காந்தாராவின் தெய்வம்

மலை பூத்தபோது வாங்க 

அன்புள்ள ஜெ

காந்தாரா பார்த்தீர்களல்லவா? அதிலுள்ள நாட்டார்வழிபாடு ஒரு உக்கிரமான மனநிலையை உருவாக்குகிறது. நமக்கு எத்தனையோ நாட்டார்த்தெய்வங்கள் உள்ளன. ஏன் சினிமாவில் அவை இடம்பெறுவதில்லை?

சிவக்குமார் ராஜாமணி

***

அன்புள்ள சிவக்குமார்,

காந்தாராவுடன் பலவகையிலும் ஒப்பிடவேண்டிய இரு கதைகள் தூவக்காளி, புழுக்கச்சோறு. அத்தகைய நாட்டாரியல் தெய்வங்கள் பற்றிய பல கதைகளை எழுதியுள்லேன். மலைபூத்த போது தொகுப்பில் உள்ளன.

வெந்து தணிந்தது காடு படத்தின் கருவே நாட்டார்த்தெய்வமான சுடலைமாடனை ஒட்டியதுதான். ஐந்து நெருப்பு நடுவே தவம் செய்யும் சுடலைமாடனின் உக்கிரமான ஆட்டத்தில் தான் அந்தப்படம் எழுதப்பட்ட முதல் வடிவில் தொடங்குகிறது. சுடலைமாடனின் உக்கிரமான தீ முத்துவை தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் மையக்கருவாக திரைக்கதையில் இருந்தது.

அதற்கான ஒரு பாடலும் பாடி பதிவுசெய்யப்பட்டது. முத்தம்பெருமாள் கணியார் அதை பாடியிருந்தார். அதை முன்னரே இந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தேன் (முத்தம்பெருமாள், நடிகர் சிம்பு)அதற்கான ஆராய்ச்சிகளும் இயக்குநரால் செய்யப்பட்டன. ஆனால் இறுதியில் அது தவிர்க்கப்பட்டது. ‘சாமிப்படம்’ போல் ஆகிவிடும், பகுத்தறிவுள்ள தமிழ்மக்களுக்கு பிடிக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அந்த ஐயமும் கேள்வியும் எப்போதும் இங்குள்ளது. ஆகவேதான் மொத்த நாட்டார்ப்பண்பாடும் படங்களில் இருந்து நீக்கப்படுகிறது.

அந்த அம்சம் இருந்திருந்தால் படம் தெற்குநாட்டில் மாபெரும் வெற்றி அடைந்திருக்குமென இப்போது மட்டுமல்ல முன்னரும் நான் உறுதியாகவே நம்பினேன். ஆனால் நான் எதையுமே சினிமாவில் வற்புறுத்துவதில்லை.

இப்போது காந்தாராவின் பெருவெற்றிக்குப்பின் தெரியாத தெய்வங்களை எல்லாம் இழுத்துவந்து சினிமாக்களில் நிறைக்கப்போகிறார்கள் என நினைக்கிறேன்.

ஜெ

*

முந்தைய கட்டுரைசினிமா, நுகர்வோரும் பயில்வோரும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-2, கார்த்திக் புகழேந்தி