Stories of the True B. Jeyamohan
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
எனது பெயர் பிரதாப். தென்கொரியாவின் சியோல் நகரத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறேன்.
தங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான “Stories of the True” புத்தகத்தின் இரு பிரதிகளை நண்பர் சதீஷ் பாண்டியன் அவர்கள் எனக்குப் பரிசளித்தார். ஒன்றை இன்று எனது பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக அளித்தேன். மேலும் எனது பல்கலைக்கழகத்தில் ஒரு வசதி இருக்கிறது. ஆய்வு மாணவனாக எனக்கு ஒரு வருடத்திற்கு இந்திய ரூபாயில் ₹30,000 ரூபாய் மதிப்பிற்கு புதிய புத்தகங்கள் வாங்கக் கோரிக்கை விடுக்கலாம். அப்படி இதுவரை எழுத்தாளர் இமையம், அம்பை, பொருமாள் முருகன், ஜெயகாந்தன் ஆகியோரது புத்தகங்களை பல்கலைக்கழக நூலகத்தில் சேர்த்திருக்கிறேன். தமிழ் எழுத்துகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் ஒரு சிறு பங்களிப்பை செய்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.
நன்றி!
பிரதாப்
*
அன்புள்ள பிரதாப்
நன்றி.
நம் நண்பர்களில் இருவர் முன்னர் இதைச் செய்திருக்கிறார்கள். தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களுக்கு இந்நூலை வாங்கி அளிப்பதென்பது நூலை மட்டுமல்ல தமிழையும் அறிமுகம் செய்வதாக அமையும். நண்பர்களுக்கு வாங்கி அளித்தவர்களும் சிலர் உண்டு. ஆனால் ஒப்புநோக்க மிகக்குறைவாகவே இது நிகழ்ந்துள்ளது. நம் நண்பர்கள் குறைவாகவே வாங்கியுள்ளனர். வட இந்தியர், குறிப்பாக பெங்களூர் கல்கத்தா வாசகர்களே மிகுதியும் வாங்குகின்றனர்
ஜெ