«

»


Print this Post

டைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்


இலக்கிய டைம்ஸ் ஆ·ப் இந்தியா வெளியிட்டிருக்கும் இலக்கியமலர் இப்போது கடைகளில் விற்பனையில் இருக்கிறது. தமிழின் சிறந்த படைப்பாளிகள் இதில் எழுதியிருக்கிறார்கள். பொதுவாக தமிழில் எழுத்தாளர்கள் எழுதும்போது இதழ் எத்தகையது என்பதை கருத்தில் கொள்ளும் வழக்கம் உண்டு. புது இதழ் என்னும்போது டைம்ஸ் ஆ·ப் இண்டியா முத்திரை ஓரளவு உதவியது. அதைவிட உதவியது சுஜாதாவின் பெயர். தமிழ் இலக்கியவாதிகள் நடுவே அவருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, பலருக்கு அவரது பங்களிப்புமீதும் ரசனை மீதும் மதிப்புமுண்டு. அதைவிட இவ்விதழை சுஜாதா சார்பில் கட்டுரை கதைகள் கேட்டு தயாரித்தவர் மனுஷ்யபுத்திரன் என்பதே இதன் முக்கியமான பலம்

இதழை கடைகளுக்குப்போய் பார்த்த இலக்கிய வாசகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடைகள் முன் போஸ்டரில் ‘இலக்கிய ஜாம்பவான்களான வைரமுத்து, நா.முத்துக்குமார்’ போன்றவர்களின் படைப்புகள் அடங்கிய மலர் என்ற வரிகள் இருந்தன. அசோகமித்திரன், ஆ.முத்துலிங்கம், இந்திரா பார்த்த சாரதி, வண்ணதாசன், தேவதேவன்,நாஞ்சில்நாடன் ,சுகுமாரன் வரை முக்கியமான முன்னோடிப் படைப்பாளிகள் எழுதியிருக்கும் ஒரு மலருக்கான விளம்பரம் இது!

‘பில்லா’ கறுப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு முப்பது பாகையில் முகம் திருப்பி ‘தமிழின் நிகழ்காலம்’ [இறந்தகாலம் முதல்வர் கருணாநிதியா?] என்று சுவரொட்டி அடித்து வெட்கமில்லாமல் தெருத்தெருவாக ஒட்டும் வைரமுத்து எப்படி உணர்வாரோ தெரியவில்லை, நல்ல வாசகராக நான் அறிந்த நா.முத்துக்குமார் அதைக் கண்டால் கூசிப்போவார் என்றே நினைக்கிறேன். [இதழில் எனக்குப்பிடித்த இரண்டு கவிதைகளில் ஒன்று அவர் எழுதியது]

கடைகளில் இந்த சுவரொட்டியை நான் பார்க்கவில்லை. ஆனால் இரண்டுநாட்களாக தொலைபேசியில் அழைத்த வாசகர்களெல்லாமே இதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். மனுஷ்யபுத்திரனிடம் கூப்பிட்டுக் கேட்டேன். அந்த இதழைத் தொகுத்து அளித்ததும் தன் பணி முடிந்துவிட்டது, இறுதி மெய்ப்பு நோக்கக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.

இதழை ‘சந்தைப்படுத்தியது’ முழுக்க முழுக்க ஆனந்தவிகடனின் வினியோக அமைப்புதான் என்றார்கள். நவீனத் தமிழிலக்கியத்தின் ஜாம்பவான்கள் வைரமுத்துவும் நா.முத்துக்குமாரும்தான் என்ற எண்ணத்துக்குச் சொந்தமான அந்த ‘சும்பன்’ யாரென்று தெரியவில்லை.

பிற மொழிகளில் டைம்ஸ் ஆ·ப் இண்டியா வெளியிட்டுள்ள மலர்கள் இலக்கியத்தரமானவை என்ற பெயரை இதுவரை நிலைநாட்டியுள்ளன. தமிழில் அது நுழையும்போதே என்ன ஆகுமென்ற அடையாளம் கிடைத்து விட்டிருக்கிறது. சரியான இடத்தில் முட்டாளோ அயோக்கியனோ சென்று அமர்வது ஒவ்வொருமுறையும் இங்கே நடப்பதுதானே.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/175

1 ping

  1. Elitist இலக்கியவாதிகளும் இலக்கிய வளர்ச்சி(யின்மை)யும் « உரக்கச் சொல்வேன்

    […] சாராரிடம் கிடைக்கிற அவமரியாதை. இதோ ஜெயமோகன்  – ”’பில்லா’ கறுப்புக்கண்ணாடியை […]

Comments have been disabled.