இந்து மதம் என ஒன்று உண்டா? – கடிதங்கள்

இந்து மதம் என ஒன்று உண்டா?
இந்து மதம் என ஒன்று உண்டா?- 2
இந்து மதம் என ஒன்று உண்டா?-3

அன்புள்ள ஜெ

இந்துமதம் என்று உண்டா என்னும் தொடர் மிக மிக முக்கியமான ஒன்று. நீங்கள் பலவாறாகச் சொல்லிவரும் சித்திரம்தான். ஆனால் அவற்றை மீண்டும் ஒருமுறை தொகுத்து, சுருக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். மதங்களின் பரிணாமம், இருவகை மதங்கள், இயற்கையாக வரலாற்றில் உருவாகி வரும் மதங்களுக்கு இருக்கும் தொகுத்துக்கொண்டு முன்செல்லும் தன்மை மற்றும் உள்விவாதத் தன்மை ஆகியவற்றை மிக விரிவாகவே விளக்கியிருக்கிறீர்கள். இவற்றை ஏதேனும் பிரபல ஊடகங்களில் எழுதியிருக்கலாம். ஏனென்றால் இவை இங்கே கவனிக்கப்படாமலேயே கடந்துசெல்லப்படும். ஆறுமாசம் கழிந்து மீண்டும் அதே பல்லவியுடன் ஆரம்பிப்பார்கள்.

சந்தானகிருஷ்ணன்

*

அன்புள்ள ஜெ,

இந்துமதம் என்று ஒன்று உண்டா என்னும் தொடரை மிகக்கூர்ந்து பலமுறை படித்தேன். இந்தக் கட்டுரை வழியாகத்தான் மதம் என்னும் சொல்லையே ஆங்கிலம் வழியாக வந்த ஐரோப்பியக் கருத்து என்று புரிந்துகொண்டேன். மரபான இந்து ஞானியர் இந்துமதம் என நாம் சொல்லும்போது உறுதியான ஒற்றை தரப்பு என்று சொல்கிறோம் என்று சொல்லி அதை மறுத்து இந்து என ஒரு மதம் இல்லை என்கிறார்கள். சைவம் அந்த மதத்திற்குள் உள்ள துணைமதம் அல்ல என்கிறார்கள். ஆனால் இந்து மெய்ஞான மரபு என்று ஒன்று இல்லை என அவர்கள் சொல்வதில்லை. இந்து மதம் என நாம் சொல்வது இந்து மெய்ஞான மரபைத்தான். அந்த மரபுக்குள் உள்ளவைதான் ஆறுமதங்களும். இந்துமெய்ஞான மரபே இல்லை என்று சொல்லும் இந்து எதிர்ப்புக்கும்பல் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடுண்டு.

தேவிப்பிரசாத்

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
முந்தைய கட்டுரைஊர் திரும்பல்
அடுத்த கட்டுரைவைணவங்கள் உரை -கடிதம்