மனசாட்சியும் வரலாறும்- கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

அன்பு நிறை ஜெ வணக்கம் !

ஒரு சித்தாந்தம் எப்படி உருவாகிறது, அதன் ஆணி வேர்  எதுவாக இருக்கிறது, என்பதை விட அந்த சித்தாந்தம் கட்டமைக்கபட்டபிறகு அதன் செயல்பாடுகள், அதன் நடைமுறைகள், அதன் இலக்குகள் என, அந்த சிந்தாந்தின் கொள்கைகளினாலான விளைவுகளினாலேயே வரலாற்றில் அறியப்படுகிறது ! கம்யூனிசமும் மார்க்ஸ்ம் ஏங்கல்ஸ்சும் வரலாற்றில் ஏற்படுத்திய விளைவுகளை கொண்டே அவர்களை மதிப்பிடவேண்டும். உண்மையில் அவர்களின் தாக்கத்தை விட வரலாற்றில் ஹிட்லரும், லெலினும், ஸ்டாலினும் ஏற்படுத்திய தாக்கம் மலையென தெரிகிறது.

பின்தொடரும் நிழலின் குரல் வாசித்துகொண்டிருக்கும் போது மனம் காந்தி காந்தி என இடைவிடாது கூறிகொண்டிருந்தது, கொஞ்சம் பிசகியிருந்தால் கூட கையில்லாத கால்கள் அற்ற குழந்தைகளாக எம் முன்னோர்கள் மடிந்திருப்பார்கள் என்ற உண்மை விளங்காமலில்லை. இவ்வளவு வரலாற்று எடையுள்ள நாவலை இதற்குமுன் நான் வாசித்தது இல்லை. கோவை ஞானி கந்தசாமியாக வருகிறார். கே ஆர் எஸ், கேகேஎம், கதிர். அருணாசலம். வீரபத்திர பிள்ளை எல்லாம் யாரோ ?

நான் வடக்கத்தியன்( செங்கல் பட்டு) எந்த வரலாற்று நாயகர்களையும் நேரில் பார்த்திராத பாக்கியம் உண்டு எனக்கு. ஏழு நாட்களில் பின்தொடரும் நிழலின் குரலை படித்துமுடித்தேன் தினமும் நூறு பக்கம் ஆனால் அந்த நூறு பக்கம் படிப்பதே மிகவும் சவாலானதாக இருந்தது. ஆண்டுகணக்காக இலக்கியத்தை பயின்று வந்தாலும், என் வாழ்க்கைக்கு சவால் உங்களை படித்து முடித்து நீங்கள் ஒன்றுமே இல்லை எனகடந்துசெல்லவேண்டும் என்பது தான்.

ஒட்டுமொத்தமாக இந்த நாவலால் என் மனம் சிலவற்றைஉங்களிடம் கூற முயல்கிறது.

1)இவற்றுகெல்லாம் யாரையும் கைகாட்ட முடியாது. இது இப்படிதான் நடக்கும் இதை தான் வரலாறுஎன மனிதன் கூறுகிறான் அல்லது இந்த மாதிரியான வரலாறுகளையே மனிதன் படைக்கவிரும்புகிறான்.

2)அன்னா , அன்னாவின் குழந்தை , புகாரின், வீரபத்திர பிள்ளை , வீரபத்திர பிள்ளையின்பிள்ளை,தல்ஸ்தோய் தாஸ்த்தவெஸ்கி இவர்களெல்லாம் வரலாறின் உப தயாரிப்புகள் (by product) வரலாற்றின் உண்மையான நேரடியான product (தயாரிப்பு) லெலின்/ ஸ்டாலின் ஹிட்லர் என. ஆனால் இந்த மையத் தயாரிப்புகளில் போய் காந்தி அமர்ந்தது தான் வரலாறு முன்பு கண்டிராத அதிசயம் அதற்கு மூலக்காரணம் இந்தியதன்மை என சொல்லலாமா ?

3)இந்தியாவின் உணமையான விடுதலை பிரிட்டிஷ்ஷாரிடமிருந்து இல்லை மாறாக இந்தியாவிடமிருந்தே என காந்தி உணர்ந்தது ? விடுதலை பெறும்போது உண்டாக்கப்பட சட்ட மசோதாக்களில் இந்தியாவின் சிறுபான்மையினருக்கும் பட்டியலினத்தவருக்குமான சமுதாய சம உரிமையை ,பங்கீட்டை நிர்ணயம் செய்தது. அதற்கு எதிராக எந்த வித எதிர்ப்பு குரலும் பெரும்பான்மையிடமிருந்தோ இதரஉயர்சாதிகளிடமிருந்து எழாமலிருந்தது அதற்குண்டான எல்லா வேலைகளையும் காந்தி ஏற்கனவேமுன்னெடுத்து முடித்துவைத்திருந்தமையால் அல்லவா ? (இது புரட்சி ஆகாதா ?

நாம் அந்த நொறுங்கிய கிழிந்த கந்தலான இந்தியாவிலிருந்து அந்த கிழவன் வீசிய மெல்லியநூலை பற்றி மேலேறி வந்துவிட்டோம். அந்த மெல்லிய நூல் மானசீகமாக ஒவ்வொருஇந்தியனுக்கும் காந்தி போட்ட பூநூல். ஆனாலும் நூறாண்டுகளுக்கும் மேலாக அந்த இந்திய தன்மையை நொறுக்கியே ஆக வேண்டும் என்பதில் துளிகூட பின்வாங்காமல் இதர மொத்த உலகமும் கங்கணம் கட்டிகொண்டிருப்பது ஏன் ? அந்த இந்தியதன்மையும் இந்திய மெய்ஞானிகளும் எவ்வளவு தொந்தரவாக இருக்கிறார்கள் இந்தஉலகிற்கு ? உண்மையில் இந்திய இலக்கியங்களும் இதிகாசங்களும் இந்த உலகை தான் எவ்வளவுசீண்டுகிறது?

நானிருக்கும் நாட்டில் நான் ஒருபோதும் என்னை இந்தியனாகவோ அல்லது இந்துவாகவோவெளிகாட்டிக்கொள்ளவே  முடியாது.( கூடாது). ஜெ ! இந்தியதன்மையையும் இந்து மதத்தயும் இதன் மெய்ஞானிகளையும் காணாமல் ஆக்க ஒரு இறுதி இயந்திரத்தை அன்பளிப்பாக கொடுத்துவிடவும். காந்தி என்ற ஒரு ஆத்மா இந்த பிரபஞ்சத்திலேயே இல்லாமலாகவேண்டியும்.

ரகுபதி

முந்தைய கட்டுரைஇந்தப் புத்தகக் கண்காட்சியில் – சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைகதைகள், கடிதம்