற அரசியல் மேடைகளில் தோன்றுவதை நான் விரும்புவதில்லை. தன் கருத்தை முழுமையாகச் சொல்ல அனுமதியிருக்காது என எண்ணுமிடத்தையும் தவிர்க்கலாம். தன் பார்வைக்கு முற்றிலும் எதிரானவர், தன்னால் ஏற்கவே முடியாததைச் சொல்பவர்கூட இந்த அறிவியக்கத்தில்தான் செயல்படுகிறார் என்றும், இதன் முரணியக்கத்தில் அவரும் ஒரு பங்களிப்பாற்றுகிறார் என்றும் உணர்வதே அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை. காழ்ப்பிலேயே உழன்று, கசப்பிலேயே திளைக்கும் தலையெழுத்து கொண்ட சாமானியர்களுக்கு அது புரியவாய்ப்பில்லை.

’அங்கே போகாதே’ என்னும் கூச்சல்களை இடுபவர் எவர்?

அ. பெரும்பாலும் இலக்கியவாசிப்போ அடிப்படை அறிவுத்தளப்பயிற்சியோ இல்லாமல் வெறுமே சமூகவலைத் தளங்களில் புழங்குபவர்கள். நான் எதையும் வாசிப்பதில்லை என அறிவித்துக்கொள்பவர்களே அவர்களில் உண்டு. அங்கே இங்கே கிடைக்கும் உதிரிச்செய்திகளைக்கொண்டு தங்கள் நிலைபாடுகளை உருவாக்கிக் கொண்டு உரக்கக் கூச்சலிட்டு தங்கள் இருப்பை அங்கே நிறுவிக்கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கம்.

ஆ. கவனம்பெறாத திறனற்ற எழுத்தாளர்கள். அவர்கள் விமர்சனங்களை அஞ்சுபவர்கள். எளிமையான பாராட்டுதல்களுக்காக அலைபவர்கள். சொல்லும்படி எதையும் எழுதாமல், எழுதமுடியுமென்னும் நம்பிக்கையும் இல்லாமல் செயல்படுபவர்கள். ஒருவகை புண்பட்ட ஆளுமைகள். தங்களைப்போலவே புண்பட்ட சிலரை சேர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் எந்த எழுத்தாளர் பற்றிய எந்த வசையுடனும் சேர்ந்து கொள்வார்கள்

இ. எழுத்தாளர்களை தங்கள் அரசியலின் படைவீரர்களாக மட்டுமே கருதும் அரசியலாளர்கள். பெரும்பாலும் எந்த இலக்கியமும் புரியாதவர்கள். எதிலும் அரசியல் மட்டுமே கண்ணுக்குப்படுபவர்கள். அந்த அரசியலும் வெறும் அதிகார அரசியல். அன்றாட அரசியல். அதில் கொள்கை என ஏதுமில்லை. அதிகாரத்துக்கான எல்லா சமரசங்களும் இவர்களுக்கு ஏற்புடையதே. அதைச் சார்ந்த நிலைபாடுகளை எடுத்து அதனடிப்படையில் காழ்ப்புகளை உருவாக்கிக்கொள்பவர்கள். அதைப் பரப்புவதையே இரவுபகலாகச் செய்பவர்கள். அதை எழுத்தாளர்கள் அப்படியே ஏற்கவேண்டுமென நினைப்பவர்கள்.

எண்ணிப்பாருங்கள். மூன்று தரப்பினருமே எழுத்து, எழுத்தாளர்மேல் மதிப்பற்றவர்கள். வாசிக்காதவர்கள். எழுத்துக்களைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை பேசாதவர்கள். ஆனால் எழுத்தாளர்கள் தங்கள் சொல்லுக்கு கட்டுப்படவேண்டும் என நினைக்கிறார்கள். கட்டுப்படாவிட்டால் வசைபாடுகிறார்கள். அதை ஒரு மிரட்டலாக ஆக்கி அதிகாரத்தை அடைகிறார்கள். அந்த அதிகாரம் தங்கள்மேல் இருக்கவேண்டுமா என எழுத்தாளர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.

நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் கருத்தைச் சொல்லலாம். அதை உறுதியாக, ஆனால் மென்மையாகச் சொல்லும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. அந்த தற்செறிவு ஒரு பெரிய கொடை. அதை நம்புங்கள்.

சி.சரவணக் கார்த்திகேயன் ஒரு பெண்வெறுப்பாளர் என்றே ஒரு பேச்சுக்கு இருக்கட்டும். ஆகவே அவர் எழுதலாகாது என ஃபத்வா விதிக்கமுடியுமா? அவரை வாசிக்கலாகாது என ஆணையிட முடியுமா? அவரை எழுத்தாளர் அல்ல என்று சொல்லிவிடமுடியுமா? அது ஒரு தரப்பு என்றே கொள்ளமுடியும். அப்படி ஒரு கருத்துத் தரப்பு இங்கே இருந்தால் அதை ஓர் எழுத்தாளர் ஏன் வெளிப்படுத்தக்கூடாது? அத்தனை எழுத்தாளர்களும் சீருடை அணிந்து கைகளில் கொடியுடன் ஒரே அணியாம சீர்நடை போடவேண்டும் என எதிர்பார்க்கும் கும்பல் எழுத்தாளர்களையும் அறிவுச்செயல்பாட்டையும் பற்றி உண்மையில் என்னதான் நினைக்கிறது.

ஒரு மாற்றுத்தரப்பை முழுமையாகவே எதிர்க்கலாம், நொறுக்கலாம், அதற்கான எல்லா உரிமையும் எல்லாருக்கும் உள்ளது. நான் தனிப்பட்டமுறையில் உங்கள் சமூகவியல் கருத்துக்கள், உங்கள் அரசியல் நிலைபாடுகளுக்கு ஏற்பு கொண்டவன் அல்ல. உங்களை எனக்கு முன்னரே தெரியும், தொடக்ககாலத்தில் நீங்கள் பல கதைகளை என்னிடம் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் தொகுப்பு போட்ட பின்னரும்கூட நான் உங்களை வெறுமே கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். புதியதாக, தீவிரமாக, ஒரு படைப்புடன் நீங்கள் வெளிப்பட்டபோதுதான் உங்களை படைப்பாளி என அடையாளம் கண்டு கவனப்படுத்தி எழுதினேன். அந்தக் கதையை நானாகவே கண்டடைந்தேன். அது என் அழகியல் நிலைபாடு. அதில் எப்போதும் உறுதியாகவே இருப்பேன்.

சரவண கார்த்திகேயனின் அரசியலுக்கும் நான் எதிரானவன். அவரது அந்நூலில் அறுதியாக வெளிப்படும் வரலாற்றுப் பார்வையும் எனக்கு உகந்தது அல்ல. அதனாலென்ன? அப்பார்வை இன்று பலரிடம் உள்ளது .என் நண்பர் பவா செல்லத்துரை முப்பதாண்டுகளில் என் ஒரு கருத்தையும் ஏற்றுக்கொண்டவர் அல்ல. விஷ்ணுபுரம் அமைப்பிலேயே திராவிடக் கருத்தியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட, அதை எழுதிக்கொண்டே இருக்கிற, பலர் உண்டு. ஏன், என் வீட்டிலேயே சைதன்யா தனக்கான எல்லா மறுப்புகளுடனும்தான் இருக்கிறாள். அவளுடைய கருத்துலகமே வேறு. பல விஷயங்களில் அஜிதன் எனக்கு முற்றிலும் எதிரான நிலைபாடுள்ளவன் என நண்பர்களுக்கு தெரியும்.

விஷ்ணுபுரம் விருதுக்கு விருந்தினராக வரும் அ.வெண்ணிலா, கார்த்திக் புகழேந்தி போல பலர் உறுதியான இடதுசாரிகள். விருது பெறும் சாரு நிவேதிதா பல ஆண்டுகளாக என்னை எதிர்த்து வருபவர், எனக்கு நேர் எதிரான அழகியலும் வாழ்க்கைநோக்கும் கொண்டவர். அதனால் அவர்கள் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருவதில் தடை உண்டா? சாரு எழுத்தாளர் இல்லை என ஆகிவிடுமா?

விழாவுக்கு வருபவர்களில் ஒருவரிடம் சொன்னேன், அவர் என்னை நிராகரித்து அல்லது மறுத்துப் பேசினாலும் தடை ஒன்றும் இல்லை. அது வம்பு அல்லாமல் ,இலக்கியம் சார்ந்ததாக, விவாதமொழியில் இருந்தால் மட்டும் போதும்.

இந்த முரண்பாடுகள் இருக்கும் வரைத்தான் இங்கே இலக்கியம் செயல்படும். ஆகவே உங்கள் வழியில் துணிந்து செல்லுங்கள். பொதுவான சூழலுக்குமேல் தலைநிமிர்ந்து நிற்கையிலேயே எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிறது.

ஜெ

ஜா.தீபா சிறுகதைகள் வாசிப்பனுபவம்: கல்பனா ஜெயகாந்த்

https://www.jadeepa.in/

ஜா.தீபா- ஜெயமோகன் தளம்

முந்தைய கட்டுரைகலாமோகினி
அடுத்த கட்டுரைஅஞ்சலி, டி.பி.ராஜீவன்