பங்கர்வாடி – வெங்கடேஷ் சீனிவாசகம்

அன்பின் ஜெ,

நலம்தானே?

சென்ற வார இறுதியில் “பன்கர்வாடி” வாசித்தேன்.

இரண்டாயிரத்தில் மகாராஷ்ட்ரத்தின் உள்ளொடுங்கிய கிராமங்கள் சில மிகப் பரிச்சயம் எனக்கு. ராய்காட் மாவட்டத்தில் பென் தாலுகாவில், பென்னிலிருந்து கோபோலி செல்லும் வழியில், வாசிவளி கிராமத்தின் அருகே ஒரு மலர்ப் பண்ணையில் ஐந்து வருடங்கள் பணி செய்தேன். சுற்றுவட்ட கிராமங்களின் நிலப்பரப்புகள் அனைத்தும் எனக்கு அத்துபடி. பண்ணையைச் சுற்றியிருந்த அஸ்டே, காகோதே, வக்ரூல், கரும்பிலி, காமர்லி, வர்சை, பானேட், மங்ரூல், சபோலி, ஆராவ்…என எல்லாக் கிராமங்களிலிருந்தும் பணியாட்கள்  வந்துகொண்டிருந்தார்கள். வருடத்தின் அனைத்து திருவிழாக் கொண்டாட்டங்களிலும், அவர்களின் வீட்டு விஷேஷங்கள் எல்லாவற்றிலும் நான் கலந்துகொண்டிருந்திருக்கிறேன். கௌஸியும், பூர்ணிமாவும், மீனாளும் அங்குதான் நண்பர்களானார்கள். நான் பேசும் ஹிந்தி சரளமானதற்கும், மராத்தியை முழுதாகப் புரிந்து கொள்வதற்கும் அவர்கள்தான் உதவினார்கள்.

“பன்கர்வாடி”-யின் காலம் அதற்கு அரை நூற்றாண்டு முந்தியது. ஐம்பதுகளின் மராட்டிய மாநிலத்தில் ஆட்டிடையர்களின் ஒரு சிறிய உட்கோடிக் குக்கிராமத்தின் சித்திரமான “பன்கர்வாடி” என் மனதிற்கு மிக அண்மையாய் இருந்தது. ஒரு இளம் பள்ளி ஆசிரியனின் அவதானிப்புகளும் அனுபவங்களுமாக மனதுக்கு நெருக்கமான எழுத்து. “முள்ளும் மலரும்” உமா சந்திரனின் அழகான மொழிபெயர்ப்பு (“கோனார்” என்ற வார்த்தைப் பிரயோகம் மட்டும் மகாராஷ்டிர கிராமங்களை அறிந்த எனக்கு மெலிதாய் நெருடியது). முன்னுரை அருமையாக இருந்தது. நாவல் சிறப்பான வாசிப்பனுபவம் தந்தது ஜெ.

1950-களின் காலம். பன்கர்வாடி கிராமத்தின் ஓராசிரியர் பள்ளிக்கு புதிய ஆசிரியராய் நியமனம் பெற்ற  ராஜாராம் விட்டல் விடிகாலையில் தன் கிராமமான விபூத்வாடியிலிருந்து கிளம்பி நடைப் பயணமாய்  புழுதிப் பாதையில் ஆறு மைல் கடந்து வெயில் நேரத்தில் பன்கர்வாடிக்கு வந்து சேர்கிறான். முப்பது முப்பத்தைந்து மண்குடிசை வீடுகள் கொண்ட குக்கிராமம். தெருவெல்லாம் கிடையாது. நாற்புறமும் வெட்டவெளி பரம்பு நிலம். சிவந்த கம்பங் கொல்லைகள். நடந்து வந்த களைப்பில் ஊரின் நடுவில் மைதானத்தின் அருகிலிருக்கும் வேப்ப மர நிழலில் மேடையில் உட்கார்ந்து கொள்கிறான். தாகமாயிருக்கிறது. கிராமத்தில் யாரும் கண்ணில் தட்டுப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சிவப்புத் தலைப்பாகையுடன் கையில் நீண்ட ஈட்டி வைத்துக்கொண்டு வேஷ்டியின் நுனியைப் பிடித்தபடி வரும் முரட்டு இளைஞன் ஒருவன் “யாரடா நீ? முட்டைக்காரனா?” என்கிறான். மெலிந்த உருவம் கொண்ட ராஜாராம் பயந்துபோய் “இல்லை. நான் ஆசிரியன்” என்று சொல்ல “ஆசிரியனா?…ஹ்ம்! இங்கே ஆசிரியனுக்கு என்ன வேலை? பள்ளிக்கூடம் எங்கே நடக்கிறது? சர்க்காருக்கு இதெல்லாம் தெரியாதா? வெறும் வெட்டி விவகாரம்” என்று கூறிச் செல்கிறான்.

மீசையும், புருவங்களும் நரைத்த, மேல் உடம்பில் கம்பளி போர்த்திய முதியவர் ஒருவர் கையில் கம்பூன்றி மெதுவாக நடந்து வருகிறார். அருகில் வந்ததும் ராஜாராமைக் கூர்ந்து பார்த்து…

ஏண்டா குழந்தே இங்கே ஏன் உட்கார்ந்திருக்கிறாய்?”

நான் ஆசிரியன். இன்றிலிருந்து இங்கே எனக்கு நியமனம் ஆகியிருக்கிறது” 

அடே! ஆசிரியன் என்றால் இங்கே ஏன் உட்கார்ந்திருக்கிறாய்? பள்ளிக்கூடத்தில் போய் உட்காரேன்!”

பள்ளிக்கூடக் கட்டிடம் எங்கே இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாதே!”

எதிரே தெரிந்த நீண்ட விசாலமான சாவடியைத் தன் கைத்தடியினால் சுட்டிக் காட்டுகிறார் கிழவர். “அதோ இருக்கிறதே! சாவடியின் இரண்டு பகுதிகளைப் பாடசாலைக்காக ஒதுக்கிருக்கிறோம்!”

அதுவா?”

ஆமாம். அங்கே போய் உட்கார்

தனியாக உட்கார்ந்து என்ன செய்வது? பிள்ளைகள்…?”

பிள்ளைகள் ஆடு மேய்க்கப் போயிருக்கிறார்கள். திரும்பி வந்து விடுவார்கள். காட்டிலேயே தங்கி விடுவார்களா என்ன?”

ஆனால் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு போதுமான பிள்ளைகள் இருப்பார்களா?”

இல்லாமலென்ன? மந்தை மந்தையாக இருக்கிறார்கள். மேலும் உண்டாவார்கள். வருஷா வருஷம் பத்து இருபது கலியாணங்கள் நடக்கத்தானே செய்கின்றன! புதிய குழந்தைகள் பிறப்பார்கள். நீ படிப்புக் கற்றுக்கொடுக்கும் பணியைத் தவறாமல் செய். போதும்!

நான் வாய்விட்டுச் சிரித்தேன். ஆரம்பமே அட்டகாசமாக, மனதை உற்சாகமாக்கி உடன் ஒன்றவைத்து அருமையான காட்சியுடன் படு சுவாரஸ்யமாகத் துவங்கியது நாவல்.

பன்கர்வாடியின் ஒரு முழு நாள் எப்படி இயங்குகிறது என்ற அத்தியாயமும், அதன் மழைக்காலக் குறிப்புகளும், விவசாயப் பயிர் சாகுபடி விவரணைகளும், அறுவடை முடிந்த ஓய்வுக்காலத்தில் நடைபெறும் ஒயிலாட்டம் போன்ற கிராமக் கலை நிகழ்ச்சிகளின் ரஸங்களும், விளையாட்டுக் கூடம் கட்டும் வைபவங்களும், மாவலி அம்மன் திருவிழாவும்…அபாரமாய் இருந்தன.

நேர்மையான திருடன் ஆனந்தா ராமோஷி, கோள்மூட்டி தாதூ, கசாப்பு ஆயபூ, நாட்டாண்மைக் கிழவர், கிழவரின் பேத்தி பதின்ம வயது அஞ்ஜி, ஆட்டுக்கார ராமா, ஓநாயைக் கொன்ற மாணவன் சதா, தேநீர் சத்யா பனியா, ஊரைப் பகைத்துக் கொள்ளும் பாலா, மான் வேட்டைக்காரன் தாத்யாபா ராமோஷி, அவரின் மகன் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும் ஜகன்யா ராமோஷி… என “பன்கர்வாடி”-யின் பாத்திரங்கள் ஆர்வமூட்டுபவை. வெங்கடேஷ் மாட்கூல்கரின் அற்புதமான எழுத்தில் அனைவரும் பிரியமானவர்களாகி நெருங்கி விடுகிறார்கள்.

நாட்டாண்மைப் பெரியவரின் இறுதி நாள் மனம் நெகிழ்த்தி கண் நிறைப்பது. “வாங்கி” கிராமத்தின் விதவைப் பெண் காதல் கொள்ளும் ஜகன்யா ராமோஷியின் கதை ஒரு தனி நாவலாய் விரியக் கூடிய சாத்தியங்கள் கொண்டது.

***

விஷ்ணுபுரத்தின் மூன்றாம் பகுதியான மணிமுடியில் தோற்றுவாயின் பின்னான முதல் அத்தியாயம் விளிம்பு உடைந்த காண்டாமணியின் அபஸ்வர ஒலியுடன் துவங்கும். அதன்பின்னான பிரளயக் காட்சிகள் தனிப்பட்ட முறையில் என்னை அமைதியிழக்கச் செய்தவை. ஆழ்ந்த துக்கம் போன்று ஒரு உணர்வு உள்ளுக்குள் தோன்றி விசாரங்களும் கேள்விகளும் வெகுநாட்கள் வரை நீடித்தது.

மழை பொய்த்ததை அடுத்து உருவாகும் பஞ்சத்தில் “பன்கர்வாடி” எனும் மாய ஓவியம், வண்ணத் தீற்றல்கள் ஒவ்வொன்றாய் மறைந்து சீலையின் ஆதி வெண்மைக்குச் செல்லும் அந்த இறுதிக் காட்சிகள்…

வெங்கி

முந்தைய கட்டுரைவெள்ளையானை, சர்வதேசப் பரிசு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒருபாலுறவு, கடிதம்