ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் கொண்டாட்டாத்திற்காக நடைபெற்ற நிகழ்வினை குறித்த கட்டுரை தீராநதி இதழில் வெளியாகி உள்ளது இன்று.
அருள்செல்வன் அண்ணன் எழுதியுள்ள இந்த கட்டுரையில், ஜெயமோகன் அவர்கள் குறித்த பல்வேறு ஆளுமைகளின் மன ஓட்டங்களையும் பதிவு செய்துள்ளனர்.மிக எளிய வாசகனான எனது வார்த்தைகளும் இதில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி..
அந்த நாளில் அத்தனை ஆளுமைகள் புடைசூழ கோவையில் நிகழ்வு நடைபெற்றது. வழக்கமாக கலந்து கொள்ளும் எந்த ஒன்றிலும் கலந்து கொள்ளாமல் யாரையும் சந்திக்காமல் வரும் நண்பர்களை வரவேற்பது அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து அளிப்பதில் மட்டுமே செய்தேன்,ஆனால் அதனை பூரணமாக செய்தேன்.
எங்கோ தொலை தூரத்தில் இருந்து மனிதர்கள் அந்த நாளில் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர். இளையோர்,மூத்தோர், குடும்பத்துடன் வந்திருந்த நண்பர்கள் எல்லோரின் முகம் பார்த்தே மகிழ்ந்து கொண்டு இருந்தேன்.பல்வேறு சூழல்கள் தாண்டி அந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டவர்கள் முகத்தில் அத்தனை நிறைவையும் உற்சாகத்தையும் கண்டு கொண்டேன்.
இடைப்பட்ட நேரத்தில் வாய்ப்பு கிடைத்த எல்லோரிடத்திலும் சார் எப்படி உங்களுக்கு பழக்கம் எப்ப வாசிக்க துவங்கினிங்க இப்ப என்ன வாசித்து கொண்டு உள்ளிர்கள் என்று கேட்டு அறிந்து கொண்டேன்.எழுத்து எத்தனை மனிதர்களுக்கு ஆசுவாசம் அளிக்கிறது இந்த அதிவேக யுகத்திலும் என்று அறிந்து மனசுக்குள் வியந்து கொண்டு இருந்தேன்.
அரங்கில் நிகழ்வு முடிந்ததும் மீண்டும் காலை ஐந்து மணிக்கு எங்கு உட்கார்ந்து எல்லோருக்கும் அறை சாவி கொடுத்தேனே அங்கேயே போய் உட்கார்ந்து அந்த சிரித்த நிறைவான அன்றாடத்தின் சிடுக்குகள் தாண்டி வாழ்வு மீ்து நம்பிக்கை கொண்ட மனிதர்களின் முகம் பார்த்து கொண்டே இருந்தேன்…
அம்மாவையும் தற்போது அன்னையின் வடிவமான அருண் மொழி அக்காவையும் சொல்லி விட்டு தனது ஆசிரியர்களுக்கு இந்த வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் ஜெயமோகன் சமர்ப்பணம் செய்து விடைபெற்று கொண்டார். ஒரே வருத்தம் வண்ணதாசன் அய்யாவை பார்க்க முடியாமல் போனது தான்.
நான் மிகவும் நேசிக்கும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் புகைப்படம் பக்கத்தில் என்னோட படமும் இந்த கட்டுரையில் வந்து இருப்பது மிகுந்த நிறைவு… அருள்செல்வன் அண்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
ஸ்டாலின் பாலுச்சாமி