சைதன்யாவின் கட்டுரை -கடிதங்கள்

அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் – சைதன்யா

அன்புள்ள ஜெ

மானுட ஆற்றலுக்கு இருக்கும் ஆவேசத்தையும்,  உயிரியல் ஆன்மீகக் கேள்விகளையும் , அவற்றின் அத்தியாவசித்தையும் ஒருங்கே முன்வைத்திருக்கும் சிறந்த கட்டுரை. சைதன்யாவிற்கு வாழ்த்துகள்.

மலைச்சாமி அழகர்

*

அன்புள்ள மலைச்சாமி,

பெண்விடுதலை என்பது கல்விக்கான விடாயாகவே முதலில் உருவானது என்று அக்கட்டுரையிலிருந்து அறிந்தது எனக்கும் ஒரு செய்திதான்.

அதில் முக்கியமான அம்சம் என்பது விடுதலைக்குரலாக எழுந்த அன்னையிடமிருந்து புனைவாசிரியையான மகள் அடைந்த வேறுபாடு, அல்லது பின்னகர்வு, அல்லது சோர்வுதான். அந்த அவதானிப்பை முன்வைப்பதனால் அது ஒரு நல்ல கட்டுரை.

ஜெ

*

அன்புள்ள ஜெ

உங்கள் மகள் சைதன்யா கட்டுரையாளராக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்கட்டுரை என்று சொல்லமுடியாதபடி நேர்த்தியான செறிவான மொழி (உங்கள் பங்களிப்பு இருக்குமோ என்றும் தோன்றியது)

உங்கள் வீட்டில் இனி கட்டுரைகள் எழுத யாரும் இல்லை என நினைக்கிறேன். சைதன்யா தொடர்ந்து கட்டுரைகளையும் கதைகளையும் எழுதவேண்டுமென விரும்புகிறேன்

ஸ்ரீராம்

*

அன்புள்ள ஸ்ரீராம்,

சைதன்யாதான் எங்கள் வீட்டில் அதிகமாக இலக்கியம் வாசித்தவள், இலக்கியக் கோட்பாடுகளை முறையாகக் கற்றவள், வீட்டில் நடைபெறும் இலக்கிய விவாதங்களில் அறுதியாகப் பேசுபவள். அவளுக்கு இப்போதுதான் எழுதவேண்டுமென தோன்றியிருக்கிறது. முன்பு ஓர் அனுபவப்பதிவு எழுதியிருக்கிறாள். அதுவும் நல்ல கட்டுரைதான், புனைவுக்குரிய குறிப்பமைதி உடையது. (கிளென்மார்கன் ஒரு கடிதம் )

இக்கால இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள், கொண்டிருக்கும் மனநிலை உங்களுக்கு தெரியாதென நினைக்கிறேன். அவர்களின் பார்வை, மொழிநடை எதிலும் நானல்ல எவரும் ஒரு துளிகூட சேர்க்கமுடியாது. விவாதிக்க மட்டுமே முடியும். அதுவும் பிரசுரிக்கப்பட்ட பின். அவர்களிடம் ஒரு irreverence உள்ளது. அது ’பேக்கேஜில்’ ஒரு பகுதி. ஒன்றும் செய்யமுடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி, டி.பி.ராஜீவன்
அடுத்த கட்டுரைதற்கல்வியும் தத்துவமும்- கடிதங்கள்