பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-2

பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல் – 1

பௌத்தம் மீண்டும் இந்தியாவில் தழைக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன? தடைகள் என்ன?

முதன்மையாக பௌத்தம் இந்தியாவில் மறுபடியும் தழைக்குமென்றால் அது ஓர் இந்திய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். பௌத்தம் இந்தியாவுக்கு ஊழின் பெருங்கொடை. அது நிலைகொள்ளவேண்டும், பெருகவேண்டும்.

உலகமெங்கும் பௌத்தத்தின் வளர்ச்சி எவ்வகையில் எல்லாம் நிகழ்கிறது என்று பார்ப்பது இந்த விவாதத்திற்கு உதவும்

பௌத்தம் நான்கு வகைகளில் உலகமெங்கும் செயல்படுகிறது. முதல்வகை மரபார்ந்தது. இரண்டாவது வகை சீர்திருத்த பௌத்தம். மூன்றாவது வகை அரசியல் பௌத்தம். நான்காவது வகை தத்துவார்த்தமான பௌத்தம்.

மரபார்ந்த பௌத்தம், பௌத்த மத அமைப்புகள் வழியாக செயல்படுவது. இன்று உலகளாவிய தளத்தில் தாய்லாந்தின் பௌத்தமரபு வலுவாக உள்ளது. திபெத்தின் கெலுக்பா பௌத்த மரபு தலாய் லாமாவால் உலகளாவிய ஓர் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதன் கிளைகள் எல்லாமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இலங்கை பௌத்தத்தின் அமைப்புகள் அரசியல்மயமாகி தேக்கநிலையில் உள்ளன. ஜப்பானிய பௌத்த மடாலயங்கள் பெரும்பாலும் செயலற்ற நிலையிலேயே உள்ளன.

மரபான பௌத்த்ததிற்கு இந்தியாவில் தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. ஆகவே அதை மீட்க இயலாது. இந்தியாவில் இன்று தாய்லாந்து, திபெத் பௌத்த அமைப்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. அவை இந்தியாவில் வலுப்பெறலாம்.

ஆனால் மரபான பௌத்தம் நீண்டகால வரலாற்றுப்பின்புலம் காரணமாக கூடவே இனஅடையாளத்தையும் கொண்டுள்ளது. தாய்லாந்து, திபெத் பௌத்த மரபுகள் வேற்றினத்தவருக்கு இயல்பான உள்நுழைவை, இடத்தை அளிப்பவையாக இல்லை. அவ்வாறு அவை மாறக்கூடுமென்றால், அவற்றை முன்னெடுத்துச்செல்ல தலாய் லாமா போன்ற மாபெரும் ஆளுமைகள் உருவாகக்கூடும் என்றால் இந்தியாவில் அவை வேரூன்றி வளரலாம். அது ஒரு வாய்ப்பு.

அநகாரிக தம்மபாலா

சீர்திருத்த பௌத்தம் என்று சொல்லப்படும் பௌத்தம் அயோத்திதாசர் முதலியவர்களால் முன்வைக்கப்பட்டது. அது பலவகையான தொடக்கமுயற்சிகளாக தேங்கிவிட்டது. அவை இந்தியாவில் முன்னெடுக்கப்படலாம். அவ்வகை பௌத்தமரபு இங்கே மேலோங்குவதற்கு சில அடிப்படைத் தேவைகள் உள்ளன. முதன்மையாக, மரபார்ந்த பௌத்த படிமங்களும் ஆசாரங்களும் முழுமையாக மறுவிளக்கம் அளிக்கப்பட்டு நிறுவப்படவேண்டும். அதைச்செய்ய ஓரிரு தலைமுறைக்காலம் தொடர்ச்சியாகச் செயல்படும் அமைப்புகளும், அவற்றில் வலுவான சிந்தனையாளர்களும் ஆளுமைகளும் தேவை.

அரசியல் பௌத்தம் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டது. அதன் எல்லைகள் கண்கூடானவை. மதத்தை அரசியலின் பொருட்டு முன்வைத்தால், அந்த அரசியல் எந்த வகையான உயர்நோக்கம் கொண்டது என்றாலும், அந்த மதம் அரசியலின் ஒரு துணைக்கருவியாக சூம்பி நிலைகொள்ளுமே ஒழிய வளராது. அந்த அரசியலையும் அது வளர்க்காது. மகாராஷ்டிரத்தில் பயணம் செய்யும்போது அம்பேத்கர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல சிறு பௌத்த ஆலயங்களை பார்ப்பதுண்டு. அவற்றுக்கு நிலையான கட்டிடமெல்லாம்கூட இருக்கும். ஆனால் வருகையாளர்கள் இல்லாமல் கைவிடப்பட்டு, பாழடைந்தே கிடக்கும். அவ்வாறு பலவற்றை பயணங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

அந்நிலை ஏன் வருகிறது? அரசியலை விட மதம்தானே ஆழமானது? மக்கள் பங்கேற்பு உள்ளது? அவ்வாறு மதம் நிலைகொள்ளவேண்டும் என்றால் மதம் அதன் அடிப்படை நோக்கங்கள், இயல்புகளுடன் முன்வைக்கப்படவேண்டும். மதம் ஒருவகை அரசியலாக முன்வைக்கப்படலாகாது. எந்த மதமும் அடிப்படையில் அதன் நம்பிக்கையாளனுக்கு வாக்களிப்பது ஆன்மிக அறிதலையும், ஆன்மிகமான மீட்பையும்தான். எளிய மக்களுக்கு மதத்தில் இருந்து கிடைக்கவேண்டியது வேண்டிக்கொள்ள சில தெய்வங்கள். அதையும் மதம் அளிக்கவேண்டும்.

அம்பேத்கரின் நவயான பௌத்தம் அரசியல்சார்ந்த எதிர்ப்பாக முன்வைக்கப்பட்டது. அம்பேத்கரின் நோக்கங்கள் ஆன்மிகமான, தத்துவார்த்தமான, அறவியல் சார்ந்த ஒரு மதத்தை உருவாக்குவது என அவருடைய பௌத்தமும் அவருடைய தம்மமும் என்னும் நூல் காட்டுகிறது. ஆனால் அதற்கான வாழ்நாள் அவருக்கு அமையவில்லை. அவருக்குப்பின் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் அறிவுத்தகுதியின் ஆன்மிகத்தகுதியும் கொண்ட வழித்தோன்றல்கள் அவருக்கு அமையவில்லை.  ஆகவே ஓர் அரசியலியக்கமாகவே நவயானம் நின்றுவிட்டிருக்கிறது. அது தன்னை ஒரு சீர்திருத்த பௌத்தமாக இங்கே முன்வைக்கும் என்றால் நிலைகொள்ளவும் பரவவும்கூடும்.

தலாய் லாமா

எந்த மதமும் நேர்நிலையான மனநிலையை உருவாக்குவதன் வழியாகவே நிலைகொள்ள முடியும். உலகியலில் துயருற்று உழலும் மனிதர்கள் அமைதி. நிலைபேறு நாடியே அதற்கு வருகிறார்கள். அங்கேயும் சழக்கும் பூசலும் என்றால் அவர்கள் அதை நாடமாட்டார்கள். மதச்சழக்கும் பூசலும் மதங்களை தங்கள் ‘தரப்பு’ என எடுத்துக்கொள்ளும் மிகச்சிறுபான்மையினருக்கு உரியவை. ஆகவே சீர்திருத்த பௌத்தமோ, நவயான பௌத்தமோ பூசலிடுபவர்களால் உருவாக்கப்பட இயலாதவை. மெய்யறிவர்களால் நிலைநிறுத்தப்படுபவை.

ஆகவே இங்கே இன்று வெவ்வேறு அரசியல்கோணங்களில், ஆய்வுக்கோணங்களில் முன்வைக்கப்படும் பௌத்தம் சார்ந்த பேச்சுக்களால் எப்பயனும் இல்லை. அவையனைத்துமே எதிர்வினைகளும் எதிர்ப்புகளும்தான். அவற்றை முன்வைப்பவர்களுக்கு மெய்யியலோ, தத்துவமோ முக்கியமும் அல்ல. அவர்களால் பௌத்தமென எதையும் உருவாக்க, நிலைநிறுத்த இயலாது. பௌத்தம் நிலைகொள்ளவேண்டும் என்றால் பௌத்தம் வழியாக தன் மீட்பை தேடும், அடைந்து முன்வைக்கும் மதஞானிகள், மத அறிஞர்களே தேவையானவர்கள்.

இன்னொரு பக்கம், புத்தரை தங்கள் அரசியலுக்கேற்றபடிச் சுருக்குபவர்கள் உண்மையில் பௌத்தத்திற்கு எதிரானவர்கள். அவரை எளிய நாத்திகராக மட்டுமே பார்ப்பவர்கள், வெறும் எதிர்ப்பரசியலின் ஆளுமையாக எண்ணுபவர்கள் இங்கே பௌத்தம் உருவாவதற்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து விலகி, மெய்ஞானத்தின் விடுதலையை முன்வைத்தாலொழிய பௌத்தம் நிலைகொள்ள முடியாது. புத்தரை ஒரு சிறு அரசியல்குறியீடாக ஆக்குவதனால் பௌத்தம் சிறுமைப்படுகிறது. பௌத்தம் வாக்களிக்கும் மெய்ஞானத்தையும் விடுதலையையும் பொருட்படுத்தாதவர்களுக்கு பௌத்ததில் என்ன இடமிருக்கமுடியும்?

உண்மையில் அநகாரிக தம்மபாலாவின் பெருங்குறைபாடே அவருடைய ‘எதிர்ப்பு’தான். அவர் மரபான பௌத்ததின் தேக்கநிலையை எதிர்க்கும் விசைகொண்டிருந்தார். ஆனால் அந்த எதிர்நிலையே பேரறிஞராக இருந்தும் அவரை கசப்பும் காழ்ப்பும் கொண்டவராக ஆக்கியது. ஆன்மிகமாக எதையும் அடையாதவராகவும், எதையும் அளிக்காதவராகவும் ஆனார். அவர் எந்த ஆன்மிக இயக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. அவருடைய பங்களிப்பு முழுக்கமுழுக்க அரசியலுக்காகவே இன்று அடையாளம் காணப்படுகிறது. சொல்லப்போனால் சிங்கள இனவாதத்தின் தந்தையாகவே அவர் இன்று அறியப்படுகிறார்.

சீர்திருத்த பௌத்தம் நிலைகொள்ளவேண்டும் என்றால் அதற்குச் சில இன்றியமையாத தேவைகள் உள்ளன.

அ. வலுவான மத அமைப்பு. நிதிப்பின்புலமும், மையநிர்வாகமும் கொண்ட மத அமைப்பு இன்று சீர்திருத்த மதங்கள் அனைத்துக்கும் இன்றியமையாதது. தலாய் லாமாவின் பௌத்த மதப்பிரிவை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். ஊர்கள் தோறும் பௌத்தத்தின் கிளைகள் அமையவேண்டும். அவை மையக்கட்டுப்பாடும் கொண்டிருக்கவேண்டும்

ஆ. வலுவான மதக்கல்வியும் மதப்பிரச்சாரகர்களும். பௌத்த சங்கங்கள் பௌத்த தத்துவம் மற்றும் பௌத்த மெய்யியலில் பயிற்சியை அளிக்கவேண்டும். அங்கே பயிற்சிபெறும் பிரச்சாரகர்கள் நாடெங்கும் சென்றபடியே இருக்கவேண்டும். அவர்கள் மதக்கிளைகளை நிறுவவேண்டும்.   எந்த மதமும் அர்ப்பணிப்புள்ள பிரச்சாரகர்களால்தான் நிலைகொள்கிறது.

இ. வலுவான வழிபாட்டு மரபு. எந்த மதமும் குறியீடுகள் வழியாகவே நிலைகொள்கிறது. குறியீடுகள் அன்றாடவாழ்க்கையில் நிகழவேண்டும் என்றால் சடங்குகளும் ஆசாரங்களும் வேண்டும். இந்தியாவில் சீர்திருத்த பௌத்தம் அத்தகைய வலுவான வழிபாட்டு மரபை உருவாக்கவில்லை. அது உருவாக்கப்படவேண்டும். புத்தர், தாராதேவி, போதிசத்வர்கள் என ஒரு வழிபாட்டுக்குரிய குறியீடுகளின் நிரை உருவாகவேண்டும். வழிபாட்டுக்கான ஆசாரங்கள் நிறுவப்படவேண்டும். தொடர்ச்சியான வழிபாடு நிகழ்வது உறுதிப்படுத்தப்படவேண்டும்

ஈ. அன்றாடத்தன்மை. எந்த மதமும் அதன் நம்பிக்கையாளர்களின் வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் செல்வாக்கு செலுத்தும்போதே வாழ்கிறது. புதிய பௌத்தம் அதன் நம்பிக்கையாளர்களின் பிறப்பு, திருமணம் குழந்தைப்பேறு, சாவு உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் பங்களிப்பாற்றவேண்டும். அனைத்துக்கும் இடமிருக்கவேண்டும். நவபௌத்தம் சார்ந்து செயல்படும் கர்நாடக மாநில எழுத்தாள நண்பர் ஒருவரிடம் பேசும்போது நான் சொன்னேன். இன்றைய நவபௌத்தம் பௌத்த ஆலயத்தை மட்டும் உருவாக்கினால்போதாது, கூடவே கல்யாணமண்டபமும் இருந்தாகவேண்டும் என்று. உலகியலை தவிர்த்து மதங்கள் நிலைகொள்ள முடியாது.

உ. பௌத்த மெய்யியல் சார்ந்த அறிவியக்கம் ஒன்று நிகழவேண்டும். அதாவது அதற்கான இதழ்கள், வலைத்தளங்கள் பிரசுரநிறுவனங்கள் தேவை. நான் சொல்வது அரசியல் பிரச்சாரத்தை அல்ல. முழுக்கமுழுக்க மததத்துவம் சார்ந்த அறிவியக்கத்தை. இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுக்கும் அப்படிப்பட்ட அறிவியக்கம் உள்ளது

ஊ. இறுதியாக, எந்த மதமும் அதன் முகங்களாக அறியப்படும் ஆளுமைகளாலேயே நிலைகொள்கிறது, வளர்கிறது. மதஞானிகள், மத அறிஞர்கள் உருவாக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படவேண்டும். நவயானாவுக்கு ஒரு தலாய் லாமா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று மட்டும் எண்ணிப்பாருங்கள்.

இவை எதுவுமே இன்றைய சூழலில் நவயான பௌத்தம் அல்லது மற்ற சீர்திருத்த பௌத்த மரபுகளுக்கு இல்லை என்பதை எவரும் காணலாம். ஆகவே வெறும் அரசியலாகவே அது இங்கே நிலைகொள்கிறது. அதாவது இங்குள்ள தலித் அரசியலின் ஒரு தோற்றம் மட்டும்தான் அது. தலித் அரசியலுக்கு நவயானம் இன்றியமையாததாகவே இருந்தாலும்கூட அது அவ்வரசியலில் நேரடியாக ஈடுபடுவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, முழுமையாகவே ஒரு மதமாக தன்னை முன்வைப்பதே அது நிலைகொள்வதற்குரிய வழி. அது நிலைகொண்டால் அது தலித் விடுதலைக்கும் வழிவகுக்கும்.

தத்துவார்த்தமான பௌத்தம் வெறுமே சிந்தனையில் செயல்படும் ஒரு செல்வாக்கு மட்டுமே. கிரேக்க மதம் இன்றைய ஐரோப்பிய சிந்தனையில் செல்வாக்கு செலுத்துவதுபோல. பௌத்தத்தின் சூனியவாதம், விக்ஞான வாதம் போன்றவை நவீன சிந்தனைகளுக்கு அணுக்கமானவை, அவற்றின் பல இடைவெளிகளை நிரப்புபவை. ஜென் பௌத்தமும் சீன சான் பௌத்தமும் பலவகையில் இன்றைய சிந்தனைகளுக்கு பங்களிப்பாற்றுபவை. ஆனால் அந்த செல்வாக்கை மதம் என சொல்லமுடியாது

இன்னொன்றும் உண்டு. புத்தர், பௌத்தம் என்றும் இங்கே இருந்துகொண்டிருக்கும் வல்லமைகள். ஏனென்றால் வேதாந்தத்திற்குள் பௌத்த சிந்தனை உள்ளது. அத்வைதம் அதை தொடர்ந்து அடையாளம் காண்கிறது. ராமகிருஷ்ண மடம், நாராயணகுருகுலம் போன்ற நவீன வேதாந்த அமைப்புகள் எல்லாமே பௌத்தத்துக்கு அணுக்கமானவை, என்றும் புத்தரை முன்வைப்பவை.

பௌத்தம் திபெத், தாய்லாந்து மரபைச் சேர்ந்த தொன்மையான முறையிலும், இன்றைய சீர்திருத்த முறையிலும் ஒரே சமயம் இங்கே வளர்ச்சியடையலாம் என நினைக்கிறேன். இரு தரப்பும் உரையாடல் வழியாக தங்களை செழுமைப்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு நிகழுமென்றால் அது இந்தியப் பண்பாட்டுக்கும் இந்திய சிந்தனைக்கும் பெரும்கொடையாக அமையும். பௌத்தம் கற்க ஆயிரம் மையங்கள் இந்தியாவில் உருவாகுமென்றால் அந்த இந்தியா எப்படி இருக்கும்!

கனவுதான், ஆனால் நிறைவேறமுடியாதது அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைரா.கணபதி
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி, கடிதங்கள்