அன்புமிக்க ஜெயமோகன் அய்யாவிற்கு மதிப்பிற்குரிய வணக்கங்கள்.
நான் இவ்வருட மே மாதம் முதல் வெண்முரசும், உங்கள் இணைய தளத்தை தவிர வேறொன்றும் படிப்பதில்லை. இப்போது ‘குருதிசாரலில்’ 15ஆம் அத்தியாயம் வந்திருக்கிறேன்.
முதல் மூன்றோ நான்கோ வெண்முரசு நாவல்களை படித்த பின், ஏதோ ஒரு சம்சயத்தை தெளிவுபடுத்த வேண்டி, திரும்பி நோக்கி, பல பக்கங்கள் தேட வேண்டி வந்தது.
ஆகவே ‘பிரயாகை’ முதல், எனக்கு பிடித்த அத்தியங்களின் சாரத்தை குறித்து வைத்திருக்கிறேன். உதாரணம்: எனக்கு பரசுராமர் கர்ணனை வெளியேற்றியதை மறுபடியும் படிக்க தோன்றினால், உடனே என்னுடைய குறிப்பை பார்த்தால் போதும் (Karnan parting with teacher Parasuramar (the bee feeding on him) – https://venmurasu.in/prayagai/chapter-74/).
ஒரு நூறு வருடங்களுக்கு முன் வெளிவந்த நாவல்களில், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன், அதன் தலைப்போடு அதனை விவரித்து பற்றிய ஓரிரு வரிகள் அதை பற்றி இருக்கும். இது குறிப்பிற்கு (reference) மிகவும் உதவும் கருவியாக கருதப்பட்டது.
இது மாதிரி வெண்முரசு சார்ந்து ஒரு தேவை உள்ளது என்று உங்களிடம் யாராவது கூறி இருக்கிறார்களா? என்னுடைய குறிப்பெல்லாம் ஆங்கிலத்தில். தான் உள்ளது. மேலும் எனக்கு பிடித்தமான பகுதிகளை மட்டும் தான் இப்போது நோட் பண்ணியிருக்கிறேன். வெண்முரசு மறுவாசிப்புகளில் (கண்டிப்பாக இது நடக்கும்) மேலும் அதிகம் குறிப்புகள் வர வாய்ப்புண்டு.
நான் செல்லும் வேகத்தில், வெண்முரசை நவம்பர் முடிவதற்கு முன்னால் முதல் வாசிப்பு முடியும் என்று நினைக்கிறேன். இது ஒரு வித நிம்மதியையும், சாதனை செய்த உணர்வையும் தருகிறது.
தாங்கள் வெண்முரசை எழுதியதற்கு வாழ்நாள் எல்லாம் கடமை பட்டிருக்கிறேன். நான், என் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு குறிக்கோளை கண்டடையும் நிலையில் இருக்கிறேன். எனக்கு 72 வயது. நன்றி. நன்றி. நன்றி.
இப்படிக்கு,
ராஜாமணி
*
அன்புள்ள ராஜாமணி,
தனிப்பட்ட உபயோகத்துக்காக அவ்வாறு எவரேனும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. பொதுவெளியில் எவருமில்லை. உண்மையில் அவ்வாறு ஓர் அட்டவணை இருக்குமென்றால் நல்லது. அகரவரிசையில் (அகராதி போல) விரிவான விவர உள்ளடக்க அட்டவணைகூடச் செய்யலாம்தான்.
ஜெ