இந்து வெறுப்பு – கடிதம்

இந்து வெறுப்பை எதிர்கொள்வது

இனிய ஜெயம்

சமீபத்தில் ட்ரெண்டிங் ஆன உங்களது காணொளி தொடர்பாக ஒரு தோழர் அழைத்திருந்தார். ” நானும் இந்து மத வெறுப்பாளன்தான். உங்க ஆசான் சொன்ன கோடிகளை கொடுக்கும் முதலாளிகள் அட்ரஸ் கொடுத்தா நானும் ஒரு ரெண்டு மூணு கோடி வாங்கிக்குவேன்” என்றார் . காலாய்ச்சிட்டாராமாம்.

நான் சொன்னேன் ” முதலில் ஒன்றை சொல்பவருக்கு அதை சொல்லி  ‘மக்கள் ஆதரவு திரட்டும் ஆற்றல் ‘ இருக்க வேண்டும். உங்கள் சொல்லை மட்டும் அல்ல, உங்களையே அவசரத்தில் உங்கள் மனைவி குழந்தை கூட  மறந்து விடவே வாய்ப்பு மிகுதி. பாப்புலர் முகம் நோக்கி, அதை உருவாக்கி வைத்திருக்கும் திராணி உள்ளவனை நோக்கி, இத்தகு கோடிகள் தானாகவே தேடி வரும். மாறாக உங்களை போன்றோருக்கு பிச்சை கூட கிடைக்காது” என்றேன் அவர் கொதித்து ங்கோ என்று துவங்குகையில் துண்டித்து விட்டேன்.

இத்தகு அசட்டு செக்’கூலி’யர்கள் தான் இந்து பண்பாட்டின் முதல் எதிரி. மிக சாதாரணமாக புதுவையில் சண்டே மார்க்கெட் பகுதியில் பழைய புத்தக கடையில் பல நூல்களை பார்க்க முடியும். ” இந்தியா : தோமா வழி வந்த ஒரு கிறிஸ்துவ நாடே” “வள்ளுவர் ஒரு கிறிஸ்துவரே” ” இந்து வேதத்தின் பிரஜாபதி ஏசுவே” என்றெல்லாம் தலைப்பு கொண்டிருக்கும். உள்ளே புரட்டிப் பார்த்தால் அதன் பின்னணி முழுவதுமாகவே இருக்கும். இதை அடிப்படையாக கொண்டு ஆய்வு ஆதரவு நல்கிய பல்கலை கழகங்களின் வரிசை எல்லாம் அதில் உண்டு. இந்த அசட்டுத்தனங்களை ஆய்வு ஆதாரங்கள் என்று இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பரவ வைக்கவே பல்வேறு முதலீடுகள் இன்றுவரை தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. நாமும் சித்தாந்த சைவம் என்றால் என்ன என்று அந்த துறையில் வல்லமை  அறிஞர்களை விட்டு விட்டு மேற்கண்ட வகை ஆய்வுகளை நம் தலையில் கொண்டு வந்து கொட்டும் கிறிஸ்துவ போதாகர்களை கேட்டுக்கொண்டு திரிவோம்.

சில வருடம் முன்பு டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள் என்றொரு நூல் வெளியானது. இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்தேறிகள் என்று அண்மைய மரபணு ஆய்வுகள் நிறுவி விட்டன என்று சொல்லி ‘ஆரிய மரபணு’ உடைய எண் இதுதான் என்று அந்த நூலாசிரியர் சொல்லி இருந்தார். நூலாசிரியர் மரபணு அறிவியலாளர் அல்ல. ஒரு பத்திரிக்கையாளர். இந்திய ‘பன்மைத்துவம்’ மேல் மட்டற்ற பற்று கொண்டு ஒரு சேவையாக இதை எழுதி இருக்குறார். இதோ இன்று நமித் ஆரோரா என்பவர் எழுதிய இந்திய நாகரீகம் என்றொரு நூல் வந்திருக்கிறது. அவருக்கு தொழில் பொட்டி தட்டுவது. இந்திய பன்மைத்துவத்தின் மீதான பற்றுறுதி காரணமாக அண்மைய தரவுகள் எப்படி ஆரியர்கள் வந்தேறிகள் என்று நிறுவி இருக்கிறது என்று எடுத்தியம்பி இருந்தார். தவறாமல் சில வருடம் முன்னர் வந்த டோனி ஜோசப் நூல் அதில் மேற்கோள் மற்றும் உசாத்துணை வரிசையில் இடம்பிடித்திருந்தது. இங்கே இந்தியாவில் மரபணுவியல் போல  இந்த துறை சார்ந்த ஆய்வாளர் குரல் நோக்கி எவருமே செவி கொள்ள மாட்டார்கள். ஆனால் மேற்கண்ட குப்பை நூல்கள் இந்தியாவின் செப்பு மொழி பதினெட்டிலும் வாசிக்கக் கிடைக்கும்.

இந்துமதம் என ஒன்றில்லை.  இன்று இந்தியாவில் இவ்வாறு நாம் காணும் சாதி உள்ளிட்ட அனைத்தையும் சதி செய்து உருவாக்கியவர்கள் ஆரியர்கள். அவர்கள் வந்தேறிகள். வேதத்தில் சிவன் கிடையாது. ஆகவே சிவனை முதன்மை கொண்ட சைவம் இந்து மதத்தில் சேராது. வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்கம் இந்து மதத்தில் சேராது  என்று பேச இன்று பல பத்து ஆதார பூர்வமான ‘ஆய்வுகள்’ இங்கே உண்டு. அதன்படி இந்துமதம் எனும் தொகுப்பை டிஸ்மாண்டில் செய்து விட முனைவதே இங்குள்ள பிரச்சார போக்குகள் கொண்டிருக்கும் இலக்கு.

இந்துக் கலாச்சாரம் இந்தியப் பண்பாடு உள்ளிட்ட ஒவ்வொரு அலகிலும் இதுதான் இன்றைய சிக்கல். 2019 பிப்ரவரியில் நான்கு வன உயிர் பாதுகாப்பு அமைப்புகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்திய வனக் குடிகளின் வன வாழ்வு உரிமை முற்றிலும் ரத்தானது. இந்த நான்கு அமைப்புகள்  வாய் பின்னால் இருக்கும் மூளை எவருடயது? பீட்டா யார்? டில்லி போலவே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க தடை சொல்லி கேட்டு ஒரு அமைப்பு வேலை செய்து கொண்டு இருக்கிறது. இத்தகு வழக்கு நிலவரங்கள் எதிலும்   இந்திய சூழலியலாளர்கள் கருத்தை இந்திய நீதி அரசு அமைப்பு ஏன் கேட்பதே இல்லை?

இந்துப்பண்பாடு ஓடையாய் கிளம்பி பெரு நதியாக கிளைவிரிக்குந்தோறும் ஒவ்வொரு ஞானிகள் தோன்றி அதை மீண்டும் சங்கிரஹம் செய்வர். பௌத்தத்தின் அத்தனை கிளைகளையும் தத்துவம் வழியே வென்று ஒருங்கு செய்தவர் நாகார்ஜுனர். கிளை பரப்பி அகன்று அகன்று சென்ற சமயங்களை ஒன்றிணைத்தவர் சங்கரர். மெய்மைக்கான அனைத்து வெவ்வேறு பாதைகளையும் ஒருங்கு கூட்டியது கண்ணனின் பகவத் கீதை. வரலாறு நெடுக இது இவ்விதம்தான். இன்று இந்தியாவின் சாராம்சமான அதை முற்றிலும் புறக்கணித்து, அதிகார வெறியின் பொருட்டு, தலை பெருக்கி ஓட்டு வாங்கும் வசதி நோக்கி , மதப் பண்பாட்டை வெற்று அரசியலாக  மாற்ற அனைத்து தரப்பும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்தியமரபு மீதான காழ்ப்பு இந்தியாவை பீடித்திருக்கும் தொழுநோய். இந்துத்துவ அரசியல் இந்தியா மேல் கவிந்திருக்கும் கேன்சர் கட்டி. இரண்டில் எந்த ஆதிக்கம் வென்றாலும் அது இந்து மதத்தின் இந்துப் பண்பாட்டின் அழிவே.  இந்த இரண்டுக்கும் வெளியே ஒவ்வொரு இந்தியப் பண்பாட்டின் அலகிலும் வாழ்வை அதற்கு ஈந்த அறிஞர்கள் இங்கே உண்டு. அமைப்பு பலமோ ஆதரவோ பிரபலமோ இல்லாத அவர்களின் குரல் மிக மிக மெல்லியது. ஆனால் அது மட்டுமே, அதை பொது மனம் செவிமடுப்பது மட்டுமே, இங்கே மீட்சிக்காக எஞ்சி இருக்கும் ஒரே வழி.

கடலூர் சீனு

 

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

—————————————————

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க 

முந்தைய கட்டுரைஏழாம் உலகத்து மக்கள்
அடுத்த கட்டுரைகர்ணன்